ஆதியிலே தன்னைத் தான் அறிந்த தேவன் தன்னை தவிர யாரையும் காணாததால், தன்னிடமிருந்து புத்திரர்களை வெளிப்படுத்தி அவர்களின் பலியால் உலகத்தையும், தேவ தூதர்களையும் உருவாக்கினார். ஆக இந்த உலகம் உருவாவதற்கே ஒரு பலி தேவைப்பட்டது.
அதாவது உலக தோற்றத்துக்கே ஒரு ஆட்டுக் குட்டு அடிக்கப்பட்டது. இந்து மத நூல்களில் இது குறித்து சொல்லப்பட்டுள்ளது. இதனாலேயே எல்லாம் கடவுள் என்று இந்து மத நூல்கள் குறிப்பிடுகின்றன. ஆனால் இவை கடவுளின் வணங்கத்தகுந்த வல்லமை அல்ல என்று கடவுள் அவராகவே சொல்லியுள்ளார்.
மேலும் மனிதர்களின் ஆத்துமாவிற்காகவும், உடலை உருவாக்குவதற்காகவும், மனிதனின் மனம் உருவாவதற்காகவும் தேவனால் வெளிப்படுத்தப்பட்ட, படைக்கப்பட்ட புத்திரர்கள், தூதர்கள் பலியாக வேண்டியதாக இருந்தது.
கிருத்துவத்துக்கு எதிரான சில சாத்தானின் பிரிவுகள், லூசிபரை மனிதனில் மனம் என்னும் பகுதி உருவாக வேண்டுமென்பதற்காக தன்னை தானே பலியாக்கி கொண்டவன் என்று பாராட்டுகின்றன. மனித இனத்துக்கு பகுத்தறிவு என்னும் ஒளியை கொண்டு வந்தவன் என்று புகழ்கின்றன.
நன்மை, தீமை அறியத்தக்க கனியை சாத்தானே உண்ண சொல்லி ஏவாளை தூண்டினான். கடவுளுக்கு அது தெரியாது என்று பல கிருத்துவர்களும் சொல்லி அவர்களின் கருத்தை மறைமுகமாக / நேரடியாக ஒத்துக் கொள்ளுகின்றனர்.
ஆனால் மனிதனின் இந்த பகுதி உருவாக காரணமானவர் கடவுளே. நன்மை, தீமையை அறிய செய்யும் கனியை உண்ண வேண்டாம் என்று மனிதனுக்கு அதை பற்றி அறிமுகம் செய்ததும் அவரே. சாத்தானை ஏதேன் தோட்டத்தில் அனுமதித்து மனிதன் அந்த கனியை உண்ண காரணமானவரும் அவரே. நன்மை, தீமை கனி என்பது மூளை வளர்ச்சியை குறிக்கும். அனேக கிருத்துவர்கள் இதை சாபமாக பார்க்கின்றனர். (மூளை வளர்ச்சி இல்லாதவரின் நிலையை கொஞ்சம் எண்ணி பாருங்கள்) ஆதாம் தேவ சாயலை இழந்த பிறகு, பஞ்ச பூதங்களினால் கட்டுப்படுத்தப்படும் ஒரு சரீரத்தை பெற்றான். இவ்வாறு உருவான மனிதனுக்கு மூளை வளர்ச்சி என்பது அவசியம் தேவை ஆதலால் கடவுளே மனிதனில் பகுத்தறிவு என்னும் ஒளியை ஏற்றுகிறார்.
மனிதனின் சரீரம் பஞ்ச பூதங்களால் மாறுதல் அடைய கூடியது என்பதால் சாகவே சாவாய் என்று சொன்னார். அனேக கிருத்துவர்களின் கண்களுக்கு இந்த சாபம் மட்டுமே தெரிகிறது. சரியாக புரிந்து கொள்ள முடியாத இவர்கள் மரணத்தை ஏற்படுத்தும் அந்த கனியை ஏன் ஆதாம் உண்டானோ என்று கேட்கின்றனர். ஆனால் இதன் பின்னால் உள்ள ஒரு பெரிய, முக்கியமான ஆசிர்வாதம் இவர்களுக்கு தெரிவதில்லை. அந்த ஆசிர்வாதம் என்னவெனில் "நீ பிறக்கவே பிறப்பாய் என்பதாகும்" அதாவது சந்தோஷ் என பெயரிட்டு எழுதி கொண்டிருக்கும் என்னை / நம்மை இந்த பூமியில் காண விரும்பியே தேவன் ஆதாமை அந்த கனியை உண்ண செய்தார். இந்த கனியை ஆதாம் உண்ணாவிட்டால் நாம் இல்லவே இல்லை. மேலும் வயதாவதால் இந்த உயிர் உடலை விட்டு போனாலும் ஒரு புதிய பூமியில் நித்தியமாக வாழும்படிக்கு ஒரு ஏற்பாட்டையும் அவர் செய்திருக்கிறார்.
