இறைஞானம் எனபது அன்றிலிருந்து இன்றுவரை ஒரு குழப்பம் நிறைந்ததாகவே காணப்படுகிறது. ஒருவர் சொல்லும் கருத்தை இன்னொருவர் மறுக்கிறார். இவர் சொல்லும் கருத்தை அவர் மறுக்கிறார். இறைவனை பற்றிய செய்திகளை அநேகர் விரும்பாமல் ஒதுக்குவதற்கு முக்கிய காரணம். இறையடியார்கள், இறைவனை அறிந்தவர்கள், மற்றும் இறைதூதர்கள் சொல்லும் கருத்துக்களிடையே ஒற்றுமையின்மை என்று கூறினால் மிகையாகாது.
ஆதியில் துவைதம் அத்வைதம் என்பதிலிருந்து புத்தரின் கொள்கை மகாவீரர் கொள்கை ஏன் ஆபிரகாமின் மதங்களாகிய யூத, கிறிஸ்த்தவ, இஸ்லாம் மதங்களுக்கிடையே கூட கொள்கையளவில் பல வேறுபாடுகள் நிறைந்து காணப்படுகின்றன.
இதற்க்கு முக்கிய காரணம் என்ன?
இந்த பேரண்டத்தில் நமது பூமியே ஒரு தூசிபோல உள்ளது இவை அனைத்தையும் படைத்த இறைவனை யாருமே முழுமையாக அறிய முடியாது என்பதுதான் எனது பதில்.அனால் யானை பார்த்த குருடர்கள் போல் அவரவர் தங்கள் சொல்வதுதான் முற்றிலும் உண்மை வேறு எதுவுமே கிடையாது என்பதை நிலைநாட்ட வரிந்துகட்டிக்கொண்டு நிற்கின்றனர்.
இந்துமதம் கர்மவினை பற்றி பேசுகிறது புத்தமதம் ஆசையை ஒழித்து இன்பமாய் வாழ வழி சொல்கிறது இஸ்லாம் மதம் இறுதிநாளில் சுவனத்தை அடைய வழிகாட்டுகிறது கிறிஸ்த்தவ மதம் பரலோக ராஜ்யத்தை அடைய வழி ஏற்ப்படுத்தியுள்ளது!
வள்ளலார் ஜோதியான இறைவனோடு இரண்டற கலக்க வழி முறைகளை கூறியுள்ளார். ரமண மகரிஷி, ஷிர்டி சாய்பாபா போன்றோர் இறைவனின் அன்பை ருசித்து சாதாரண வாழ்க்கை மூலம் இறைவனை அடையும் வழியை போதித்து சென்றுள்ளார்.
எல்லா மதங்களுமே இறைவனை அடைய இன்பமாய் வாழ வழி சொல்லியிருந்தாலும் இவற்றுக்குள் ஏன் இத்தனை வேறுபாடு. ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு வெளிப்பாடு ஏன்?
பதில் மிகவும் எளிதானது!
ஆன்மீகத்தில் எல்லா உண்மைகளையும் ஒருவரால் முழுவதும் அறிய முடியாது! அப்படி அறிந்துகொண்டாலும் அவரால் அதை தாங்க முடியாது. எனவே இறைவன் அவரவர் நோக்கத்துக்கு தகுந்தவற்றை மாத்திரம் அவரவருக்கு தெரியப்படுத்துகிறார்.
உதாரணமாக அரண்மனையில் வாழ்ந்த புத்தர் மனம்மாற காரணம், அவர் உலகில்கண்ட மூன்று காட்சிகள்தான் என்று படித்திருக்கிறோம். எனவே அவருடைய தேடுதல் என்பது துன்பம் இல்லாமல் இந்த உலகில் வாழ என்ன செய்யவேண்டும் என்ற அடிப்படையிலேயே இருந்ததால் இறைவன் அவருக்கு ஆசையை ஒழித்து துன்பத்தை வெல்லலாம் என்ற ஞானத்தை கொடுத்தார்.
அதுபோல் வள்ளலார் அவர்கள் மாபெரும் ஜோதியான இறைவனோடு நாமும் கலக்கவேண்டும் என்ற தீராத வாஞ்சையுடன் அவர் தேடுதல் இருந்ததால் அவருக்கு ஆன்மீகத்தில் உள்ள 108 படிநிலைகளையும் அதை தாண்டி எவ்வாறு அந்த அருட்பெருஜோதியோடு கலப்பது என்று உண்மையை இறைவன் அவருக்கு தெரிவித்தார்.
பாவத்தால் கடுமையாக பீடிக்கப்பட்டு இறைவனின் அன்பைவிட்டு பிரிந்துசென்ற பாவிகளும் மீண்டும் இறைவனிடம் சேரவேண்டும் என்ற எண்ணத்தோடு இயேசுபிரான் இறைவனை தேடியதால் அவருக்கு பரலோக ராஜ்யம் என்றொரு தனியான ராஜ்யத்தை ஏற்படுத்தி கொடுத்து இயேசுவின் சொந்த ரத்தத்தின் மூலம் மனிதர்கள் அங்கு செல்வதற்க்கான வழியை இறைவன் ஏற்ப்படுத்தி கொடுத்தார்.
எனவே அவரவர் நோக்கம் என்ன என்பதற்கு தகுந்தால்போல் அவரவருக்கு இறைவன் வழிகளை காண்பித்துள்ளார் என்பதை இதன் மூலம் புரியமுடியும். இதில் "இது உண்மை" "அது பொய்" என்று மறுத்து கூற யாருக்கும் தகுதியில்லை என்றே நான் கருதுகிறேன்.
தெரிவு உங்களுடையது! நம்முடைய தகுதி என்ன? நாம் எந்த நிலையில் இருக்கிறோம் என்பதை சரிவர ஆராய்ந்து ! உங்கள் தகுதிக்கேற்ற சரியான வழியை தேர்ந்தெடுங்கள்.