நம்முடைய வாழ்க்கையில் நாம் பல முடிவு எடுக்க வேண்டியுள்ளது. அனேக நேரங்களில் இரண்டில் ஒன்று அல்லது பலவற்றில் ஒன்று தெர்ந்தெடுக்க வேண்டியுள்ளது. நாம் எடுக்கும் முடிவினால் பிற்காலத்தில் பிரச்சனை வராமல் இருக்க தேவ சித்தத்தை அறிய வேண்டியிருக்கிறது. அதற்காக வேண்டினால் நம்முள் சில எண்ணங்கள் எழுகின்றன. அவைகள் தேவனுடைய வார்த்தைதானா என்ற சந்தேகம் வருகிறது.
சில நேரங்களில் நமக்குள் எண்ண அலைகளை உணருகிறோம் அது நம்மை இப்படி செய் அப்படி செய் என்றோ அல்லது இது வேண்டும் அல்லது அது வேண்டும் என நம்மை ஏவுவதை உணரலாம் அல்லது சில வெளிப்பாடுகளை பெறலாம். இவைகளில் எந்த எண்ணம் கடவுளிலிருந்து வருவது எவை சாத்தானிடமிருந்து வருவது என முடிவு செய்ய வேண்டியது அவசியமாகும்.
தேவன் மனிதனிடம் தான் இடைப்பட தெரிந்துகொண்ட பகுதி மனிதனின் ஆவி என்னும் பகுதியாகும். மனிதனின் மனமானது ஆவி என்னும் பகுதியில் வெளிப்படுத்துவதை கிரகித்து கொள்ள வேண்டும். அதன் பிறகே அந்த காரியம் மனதிற்கு தெரிய வரும்.
கடவுள் மனித மனதின் வழியாக தனது வெளிப்பாட்டையோ தனது முடிவையோ தெரிவிப்பதில்லை. ஆகவே ஆவி-மனம் என்ற வழியாக வராமல் நேரடியாக மனம் என்னும் பகுதியில் தோன்றுவது அனைத்துமே சந்தேகத்திற்குரியது.
நமக்கு வேண்டிய பதில் அல்லது வெளிப்பாடு எந்த இடத்தில் இருந்து வருகிறது என்பதை வைத்து அது தேவ வார்த்தையா என்பதை தீர்மானிக்கலாம். இதிலிருந்து நாம் தெரிந்து கொள்ளும் மற்ற காரியம் என்னவெனில்
1. தேவ வார்த்தையை கேட்க வேண்டுமெனில் மனம் அதற்கு தயாரான நிலையில் இருக்க வேண்டும்.
2. தேவ வார்த்தை நமக்கு தேவையான பொழுது உடனே கிடைப்பதில்லை எப்போது வேண்டுமானாலும் தேவ வார்த்தை வர வாய்ப்புள்ளதால் மனம் எப்போதும் தயாராக இருக்க வேண்டும்.
3. அவ்வாறு மனம் சரியான நிலையில் இல்லாத போது தேவ வார்த்தை ஆவியில் வெளிப்பட்டாலும் மனம் அதை கிரகிக்க கூடாமல் அந்த வெளிப்பாடு தெரியாமலேயே போய் விடுகிறது அல்லது அந்த வெளிப்பாட்டின் மூலம் சொல்ல வந்தது என்ன என்பது தெரிவதில்லை.
4. கொஞ்சம் நுண்ணுனர்வோடு இருந்தால் எப்போதும் இயங்கி கொண்டிருக்கும் நமக்கு மிகவும் பரிச்சியமான மனதில் இருந்து வரும் வார்த்தைக்கும், அமைதியான இடத்திலிருந்து மின்னலை போல தோன்றி மறையும் ஆவியின் வெளிப்பாட்டிற்க்கும் உள்ள வித்தியாசத்தை தெரிந்து கொள்ளலாம்.
(தொடரும்... இந்த கட்டுரைக்கும் ஜாமக்காரரும், ஊழியர்களும், தேவ வார்த்தையை கையாளுதல் போன்ற கட்டுரைக்கும் தொடர்புண்டு)
-- Edited by SANDOSH on Sunday 20th of June 2010 04:22:37 PM