தேவன் மனிதனில் ஐக்கியப்படவே விரும்பி மனிதனை படைத்தார். இந்தியா ஒரு காலத்தில் வளமிக்க, அமைதியான நாடாக இருந்தது. அந்த காலத்தில் வாழ்ந்த ரிஷிகள், ஞானிகள் முதலானோர் கடவுள் யார்? அவர் தன்மைகள் என்ன? என்று ஆராய்ந்தனர். அவைகளை உபனிடதங்கள் என்ற பெயரில் எழுதி வைத்தனர். அவைகளில் சில சத்தியத்துக்கு புறம்பானவைகளும் உண்டு. அவர்கள் கண்டுபிடித்தது யாதெனில், கடவுள்: 1.உணவு 2. காற்று 3. அமிர்தம் (ஜீவ தண்ணீர்) 4. பலி 5. வார்த்தை என்று பல. இவைகளுக்கெல்லாம் பதிலாக, இவைகளின் நிறைவேறுதலாக வந்தவரே இயேசு கிருஸ்து. இவரே உணவு, இவரே பரிசுத்த ஆவி (காற்று), இவரே அமிர்தம் இவரே பலி இவரே வார்த்தை.
மனிதனின் மாமிசத்தோடு மாமிசமாக கலக்கவும், இரத்தோடு இரத்தமாக கலக்கவும், ஆவியோடு ஆவியாக கலக்கவும் விரும்பியே தன்னை பலியாக ஒப்புக் கொடுத்தார் வார்தையாக வந்தவர்.
மனிதன் தன்னை தேவ ஆவி என்னும் நெருப்புக்கு பலியாக ஒப்புக் கொடுத்து அதன் மூலம் தன் சுயத்தை இழந்து தேவனுடைய ஜீவனை பெற்றுக் கொள்வதையே தேவன் விரும்புகிறார்,
மோசே பார்த்த நெருப்பினால் எரிக்கப்பட்டும் எரிந்து போகாத செடியை போன்றதே இந்த நிலைமையும். இதுவே முதல் தரமான ஆன்மிக வாழ்க்கையாகும். எல்லா தீர்க்கதரிசிகளின் வாழ்க்கையும், இயேசு, பவுல் ஆகியோரின் போதனைகளும் மனிதன் இந்த நிலையை அடைவதை நோக்கியே சொல்லப்பட்டுள்ளது.
இன்று ஐக்கியத்தை பற்றி அவ்வளவாக போதிப்பதில்லை. தேவனுடனான தொடர்பு என்பது பற்றியே போதிக்கபடுகிறது. கம்யூன் என்பதற்க்கு பதிலாக கம்யூனிகேஷன் என்பது பற்றியே போதிக்கபடுகிறது.
மனிதன் தன்னை தேவ ஆவி என்னும் நெருப்புக்கு பலியாக ஒப்புக் கொடுத்து அதன் மூலம் தன் சுயத்தை இழந்து தேவனுடைய ஜீவனை பெற்றுக் கொள்வதையே தேவன் விரும்புகிறார்,
இதுவே ஐக்கியமாகும். ஆனால் அகலாது, அணுகாது தீக் காய்வோர் போல தேவனை தொடர்பு கொள்ளவே போதிக்கபடுகிறது.
இவ்வாறு தேவனோடு ஐக்கியம் கொண்டால் தேவனை போலவே ஆகி விடுவோமா என்னும் சந்தேகம் எழலாம். இது எப்படியெனில் தேவன் கடல் என்றால் நாம் அதில் உப்பாக ஆகி விடூவதை போன்றது. கடவுளிடம் நம்மை இழத்தலை இது குறிக்கிறது.
இன்றும், இந்த நிலைமையில்தான் உள்ளோம் என்று தெரியாமலேயே தேவனிடத்தில் ஐக்கியம் வைத்துள்ள விசுவாசிகளும், ஊழியர்களும் உள்ளனர்.
ஒரு கிருத்துவனின் வாழ்க்கை சுயம் உடைவதில் இருந்தே ஆரம்பிக்கிறது, நான் ஒரு பாவி என்னை காப்பாற்றும் என்று தன் இயலாமையை சொல்லி தேவனிடத்தில் வேண்டும் போது முதன்முதலாக அவன் அகங்காரத்தின் ஒரு பகுதி தகர்க்கப்படுகிறது. அதன் மூலமே தேவ இரட்சிப்பை அவன் அடைகிறான். வேதத்தில் மனிதர்கள் தங்கள் அகங்காரத்தை விட்ட பிறகே
தேவ தொடர்பை பெற்றுள்ளனர்.
