முஹம்மது நபி (ஸல்) அவர்கள் முஸ்லிம்களின் பாவங்களைக் கழுவுவதற்காக ஏன் மரணிக்கவில்லை?.
இப்னு குறைஷ்
கிருத்தவ நண்பர்கள் ஏசு அல்லது ஜிஸஸ் என்றழைக்கப்படும் நபி ஈஸா (அலை) அவர்களையும், அவர்களின் பிறப்பு, வாழ்க்கை, பிரச்சாரப்பணி போன்றவைகளையும் தவறாக புரிந்து அதன்படி அவர்கள் செய்யும் பிரச்சாரங்களினால் இதுபோன்ற கேள்விகள் பிறக்கின்றன.
முஹம்மது நபி (ஸல்) அவர்கள் முஸ்லிம்களின் பாவங்களைக் கழுவுவதற்காக ஏன் மரணிக்கவில்லை? என்ற இக்கேள்விக்குள் நுழையும்முன் அவ்வாறு மரணிப்பது அறிவுப்பூர்வமானதா? ஏற்றுக்கொள்ளப்படவேண்டிய ஒன்றா? என்பதை நாம் முதலில் ஆராயக் கடமைப்பட்டுள்ளோம்.
நபி ஈஸா (அலை) அவர்கள் மனிதர்களின் பாவங்களைப் போக்குவதற்காக சிலுவையில் மரணித்தார்கள் என்று நம்புபவர்களிடம் நாம் ஒருசில அடிப்படையான கேள்விகளைக் கேட்க விரும்புகிறோம். அவைகளாவன
1. கிருத்துவர்களின் நம்பிக்கைபடி நபி ஈஸா (அலை) அவர்கள் மனிதர்களின் பாவங்களைப் போக்குவதற்காக சிலுவையில் மரணித்தார்கள் என்பது உண்மையானால் எத்தனை மனிதர்களின் பாவங்களை நீக்குவதற்காக? அல்லது எத்தனை வருடங்கள் வரை வாழ்ந்த, வாழ இருக்கின்ற மனிதர்களின் பாவங்களை நீக்குவதற்காக?
2. நபி ஈஸா (அலை) அவர்கள் மரணத்திற்கு முன்புவரை வாழ்ந்தவர்களின் பாவங்கள் மட்டும்தான் நீக்கப்பட்டதா? ஆம் எனில் நபி ஈஸா (அலை) அவர்களுக்குப்பிறகு 2000 வருடங்கள் உருண்டோடி விட்டனவே இந்ந 2000 வருடங்கள் மனிதர்கள் செய்த பாவங்களை நீக்குவதற்காக சிலுவையில் உயிர்நீக்கப்போவது யார்?
3. இல்லை இல்லை நபி ஈஸா (அலை) அவர்கள் மரணித்தது இந்த உலகம் தோன்றியது முதல் அழியும்வரை உள்ள ஒட்டுமொத்த மனிதர்களின் பாவங்களையும்; போக்குவதற்காகத்தான் என்று கூறுவதாக இருந்தால் இப்போது வாழும் மனிதர்கள் ஏதேனும் கொடிய பாவங்கள் செய்துவிட்டால் கிருத்துவர்களின் பார்வையில் அவர்களின் நிலை என்ன?. இப்படி நம்புபவர்கள் தங்களின் வீடுகளில் திருட்டு, கொலை, கொள்ளை போன்ற பாதிப்புகள் நடந்து விட்டால் அதற்காக அவர்கள் காவல்துறையினரையும், நீதிமன்றங்களையும் அனுகமாட்டார்களா? இவர்கள் நம்பிக்கையின்படி நபி ஈஸா (அலை) அவர்கள் சிலுவையில் மரணித்து மனிதர்களின் யாவரின் பாவங்களையும்; போக்கிவிட்டபடியால் அவ்வாறு திருட்டு, கொலை, கொள்ளை போன்ற குற்றங்கள் புரிந்தவனை தண்டிக்காமல் விட்டுவிடுவார்களோ?
இப்படி நம் பாவங்களை எல்லாம் ஏசு கழுவி பரிசுத்தப்படுத்திவிட்டார் என்ற நம்பிக்கையில்தானோ என்னவோ மேற்கத்திய கிருத்தவ உலகம் கொலை, கொள்ளை, கற்பழிப்பு மற்றும் மனித உரிமை மீறல்கள் போன்றவற்றில் சிக்கித்தவித்தும்;;, பெண்களை போகப்பொருளாகக்காட்டி அதிலேயே மூழ்கி பலவகை பால்வினை நோய்களுக்கும் ஆளாகி 'எயிட்ஸ்' போன்ற கொடிய ஆட்கொள்ளி நோய்களினால் செத்துமடியும் இழிநிலையில் இருப்பதையும் நாம் கண்கூடாகக் காண்கிறோம். இத்தகைய அவல நிலையை இஸ்லாம் வேரோடும் வேரடி மண்ணோடும் கலையும் முகமாக நபி ஈஸா (அலை) அவர்களைப் பற்றி அல்லாஹ் திருமறை குர்ஆனில் பின்வருமாறு குறிப்படுகிறான்.
