*முஸ்லிம்களுக்கு அரபுமொழிப்பற்று ஏன்?* தமிழைத் தாய்மொழியாகக் கொண்ட முஸ்லிம்கள் அரபு மொழி மீது பற்று கொண்டிருப்பது ஏன்?
பதில் : "எந்த ஒரு தூதரையும் அவரது சமுதாய மக்கள் பேசும் மொழியைக் கொண்டே நாம் அனுப்பி வைத்தோம்" (அல்குர்ஆன் 14:4) என்று இறைவன் கூறுவதிலிருந்து எல்லா மொழிகளும் சமமே என்பதே இஸ்லாத்தின் நிலைபாடு.
ஏக இறைவனின் இறுதிவேதம் அரபு மொழியில் இறக்கியருளப்பட்டதால் அதன் அசல்வடிவில் ஓத வேண்டும் என்பதற்காகவே அரபி மொழி கற்கின்றோம்.
உலக நாடுகளுடன் தொடர்புகளை பலப்படுத்திக் கொள்ள, வேலை வாய்ப்பிற்காக, வணிக வசதிகளுக்காக பிற மொழிகளைக் கற்கத்தானே செய்கிறோம். அதுபோல முஸ்லிம்கள் ஏக இறைவனின் வேதத்தை ஓதுவதற்காகவும் இறைதூதர் (ஸல்) அவர்கள் ஏக இறைவனை வணங்குவதற்கு கற்றுத்தந்த வார்த்தைகளைக் கொண்டு அப்படியே வணங்க வேண்டும் என்பதற்காகவும் அரபு மொழியைக் கற்கின்றோம். அதற்காக அரபு மொழி தாய்மொழி தமிழை விட மேலானது என்ற இஸ்லாம் கூறவுமில்லை. முஸ்லிம்கள் அவ்வாறு கருவதுமில்லை.
ஏக இறைவனின் வேத வரிகளுக்கு ஒத்த கருத்துடைய ஒரு வாக்கியத்தை அரபு மொழிலேயெ இயற்றி வைத்து அதை ஓதினால் அதற்கு எந்த ஒரு நன்மையும் கிடைப்பதில்லை. நபி (ஸல்) அவர்கள் பிரார்த்தனை ஒன்றைக் கற்றுக் கொடுத்தார்கள். அந்த நபித் தோழர் பிரார்த்தனையை திரும்பக்கூறும் போது ‘நபிய்யிக’ என்று கூறுமிடத்தல் ‘ரஸுலிக’ என்று கூறிவிட்டார். ஆனால் நபி (ஸல்) அவர்கள் ‘நபிய்யிக’ என்றே கூற வேண்டும் என்று திருத்தினார்கள். (புகாரி) ‘நபிய்யிக’ என்பதற்கும் ‘ரஸீலிக’ என்பதற்கும் வேறுபாடு இல்லை. இரண்டு வார்த்தையுமே அரபு மொழியில் அமைந்தது தான். ஒரே பொருளைக் கொடுக்கக்கூடியதுதான். ஆயினும் நபி(ஸல்) அவர்கள் கற்றுத்தந்தது போலவே ஏனையவர்களும் சொல்ல வேண்டும் என்பது தானே தவிர அரபு மொழி பற்று அங்கே இல்லை.
"உங்களில் எவருடனும் உங்கள் இறைவன் பேசாமலிருக்கமாட்டான் அவனுக்கும் அவனது இறைவனுக்குமிடையே எந்த மொழிபெயர்ப்பாளரும் இருக்கமாட்டார்கள்" என்று நபி (ஸல்) அவர்கள் கூறியிருக்கின்றார்கள் (புகாரி, முஸ்லிம், இப்னுமாஜா). ஆகவே மறுமையில் தாய்மொழியான தமிழ் மொழியிலேயே ஏக இறைவனிடம் உரையாடுவோம் என்று நம்புகிறோம்.
முஸ்லிம்கள் அரபு மொழியை ஒரு புனிதமான மொழி என்று நினைப்பதில்லை. திருக்குர்ஆனையும் நபி மொழியையும் மட்டுமே புனிதமாக கருதுகின்றோம். அரபுமொழி என்பது அரபுநாடுகளில் வாழும் முஸ்லிம்களின் தாய்மொழி மட்டுமல்ல. அங்கு வாழும் யூதர்களின், கிறிஸ்தவர்களின் இணைவைப்பவர்களின் தாய்மொழியும் அதுவே. நபி (ஸல்) அவர்களை மும்முரமாக எதிர்த்து சொல்லொண்ணா துன்பங்களையும் துயரங்களையும் விளைவித்த அபூஜஹல், அபூலஹப் போன்ற கொடியவர்களின் தாய்மொழியும் அதுவே. ஆக முஸ்லிம்கள் அரபு மொழிக்கு உயர்ந்த அந்தஸ்து கொடுக்கவில்லை. அரபு மொழியில் அமைந்த குர்ஆனுக்கும், நபி மொழிக்கும் மட்டுமே உயர் அந்தஸ்து கொடுக்கின்றார்கள்.
சகோதரர் அவர்களே தங்களின் கட்டுரை நியாயமானதுதான் அனால் ஒரே ஒரு காரியத்தை நான் தங்களுக்கு தெரிவித்து கொள்ள விரும்புகிறேன்.
இறைவன் என்பவர் மொழி/ மதங்களுக்கு அப்பாற்பட்டவர் என்பது அனைவரும் அறிந்ததே. இந்நிலையில் இந்த குறிப்பிட்ட மொழியில்தான் தனது வசனங்ககளை ஓத வேண்டும் என்று அவர் விரும்புவாரா என்ன?
ஒருவர் தனது கருத்தை அல்லது கோப தாபத்தை/ அன்பை இன்னொருவருக்கு வேறு எந்த மொழியில் வெளிப்படுத்தினாலும், அது தாய்மொழியில் சொல்வதுபோல ஆகவேஆகாது.
இறைவன் மிகபெரியவர்! யார் எந்தமொழியில் "தத்தக்கா பித்தக்கா" என்று அவரை பார்த்து உளறினாலும், அவரின் எண்ண ஓட்டம் மற்றும் மனநிலையை வைத்து அவரின் உண்மை வாஞ்சையை அவரால் துல்லியமாக அறிந்து கொண்டு அதற்க்கு ஏற்றாற்போல் அவரால் செய்யமுடியும் என்றே நான் கருதுகிறேன்.
இந்நிலையில் இறைவனின் வேதத்தை சரியாக ஓதி சரியாக அறியவேண்டும் என்பதற்காகவே ஒரு புது மொழியை பயில வேண்டும் அதன்மேல் பற்று வரவேண்டும் என்ற கருத்து சரியானதுபோல தெரியவில்லையே நண்பரே.
தங்களுடைய திருக்குர்ரான் அரபி மொழியில் இறக்கப்பட்டது என்பதனால் அந்த மொழிமேல் தங்களுக்கு பற்று இருக்கிறது அதை பயிலவேண்டும் என்ற எண்ணமும் இருக்கிறது அதில் எந்த தவறும் இல்லை. ஆனால் அதற்காக அதே மொழியில் ஓதினால்தான் இறைவன் கேட்பார் என்பது போன்று சொல்வது சரியான கருத்தா?
-- Edited by இறைநேசன் on Wednesday 28th of April 2010 08:55:09 PM