1. தான் கோபப்படும் போதெல்லாம் தேவ ஆவி தன் மேல் இறங்கும் என இறுமாந்திருந்த சிம்சோன், கண்கள் பிடுங்கப்பட்டு, மாவரைத்து இப்படி பலவாறாக துன்பப்பட்டு பிறகு தன்னைதான் உணர்ந்து தேவனே என்னை மன்னியும் என வேண்டின பிறகே தன் பழைய பலத்தை மீண்டும் பெற்றான்.
2. நான் நீதியுள்ள மனிதன் என இறுமாந்திருந்த யோபு, சொல்லவொண்ணா துயரம் அனுபவித்து, பிறகு தேவனுக்கு முன்பாக மன்னிப்பு கேட்டு தன் வாயை பொத்திக் கொண்டான்.
3. தேவனிடத்திலிருந்து ஞானத்தை ஞானமாக கேட்டு பெற்றும், தன் இஷ்டம் போல் வாழ்க்கை வாழ்ந்த சாலமோன் இறுதி நாட்களில் தேவ சமாதானத்தை இழந்து, கர்த்தருக்கு பயப்படுதலே ஞானத்தின் ஆரம்பம் என எழுதி வைத்தான்.
4. நான்காம் வானம் வரைக்கும் எடுக்கப்பட்ட பவுல் தன்னை உயர்த்தாதபடிக்கு பவுலின் சரீரத்தில் ஒரு முள் கொடுக்கப்பட்டது.
5. யாக்கோபு தான் ஏசாவுக்கு செய்த துரோகத்தை அறிக்கையிட்ட பிறகே இஸ்ரவேல் என்னும் பெயர் பெற்றான்.
6.(2.ராஜா 4.27) தன்னை பார்க்க வந்த ஸ்தீரி துக்கத்தோடு வந்திருக்கிறாள் என்பது தன்னை பெரிய தீர்க்கதரிசியாக நினைத்து கொண்டிருந்த எலிசாவுக்கு வெளிப்படுத்தபடவில்லை.
7. ராஜாவுக்கும் அவன் மூலம் கிடைக்கும் நன்மைகளுக்கும் அடிமைகளாக இருந்த நானூறு தீர்க்கதரிசிகளின் அகங்காரம் மிகாயா என்னும் ஒரு தீர்க்கதரிசியால் தகர்க்கப்பட்டது. இவர்கள் கர்த்தரின் தீர்க்கதரிசிகளாயிருந்தும், கர்த்தர் தங்களை பயன்படுத்தியும கர்த்தருக்கு தங்களை ஒப்புக் கொடுக்கும் விஷயத்தில் முன்னேறவில்லை.
இதைப் போல கர்த்தர் இன்றும் பல ஊழியர்களை பயன்படுத்தி வருகிறார். அவர்கள் மூலமாய் பெரிய காரியங்கள் நடக்கின்றன. இவர்களும் தங்களை முழுமையாக தேவனுக்கு ஒப்புக் கொடுப்பதில் பூரணமடைய வேண்டும். அவ்வாறு முழுமையாக ஒப்புக் கொடுக்காத ஊழியர்களின் கதி என்னவெனில்
23. அப்பொழுது, நான் ஒருக்காலும் உங்களை அறியவில்லை. அக்கிரமச் செய்கைக்காரரே, என்னைவிட்டு அகன்று போங்கள் என்று அவர்களுக்குச் சொல்லுவேன்.
மேற்கண்ட வசனங்கள் கள்ளத்தீர்க்கதரிசிகளை குறிக்கிறது என்று பலர் சொல்கின்றனர். கள்ளத் தீர்க்கதரிசிகள் தேவனை சந்திக்காமலே ஆக்கினை அடைவர்.இந்த வசனங்கள் தேவன் பயன்படுத்தியவர்களையே குறிக்கிறது. இவர்கள் செய்த தவறு என்னவெனில்.
இவர்கள் பயன்படுத்திய நாங்கள் என்னும் வார்த்தையே தேவன் இவர்களை ஒதுக்கி தள்ள காரணமாகும். கர்த்தாவே, கர்த்தாவே என்ற வார்த்தையை பக்தியுள்ள தொனியில் சொல்லவில்லை. சாதாரண தொனியிலேயே சொல்கிறார்கள். இவர்கள் சொல்லியிருக்க வேண்டியது என்னவெனில்
எங்கள் மூலமாக நீர் தீர்க்கதரிசனம் உரைத்தீர் அல்லவா? எங்கள் மூலமாக நீர் பிசாசுகளை துரத்தினீர் அல்லவா? எங்கள் மூலமாக நீர் அனேக அற்புதங்களை செய்தீர் அல்லவா? உமக்கு நன்றி.