நிச்சயமாக நாங்கள் அல்லாஹ்வின் தூதராகிய - மர்யமின் குமாரராகிய மஸீஹை கொன்றுவிட்டோம் என்று அவர்கள் கூறுவதாலும் (அவர்கள் சபிக்கப்பட்டனர்). அவர்கள் அவரைக் கொல்லவுமில்லை; அவரை அவர்கள் சிலுவையில் அறையவுமில்லை. ஆனால் அவர்களுக்கு (அவரைப் போன்ற) ஒருவன் ஒப்பாக்கப்பட்டான்;. மேலும் இ(வ் விஷயத்)தில் அபிப்ராய பேதம் கொண்டவர்கள்; அதில் சந்தேகத்திலேயே இருக்கின்றார்கள் - வெறும் யூகத்தைப் பின்பற்றுவதேயன்றி அவர்களுக்கு இதில் எத்தகைய அறிவும் கிடையாது. நிச்சயமாக அவர்கள் அவரைக் கொல்லவே இல்லை.
ஆனால் அல்லாஹ் அவரைத் தன் அளவில் உயர்த்திக் கொண்டான் - இன்னும் அல்லாஹ் வல்லமை மிக்கோனாகவும் ஞானமுடையோனாகவும் இருக்கின்றான். (திருக்குர்ஆன் 4:157, 158)
இன்னும் மர்யமுடைய மகன் ஈஸாவே, 'அல்லாஹ்வையன்றி என்னையும் என் தாயாரையும் இரு கடவுள்களாக ஆக்கிக்கொள்ளுங்கள் என்று மனிதர்களிடம் நீர் கூறினீரா?' என்று அல்லாஹ் கேட்கும் போது அவர்; ''நீ மிகவும் தூய்மையானவன்; எனக்கு உரிமையில்லாத ஒன்றை நான் சொல்வதற்கில்லை. அவ்வாறு நான் கூறியிருந்தால் நீ அதை நிச்சயமாக அறிந்திருப்பாய்; என் மனதிலுள்ளதை நீ அறிகிறாய் உன் உள்ளத்திலிருப்பதை நான் அறிய மாட்டேன்;. நிச்சயமாக நீயே மறைவானவற்றையெல்லாம் நன்கு அறிபவன்'' என்று அவர் கூறுவார். ''நீ எனக்குக் கட்டளையிட்டபடி (மனிதர்களை நோக்கி) ''என்னுடைய இறைவனும் உங்களுடைய இறைவனுமாகிய அல்லாஹ்வையே வணங்குங்கள் என்பதைத் தவிர வேறு எதையும் அவர்களுக்கு நான் கூறவில்லை. மேலும் நான் அவர்களுடன் (உலகில்) இருந்த காலமெல்லாம் அவர்களைக் கண்காணிப்பவனாக இருந்தேன்;. அப்பால் நீ என்னைக் கைப்பற்றிய பின்னர் நீயே அவர்கள் மீது கண்காணிப்பவனாக இருந்தாய். நீயே எல்லாப் பொருட்கள் மீதும் சாட்சியாக இருக்கிறாய்....'' (திருக்குர்ஆன் 5 : 116, 117) (நபியே! ஈஸாவைப் பற்றி) உம் இறைவனிடமிருந்து வந்ததே உண்மையாகும்;. எனவே (இதைக் குறித்து) ஐயப்படுவோரில் நீரும் ஒருவராகிவிடாதீர். (திருக்குர்ஆன் 3:60)
எனவே நபி (ஈஸா) அலை அவர்களை எவரும் சிலுவையில் அரையவுமில்லை அவர்கள் யாருடைய பாவத்தையும்; கழுவதற்காகவும் மரணிக்கவில்லை மாறாக அல்லாஹ் அவர்களை இவ்வுலகத்தை விட்டும் உயர்த்திக் கொண்டான் என்று திருமறை குர்ஆன் கூறுவதை ஏற்றுக்கொள்வதால் நம் பாவங்களை எல்லாம் ஏசு கழுவி பரிசுத்தப்படுத்திவிட்டார் என்ற தவறான நம்பிக்கையால் விளைந்த அனாச்சாரங்களிலிருந்து அதில் வீழ்ந்தவர்கள்; நிச்சயம் மீளமுடியும்.
