வேத புத்தகம் இரண்டு சாவுகளை (மரணங்களை) பற்றியும் அதற்க்கு இணையாக இரண்டு பிழைத்தல்கள் பற்றியும் விளக்கமளிக்கிறது. இதுவே நமது வேத புத்தகத்தின் மகிமை என்று சொன்னால் அது மிகையாகாது. எந்த வேதங்களிலும் சொல்லப்படாத கருத்தாகிய இரண்டு மரணங்களையும் அவற்றை ஜெயிக்கமுடியும் என்ற கருத்தையும் நமது வேதாகமம் மட்டுமே சொல்வதோடு அதற்க்கான வழியையும் சொல்கிறது. அவற்றை குறித்து நாம்இங்கு வசன ஆதாரங்களோடு சற்று ஆராயலாம் என்று கருதுகிறேன்.
மரணத்தின் வகைகள்:
பொதுவாக மரணம் என்பது ஒரு முடிவை குறிக்கிறது. வாழ்க்கையின் முடிவு தான் மரணம் இரண்டாவது மரித்தவர்கள் மறைக்கப்படுகிறார்கள் அவர்களை மீண்டும் மாமிசநிலையில் உள்ள நம்மால் காணமுடியாத ஒருநிலை ஏற்ப்படுகிறது
பிரசங்கி 9:5மரித்தவர்கள் ஒன்றும் அறியார்கள்; இனி அவர்களுக்கு ஒரு பலனுமில்லை, அவர்கள் பேர் முதலாய் மறக்கப்பட்டிருக்கிறது.
எனவே மரணம் என்பதன் பொருள் 1. முடிவு 2. மறைக்கப்படுதல்
இந்த மரணம் இரண்டு வகைப்படும் என்று வேதாகமம் போதிக்கிறது
மேலே சொல்லப்பட்டுள்ள வசனங்கள் முதல் மரணமாகிய சரீர மரணத்தை குறிக்கின்றன. இன்று உலகில் நாம் பொதுவாக பார்க்கும் மரணங்கள் எல்லாமே சரீர மரணங்கள்தான் இம்மரணத்தை வென்றவர்கள் யாருமே கிடையாது. நமது ஆண்டவராகிய இயேசு மரித்து பின்னர் உயிர்த்துதான் மரணத்தை ஜெயித்து உயிர்த்தாரேயன்றி மரிக்காமல் இருக்கவில்லை.
இந்த சரீர மரணத்தை காணாமல் எடுத்துகொள்ளப்பட்ட எலியா மற்றும் ஏனோக்கு கூட நிச்சயம் பூமியில் திரும்பவும் வந்து மரித்தே ஆகவேண்டும் என்று நான் கருதுகிறேன். வருகிறவனாகிய எலியா இவன்தான் என்று இயேசு யோவானை குறித்து சொன்னபடியால் அவர்கள் இருவரில் ஒருவரான எலியா யோவானாக வந்து மரித்தார் என்று நம்பபடுகிறது. மேலும் வெளிப்படுத்தின விசேஷம் 11:3 சொல்லும் இரண்டு சாட்சிகளில் ஒருவராக ஏனோக்கு இருக்கலாம் எனவும் நம்பபடுகிறது. ஒருவேளை இயேசுவின் ஜெயத்தால் அவர்களுக்கு மீண்டும் மரணம் இல்லாமல்கூட இருக்கலாம் அதுபற்றி எனக்கு போதிய வெளிச்சம் இல்லை. (எதற்குமே சில விதிவிலக்குகள் உண்டு, இவர்களும் விதிவிலக்கானவர்கள். மேலும் தெரியாத காரியங்களைப்பற்றி விளக்கமளிக்க முயல்வது சரியான செயல் அல்ல)
மற்றபடி உலகில் பிறந்த எல்லோருமே மரித்தே ஆகவேண்டும் என்றொரு கட்டாய நிலையில் இருப்பதை நாம் காண்கிறோம் அதைப்பற்றி பவுலும் இவ்வாறு எழுதுகிறார்.
