புதியதாய் ஒரு பூமி கேட்கும் மானிடனே தகுதிதான் உனக்கு உண்டோ யோசித்துபார்! அழகினால் இழைத்து தந்த அகிலமதை அணுவணுவாய் அழித்து விட்டாய் ஆசையினால்!
மரங்கலெல்லாம் வெட்டி வெட்டி மகிழ்ந்திருந்தாய் மழையதனை இழந்து நீயும் ஏங்கி நின்றாய் சுயநலமே சொர்க்கம் என்றே வாழுகிறாய் சீக்கிரத்தின் அழிவை நீயே தேடுகின்றாய்
ஆற்று மணலை அள்ளி அள்ளி வீடு செய்தாய் நேற்று வந்த மழையில் நீயும் நொந்து நின்றாய் காற்றை கூட கரிப்புகையால் மாசு செய்தே வேற்று கிரகம் ஓடிவிட தேடுகின்றாய்!
ஆழ் துளையால் கிணறு செய்து நீரெடுத்தாய் அடுத்துடுத்து பூகம்பத்தால் வாடி நின்றாய் ஒப்பற்ற ஓசோனிலும் ஓட்டை செய்தால் எப்படி உன் எதிர்காலம் சுகித்திருக்கும் ?
கடலைகூட விடவில்லை நீ கலக்கி விட்டாய் கழிவுநீரை கலந்ததையும் கெடுத்து விட்டாய் அழிவு காலம் வரும் முன்னே விழித்துவிடு அடுத்து ஒரு வழியும் இல்லை திருந்திவிடு!
ஏரியெல்லாம் தூர்த்தேடுத்து குடிசை செய்தாய் மாரிவந்தால் வெள்ளம் என்று கதறுகின்றாய் வாரி வாரி வழங்கினேன் உன்னை வாழவைக்க ஏறி என்னை உதைக்கிறாயே இன்றுவரை
ஆயிரம் முறை சொல்லிவிட்டேன் கேட்கவில்லை அடிகொடுத்தும் பார்த்துவிட்டேன் திருந்தவில்லை புதியதாய் பூமி ஒற்றை படைத்திடுவேன் ஆனால் புகுந்துவர விடமாட்டேன் உன்னை அங்கே!!!