நம் பாவங்களை நீக்குவது எப்படி?
அண்ணல் நபி (ஸல்) அவர்கள் அகிலத்திற்கோர் அருட்கொடையாக அவதரித்த போதிலும் முஸ்லிம்களின் பாவங்களுக்காகவோ அல்லது பிற மதத்தவர்களின் பாவங்களை நீக்குவதற்காகவோ மரணிக்கவில்லை.
ஒருவர் செய்த பாவத்திற்காக மற்றொருவர் மரணித்து அதன்முலம் பாவம் செய்தவர் பரிசுத்தமாகிறார் என்பது இஸ்லாம் கூறும் கடவுள் கொள்கைக்கும், மனித படைப்பின் இலக்கணத்திற்கும் எதிராக முரண்படுகிறது.
இஸ்லாமிய மார்கத்தைப் பொருத்தவரையில் இறைவனை வணங்குவதற்கும், அவனிடம் பிராத்தனை புரிவதற்கும் எந்த இடைத்தரகர்களும் தேவையில்லை. ஒவ்வொரு ஆனும் பெண்ணும் தான் செய்த குற்றத்திற்காக இறைவனிடம் நேரடியாக பாவமன்னிப்பு கோரமுடியும் என்றும் அதற்காக எத்தகைய இறைதூதரையோ, துறவியையோ, பாதிரியையோ துணைக்கு அழைக்கத் தேவையில்லை என்றும் திருமறை குர்ஆன் பல இடங்களில் உணர்த்துகிறது. மேலும் நிச்சயமாக நாம் மனிதனைப் படைத்தோம், அவன் மனம் அவனிடம் என்ன பேசுகிறது என்பதையும் நாம் அறிவோம்; அன்றியும், (அவன்) பிடரி(யிலுள்ள உயிர்) நரம்பை விட நாம் அவனுக்கு சமீபமாகவே இருக்கின்றோம். (திருக்குர்ஆன் 50 :16) (நபியே!) என் அடியார்கள் என்னைப்பற்றி உம்மிடம் கேட்டால்; ''நிச்சயமாக நான் சமீபமாகவே இருக்கிறேன், பிரார்த்தனை செய்பவரின் பிரார்த்தனைக்கு அவர் பிரார்த்தித்தால் விடையளிக்கிறேன்;, அவர்கள் என்னிடமே(பிரார்த்தித்துக்) கேட்கட்டும்;, என்னை நம்பட்டும். அப்பொழுது அவர்கள் நேர்வழியை அடைவார்கள்'' என்று கூறுவீராக. (திருக்குர்ஆன் 2:186)
மேற்கண்ட திருக்குர்ஆன் வசனங்கள் முலம் இறைவன் நம் பிடரி நரம்பைவிட மிக அருகில் இருக்கிறான் என்றும் நம் பிராத்தனைகளை செவியேற்கிறான் என்பதையும் நாம் தெளிவாக அறியமுடிகிறது. எனவே ஒருவனின் பாவங்கள் மன்னிக்கப்படுவதற்காக மற்றெவரும் தம் உயிரை விடுவதற்கு எந்தத் தேவையுமில்லை மாறாக பாவம் செய்தவன் இறைவனிடம் மன்னிப்பைக் கோருவதுதான் பொருத்தமானதும் சரியானதுமாகும் என்றே விளங்கமுடிகிறது.
மனிதன் பிறப்பால் பாவம் செய்தவனா?
மனிதனின் படைப்பு பற்றி திருக்குர்ஆன் கூறுகையில் இறைவன் முதலில் நபி ஆதம் (அலை) அவர்களை மண்ணினால் படைத்தான். பிறகு அவர்கள்மூலம் அவர்களின் துனைவி ஏவால் என்ற ஹவ்வா (அலை) அவர்களைப் படைத்தான். நபி ஆதம் (அலை) அவர்களுக்கு ஞானங்களை எல்லாம் கற்றக்கொடுத்த இறைவன் அவர்களை மனைவியுடன் சுவனத்திலும் நுழையச்செய்தான். அங்கிருந்த ஒரு கனியைமட்டும் புசிப்பதற்கு இறைவன் தடைவிதித்திருந்தான். ஷைத்தானின் தூண்டுதலால், அவனது ஆசை வார்த்தைகளுக்கு மயங்கி இறைகட்டளைக்கு மாறுசெய்யுமுகமாக அக்கனியை புசித்துவிட்டார்கள் என்றும் 2: 30-39இ 7:19இ 17: 61இ 18: 50இ 20: 116-117 போன்ற வசனங்களின் மூலம் நபி ஆதம் (அலை) அவர்களின் படைப்பு தொடர்பான வரலாற்றையும் திருக்குர்ஆன் தெளிவாக விளக்குகிறது.
