அறிவியலால் மனிதனுக்கு அனேக நன்மைகள் கிடைத்திருந்தாலும் இறுதியில் மனித குலத்தை அடியோடு அழிக்க போவதும் அறிவியல்தான் என்பதில் எந்த மாற்றுக்கருத்து இருக்காது என்றே நான் கருதுகிறேன்!
அறிவியல் முன்னேற்றத்தால் அணுகுண்டுகளும் அதிநவீன ஆயுதங்களும் தயாரிக்கப்பட்டு அவையாவும் சகமனிதர்களை சவகிடங்குக்கு அனுப்பவே பயன்பட்டு வருகின்றன! இதுபோன்ற குண்டுகளை எவன் கண்டுபிடித்தான்? ஏன் கண்டுபிடித்தான்? இதுபோன்ற குண்டுகளால் உயிரிழக்கும் ஒவ்வொரு உயிரின் மரணத்துக்கும் அந்த அறிவியல்காரனும் ஒரு போருப்பாளிதானே?
ஒருபுறம் தீவிரவாதிகள் என்ற போர்வைக்குள் இருந்துகொண்டு கொல்லுகின்றனர் இன்னொருபுறம் சிலர் உலகின் காவலர்கள் என்ற போர்வைக்குள் இருந்துகொண்டு குண்டுபோட்டு கொல்கிறார்கள்! ஆனால் சாவது என்னவோ கமனிதர்கள்தான்!
எத்தனையோ விதமான அழிக்கும் ஆயுதங்களை கண்டுபிடித்த அறிவியலுக்கு, மனிதனுக்கும் மனிதனுக்கும் இடையே இருக்கும் பகையை கொல்ல ஒரு ஆயுதம் கண்டுபிடிக்க முடியவில்லையே!!! அது அறிவியலுக்கு மிகபெரிய தோல்வியே!
எந்த ஒரு அறிவியல் பொருட்களும் இல்லாமல் இயற்கையோடு இயற்கையாக மனிதன் வாழ்ந்த காலங்கள் வரலாற்றில் உண்டு! .
இயற்க்கை என்பது ஒரு பொக்கிஷம்! நாம் சிறப்பாக வாழ தேவையான எல்லாமே குறைவற்று அமைத்ததுதான் உலகம்! அதில் திருப்தியடையாத, அதை அளவோடு அனுபவித்து வாழாமல் இயற்க்கை சமன்பாட்டை அறிவியல் என்னும் பேரால் கெடுக்கும் பேராசை பிடித்த அதிமேதாவிகளால்தான் இன்று உலகம் அழிவை நோக்கி பயணிக்கிறது!
"எந்த ஒரு வினைக்கும் எதிர்வினை உண்டு" என்ற வார்த்தையின்படி இன்று மனிதனின் சொகுசு வாழ்க்ககைக்கு பயன்படும் அறிவியல் ஒருநாள் மனிதனை பொசுக்கிவிடும், அதை அந்த அறிவியலாலேயே கூட தடுக்க முடியாமல் போய்விடும் என்றே நான் கருதுகிறேன்!
உதாரணமாக ஒருவர் நாலு நாள் நல்ல சொகுசு வாழ்க்கையை நமக்கு கொடுத்து ஐந்தாவது நாள் நம்மை கொன்றுபோட்டால் அவர் நல்லவரா கெட்டவரா என்ற \ணத்தில் பார்க்கிறேன்! கஷ்டப்பட்டு உழைத்து சம்பாதித்த மனிதனுக்கு சொகுசு வாழ்க்கையை கற்றுக்கொடுத்தது அறிவியல்! இன்று அனேக மனிதர்களை கொன்று குவிப்பதும் அறிவியல்தான்! இயற்கையாய் நடக்கும் மரணங்களை விட செயற்கை அறிவியல் சாதனங்களால்தான் அனேக மரணங்கள் ஆங்காங்கே அரங்கேறுகின்றன!
அறிவியல் ஆயிரம் நோய்க்கு மருந்து கண்டுபிடித்தாலும் ஆயிரத்து ஒண்ணாவதாக எதாவது ஒரு புதியதாக நோய் வந்துகொண்டுதான் இருக்கிறது! இயற்கையை மனிதன் ஒருநாளும் வெல்ல முடியாது! எல்லா நோயையும் ஒழித்துவிட்டோம் என்று அறிவியலால் ஒருநாளும் சொல்லமுடியாது! பின் அதனால் என்ன பெரிய பயன்? நேற்று வேற்றொரு பெயரில் ஆளை கொன்ற நோய் இன்று வேறொரு பெயரில் கொல்கிறது அவ்வளவுதானே? ஐம்பது வருடத்துக்கு முன் அபூர்வமாக இருந்த அறுவை சிகிச்சை இன்று ஆளாளுக்கு செய்துகொள்ளும் அவலநிலை ஏன் உருவானது? அறிவியலால் ஏற்றப்பட்ட சுற்றுசூழல் மாசுதான் அதன் அடிப்படை காரணம் என்று நான் கருதுகிறேன்!
இயற்க்கை தன் சமநிலையை தானாகவே காத்துக்கொள்ளும். மனிதனின் உதவி அதற்க்கு தேவையில்லை! ஏனெனில் மனிதனும் இயற்கையின் ஓர் அங்கமே. ஆனால் மனிதன் அறிவியல் என்ற பெயரில், இயற்கையின் இடையில் புகுந்து அதை குழப்பி எதோ தான்தான் மனிதனை காப்பற்றுவதுபோல ஒரு மாயமான தோற்றத்தை உருவாக்கியுள்ளான் என்றே நான் கருதுகிறேன்!
எனவே அறிவியலால் பல நன்மைகள் மனிதனுக்கு கிடைத்தாலும் அறிவியல் என்பது ஒரு அழிக்கும் சக்தியேயன்றி வேறல்ல என்றே நான் கருதுகிறேன்!