இவர்கள் வாழ்ந்த அர்ப்பணிப்பில்லாத வாழ்க்கை இவர்களை இப்படி சொல்ல வைக்கவில்லை. மாறாக இவர்கள் தங்கள் வாயினாலேயே தங்களை தேவனுக்கு தூரமாக சொல்லி கொள்ளுகின்றனர். அர்ப்பணிப்பு உள்ளவன் முதலில் தேவனுக்கு முன்பாக நேருக்கு நேர் பேசவும் பயப்படுவான். அர்ப்பணிப்பு இல்லாதவர்கள் தேவனோடு நேருக்கு நேர் நின்று பேசுவதோடு துணிச்சலாக தங்கள் கோரிக்கைகளையும் அவர் முன்பாக வைக்கின்றனர். (ஊதிய உயர்வு கொடுக்க வேண்டும் என தொழிலாளிகள் முதலாளியை மிரட்டுவது போல) இவர்கள் தேவனை கண்டவுடனேயே அவர் பாதத்தில் விழாதவர்கள்.
இதற்கு மாறாக இன்னொறு கூட்டத்தினரை பார்க்கலாம்.
வெளி 4.10. இருபத்துநான்கு மூப்பர்களும் சிங்காசனத்தின்மேல் வீற்றிருக்கிறவருக்கு முன்பாக வணக்கமாய் விழுந்து, சதாகாலங்களிலும் உயிரோடிருக்கிறவரைத் தொழுதுகொண்டு, தங்கள் கிரீடங்களைச் சிங்காசனத்திற்கு முன்பாக வைத்து: 11. கர்த்தாவே, தேவரீர், மகிமையையும் கனத்தையும் வல்லமையையும் பெற்றுக்கொள்ளுகிறதற்குப் பாத்திரராயிருக்கிறீர், நீரே சகலத்தையும் சிருஷ்டித்தீர், உம்முடைய சித்தத்தினாலே அவைகள் உண்டாயிருக்கிறவைகளும் சிருஷ்டிக்கப்பட்டவைகளுமாயிருக்கிறது என்றார்கள். வெளி 5.8. அந்தப் புஸ்தகத்தை அவர் வாங்கினபோது, அந்த நான்கு ஜீவன்களும், இருபத்துநான்கு மூப்பர்களும் தங்கள் தங்கள் சுரமண்டலங்களையும், பரிசுத்தவான்களுடைய ஜெபங்களாகிய தூபவர்க்கத்தால் நிறைந்த பொற்கலசங்களையும் பிடித்துக்கொண்டு, ஆட்டுக்குட்டியானவருக்குமுன்பாக வணக்கமாய் விழுந்து: 9. தேவரீர் புஸ்தகத்தை வாங்கவும் அதின் முத்திரைகளை உடைக்கவும் பாத்திரராயிருக்கிறீர்; ஏனெனில் நீர் அடிக்கப்பட்டு, சகல கோத்திரங்களிலும் பாஷைக்காரரிலும் ஜனங்களிலும் ஜாதிகளிலுமிருந்து எங்களை தேவனுக்கென்று உம்முடைய இரத்தத்தினாலே மீட்டுக்கொண்டு, 10. எங்கள் தேவனுக்குமுன்பாக எங்களை ராஜாக்களும் ஆசாரியர்களுமாக்கினீர்; நாங்கள் பூமியிலே அரசாளுவோமென்று புதிய பாட்டைப் பாடினார்கள்.
இந்த மூப்பர்கள் இந்த நிலையில் இருக்க காரணம் இவர்கள் பயன்படுத்திய எங்களை நீர் என்ற வார்த்தையும்,இவர்களின் நன்றியுள்ள இருதயமும், பயபக்தியுடன் கூடிய அர்ப்பணிப்புள்ள வாழ்க்கை வாழ்ந்ததுமே.
அர்ப்பணிப்புள்ள வாழ்க்கை என்பது கடவுள் சொல்வதற்கெல்லாம் ஆமாம் சாமி போடும் வாழ்க்கையே.
தேவன் கிருத்துவர்கள் மட்டும் இல்லாமல் எந்த மதத்தினவராய் இருந்தாலும் கடவுளுக்கு முன்பாக தன்னை உயர்த்தும் போது அவர்களை தாழ்த்துகிறார்.