ரோமர் 7:24நிர்ப்பந்தமான மனுஷன் நான்! இந்த மரணசரீரத்தினின்று யார் என்னை விடுதலையாக்குவார்?
எபிரெயர் 9:27அன்றியும், ஒரேதரம் மரிப்பதும், பின்பு நியாயத்தீர்ப்படைவதும், மனுஷருக்கு நியமிக்கப்பட்டிருக்கிறபடியே,
இப்படி நமது சரீரம் மரித்து நாம் மறைந்து அல்லது அழிந்து வாழ்க்கை முடிந்து போவதுவே முதலாம் மரணம் எனப்படுகிறது. பெரியபெரிய பாஸ்டர்களில் இருந்து பரதேசிகள்வரை எல்லோரும் மரித்துகொண்டுதான் இருக்கிறார்கள், பரிசுத்தவான் மற்றும் அப்போஸ்தலர்கள்கூட மரித்துவிடார்கள். இப்படி, சரீரம் மரித்து ஒருவர் மறைந்து அல்லது அழிந்து வாழ்க்கை முடிந்து போவதுவே முதலாம் மரணம் எனப்படுகிறது. இம்மரணம் இயேசு மரித்து உயிர்த்தபின்னும் இன்னும் இந்த உலகில் சம்பவித்து ண்டுதான் இருக்கிறது.
மரணத்துக்கான காரணம்:
ஆதாமின் மீருதலால்தான் எல்லோரையும் இந்த மரணம் ஆட்கொண்டது என்று வேதம் நமக்கு போதிக்கிறது. மரணம் என்றால் என்னவென்றே அறியாமல் வாழ்ந்த தாம் தேவன் விலக்கிய கனியை புசித்தபோது மரணமடைய நேரிட்டது அவனுடைய மீறுதலால் வந்தமரணம், அவனுடைய வித்தால் உருவான எல்லோரையும் தானாகவே ஆட்கொண்டது. ஒரு அடிமைக்கு பிறந்த மகன் எப்படி தானாகவே ஒரு அடிமையாகிவிடுகிரானோ அதுபோல் இவ்வாறு ஆனது!
முதல் மரணம் என்னும் சரீரமரணம் இன்றுஉலகில் எல்லோரையுமே ஆட்கொண்டு வருகிறது. இம் மரணத்தை அடைந்தவர்கள் எல்லோரும் ஆண்டவராகிய இயேசு பலியானதன் விளைவாக மீண்டும் ஒருமுறை உயிர்த்தெழும் வாய்ப்பை பெறுகின்றனர்.
யோவான் 5:28இதைக்குறித்து நீங்கள் ஆச்சரியப்படவேண்டாம்; ஏனென்றால் பிரேதக் குழிகளிலுள்ள அனைவரும் அவருடைய சத்தத்தைக் கேட்குங் காலம் வரும்; 29. அப்பொழுது, நன்மைசெய்தவர்கள் ஜீவனை அடையும்படி எழுந்திருக்கிறவர்களாகவும், தீமை செய்தவர்கள் ஆக்கினையை அடையும்படி எழுந்திருக்கிறவர்களாகவும் புறப்படுவார்கள்.
தானியேல் 12:2பூமியின் தூளிலே நித்திரைபண்ணுகிறவர்களாகிய அநேகரில் சிலர் நித்தியஜீவனுக்கும், சிலர் நித்திய நிந்தைக்கும் இகழ்ச்சிக்கும் விழித்து எழுந்திருப்பார்கள்.
