ஆசையே துன்பத்துக்கு காரணம் என்பது புத்தரின் சீரிய போதனை. அதை நிச்சயம் ஏற்றுக்கொள்ளலாம். ஆனால் ஆசையை ஒழிப்பது என்பது ஒரு சாதாரண காரியமா? வயிற்றில் பசி எடுத்தால் சாப்பாட்டின்மேல் ஆசை தானாக வருகிறது, அழகான பெண்ணை பார்த்தால் நம்மை அறியாமலே திரும்பிபார்க்கும் ஆசை வருகிறது. வெயிலில் நடக்கும் ஒருவனுக்கு நிழலில் இளைப்பாற ஆசை வருகிறது.
ஆராய்ந்து பார்த்தால் நமது உடலே நம்மை ஆசை என்னும் கடலுக்குள் தள்ளிவிடும் ஒரு அடிப்படை காரணியாக உள்ளது!
இந்நிலையில் ஆசையில், எது முக்கியமான ஆசை எது தேவையற்ற ஆசை என்று வரையறுப்பது எப்படி?
மானத்தை காக்க சரியான உடை இல்லாதபோது நல்ல உடைக்கு ஆசைப்படுவது தவறல்ல பசிக்கும் போது சாப்பாடின்மேல் ஆசைப்படுவது தவறல்ல, பசிக்கு சாப்பாடு மிக முக்கியம்! சரி சாப்பிட்டால் தங்குவதற்கு இடம் மிக முக்கியம். அட வாடகை வீட்டிலே எத்தனை நாள் காலம் தள்ளுவது ஒரு சொந்த வீட்டின்மேல் ஆசை படுவது தவறா? இப்படி படிப்படியாக போய்கொண்டே இருக்கும். நடந்து
செல்லும் ஒருவன் சைக்கிளில் செல்ல ஆசைப்படுவது தவறா? என்று கேட்டால் சரியானபதில் அதற்க்கு இல்லை!
ஆசையை முற்றிலும் ஒழிப்பது எப்படி? ஆசை இல்லாமல் மனிதன் வாழவே முடியாது என்றே நான் கருதுகிறேன் எனவே ஆசையேபடாமல் இருந்து துன்பத்தை தவிர்ப்பதேல்லாம் நடக்கிற காரியமா?
நமது உடலின் அடிப்படை தேவையை நிறைவேற்றவே நாம் ஆசை என்னும் ஒரு கூட்டிற்குள் அடைபட வேண்டியுள்ளது. இன்று உலகில் புத்தரைபோல் ஆசையை துறந்து நிம்மதியாக வாழ்பவர் எத்தனைபேர்? உலகில் எல்லோருமே ஆசைக்கு அடிமைபட்டு கிடக்கும்போது பழைய கதையையே திரும்ப பேசி ஆசையே துன்பத்துக்கு காரணம் என்று கூறுவதில் என்ன பயன் கிடைக்கபோகிறது?
ஆசையே இல்லாமல் மனிதனால் வாழவே முடியாது. முற்றும் துறந்த முனிவர்கள்தான் அப்படி வாழமுடியும். ஆனால் ஆண்டவர் மனிதனை ஆசையை அறவே விட்டுவிட்டு ஜடமாக வாழசொல்லவில்லை.
"எல்லாவற்றையும் அனுபவிக்க எனக்கு அதிகாரம் உண்டு"என்ற வார்த்தைப்படி உலகில் உள்ள எல்லாவற்றையும் நாம் தாராளமாக அனுபவிக்கலாம்! ஆனால்
தேவனின் வார்த்தைகளுக்கு கட்டுப்பட்டு அவற்றை அனுபவிக்க வேண்டும் என்பதே ஆண்டவரின் எதிர்பார்ப்பு!
உதாரணமாக
உன் மனைவியுடன் நீ எப்படிவேண்டுமானாலும் வாழ்ந்துகொள் அதில் எந்த தவறும் இல்லை. ஆனால் அடுத்தவன் மனைவியை இச்சித்துவிடாதே அது உன்னை படுகுழியில் தள்ளிவிடும்.
நன்றாக வேலைசெய்து அதிகம் சம்பாதித்து அருமையான வாழ்க்கையை அமைத்துகோள்ளலாம் ஆனால் அடுத்தவனை பொய்சொல்லி ஏமாற்றி சம்பாதித்து
அந்த பணத்தில் வாழாதே அது உங்களுக்கு இல்லையென்றாலும் உங்கள் பிள்ளைகளுக்காவது தண்டனையை கொண்டுவரும்!
வாழ்க்கை வாழ்வதற்கே ஆனால் ஆண்டவர் அனுமதித்த எல்லையை மீறாமல் வாழ்வதில் தவறேதும் இல்லை!
மற்றபடி ஆசைகளை அறவே ஒழித்துவிட்டு ஆண்டியாய் அலைந்துகொண்டு இருப்பதால் அறியபயனெதுவும் ஏற்ப்படபோவது இல்லை!