யோபு 40.10. இப்போதும் நீ முக்கியத்தாலும் மகத்துவத்தாலும் உன்னை அலங்கரித்து, மகிமையையும் கனத்தையும் தரித்துக்கொண்டு, 11. நீ உன் கோபத்தின் உக்கிரத்தை வீசி, அகந்தையுள்ளவனையெல்லாம் தேடிப்பார்த்துத் தாழ்த்திவிட்டு, 12. பெருமையுள்ளவனையெல்லாம் கவனித்து, அவனைப் பணியப்பண்ணி, துன்மார்க்கரை அவர்களிருக்கிற ஸ்தலத்திலே மிதித்துவிடு. 13. நீ அவர்களை ஏகமாய்ப் புழுதியிலே புதைத்து, அவர்கள் முகங்களை அந்தரங்கத்திலே கட்டிப்போடு. 14. அப்பொழுது உன் வலதுகை உனக்கு இரட்சிப்பு உண்டுபண்ணும் என்று சொல்லி, நான் உன்னைப் புகழுவேன். நேபுகாத்னேச்சார் என்னும் மன்னன் இவ்வாறு சொன்ன போது, இவ்வாறு ஆனான்.
தானி 4.30. இது என் வல்லமையின் பராக்கிரமத்தினால், என் மகிமைப்பிரதாபத்துக்கென்று, ராஜ்யத்துக்கு அரமனையாக நான் கட்டின மகா பாபிலோன் அல்லவா என்று சொன்னான். 31. இந்த வார்த்ததை ராஜாவின் வாயில் இருக்கும்போதே, வானத்திலிருந்து ஒரு சத்தம் உண்டாகி: ராஜாவாகிய நேபுகாத்நேச்சாரே, ராஜ்யபாரம் உன்னைவிட்டு நீங்கிற்று. 32. மனுஷரினின்று தள்ளப்படுவாய்; வெளியின் மிருகங்களோடே சஞ்சரிப்பாய்; மாடுகளைப்போல் புல்லை மேய்வாய்; இப்படியே உன்னதமாவர் மனுஷருடைய ராஜ்யத்தில் ஆளுகைசெய்து, தமக்குச் சித்தமாயிருக்கிறவனுக்கு அதைக் கொடுக்கிறாரென்பதை நீ அறிந்துகொள்ளுமட்டும் ஏழு காலங்கள் உன்மேல் கடந்துபோகும் என்று உனக்குச் சொல்லப்படுகிறது என்று விளம்பினது.
8. பல தீய செயல்களை செய்த ஆகாப் என்னும் ராஜா தன்னை தாழ்த்திய போது கர்த்தர் அதில மகிழ்ந்து சொன்னது என்னவெனில்,
1.இராஜா 21.27. ஆகாப் இந்த வார்த்தைகளைக் கேட்டபோது, தன் வஸ்திரங்களைக் கிழித்து, தன் சரீரத்தின்மேல் இரட்டைப்போர்த்துக்கொண்டு, உபவாசம்பண்ணி, இரட்டிலே படுத்துத் தாழ்மையாய் நடந்துகொண்டான். 28. அப்பொழுது கர்த்தருடைய வார்த்தை திஸ்பியனாகிய எலியாவுக்கு உண்டாயிற்று, அவர்: 29. ஆகாப் எனக்கு முன்பாகத் தன்னைத் தாழ்த்தினதைக் கண்டாயா? அவன் எனக்கு முன்பாகத் தன்னைத் தாழ்த்துகிறபடியினால், நான் அவன் நாட்களில் அந்தப் பொல்லப்பை வரப்பண்ணாமல், அவன் குமாரன் நாட்களில் அதை அவன் வீட்டின்மேல் வரப்பண்ணுவேன் என்றார்.
