தேவ ஊழியர்கள் தேவ ஆவியினால் ஏவப்பட்டு பேசினார்கள், தேவ ஆவியினால் வெளிப்பாட்டை பெற்றார்கள், தரிசனங்களை கண்டார்கள் என்று வேதத்தில் சொல்லப்பட்டுள்ளது. இயேசுவை இரட்சகராக ஏற்றுக் கொள்ளும் போது மனிதனின் ஆவி என்னும் பகுதியில் பரிசுத்த ஆவியானவர் அருளப்படுகிறார். இவர் மூலம் பரலோகத்தோடு மனிதனுக்கு தொடர்பு ஏற்படுகிறது. தமக்கு சித்தமான சிலருக்கு பரலோகத்தின் தேவன், பரிசுத்த ஆவியானவர் மூலம் வரங்களை, தீர்க்க தரிசனங்களை, தரிசனங்களை, வெளிப்பாட்டை கொடுக்கிறார்.
தேவனுடைய வெளிப்படுத்துதல் ஒரு மனிதனுடைய ஆவிக்குள் ஒரு ஒளியை போல பிரகாசிக்கிறது. அந்த நேரத்தில் அந்த வெளிப்பாட்டை பெற்றுக் கொள்ள அந்த மனிதனின் மனம் தயாராக இருக்க வேண்டும். அதாவது சொந்த கருத்துக்கள் இல்லாமல், குழம்பிய மனத்துடன் இல்லாமல் தேவனுக்கு அர்பணித்த மனதுடன் இருக்க வேண்டும். அவ்வாறு இல்லாவிடில் ஆவியில் உண்டான அந்த வெளிச்சம் உடனே மறைந்து விடுகிறது. (மின்னலை போல). தேவனுடைய பிள்ளைகள் அனேகர் தங்கள் ஆவியில் தேவனின் வெளிப்பாட்டை பெறுகின்றனர். ஆனால் இதை கிரகித்து கொள்ளும் அளவுக்கு மனம் இருப்பதில்லை. பல்வேறு எண்ணங்களால் நிரப்பபட்டுள்ளதால் தேவனுடைய வார்த்தையை அறிய முடிவதில்லை. அனேக நேரங்களில் ஒரு வெளிப்பாடு வந்தது கூட தெரியாமல் போய் விடுகிறது. தேவ வெளிப்பாட்டை பெற சுயமான எண்ணங்கள் நொறுக்கப்பட வேண்டும். ஒரு தலைவனுக்கு காத்திருக்கும் வேலைக்காரனை போல மனித மனம் கர்த்தரால் பயன்படுத்தப்படும்படி தேவனுக்கு காத்திருக்க வேண்டும்.
மனித மனம் எப்போதும் மண், பெண், பொன் (பணம்), புகழ், உடல் வசதிகள் இவைகளை பற்றியே எப்போதும் நினைத்து கொண்டிருக்கிறது. தேவையற்ற நினைவுளையே அனேக நேரங்களில் மனம் சிந்தித்து கொண்டிருக்கிறது. ஒரு நாளில் என்ன என்ன நினைவுகள் மனிதில் ஓடின என்று பார்த்தால் அதில் மிகவும் அதிகமான சதவீதம் தேவையற்ற நினைவுகள் என்பது தெரிய வரும்.
ஒரு மனிதன் இவ்வாறு இருக்கும் போது தேவனுடைய வெளிப்பாட்டை காணவும் அதை புரிந்து கொள்வதற்குமான தகுதியை இழந்து விடுகிறான். தேவனுடைய வெளிப்பாட்டை புரிந்து கொள்ளும் ஒரு சிலர் கூட அந்த வெளிப்பாடு மூன்று அல்லது நான்கு முறை திரும்ப திரும்ப வரும் போதே அதை புரிந்து கொள்ளுகின்றனர்.
இவ்வாறு வெளிப்பாட்டை சரியாக தன் மனதில் புரிந்து கொள்ளும் மனிதன் அந்த வெளிப்பாட்டை குறித்த ஒரு பாரத்தை பெறுகின்றான். அதாவது அந்த வெளிப்பாடு கொண்டு வரும் உணர்வை (கவலை, சந்தோஷம், வைராக்கியம் இவைகளில் ஒன்றை) கிரகித்து கொள்ளுகிறான். தன்னை முழுவதும் அந்த வெளிப்பாட்டுக்கு ஒப்புக் கொடுக்கும் போது அந்த வெளிப்பாடு உள்ளுக்குள்ளே சக்தி பெற்றாதாக மாறுகிறது. அதன் வலிமை அதிகரிக்கிறது. அந்த மனிதனில் இருந்து வெளிப்பட்டு எந்த காரியத்துக்காக அந்த வெளிப்பாடு வந்ததோ அந்த அந்த மனிதனில் இருந்து வெளிப்பட்டு காரியத்தை செய்யக்கூடிய வலிமை மிகுந்ததாக மாறுகிறது. இந்த வலிமையை தாங்க முடியாத ஒரு தேவ மனிதனின் வார்த்தைகள்.