கிருத்துவ மதம் பாவங்களைப்பற்றி கூறுகையில், நம் ஆதிபிதா நபி ஆதம் (அலை) அவர்கள் இறைகட்டளைக்கு மாறு செய்துவிட்டபடியால் அவர் பாவியாகிவிட்டார். அவர்செய்த பாவம் அவர் மக்களாகிய உலகத்து மாந்தர்கள் அனைவர்மீதும் இறங்கி பிறப்பால் நம்மையும் பாவியாக்கிவிட்டது. நபி ஆதம் (அலை) அவர்கள் செய்த பாவத்தில் நம் ஒவ்வொருவருக்கும் பங்குண்டு என்பதாகப் போதிக்கிறது. இக்கூற்றிலிருந்து இஸ்லாம் முற்றிலும் வேறுபடுகிறது.
இஸ்லாத்தைப் பொருத்தவரையில் அவரவர் செய்யும் பாவங்களுக்கு அவரவர்தாம் பொருப்பேற்கவேண்டும். நபி ஆதம் (அலை) அவர்கள் செய்த பாவத்திற்கு நபி ஆதம் (அலை) அவர்கள் மட்டுமே பொருப்பாகும். அதுமட்டுமல்லாமல் இறைவன் நபி ஆதம் (அலை) அவர்களை மன்னித்தும் விட்டதாக திருக்குர்ஆன் மிகத் தெளிவாகவே கூறுகிறது.
ஆதம் தம் இறைவனிடமிருந்து சில வாக்குகளைக் கற்றுக் கொண்டார்; (இன்னும், அவற்றின் முலமாக இறைவனிடம் மன்னிப்புக்கோரினார்) எனவே இறைவன் அவரை மன்னித்தான்; நிச்சயமாக அவன் மிக மன்னிப்போனும், கருணையாளனும் ஆவான். (திருக்குர்ஆன் 2:37)
மேலும் நபி (ஸல்) அவர்கள் பாவங்களைப் பற்றி குறிப்பிடுகையில் ''ஒவ்வொரு மனிதனும் தான் பிறக்கும்போது பரிசுத்தமானவனாகவும், பாவம் ஏதும் அறியாத நிலையிலும்தான் பிறக்கிறான். அவன் பாவம் செய்வதெல்லாம் அவன் அறிந்தநிலையிலும் அவன் செய்யும் செயல்களினாலும்தான் ஏற்படுகிறது'' என்ற கருத்துப்படக் கூறியுள்ளார்கள்.
திருமறை குர்ஆன் இறைவனைப்பற்றிக் குறிப்பிடுகையில் அவன் அளவற்ற அருளாளனாக, நிகரற்ற அன்புடையோனாக, அவன் படைப்பினங்கள் மீது அன்பும் கருணையும் உடையோனாக, நம் பாவங்களையெல்லாம் மன்னிப்பவனாக இருக்கிறான் என்றெல்லாம் குறிப்பிடுகிறது.
''என் அடியார்களே! (உங்களில்) எவரும் வரம்பு மீறி தமக்குத்தாமே தீங்கிழைத்துக் கொண்ட போதிலும், அல்லாஹ்வுடைய ரஹ்மத்தில் அவர் நம்பிக்கையிழக்க வேண்டாம் - நிச்சயமாக அல்லாஹ் பாவங்கள் யாவையும் மன்னிப்பான் - நிச்சயமாக அவன் மிக்க மன்னிப்பவன்; மிக்கக் கருணையுடையவன்'' (என்று நான் கூறியதை நபியே!) நீர் கூறுவீராக. ஆகவே (மனிதர்களே!) உங்களுக்கு வேதனை வரும் முன்னரே நீங்கள், உங்கள் இறைவன் பால் திரும்பி, அவனுக்கே முற்றிலும் வழிபடுங்கள்; (வேதனை வந்துவிட்டால்) பின்பு நீங்கள் உதவி செய்யப்பட மாட்டீர்கள்'';. (திருக்குர்ஆன் 39: 53, 54.)