இவ்வாறு இவ்வுலகில் சரீரத்தில் மரித்த எல்லோரும் மீண்டும் ஒருமுறை உயிர்க்கின்றனர். இதில் முதலாம் உயிர்தெழுதல் மற்றும் பொது உயிர்தெழுதல் என்று இரண்டு வகை உண்டு. இதில் முதலாம் உயிர்தெழுதலில் பங்கு பெறுபவர்கள் பாக்கியான்கள்:
வெளி 206. முதலாம் உயிர்த்தெழுதலுக்குப் பங்குள்ளவன் பாக்கியவானும் பரிசுத்தவானுமாயிருக்கிறான்; இவர்கள்மேல் இரண்டாம் மரணத்திற்கு அதிகாரமில்லை
இரண்டாம் மரணம் :
பொதுவான உயிர்தெழுதலில் உயிர்த்த மனிதர்கள் அனைவரும் தேவனது சிங்காசனத்திற்கு முன் நியாயதீர்ப்புக்கு வந்து நிற்ப்பார்கள்.
வெளி 20: 12. மரித்தோராகிய சிறியோரையும் பெரியோரையும் தேவனுக்கு முன்பாக நிற்கக்கண்டேன்; அப்பொழுது புஸ்தகங்கள் திறக்கப்பட்டன; ஜீவபுஸ்தகம் என்னும் வேறொரு புஸ்தகமும் திறக்கப்பட்டது; அப்பொழுது அந்தப் புஸ்தகங்களில் எழுதப்பட்டவைகளின்படியே மரித்தோர் தங்கள் தங்கள் கிரியைகளுக்குத்தக்கதாக நியாயத்தீர்ப்படைந்தார்கள்.
இவ்வாறு இறுதி நியாயதீர்ப்பு கொடுக்கப்படும்போது சிலருக்கு மரணதண்டனை கொடுக்கப்படும். அதைதான் வேதம் "இரண்டாம் மரணம்" அல்லது"நித்தியமரணம்" அல்லது "அக்கினி கடலில் தள்ளப் படுதல்" என்ற பெயரில் குறிப்பிடப்படுகிறது. அது அந்த ஆத்துமாவின் முடிவுநிலை. இரண்டாம் மரணத்தை வேதம் மிக தெளிவாக "இரண்டாம் மரணம்" என குறிப்பிடுகிறது.
வெளி 20:14அப்பொழுது மரணமும் பாதாளமும் அக்கினிக்கடலிலே தள்ளப்பட்டன. இது இரண்டாம் மரணம்.
வெளி 21:8பயப்படுகிறவர்களும், அவிசுவாசிகளும், அருவருப்பானவர்களும், கொலைபாதகரும், விபசாரக்காரரும், சூனியக்காரரும், விக்கிரகாராதனைக்காரரும், பொய்யர் அனைவரும் இரண்டாம் மரணமாகிய அக்கினியும் கந்தகமும் எரிகிற கடலிலே பங்கடைவார்கள் என்றார்
மாற்கு 3:29ஒருவன் பரிசுத்த ஆவிக்கு விரோதமாகத் தூஷணஞ்சொல்வானாகில், அவன் என்றென்றைக்கும் மன்னிப்படையாமல் நித்திய ஆக்கினைக்குள்ளாயிருப்பான் என்றார். மத்தேயு 25:41அப்பொழுது, இடதுபக்கத்தில் நிற்கிறவர்களைப்பார்த்து அவர்: சபிக்கப்பட்டவர்களே, என்னைவிட்டு, பிசாசுக்காகவும் அவன் தூதர்களுக்காகவும் ஆயத்தம்பண்ணப்பட்டிருக்கிற நித்திய அக்கினியிலே போங்கள்.
II தெசலோனிக்கேயர் 1:10அவர்கள் கர்த்தருடைய சந்நிதானத்திலிருந்தும், அவருடைய வல்லமைபொருந்திய மகிமையிலிருந்தும் நீங்கலாகி, நித்திய அழிவாகிய தண்டனையை அடைவார்கள்
மேலே சொல்லப்பட்டவைகள் எல்லாம் நித்தியமரணமாகிய இரண்டாம் மரணத்தை பற்றி சொல்லும் வசனங்கள்.
