இரண்டு காலும் செயலிழந்த ஒருமுடவனிடம், "ஓட்டப்பந்தயத்தில் எவ்வாறு ஓடி வெல்வது" என்றொரு தலைப்பில் ஒரு சொற்பொழிவு நடத்தலாம்! அவரும் அனைத்தையும் ஆர்வமாக கேட்டு எல்லாவற்றயும் அறிந்துகொள்ள முடியும்! ஆனால் தான் அறிந்ததை தனது செயலில் காட்டுவதற்கு அவரிடம் கால்கள் இருப்பதில்லை!
இரண்டு கண்ணும் இல்லாத ஒரு குருடனிடம், 'ஒரு வீடயோ கேமராவை எவ்வாறு இயக்குவது' என்பதைப்பற்றி விளக்கி சொல்ல அவரும் அதை ஆர்வமாக கேட்டு அதை பற்றி முழுமையாக அறிந்து கொண்டாலும் அதை செயல்படுத்தி பார்த்து அறிந்துகொள்ளும் நிலையில் அவர் இருப்பதில்லை!
உலகிலுள்ள மதங்களும் அதுபோல்தான் உள்ளன!
இதை செய்யாதே பாவம் அதை செய்யாதே பாவம் என்று அனேக காரியங்களை பாவமாக எச்சரிக்கும் மதங்கள், அவற்றை செய்யாமல் விலக்க தேவையான எந்த ஒரு பலத்தையும் நமக்கு தருவதில்லை. பொதுவாக பாவம் என்பது நம்மை ஈர்க்கும் ஒரு மாபெரும் சக்தியாகவே இருக்கிறது. ஆன்மிகம் மற்றும் இறைவன் சம்பந்தப்பட்ட எத்தனையோ நல்ல விஷயங்களை அறிந்துகொள்ள விரும்பாத நாம், வாழ்க்கைக்கு சற்றும் தேவையற்ற பல பொழுதுபோக்கு அம்சம்களால் மிக அதிகமாக கவரப்படுகிறோம். (நமக்கு கிடைத்த பொழுது என்பது விலை மதிப்பில்லாதது, அது போக்குவதற்காக கொடுக்கப்படவில்லை என்பது அநேகருக்கு தெரிவதில்லை!)
மேலும் மது, சிகரெட் போன்ற பாவ பழக்கவழக்கங்கள், புறம் கூறுதல், பொய் பேசுதல் போன்ற சிறு சிறு பாவங்கள் நாம் நினைத்தாலும் உடனே கைவிட முடியாத அளவுக்கு நம்மை கட்டி வைத்துள்ளது என்பது அநேகர் அறிந்ததே!இப்படி பல பாவங்களை விட்டு மீள முடியாத ஒரு நிலையில் ஒருவர் தவிக்கும்போது அவரிடம் "அதை செய்யக்கூடாது இதை செய்யக்கூடாது" என்ற கட்டளைகளை மட்டும் கொடுப்பதால் எந்த பயனும் ஏற்ப்படபோவது இல்லை!
இப்படி தான்னால் முடியாது என்றொரு நிர்கதியற்ற நிலையில் ஒருவர் இறைவனிடம் வந்து நிற்கும்போது, அவருக்கு செய்யும் பாவத்தை உணர்த்தி அதை ஜெயிக்க பலம் கொடுத்து, கரம் பிடித்து வழி நடத்தி செல்லும் இறைவல்லமை ஓன்று உண்டு! "அநேகர் தடம் மாறிப்போகும் இவ்வுலகில் நான் பரிசுத்தமாக இறைவனுக்கேற்ற வாழ்க்கை வாழவேண்டும், ஆனால் என் பலத்தால் முடியவில்லையே ஆண்டவரே! எனக்கு உதவி செய்யும்" என்று பரிதபிப்போடு மன்றாடும் யாரானாலும் அவர் எந்த மதத்தை சார்ந்தவரானாலும் அவருக்கு உண்மையை உணர்த்தி உதவி செய்யும் அந்த ஆவியான தேவன் உங்களுக்குள் வந்து தங்கி நீங்கள் தவறு செய்யும்போது பரிவோடு கண்டித்து, வழி விலகும்போது அன்போடு உணர்த்தி. இறைவனின் எதிர்பார்ப்புக்கு ஏற்றபடி உங்களை மாற்றுவார். அதை நம்மால் அவ்வப்பொழுது உணர முடியும்!
உலக மனிதர்களாகிய நாம் நமது பிள்ளைகளுக்கு பள்ளி தொலை தூரத்தில் உள்ளது என்றால் அவர்கள்நேரத்துக்கு போக ஒரு சைக்கிளாவது வங்கி கொடுக்கிறோம். அதுபோல் அவர்களுக்கு தேவையான நன்மைகளை கொடுக்கவேண்டும் என்பதையும் அறிந்திருக்கும் போது, நம்மேல் அன்புமிக்க நம் இறைவன் உனதமான இறை ராஜ்யத்தை அடைவதற்கு வெறும் கட்டளைகளை மட்டும் கொடுத்துவிட்டு "அதன் படி நட" என்று கண்டிக்கும் ஒரு வாத்தியார் அல்ல!
அவருடைய விருப்பப்படி நடக்க வாஞ்சையோடு வரும் ஒருவர் அதற்க்கு தேவையான பலத்தை கேட்கும்போது, இறைவன் அந்த பரிசுத்த வல்லமையை தராமல் மறுப்பவர் அல்ல! ஆனால் "இந்த உலகில் எல்லோரும் இப்படித்தான் இருக்கிறார்கள் எனவே என்னால் இப்படி பரிசுத்தமாகவெல்லாம் வாழ முடியாது" என்று துணிந்து தவறு செய்பவர்கள் இந்த இறை வல்லமையை ஒருபோதும் அறிய முடியாது!
இந்த வல்லமையின் துணையின்றி ஒருவர் இறைவனுக்கு பிரியமாக வாழ்வது மிகமிக கடினம் என்பது நான் அறிந்த உண்மை!