எனவே மனிதன்; பாவம் செய்யும் காரணத்தையும், செய்த பாவங்களைப் போக்குவதற்கான வழியையும், இறைவனின் தன்மைகளையும் பற்றி உலகப்பொதுமறையாம் திருக்குர்ஆன் தௌ;ளத்தெளிவாக விளக்கியிருக்க ஆதம் (அலை); செய்த பாவத்திற்கு மனிதர்கள் அனைவருக்கும் பங்குண்டு என்று வாதிப்பதும் ஒருவர் செய்த பாவத்திற்காக மற்றொருவரை பழிபீடத்தில் ஏற்றுவதும் அறிவுப்பூர்வமானதாகாது.
ஒருவரின் பாவச்சுமையை மற்றெவரும் சுமக்க இயலாது.
எவன் பாவத்தைச் சம்பாதிக்காறானோ அவன் தனக்குக் கேடாகவே அதை நிச்சயமாக சம்பாதிக்கிறான். அல்லாஹ் (யாவற்றையும்) அறிந்தவனாகவும் ஞானமுடையவனாகவும் இருக்கின்றான். (திருக்குர்ஆன் 4:111) அல்லாஹ் எந்த ஓர் ஆத்மாவுக்கும் அது தாங்கிக் கொள்ள முடியாத அளவு கஷ்டத்தை கொடுப்பதில்லை. அது சம்பாதித்ததின் நன்மை அதற்கே, அது சம்பாதித்த தீமையும் அதற்கே! (2:286) ''அல்லாஹ்வை அன்றி மற்றெவரையாவது நான் இறைவனாக எடுத்துக் கொள்வேனா? எல்லாப் பொருள்களுக்கும் அவனே இறைவனாக இருக்கின்றான் - பாவம் செய்யும் ஒவ்வோர் ஆத்மாவும் தனக்கே, கேட்டைத் தேடிக்கொள்கிறது ஓர் ஆத்மாவின் (பாவச்)சுமையை மற்றோர் ஆத்மா சுமக்காது. பின்னர், நீங்கள் (அனைவரும்) உங்கள் இறைவன் பக்கமே திரும்பிச் செல்ல வேண்டியதிருக்கிறது அப்போது நீங்கள் பிணங்கி விவாதம் செய்து கொண்டிருந்தவை பற்றி அவன் உங்களுக்கு அறிவிப்பான்'' என்று (நபியே!) நீர் கூறும். (திருக்குர்ஆன் 6:164) எவன் நேர்வழியில் செல்கின்றானோ அவன் தன்னுடைய நன்மைக்காகவே நேர் வழியில் செல்கிறான்; எவன் வழி கேட்டில் செல்கின்றானோ அவன் தனக்கே கேடு செய்து கொண்டான். (நிச்சயமாக) ஒருவனுடைய பாவச்சுமையை மற்றொருவன் சுமக்கமாட்டான்; (நம்) தூதரை அனுப்பாத வரையில் (எவரையும்) நாம் வேதனை செய்வதில்லை;. (திருக்குர்ஆன் 17:15)
இஸ்லாமிய மார்க்கத்தைப் பொருத்தவரையில் ஒருவரின் பாவச்சுமையை மற்றெவரும் சுமக்க இயலாது. இதுதான் இறைவனால் படைக்கப்பட்ட அனைத்து படைப்பினங்களுக்கும் இறைவன் ஏற்படுத்திய பொதுவான நீதியாகும். இக்கருத்தைத்தான் திருமறை குர்ஆனும் மேற்கண்ட வசனங்களில் தெளிவுபடுத்துகிறது.
ஒருவர் செய்த பாவத்திற்காக மற்றவர் தண்டனை பெறுவது என்பதும் ஒருவர் செய்த பாவத்திற்காக மற்றொருவரை தண்டிப்பதென்பதும் மனித சிந்தனையால் ஏற்றுக்கொள்ளப்பட முடியாத ஒரு நியாயமற்ற தத்துவமாகும். தந்தை செய்த குற்றத்திற்காக மகனையோ அல்லது மகன் செய்த குற்றத்திற்காக தந்தையையோ தண்டிப்பதென்பது உலகில் எந்த நாட்டிலுமில்லாத ஓர் வினோத சட்டமாகும்.
உலகில் பிறந்த எவராக இருந்தாலும், எப்பேர்பட்ட அறிஞாராக இருந்தாலும், நபி இப்றாஹிம் (அலை), நபி மூஸா (அலை), நபி ஈஸா (அலை), நபி முஹம்மது (ஸல்) போன்ற சங்கைக்குரிய இறைத்தூதர்களாக இருந்தாலும் அல்லாஹ்வின் கருணையிருந்தால் மட்டுமே தங்களை காத்துக்கொள்ள இயலும்.
