ஒரு சிறு குழந்தை எல்லா தேவைக்கும் தன் தாய் தகப்பனையே சார்ந்து வாழ்வது போல, மனிதன் தன்னையே சார்ந்து தன்னுடன் உறவாடி வாழ வேண்டும் என்ற நோக்கத்துடன், இறைவன் மனிதனை படைக்கும் முன்னே அவனுக்கு தேவையான எல்லாவற்றையும் இந்த உலகில் படைத்து விட்டு பிறகுதான் மனிதனை படைத்தார்!
இன்றும் பூமியில் ஒரு குழந்தை, தாயின் வயிற்றில் இருந்து பிறக்கும் முன்னே அதற்க்கு தேவையான உணவை தாயிடம் தயார் பண்ணி வைத்துள்ளார் அதுவே அதற்க்கு சாட்சி!. அதை போலவே நாம் உயிர் வாழ்வதற்கு தேவையான எல்லாமே நமக்கு அருகில் நம் கண்கள் எட்டும் தொலைவில் இறைவனால் அமைக்கப்பட்டுள்ளது.
ஆனால் மனிதர்கள் எல்லோரும் அவரை நோக்கி பார்த்து, அவரிடம் இருந்து தேவைகளை பெற்று, அவருக்கு கீழ்படிந்து அவர் சித்தப்படி வாழ்வதை விட, தங்கள் சுய புத்தியால் எப்படி சம்பாதிக்கலாம் எப்படி விருப்பம் போல வாழமுடியும் என்றுதான் அதிகமாக சிந்திக்கிறார்கள். அவன் இறைவனுக்கு சமீபமாக வாழ்வதைவிட அவரைவிட்டு பிரிந்து வாழவே அதிகம் ஆசைப்படுகிறான். காரணம் மனிதனின் பாவ குணங்கள் இறைவனின் பரிசுத்த நிலைக்கு ஒத்துபோவது இல்லை.
மனிதனின் இந்த நிலையை பார்த்த இறைவன் "என் ஆவி மனிதனின் ஆவியோடே என்றும் போராடுவது இல்லை" என்று சொல்லி, நாம் விரும்பும் வழியில் நம்மை விட்டு விடுகிறார்.
உதாரணமாக ஒரு குழந்தையை நம்மால் முடிந்த அளவு திருத்தி பார்க்கலாம் ஆனால் அது அடங்கா பிடாரியாக, தான் நினைத்தது போல வாழவேண்டும் என்று ஆசைப்பட்டு நம்மை விட்டு போய்விட்டால் என்ன செய்வோம் "எங்காவது போய் நன்றாக வாழ்ந்தால் சரி" என்று விட்டு விடுவது போல, இறைவனும் நம்மை விட்டுவிடுகிறார். ஆனாலும் அவருடைய கண்கள் நம்மேல் எப்பொழுதும் நோக்கமாய் இருப்பதோடு, என்றாவது ஒருநாள் நிச்சயம் என்னை தேடி வருவாய் என்ற எதிர்பார்ப்போடு நமக்காக காத்திருக்கிறார்.
நாம் வாழ்க்கையில் பலமுறை அடி, உதைகள் பட்டு இறைவன் இருப்பதை கடைசியாக உணர்ந்து எந்த ஒரு நிலையில் அவரை தேடி ஓடி வந்தாலும் கொஞ்சமும் மாறா அன்புடன் நம்மை அணைக்க தயாராக இருக்கிறார்!
இதுவே இறைஅன்பு என்ற உன்னத அன்பு! . இதை அறியாதவர்கள் ஏதேதோ சொல்லாம்! ஆனால் அவரை அறிந்தவர்கள் ஒருநாளும் அவரை விட்டு பிரியவே மாட்டார்கள்! பிரியவும் முடியாது என்பதே உண்மை!
ஆனால் எந்நாளும் இதுபோல் தகப்பனாகிய இறைவன் வீட்டுவாசல் திறந்தே இருக்கும் என்று எதிர்பார்க்க முடியாது!
"எல்லாவற்றிக்குமே ஒரு முடிவு உண்டு " என்பதுபோல் திரந்திருக்கும் கதவுகள் அடைபடும் நாள் ஓன்று வரும். அதற்க்கு பிறகு நாம் இறைவனிடம் போய் கெஞ்சி கண்ணீர்விட்டு நின்றாலும் "உங்களை அறியேன் அக்கிரம செய்கைகாரர்களே என்னைவிட்டு அகன்று போங்கள்" என்று கூறிவிடுவார். அப்பொழுது வேதனை உள்ள புறம்பான இருளிலே உங்களை தள்ளப்பட்டவர்களாக காணும்போது அங்கே அழுகையும் பற்கடிப்பும் உங்களுக்கு உண்டாயிருக்கும்.
எனவே காலம் நிறைவேறுவதற்கு முன்னமே ஆண்டவரின் அன்பு கரத்துக்குள் வாருங்கள்