இவ்வாறு வேதாகமம் இரண்டு விதமான மரணங்களை பற்றி குறிப்பிடுகிறது இது அனைவரும் அறிந்ததே. அனால் நமது மகத்துவமான வேதாகமம் இந்தஇரண்டு மரணங்களையும் ஜெயிக்கவும் தெளிவாக வழியை சொல்லுகிறது. அந்த வழிகளை பற்றித்தான் நாம் இங்கு வசன ஆதாரத்தோடு பார்க்கபோகிறோம்.
சங்கீதம் 25:12கர்த்தருக்குப் பயப்படுகிற மனுஷன் எவனோ அவனுக்குத் தாம் தெரிந்து கொள்ளும் வழியைப் போதிப்பார்.
இரண்டு விதமான "சாவுகளை" (மரணங்களை) வசனத்தின் அடிப்படையில் ஆராய்ந்த நாம் இப்பொழுது இரண்டு விதமான "பிழைத் தல்களை" பற்றி இங்கு ஆராயலாம்.
உலகில் நடக்கும் ஒவ்வொரு காரியத்துக்கும் இரண்டு நிலைகள் உண்டு. ஒவ்வொரு காரியமும் ஆவிக்குரிய நிலையில் முதலில் நிறைவேறும். பிறகுதான் அது நமது கண்களால் காணும் அளவுக்கு மாமிசத்துக்குரிய நிலையில் தெரியும். அதாவது ஆதாம் பழத்தை சப்பிட்டபோதே அவனது மரணம் என்பது ஆவிக்குரிய நிலையில் நிறைவேறிவிட்டது அது மாமிசத்தில் வெளிப்பட தொளாயிரத்து முப்பது வருஷம் ஆனது.
அதுபோல் நேபுகாத்நேச்சர் மிருகம்போல மாறவேண்டும் என்ற நிலை ஆவிக்குரிய நிலையில் முன்னமே தீர்மானிக்கப்பட்டு நிறைவேறி விட்டாலும் அது மாமிசதில் தெரிவதற்கு பன்னிரண்டு மாதம் சென்றது.
29. பன்னிரண்டு மாதம் சென்றபின்பு, ராஜா பாபிலோன் ராஜ்யத்தின் அரமனைமேல் உலாவிக்கொண்டிருக்கும்போது: 28. இதெல்லாம் ராஜாவாகிய நேபுகாத்நேச்சாரின்மேல் வந்தது.
இதுபோல் எல்லா காரியங்களும் ஆவிக்குரிய நிலையில் முதலில் நிறைவேறும் பின்னர் அது மாமிசத்தில் தெரியும்.
(ஒரு சிறிய உதாரணம் சொன்னால் நமது செல்போனில் அலாரம் வைப்பதுபோன்ற ஒரு நிலை. அலாரம் வைக்கப்படுவது ஆவிக்குரிய நிலை அது அநேகருக்கு தெரியாமல் இருக்கலாம் ஆனால் அது ஒலிக்கும்போது வெளிப்படையாக பலருக்கு தெரியும்)
அலாரத்தை செட் செய்வது மனிதன் அதை சரியான நேரத்தில் நிறைவேற்றுவது மெஷின். அதுபோல் ஆவிக்குரிய நிலைகள் எல்லாமே ஆண்டவரால் மட்டுமே தீர்மானித்து செட் செய்யப்படும் அதை நிறைவேற்றுவது மனிதன் அல்லது நமது புலன்களுக்கு தெரியும் எதாவது காரணி.
ஆவிக்குரிய நிலையில் ஒரு காரியம் நிறைப்வேரவில்லை என்றால் என்றால் அது மாமிசத்திலும் நிறைவேறாது. எனவே ஆவிக்குரிய நிலைதான் மிக மிக முக்கியமானது. மேலும் மாமிசத்துக்குரிய நிலையில் மரித்தாலும் ஆவிக்குரிய நிலையில் பிழைத்து நம்மால் நித்திய ஜீவனை சுதந்தரிக்க முடியும். ஆனால் மாமிசத்துக்குரிய நிலையில் ஜெயித்து ஆவிக்குரிய நிலையில் மரித்தால் அதில் பயனேதும் இல்லை எனவே இந்த ஆவிக்குரிய இரண்டாம் மரணத்தை ஜெயிப்பது அல்லது அதிலிருந்து தப்பித்து பிழைப்பது என்பது மிகமிக அவசியமாக இருப்பதல அது பற்றி முதலில் ஆராயலாம்.