எனவே முஹம்மது நபி (ஸல்) அவர்கள் முஸ்லிம்களின் பாவங்களைக் கழுவுவதற்காகவோ பிற மதத்தவர்களின் பாவங்களை நீக்குவதற்காகவோ மரணிக்கவில்லை - மரணத்திருக்க வேண்டிய அவசியமும் இல்லை என்பதை நாம் அறியமுடிகிறது.
சகோதரர் சிட்டிக் அவர்கள் சுட்டியுள்ள பதிவில் நியாயம் இருப்பதுபோல் தெரிந்தாலும் அது பலியிடுதலின் அடிப்படை உண்மையை அறியாமல் எழுதப்பட்ட ஒரு கட்டுரை ஆகும்.
"பலியிடுதல்" என்பதற்கு "ஈடாக கொடுத்தல்" என்று பொருள் கொள்ள முடியும்!. ஆடு மாடு ஒட்டகங்களை ஈவு இரக்கம் இல்லாமல் வெட்டி கொன்று தின்ன மறுப்பு தெரிவிக்காத திருக்குர்ஆன், அந்த ஜீவன்களும் இறைவனால் படைக்கப்பட்ட ஒரு உயிர்தானே, அது ஏன் அவ்வாறு துள்ள துடிக்க கொன்று குவிக்கப்படுகிறது என்பதற்கான விளக்கத்தை கொடுக்க தவறிவிட்டது.
இன்று உலகில் எந்த ஒரு பொருளும் வாங்குவதற்கு பணம் என்னும் காகிதம் ஈடாக கொடுக்கப்படுகிறது. பொருளுக்கும் காகிதத்துக்கும் எப்படி ஈடாகிறது என்று ஆராய்ந்து பார்த்தால் அது எவ்விதத்திலும் சரியான ஈடு அல்ல! ஆனால் அந்த காகிதத்தின் பின்னால் அரசாங்கத்தின் கீழ்கண்ட வாக்குறுதி இருக்கிறது.
I PROMISE TO PAY THE BEARER THE SUM OF ---- RUPEES
அதன் அடிப்படையில் எந்த ஒரு பொருளையும் வெறும் காகிதத்தின் மதிப்பால் அளவிடுகிறோம்.
இயேசுவின் மரணத்திலும் அதுதான் நடந்தது.
இயேசுவின் இரத்தம் உலகில் செய்த செய்யப்பட்ட செய்யப்போகும் எல்லா பாவங்களுக்கும் பரிகாரமாய் சிந்தப்பட்டது. அந்த இரத்தத்துக்கு மிஞ்சிய பாவம் என்று ஓன்று இல்லை அத்தோடு அந்த இரத்தத்தின்பின்னால் தேவனின் வாக்குறுதியும் இருக்கிறது.
யோவான் 1:7அவருடைய குமாரனாகிய இயேசுகிறிஸ்துவின் இரத்தம் சகல பாவங்களையும் நீக்கி, நம்மைச் சுத்திகரிக்கும்.
பணத்தின் மதிப்பை அறியாத காடுகளில் வாழும் பழங்குடி மக்கள் "வெறும் காகிதத்துக்கு இவ்வளவு பொருளை நான் கொடுக்க வேண்டுமா? என்று நினைப்பார்கள். ஆனால் பணத்தின் மதிப்பை அதை பயன்படுத்தும் விதத்தை அறிந்த நமக்கு அதன் உண்மை மதிப்பு தெரியும்
அதுபோல் உலகில் உள்ள மற்றேல்லாவற்றயும்விட ஈடு இணையற்ற விலையேறப் பெற்ற இயேசுவின் இரத்தத்தின் மதிப்பை நாங்கள் அறிந்துகொண்டோம்! தாங்கள் போன்றோர் அதன் மதிப்பை அறியவில்லை நீங்களும் அறிந்துகொண்டால் அதன் பின்னர் இக்கேள்வி எழாது!
மேலும் திருக்குர்ரான் "சாத்தானின் வார்த்தைக்கு கீழ்பட்டு ஆதாமும் ஏவாளும் ஆண்டவரின் கட்டளையை மீறி கனியை புசித்தனர்" என்று உண்மையை ஒப்பு கொள்கிறது. அப்படிஎன்றால் கடவுளின் வார்த்தையை மீறிய அவர்கள் பாவம் செய்தவர்கள் என்று தீர்க்கப்படுவதில் என்ன தவறு இருக்கிறது?