ஒரு தாய்க்கு மறு பிறப்பு என்று சொல்லப்படும் மரணத்திற்க்கு ஒப்பான பிரசவ வலி வந்தாலும் இந்த பூமியில் தன் குழந்தையை பார்க்கும் போது பட்ட கஷ்டம் அனைத்தும் பஞ்சாய் பறந்து போகிறது. உண்மையில் தேவன் ஏவாளை குழந்தை பெற்றுக் கொள்வாய் என்று ஆசிர்வதித்தார். ஆதாமிற்கு அவன் பெற்ற புது சரீரத்தினால் பிரச்சனை ஏதும் வராதிருக்க (சோம்பலினால்) அவன் உடற் பயற்ச்சி செய்ய வேண்டிய தேவை இருப்பதனால் இந்த பூமியில் உடல் உழைப்பினால் அவன் பிழைக்கும்படி வைத்தார். இன்றும் உடல் உழைப்பு தேவைப்படாத பல பணக்காரர்கள் தினமும் நடந்து போவதையும், உடற் பயிற்ச்சி செய்வதையும் பார்க்கிறோம். ஆகவே இதுவும் பெரிய சாபமல்ல. மேலும் இந்த சாகவே சாவாய் என்பது ஆதாமுக்கும், ஏவாளுக்கும் மட்டுமே பொருந்தும். ஏனெனில் மற்றவர்களுக்கு பிறக்கவே பிறப்பாய் என்ற ஆசிர்வாதத்தையே அவர் தந்தார். இவ்வாறு பிறந்தவர்களுக்கு இறப்பு என்பது ஆதாமுக்கு பிறகு இயற்கையான நிகழ்வானது.
பிறப்பது எல்லாமே இறக்கும் (சுந்தரை தவிர - எனக்கு தெரிந்த வரை) என்பதை அனைவருமே அறிவர். இருந்தாலும் இறக்க போகிற ஒன்றை ஏன் பெற்று கொள்ள வேண்டும் என்று யாரும் நினைப்பதில்லை. அனைவரும் குழந்தை பெற்றுக் கொள்ள தயங்குவதில்லை. அதாவது இறப்பு என்ற சாபத்தையாரும் பொருட்படுத்துவதில்லை பிறப்ப்தை பற்றியே நினைக்கின்றனர்.
(சிந்திக்க :ஏதேன் தோட்டம் - கருவறை,நன்மை தீமை அறியும் கனி - மூளை வளர்ச்சி (சுயம் உருவாதல்),ஜீவ விருட்சம் (மறு பிறப்பு) - சுயம் அழிந்து கடவுளுக்கு ஒப்புக் கொடுத்தல் அல்லது கடவுளுக்கு ஒப்புக் கொடுப்பதால் சுயம் அழிதல். சுயம் அழிய தேவ வார்த்தை என்னும் சுடரொளி பட்டயம் ஆத்துமாவை உருவி போக வேண்டும்)
இந்த பிரபஞ்சமும் அதிலுள்ள உயிர்களும் உருவானது கடவுளின் ஒரு பகுதியிலிருந்து. அதாவது கடவுளின் பலியிலிருந்து. இது தேவனுடைய படைத்தல் என்னும் தொழிலுக்காக செலுத்தப்பட்ட பலியாகும். இந்த பலியால் கடவுள் தன் முந்தின மகிமையிலிருந்து குறைந்து போவதில்லை. ஏனெனில் கடவுள் என்பவர் எவ்வளவு கொடுத்தாலும் குறைய முடியாதவர்.
தேவன் தன்னுடைய காத்தல் என்னும் தொழிலுக்காகவும் பலி செலுத்த வேண்டிய தேவை இருந்தது இதை பற்றி அடுத்த பதிவில்..