பிழைப்பான்- 1 (ஆவிக்குரிய பிழைத்தல் அல்லது இரண்டாம் மரணத்திலிருந்து தப்பித்தல்)
கீழே சொல்லப்பட்டுள்ள வசனங்கள் எல்லாம் ஆண்டவராகியே இயேசுவை விசுவாசிப்பதன் மூலம் வரும் இரட்சிப்பை பெற்று அதன் மூலம் ஆவிக்குரிய இரண்டாம் மரணத்தில் இருந்து தப்பித்து நித்திய ஜீவனை பெற்று பிழைப்பதற்காக சொல்லப்பட்ட வசனங்கள்
யோவான் 11:25இயேசு அவளை நோக்கி: நானே உயிர்த்தெழுதலும் ஜீவனுமாயிருக்கிறேன், என்னை விசுவாசிக்கிறவன் மரித்தாலும் பிழைப்பான்;
ஆண்டவ ராகிய இயேசு சொன்ன இந்த வசனம் ஒருவன் மாமிசத்தில் மரித்தபின்னர் பிழைக்கும்ஆவிக்குரிய பிழைப்பைபற்றி அருமையாக உணர்த்துகிறது.
இயேசு கிறிஸ்த்துவின் மேலுள்ள விசுவாசத்தால் நீதிமானக்கப்பட்ட ஒருவன் அவ்விசுவாசத்தால் மட்டுமே பிழைக்க முடியும் என்பதை இவ்வாசனம் எடுத்துரைக்கிறது
கலாத்தியர் 3:11நியாயப்பிரமாணத்தினாலே ஒருவனும் தேவனிடத்தில் நீதிமானாகிறதில்லை ஏனெனில், விசுவாசத்தினாலே நீதிமான் பிழைப்பான் என்று எழுதியிருக்கிறதே.
நியாயபிரமாணத்தால் தேவன்முன் நீதிமானாக முடியாது, இயேசு மேலுள்ள விசுவாசமே, நமக்கு ஆவிக்குரிய மரணத்திலிருந்து பிழைப்பை தரும்
யோவான் 6:57ஜீவனுள்ள பிதா என்னை அனுப்பினதுபோலவும், நான் பிதாவினால் பிழைத்திருக்கிறதுபோலவும், என்னைப் புசிக்கிறவனும் என்னாலே பிழைப்பான்
ஆண்டவராகிய இயேசுவை ஏற்றுக்கொண்டு அவர் மாமிசத்தை புசித்து இரத்தத்தை பானம் பண்ணுபவனுக்கு நித்திய ஜீவன் உண்டு அவரை புசிக்கிறவன் அவர் எப்படி மரித்து எழுத்து பிளைதாரோ அதுபோல் பிழைப்பான்
பிழைப்பான் - 2 (மாமிசத்தில் பிழைத்தல் அல்லது சரீர மரணத்திலிருந்து தப்பித்தல்)
ஒரு சிறு காரியத்தை எல்லோரும் அறிந்துகொள்ள வேண்டும். மாமிசத்தில் பிழைத்தல் என்றால் இதே உடம்போடு இப்படியே இருப்பது என்று பொருளாகாது. இந்த மாமிச உடம்பு என்பது நமக்கு தற்க்காலிகமாக கொடுக்கப்பட்ட ஒரு தண்டனை. தேவனால் முன்குறிக்கப்பட்ட ஒவ்வொருவர்களுக்கும் "மறுரூப சரீரம்" ன்று ஒரு சரீரம் உண்டு. அந்த சரீரம்தான் நமது சொந்தசரீரம். அவ்வாறு வேறு ஒரு சரீரத்தில் முன்னர் இருந்த நாம், பாவம் மே ற்கொள்ளவே, இந்த பாவ மாமிச சரீரம் ஆனோம். எனவேதான் வேதம் அனேக இடங்களில் "மாம்சமான யாவரும்" என்று சொல்கிறது. அதாவது வேறு ஒரு இடத்தில் வேறு ஒரு சரீரத்தில் இருத்த நாம் இங்கு மாமிசமானோம் என்பதுவே அதன் பொருள். இந்த மாமிச சரீரம் சாகாமலேயே மறுரூப சரீரமாக மாறிவிடும். இதைதான் மாமிசத்தில் பிழைத்தல் என்று நான் குறிப்பிடுகிறேன்