இப்போழுது ஒரு உதாரணத்தை பார்ப்போம்:
உங்கள் தகப்பனார் (கடவுள்) அடுத்த வீட்டு தோட்டத்தில் இருக்கும் மாங்காயை பரித்து தின்னகூடாது என்று கட்டளையிடுகிறார் ஆனால் நீங்கள் அதை கேட்காமல் அடுத்த வீட்டுகாரர் (சாத்தான்) காட்டிய ஆசை வார்த்தையில் மயங்கி நீங்கள் அந்த மாங்காயை பரித்து தின்று விட்டீர்கள். இப்பொழுது அந்த அடுத்தவீட்டுகாரன் தங்கள் தகப்பனாரிடம் வந்து "என் தோட்டத்து மாங்காயின் விலை 7லட்சம் டாலர் அதை கொடுத்துவிட்டு உன் மகனை மீடுகொண்டுபோ அல்லது அவனுக்கு ஈடாக உனது இன்னொரு மகனை என்னிடம் ஒப்புகோடு அதுவரை அவன் என் வீட்டில் அடிமையாக இருப்பான்" என்று கூறிவிட்டார்.
உங்கள் தகப்பன் (இறைவன்) நீதியுள்ளவர் எனவே அவரும் ஏற்ற காலம் வரும் வரை உங்களை அடுத்தவன் வீட்டிலேயே அடிமையாக இருக்க விட்டுவிட்டார். இதனிடையில் தங்களுக்கு பல குழந்தைகள் பிறக்கிறது. இந்த குழந்தைகள் எல்லாம் நீங்கள் அடிமையாக இருந்தபோது பிறந்ததால் அடிமையின் குழந்தைகளும் பிறப்பாலேயே அடிமைகளாகவே இருந்தன.
ஏற்ற காலம் வந்தபோது தேவன் தனது வார்த்தை என்னும் வல்லமையை மாமிசமாக்கி இயேசு என்னும் தன்னுடைய சொந்த குமாரனை ஈடாக அனுப்பினார் அவர் 7லட்சம் டாலரைவிட அதிக மதிப்புள்ள தனது இரத்தத்தை சிந்தி, அடிமைகளாக இருந்த மொத்த மனுஷர்களையும் மீட்டார்! அனால் அவரின் இரத்தத்தின் மகிமையை ஏற்க்க மறுத்த அநேகர் எங்களுக்காக எந்த கிரயமும் செலுத்தப்படவில்லை நாங்கள் இன்னும் அடிமைகளே என்று சொல்லிக்கொண்டு அதேபோலவே சாத்தனுடன் சேர்ந்து இருந்தால் அவர்களை என்ன செய்ய முடியும்?
இதுதான் நடந்த உண்மை!
எல்லாவற்றையும் அறையும் குறையுமாக சொல்லும் திருக்குரானின் மூலம் முழுமையாக ஒன்றையும் அறிந்துகொள்ள முடியாது என்றே நான் கருதுகிறேன்.
(கர்த்தருக்கு சித்தமானால் இந்த கட்டுரையில் உள்ள கேள்விகளுக்கு ஒவ்வொன்றாக பதில் தருகிறேன். தள சகோதரர்களும் தாங்கள் அறிந்த பதிலை பதுயும்படி அன்புடன் வேண்டுகிறேன்!)
__________________
நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)அவர்(கர்த்தராகியதேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்; (ஏசா 25:8)
சகோதரர் அக்சிட்டிக் அவர்களுக்கு இறைவனின் இனிய நாமத்தில் வாழ்த்துக்கள்!
தாங்கள் பதிவுகளை தரும்போது வேறு இடங்களில் உள்ள பதிவுகளை அப்படியே காப்பி பேஸ்ட் செய்வதை தவிர்க்கவும்.
தாங்கள் சொல்ல விரும்பும் கருத்துக்களின் மெயின் கருவை மட்டும் எடுத்து கொண்டு மற்றவற்றை தங்கள் சொந்த வார்த்தைகளின் அடிப்படையில் பதிவிடவும்.
இணையத்தில் வலம் வரும் இதுபோன்ற பெரியவர்களின் கட்டுரைகள் அனைத்து நாங்கள் ஏற்கெனவே அறிந்தும் அதற்க்கான பதிலை தீர்மானித்தும் இருக்கிறோம். மேலும் இதுபோன்ற கட்டுரைகளுக்கு பல வேத வல்லுனர்களின் பதிவுகள் இணையத்தில் பல தளங்களில் இருக்கின்றன தேடினால் கண்டுபிடிக்கலாம்
இறைவனைப்பற்றிய தங்கள் சொந்த கருத்துக்களை தரும்படி அன்புடன் வேண்டுகிறேன்!
