நான் இந்துவாக இருந்த போது இந்து பக்தி இலக்கியங்களாலும், பாடல்களாலும் பெரிதும் கவரப்பட்டவன். உள்ளம் உருகி நேசத்தினால் எழுந்த இந்த பாடல்களும், பேரின்பம் என்னும் நிலைமையை அடைந்த ரமணர், ராமகிருஷ்ணர் போன்றவர்களின் அனுபவங்களும், கண்ணனை எப்போதும் நினைத்திருந்த மீரா, ஆண்டாள் போன்றவர்களும் எனக்குள் அப்படி ஒரு அனுபவத்தை அடைய வேண்டும் என்ற ஆசையை ஏற்படுத்தியதுண்டு. காலப்போக்கில் இயேசுவால் இரட்சிக்கபட்ட நான் வேதாகாமத்தை பார்த்து ஆச்சரியப்பட்டதுண்டு.
வேதாகாமம் கடவுளை பற்றி சொல்லும் புத்தகம் எனில், இந்து பக்தி இலக்கியங்கள் போல் முழுவதும் கடவுள் புகழை சொல்லாமலும், கடவுள்-மனிதன் நேசம் பற்றி சொல்லும் வசனங்கள் நிறைய இல்லாமலும் பல வரலாறுகளும், சாபங்களும், ஆசிர்வாதங்களூம் உள்ள புத்தகமாக இருந்தது எனக்குள்ளே கேள்வியை எழுப்பிற்று. கடவுள் புகழ், மற்றும் கடவுள்-மனிதன் நேசம் பற்றி சொல்லும் வசனங்களை தேடி கண்டுபிடிக்க வேண்டிய நிலையில் இருந்தது. (உன்னத பாட்டு என்ற சிறிய பகுதி தவிர)
இந்து மதத்தை போன்று எப்போதும் பேரின்ப அனுபவத்தில் திளைத்திருகிறவர்கள் ஏன் கிருத்துவத்தில் இல்லை போன்ற கேள்விகள் வ்ந்தது. கால போக்கில் அவைகளுக்கு பதிலும் கிடைத்தது.
சில நேரங்களில் கர்த்தரை வேண்டும் போது அவர் மிகுந்த பேரின்பத்தில் நிரப்புவதை உணர்ந்துள்ளேன். தேவன் நம்மை இன்பத்தில் நிரப்பினால் ஏன் எப்போதும் அந்த பேரின்பத்திலேயே இருக்கக் கூடாது? அல்லது ஏன் தேவன் எப்போதும் அந்த பேரின்பத்தை தராமல் இருக்கிறார்? இந்த கேள்விக்கு எனக்கு கிடைத்த பதில்.
மனிதனின் சரீரமானது எவ்வளவு துன்பத்தை வேண்டுமானாலும் தாங்க வடிவமைக்கப்பட்டது. ஆனால் இன்பத்தை தாங்கும்படி வடிவமைக்கப்படவில்லை. ஒரு சிலராலேயே இந்த எப்போதும் இன்பத்தை தாங்க முடியும். சரியான முறை மற்றும் சரியான குரு, பலமான உடல் இல்லாததால் பேரின்பத்தை அடைய ஆசைப்பட்ட இந்து மற்றும் சுபி ஞானிகள் சிலர் பைத்தியங்களானது உண்டு. (புத்த மதம் அறிவியல் ரீதியாக அணுகுவதால் அங்கே பைத்தியங்கள் இல்லை) கணவன் - மனைவி உடல் ரீதியான இன்பமும் சில நிமிடங்களே என்பதை கவனத்தில் கொள்க
மேற்கண்ட பகுதியை 1.கொரி 10.13 ன் ஒரு விளக்கமாக எடுத்துக் கொள்ளலாம்.
13. மனுஷருக்கு நேரிடுகிற சோதனையேயல்லாமல் வேறே சோதனை உங்களுக்கு நேரிடவில்லை. தேவன் உண்மையுள்ளவராயிருக்கிறார்; உங்கள் திராணிக்கு மேலாக நீங்கள் சோதிக்கப்படுகிறதற்கு அவர் இடங்கொடாமல், சோதனையைத்தாங்கத்தக்கதாக, சோதனையோடு கூட அதற்குத் தப்பிக்கொள்ளும்படியான போக்கையும் உண்டாக்குவார்.
துன்பம் தாங்க முடியாமல் கடவுளே என்னை எடுத்து கொள்ளும் என்று சொல்லி பூரண ஆயுசோடு இருந்த மனிதர்கள் பலர் உண்டு.மேலும் தேவன் இந்த உலகில் அவருக்காக, நமக்காக செய்ய வேண்டும் என எதிர்பார்க்கிற செயல்கள் உண்டு. இந்த செயல்களை செய்ய வேண்டிய நாம் அவைகளை செய்யாமல் எப்போதும் பேரின்பத்தில் இருக்க அவர் விரும்புவதில்லை. அவர் அதற்கென்று ஒரு இன்பத்தை தாங்க கூடிய புதிய சரீரத்தையும் ஒரு காலத்தையும் வைத்திருக்கிறார்.