I கொரிந்தியர் 15:51இதோ, ஒரு இரகசியத்தை உங்களுக்கு அறிவிக்கிறேன்; நாமெல்லாரும் நித்திரையடைவதில்லை; ஆகிலும் கடைசி எக்காளம் தொனிக்கும்போது, ஒரு நிமிஷத்திலே, ஒரு இமைப்பொழுதிலே, நாமெல்லாரும் மறுரூபமாக்கப்படுவோம்
இந்த ரகசியத்தை பவுல் அறிந்திருந்தாலும் அவருடைய வாழ்வில் அது நிறைவேறவில்லை.
கீழே சொல்லப்பட்ட இவ்வசனங்கள் எல்லாம் மாமிசத்துக்குரிய பிளைத்தலை பற்றி தெளிவாக எடுத்துரைக்கிறது
லேவியராகமம் 18:5ஆகையால் என் கட்டளைகளையும் என் நியாயங்களையும் கைக்கொள்ளக்கடவீர்கள்; அவைகளின்படி செய்கிறவன் எவனும் அவைகளால் பிழைப்பான்; நான் கர்த்தர்.
எசேக்கியேல் 33:19துன்மார்க்கன் தன் அக்கிரமத்தைவிட்டுத் திரும்பி, நியாயமும் நீதியும் செய்தால், அவன் அவைகளினால் பிழைப்பான்.
ஒரு மனிதன் ஆண்டவரின் கட்டளையை சரியாக கைகொண்டு நடந்தால் அதன் மூலமும் அவன் "பிழைக்க" முடியும் என்று வசனம் சொல்கிறது. இதுவே மாமிசத்தில் பிழைப்பது ஆகும். ஆனால் ஆவிக்குரிய பிழைத்தல் நிறைவேறாமல் மாமிசத்தில் சாகாமல் பிழைக்க முடியாது.
-- Edited by SUNDAR on Thursday 20th of October 2011 11:18:59 AM
__________________
நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)அவர்(கர்த்தராகியதேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்; (ஏசா 25:8)
இரண்டுவிதமான சாவுகளையும் இரண்டுவிதமான பிளைத்தல்களையும் தனித் தனியே நாம் பார்த்துவிட்டோம். இப்பொழுது இரண்டு விதமான சாவுகளிலும் இருந்து ஒருசேர தப்பித்துபிழைக்க வேதம் சொல்லும் "பிழைக்கவே பிழைப்பாய்" பற்றி பார்க்கபோகிறோம்.
எசேக்கியேல் 18:21துன்மார்க்கன் தான் செய்த எல்லாப் பாவங்களையும் விட்டுத் திரும்பி, என் கட்டளைகளையெல்லாம் கைக்கொண்டு, நியாயத்தையும் நீதியையும் செய்வானேயாகில், அவன் பிழைக்கவே பிழைப்பான், அவன் சாவதில்லை.
இவ்வசனம் ஆதியில் ஆதாமை பார்த்து தேவன் சொன்ன வார்த்தைக்கு நேர் எதிர் வசனம் ஆகும்: ஆதமை பார்த்து கர்த்தர் இவ்வாறு கட்டளையிட்டார்!