"இறைவன் ஒருவரே பாவங்களை மன்னிக்க கூடியவர் அவரிடம் வாஞ்சையோடு கேட்டாலே போதும் அவர் பாவங்களை மன்னித்து விடுவான்" என்பது இஸ்லாமியரின் கூற்று. .
இதில் எனக்கு எந்த மாற்று கருத்தும் இல்லை!
ஆனால் மன்னிப்பு என்பது ஒரே நாளில் முடிந்துபோகும் செயலா? நாம் வாழும் காலம் வரை தெரிந்தோ தெரியாமலோ பல பாவங்களை செய்து கொண்டு இருக்கிறோம். இதில் எந்த பாவத்துக்கு மன்னிப்பு கிடைத்துள்ளது எந்த பாவத்துக்கு மன்னிப்பு கிடைக்கவில்லை என்று உங்களால் அறுதியிட்டு சொல்ல முடியுமா? "என் பாவங்கள் எல்லாம் மன்னிக்கப்பட்டுவிட்டது நான் சுத்தமானவன்" என்று சின்ன மன உறுத்துதல் கூட இல்லாமல் உங்களில் யாராவது உறுதியாக சொல்ல முடியுமா? மாறாக "அல்லா நாடினால் கூடும்" என்ற உறுதியற்ற வார்த்தையே கூற முடியும்.
ஏனெனில் தங்களின் பாவங்கள் மன்னிக்கப்பட்டதர்க்கு எந்த ஒரு அத்தாட்சியும் தங்களிடம் கிடையாது. நேற்று வரை நீங்கள் செய்த பாவங்கள் எல்லாம் மன்னிக்கப்பட்டிருந்தாலும், இப்பொழுது ஒருபாவம் செய்து அது மன்னிக்கபட்டும் முன் நீங்கள் இறந்துவிட்டால் நீங்கள் போகவேண்டிய இடம் நரகம் தானோ ? பாவ மன்னிப்பின் நிச்சயம் இல்லை என்றால் அது நம்மை தானாக நரகம் கொண்டு போய்விடும்.
எனவே இஸ்லாத்தின் அடிப்படையில் பார்த்ததில் ஒருவன் சுவனத்திற்கு பாத்திரவானா? இல்லையா என்பதை இறுதிநாளில் மட்டுமே அறியமுடியும்! பூமியில் வாழும் காலம்வரை அவனுக்கு மறுமை நிலை பற்றிய எந்த உறுதியும் இல்லை
ஆனால் கிறிஸ்த்தவத்தில் அப்படிஒரு உறுதியற்ற நிலை இல்லை
கிறிஸ்த்துவின் இரத்தத்துக்கு மிஞ்சிய பாவம் என்று ஒன்றும் இல்லை!
அவரை ஏற்றுக்கொண்டவரது அனைத்து பாவங்களும் மன்னிக்கப்படுவதொடு அது மன்னிக்கப்பட்டதன் அத்தாட்சியாக "பரிசுத்த ஆவி" என்னும் ஒரு வல்லமையின் ஆவியானவர் நம்முள் வந்து தங்குகிறார்.
இந்த ஆவியானவர் நாம் பாவம் செய்யும்போது நம்மை கண்டித்து மீண்டும் பாவம் செய்வதை உணர்த்துவதோடு தேவன் இருக்கிறார் என்பதற்கு ஒரு உயிருள்ள அத்தாட்சியாகவும் இருக்கிறார்
பாவத்தை மன்னிப்பவர் இறைவன் ஒருவரே ஆனால் அதை இயேசு கிறிஸ்த்து மூலம் அவர் நிறைவேற்றினார் அவரை ஏற்றுக்கொள்வதன் மூலம் பாவமன்னிப்பின் நிச்சயமற்ற தன்மையை மாறி ஒருவனின் பாவம் மன்னிக்கப்பட்டதர்க்கு அடையாளமாக அதன் நிச்சயத்தை அறிய வகை செய்தார்.
யோவான் 4:22இரட்சிப்புயூதர்கள் வழியாய் வருகிறது. அப்போஸ்தலர் 4:12அவராலேயன்றி வேறொருவராலும் இரட்சிப்பு இல்லை
தேவனின் நியமனத்தை நாம் ஏற்றே ஆகவேண்டும் !
__________________
நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)அவர்(கர்த்தராகியதேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்; (ஏசா 25:8)
Page 1 of 1 sorted by
இறைவன் -> கேள்வி பதில்கள் -> முஹம்மது நபி (ஸல்) அவர்கள் முஸ்லிம்களின் பாவங்களைக் கழுவுவதற்காக ஏன் மரணிக்கவில்லை?.