தேவனுடைய பேரின்பத்தை அடைய ஒரு புத்தகம் தேவையில்லை ஒரு அதிகாரம் கூட தேவை அல்ல ஒரே ஒரு வசனம் கூட போதும் என்பதையும் அறிந்தேன். அதனால்தான் வேதம் முழுமையும் பக்தி இலக்கியமாக இல்லை. சில தேவ மனிதர்கள் தங்களுக்கு ஏற்பட்ட பேரின்பத்தை தாங்க முடியாமல் ஆண்டவரே போதும் நிறுத்தும் இதற்கு மேல் வேண்டாம் என்றும் வேண்டியுள்ளனர்.
வெறுமை :
நம்மில் ஒரு சிலர் ஒரு சில நேரங்களில் ஒரு வெறுமையை அனுபவித்திருக்கலாம். இந்த உலகில் நாம் மட்டுமே தனியாக இருப்பது போலவும், கர்த்தர் நம்மை கைவிட்டது போலவும், நாம் யார் என்பது புரியாதது போலவும், எதற்காக வாழ்கிறோம் என்று தெரியாதது போலவும் இருக்கும். இப்படி ஒரு நிலையை அனுபவித்திருப்பீர்கள் என்றால் கவலைபடாதிருங்கள். நீங்கள் சரியான பாதையில்தான் போய்க் கொண்டிருக்கிறீர்கள். இப்படிப்பட்ட வெறுமைக்கு ஒரு விசேஷம் உண்டு அது என்னவெனில் அது தானாக நம்முள் வருவதுதான். ஒருவர் எவ்வளவுதான் முயன்றாலும் அது போன்ற வெறுமையை நமக்குள் கொண்டு வர முடியாது. அதுவாக வந்தால்தான் உண்டு,
இந்த வெறுமை ஏன் வருகிறது? இதை வெல்வது எவ்வாறு? என்ற கேள்விகள் நமக்குள் எழுகின்றன. அவைகளை பற்றி இப்போது பார்ப்போம்.
மனிதன் அனுபவிக்கும் உணர்ச்சிகளை ஒரு சுவர் கடிகாரத்தின் பெண்டுலத்திற்க்கு ஒப்பிடலாம். தேவ சமூகத்தில் சில மனிதர்கள் பேரின்பம் அடைகிறார்கள். அவர்களும் அதை விரும்புகிறார்கள்.
தேவ சமூகத்தில் தேவ தூதர்களை போன்ற உணர்வை பெறுகின்றனர். இது பெண்டுலம் ஒரு பக்கத்திற்க்கு செல்வதற்க்கு ஒப்பாகும். ஆனால் நம்முடைய உணர்வை இதே நிலையில் வைத்திருக்கும்படி நமக்கு இந்த உலகில் காரியங்கள் நடப்பதில்லை. சபையை விட்டு வெளியே வந்ததும் உலகம் நமக்காக காத்து கொண்டுள்ளது செருப்பு போடுவது முதல், பஸ் ஸ்டாண்ட் வந்து பஸ் ஏறுவது முதல் இந்த உலகில் நம்மை மட்டுபடுத்தும் காரியங்களை சந்திக்க வேண்டியிருக்கிறது. இதனால் ஒரு பக்கம் சென்ற பெண்டுலம் இன்னொறு பக்கத்திற்க்கு செல்ல ஆரம்பிக்கிறது. ஒரு பக்கம் அதிகமாய் சென்ற காரணத்தால் இன்னொறு பக்கம் மிக அதிகமான தூரத்துக்கு செல்கிறது. அவ்வாறு செல்லும் பகுதி இதுவரை அனுபவித்திராதது ஆதலால் ஒரு வெறுமை உண்டாகிறது. ஆனால் அதனுள் கடந்து செல்ல யாரும் விரும்புவதில்லை. அதனால் வெறுமை ஒரு சுமையான உணர்வாக மாறுகிறது. இந்த வெறுமையை மேலும் மேலும் அனுபவிக்க வேண்டியதாயிருக்கிறது. இந்த வெறுமையை வெல்ல என்ன செய்ய வேண்டும்?
கடவுளுக்கு நன்றி சொல்லி இந்த வெறுமைக்குள்ளே இந்த வெறுமையை வெறுக்காமல் கடந்து செல்வதுதான் இதை வெல்ல வழி. இந்த வெறுமையை முழு விருப்பத்துடன் அனுபவிக்க வேண்டும். இவ்வாறு செய்யும் போது மனதின் புதிய பகுதியானது இப்போது பழகின பகுதியாகிறது. அதன் பிறகு அந்த வெறுமை நம்மை பாதிக்காது இவ்வாறு இரண்டு அல்லது மூன்று முறை வெறுமையை எதிர் கொண்டால் அதன் பிறகு வெறுமை நம்மை எதுவும் செய்ய முடியாது. இவ்வாறு செய்வதனால் நம்முடைய மனது மிகவும் ஆழப்பட்டதாக மாறுகிறது.
சில நேரங்களில் எப்போதும் ஏதாவது நினைவுகள் ஓடிக் கொண்டிருக்கும் மனது அதுவாகவே ஓய்வு எடுப்பதும் உண்டு. அப்போது ஒரு வெறுமை உண்டாகும். அப்போதும் மேற் சொன்னபடி செய்து வெறுமையை வெல்லலாம்.
-- Edited by SANDOSH on Wednesday 16th of June 2010 10:56:29 PM