எரேமியா 20.7. கர்த்தாவே, என்னை இணங்கப்பண்ணினீர், நான் இணங்கினேன்; நீர் என்னிலும் பலத்தவராயிருந்து, என்னை மேற்கொண்டீர்; நாள்தோறும் நகைப்புக்கு இடமானேன்; எல்லாரும் என்னைப் பரிகாசம்பண்ணுகிறார்கள்.
8. நான் பேசினது முதற்கொண்டு (சுமார் 3 வயது முதல்) கதறுகிறேன்; கொடுமையென்றும் பாழ்க்கடிப்பென்றும் சத்தமிட்டுக் கூறுகிறேன், நான் கூறின கர்த்தருடைய வார்த்தை நாள்தோறும் எனக்கு நிந்தையும், பரிகாசமுமாயிற்று.
9. ஆதலால் நான் அவரைப் பிரஸ்தாபம்பண்ணாமலும் இனிக் கர்த்தருடைய நாமத்திலே பேசாமலும் இருப்பேன் என்றேன்; ஆனாலும் அவருடைய வார்த்தை என் எலும்புகளில் அடைபட்டு எரிகிற அக்கினியைப்போல் என் இருதயத்தில் இருந்தது; அதைச் சகித்து இளைத்துப்போனேன்; எனக்குப் பொறுக்கக் கூடாமற்போயிற்று.
இவ்வாறு மனிதனின் உள்ளத்தில் பெருகும் பாரம், வெளிப்படுவதற்க்கு உண்டான வழியை தேடுகிறது. இந்த பாரமானது வார்த்தையாக மாறி மற்றவர்களுக்கு வெளிப்பட்டால் மட்டுமே இந்த பாரம் அந்த மனிதனை விட்டு நீங்கும்.
அந்த மனிதின் உள்ளத்தில் வார்த்தை கருவாகிறது. கருவான வார்த்தை வளர்ந்து மிக பெரிய சக்தியாக உருவாகிறது. மற்ற மனிதர்களின் உள்ளத்தில் பாயக்கூடிய அம்பாக மாறுகிறது.
ஏசாயா 49.2. அவர் என் வாயைக் கூர்மையான பட்டயமாக்கி, தமது கரத்தின் நிழலினால் என்னை மறைத்து, என்னைத் துலக்கமான அம்பாக்கி, என்னைத் தமது அம்பறாத்தூணியிலே மூடிவைத்தார்.
இவ்வாறு வெளிப்பாட்டுக்கு தகுந்த வார்த்தை உருவாவதற்க்கு அந்த தேவ மனிதன் வேதாகமத்தில் மிகவும் தேர்ச்சி பெற்ற மனிதனாக இருக்க வேண்டும். இவ்வாறு உருவாகும் வார்த்தை சரியானபடி இல்லாவிடில் பாரத்தை இறக்கி வைக்க முடியாது. ஆகவே பாரத்தை இறக்கி வைக்க சரியான வார்த்தைகளை தேட வேண்டும். அவ்வாறு உருவாகாத பட்சத்தில் அல்லது உருவான வார்த்தைகளை உறுதிபடுத்த மறுபடி கர்த்தரின் வெளிப்பாட்டுக்காக வேண்டவும், காத்திருக்கவும் வேண்டும். இப்போது மறுபடியும் ஆவியில் ஒரு ஒளி பிரகாசிக்கிறது. சொல்ல வேண்டிய வார்த்தை (கருவாக) அல்லது முடிவு செய்த வார்த்தைகளை பற்றின ஒரு உறுதி ஏற்படுகிறது. இப்போது அந்த தேவ மனிதன் கர்த்தரின் வார்த்தையை சொல்ல சரியான நிலையில் இருக்கிறான்.