இந்த ஆகாப் என்னும் மன்னன் தன்னை தாழ்த்தின பிறகு, தேவன் அவனுடைய அர்ப்பணிப்பை அறிந்து கொள்ள அவனை ஒரு சோதனைகுட்படுத்தினார். அவனும், யூதாவின் ராஜாவான யோசாபாத்தும் போருக்கு செல்ல கர்த்தரின் வார்த்தையை கேட்ட போது இரண்டு தீர்க்கதரிசன செய்திகள் கிடைக்கின்றன. அதில் எது பொய் தீர்க்கதரிசனமோ அதை நம்பி ஆகாப் போருக்கு புறப்படுகிறான். ஆனாலும் மிகாயா சொன்ன இஸ்ரவேலின் ராஜா இறந்து விடுவான் (அதனால் போருக்கு போக வேண்டாம்) என்னும் செய்தியையும் அவனால் நம்பாமல் இருக்க முடியவில்லை. தந்திரமாக யோசபாத்தை இஸ்ரவேலின் ராஜாவாக மாற்றி, சாதாரண வீரனாக இவன் களம் இறங்குகிறான். யோசாபாத்தும் நாந்தான் நீர், நீர்தான் நான் என ஆகாபுக்கு வாக்கு கொடுக்கிறான்.ஆகாபுக்கு வரவேண்டிய ஆப்பு யோசாபாத்தை நோக்கி வருகிறது. கீழ்கண்ட வார்தையின் உண்மையை ஆரம்பத்திலேயே உணராத யோசாபாத் சாவு தன்னை நோக்கி வரும் போது கர்த்தரை நோக்கி கூக்குரலிட்டு அவர் அருளால் தன்னை காப்பற்றி கொள்ளுகிறான்.
1. என் மகனே, நீ உன் சிநேகிதனுக்காகப் பிணைப்பட்டு, அந்நியனுக்குக் கையடித்துக்கொடுத்தாயானால், 2. நீ உன் வாய்மொழிகளால் சிக்குண்டாய், உன் வாயின் வார்த்தைகளால் பிடிபட்டாய், 3. இப்பொழுது என் மகனே, உன் சிநேகிதனுடைய கையில் நீ அகப்பட்டுக்கொண்டபடியால், நீ உன்னைத் தப்புவித்துக்கொள்ள ஒன்று செய்.
இந்த ஆகாப் என்னும் ராஜா கர்த்தரிடத்தில் தாழ்மை என்னும் கவசம் அணிந்திருந்தான். ஆனாலும் அது அவன் உடலை முழுமையாக மறைக்கிறதற்க்கு போதுமானதாக இல்லை. அந்த கவசம் அங்கங்கு ஓட்டை உள்ளதாக இருந்தது. கவசத்தின் சந்துக்குள் அம்பு பாய்ந்தது. அவன் இறந்தான்.
சுயம் அழிதலை பற்றி எல்லா மதங்களும் சொல்லுகின்றன. அனேக இந்து, புத்த, ஜைன ஞானிகள் சுயம் அழிவதற்காக பல முயற்ச்சிகளை எடுத்துள்ளனர். ஆனால் கிருத்துவத்தில் சுயம் அழிவது முக்கியத்துவம் வாய்ந்ததன்று. தேவனிடத்தில் ஐக்கியம் கொள்வதே முக்கியமானது. அவ்வாறு செய்யும் போது சுயம் தானாகவே விலகி விடுகிறது. ஆனால் இன்னொரு பக்கத்தில் மற்ற மதங்களில் இருப்பவர்கள் சுயத்தை அழிக்க எடுக்கும் முயற்ச்சிகள் போலவே கிருத்துவர்களும் செய்ய வேண்டும் என்ற போதனைகளும் சொல்லபடுகின்றன. இந்த போதனைகள் என்னவெனில்
1. இயேசு தன் வாழ்னாள் முழுவதும் சோகமாகவே இருந்தார். ஒரு கிருத்துவனும் அவ்வாறே இருக்க வேண்டும். ஒரு கிருத்துவன் சந்தோஷமாக இருப்பது எப்படி? அவன் சிலுவை சுமக்க வேண்டும் என இயேசு சொன்னாரே அவர் சொன்னபடியே அவன் செய்து சோகமாக இருக்க வேண்டும்.
2. கிருத்துவன் பாடனுபவிக்கிறவனாக இருக்க வேண்டும். அவ்வாறு கஷ்டம் எதுவும் வராவிட்டால் உபவாசம் அது இது என்று இருந்து எப்படியாகிலும் கஷ்டப்பட வேண்டும்.
3. பணத்தை அறவே வெறுக்க வேண்டும்.
4. திருமணம் செய்து கொள்ள கூடாது. குடும்பத்தின் மேல் பற்று கொள்ளக் கூடாது
இது போன்ற பல கருத்துக்களே. இந்த போதனைகள் தவறானவைகள் என்று அப்போஸ்தலர்களாலேயே சொல்லப்பட்டுள்ளன.
(தொடரும்)
-- Edited by SANDOSH on Sunday 22nd of August 2010 09:55:38 PM