ஆதியாகமம் 2:17ஆனாலும் நன்மை தீமை அறியத்தக்க விருட்சத்தின் கனியைப் புசிக்கவேண்டாம்; அதை நீ புசிக்கும் நாளில் சாகவே சாவாய் என்று கட்டளையிட்டார்.
ஆதாம் கட்டளையை மீறி கனியை புசித்ததால் அவன் இரண்டு மரணங்களையும் சந்திக்க வேண்டிய நிலைக்கு உள்ளானான். அதேபோல், தேவன் மேலே சொல்லியுள்ள (எசே-18:) வார்த்தைகளை கைகொண்டால் இரண்டு மரணத்திலிருந்து பிழைக்கும் நிலை ஒருவருக்கு உருவாகும்,. பழைய சாபம் தீரும்.
அதாவது எல்லா சாபத்துக்குமே ஒரு விமோச்சனம் உண்டு அதுபோல் தேவன் சாகவே சாவாய் என்று விட்ட சாபத்துக்கு பிழைக்கவே பிழைப்பான் என்று இங்கு விமோச்சனம் கூறப்பட்டுள்ளது. அதன்படி சரியாக நடப்பவனே ஜெயம் கொள்ள போகிறவன் இரண்டு மரணங்களையும் ஜெயிக்கபோகிறவன்.
1.கிருபை - ஆவிக்குரிய மரணத்திலிருந்து விடுதலை
(இதை தேவன் ஒருவரே நம்மக்கு ஈவாக பெற்று தர முடியும் அது இயேசுவின் மூலம் தேவனால் இலவசமாக கிடைத்துள்ளது)
2. கிரியை - மாமிசத்துக்குரிய மரணத்திலிருந்து விடுதலை
(இதை மனிதன் தான் சுய கிரியயினாலேயே அடையமுடியும், ஆவிக்குரிய மரணத்திலிருந்து விடுதலை பெற்றால் மட்டும் போதும் என்று கருதுபவர்கள் இதை அறிந்துகொள்ளவேண்டிய அவசியம் இல்லை. ஆனால் சரீரமீட்பு நடைபெறும் வரை ஆவிக்குரிய மீட்பின் பலனை புசிக்க முடியாது!
ஆதியாகமம் 2:17ஆனாலும் நன்மை தீமை அறியத்தக்க விருட்சத்தின் கனியைப் புசிக்கவேண்டாம்; அதை நீ புசிக்கும் நாளில்சாகவேசாவாய்என்று கட்டளையிட்டார்.
என்ற வசனத்தின் அடிப்படையில் இந்த கட்டளையை மீறி ஆதாம் விலக்கபட்ட கனியை புசித்தாலேயே அவனுக்கு மாம்ச மரணம் நேரிட்டது.
அதுபோல்
எசேக்கியேல் 18:21துன்மார்க்கன் தான் செய்த எல்லாப் பாவங்களையும் விட்டுத் திரும்பி, என் கட்டளைகளையெல்லாம் கைக்கொண்டு, நியாயத்தையும் நீதியையும் செய்வானேயாகில், அவன் பிழைக்கவே பிழைப்பான்,அவன் சாவதில்லை.
"சாகவே சாவாய்" என்ற சாபத்த்தின் மூலமே ஆதாமுக்கு மாம்ச மரணம் உண்டானது இந்நிலையில் "பிழைக்கவே பிழைப்பாய்" என்ற வசனத்தின் மூலம் அந்த மரணத்துக்கு சாப விமோச்சனம் கிடைப்பது அதி நிச்சயம் அல்லவா?
தேவ கட்டளைகளையும் நியாயங்களையும் சரியாக கைகொண்டு நடந்தால் மரணத்தை ஜெயித்து மறுரூபம் ஆக முடியும் என்ற மிக முக்கியமான ருத்துக்கள் அடங்கியுள்ள இந்த திரி மீண்டும் பார்வைக்கு வைக்கப்படுகியது
__________________
நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)அவர்(கர்த்தராகியதேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்; (ஏசா 25:8)