ஏசாயா 50.4. இளைப்படைந்தவனுக்கு சமயத்திற்கேற்ற வார்த்தை சொல்ல நான் அறியும்படிக்கு, கர்த்தராகிய ஆண்டவர் எனக்குக் கல்விமானின் நாவைத் தந்தருளினார்; காலைதோறும் என்னை எழுப்புகிறார்; கற்றுக்கொள்ளுகிறவர்களைப்போல, நான் கேட்கும்படி என் செவியைக் கவனிக்கச்செய்கிறார்
யோபு 32.18. (எலிகூ சொன்னது) வார்த்தைகள் எனக்குள் நிறைந்திருக்கிறது; என் உள்ளத்திலுள்ள ஆவி என்னை நெருக்கி ஏவுகிறது. (பாரம்) 19. இதோ, என் உள்ளம் அடைக்கப்பட்டிருந்து, புதுத் துருத்திகளை முதலாய்ப் பீறப்பண்ணுகிற புது ரசத்தைப்போலிருக்கிறது. 20. நான் ஆறுதலடையும்படி பேசுவேன்; என் உதடுகளைத் திறந்து பிரதியுத்தரம் சொல்லுவேன். 21. நான் ஒருவனுடைய முகத்தைப்பாராமலும், ஒரு மனுஷனுக்கும் இச்சகம் பேசாமலும் இருப்பேனாக. 22. நான் இச்சகம் பேச அறியேன்;
இவ்வாறு சொல்லப்படும் வார்த்தையானது அந்த மனிதனில் இருந்து வெளிப்பட்டு எந்த காரியத்துக்காக அந்த வெளிப்பாடு வந்ததோ அந்த காரியத்தை செய்யக்கூடிய வலிமை மிகுந்ததாக வார்த்தையாக உள்ளது.
11. அப்படியே என் வாயிலிருந்து புறப்படும் வசனமும் இருக்கும், அது வெறுமையாய் என்னிடத்திற்குத் திரும்பாமல், அது நான் விரும்புகிறதைச்செய்து, நான் அதை அனுப்பின காரியமாகும்படி வாய்க்கும்.
இவ்வாறு தேவ வார்த்தையை சொல்லும் மனிதன் அந்த வார்த்தையை சொல்ல சொல்ல தன்னிடத்திலுள்ள பாரம் குறைவதை உணருகிறான். இவ்வாறு பாரம் இறக்கி வைத்ததாக உணரும் மனிதன் (பாரத்தோடு சரியான முறையில் வந்த மனிதர்களுக்கு மட்டுமே இது பொருந்தும்) தன் ஊழியத்தை சரியாக செய்து முடித்துள்ளான் என அறியலாம்.
இப்போது எல்லாவற்றையும் தொகுத்து பார்ப்போம்.
பரலோகம்-பரிசுத்த ஆவி-மனிதனின் ஆவி-எண்ணம்-பாரம்-வார்த்தை (மறுபடியும் இன்னொரு வெளிப்பாடு) -வெளிப்படுத்துதல்
என்ற வரிசையின்படி நடக்கிறது. இந்த வரிசை மற்றவர்களுக்கு ஊழியம் செய்வதற்கே தேவைப்படுகிறது.
ஒரு மனிதனுக்கு அவனுடைய சொந்த வாழ்வில் தேவ வெளிப்பாடு தோன்றுவதற்க்கு
பரலோகம்-பரிசுத்த ஆவி-மனிதனின் ஆவி-எண்ணம்
இது வரை கூட போதுமானது. சொல்ல வந்த வெளிப்பாட்டை அவன் புரிந்து கொள்வான்.
சில நேரங்களில் தேவ வார்த்தையை படிக்கும் போது, கேட்கும் போது, தியானிக்கும் போது பரிசுத்த ஆவியானவர் உள்ளத்தில் ஒரு பாரத்தை ஏற்படுத்துகிறார். பிறகு அந்த பாரத்திற்கேற்ற வார்த்தைகளை தொகுத்து தேவனிடத்தில் உறுதி பெற்று அந்த வார்த்தைகளை ஊழியர் சொல்ல வேண்டும். இந்த வரிசைப்படி
தேவ வார்த்தை-பரிசுத்த ஆவி-மனிதனின் ஆவி-பாரம்-வார்த்தை
(தொடரும்... இந்த கட்டுரைக்கும் ஜாமக்காரரும், ஊழியர்களும், தேவ வார்த்தையை பகுத்தறிதல் போன்ற கட்டுரைக்கும் தொடர்புண்டு)
-- Edited by SANDOSH on Sunday 20th of June 2010 04:18:47 PM