கடைசி காலம் என்ற கர்த்தரின் பயங்கரமான நாள் வரப் போகிறது என்று ஏசாயா, யோவேல் முதல் இயேசு, அப்போஸ்தலர் வரை தீர்க்கதரிசனம் உரைத்துள்ளனர். இந்த நாள் எப்போது என்பதை சொல்லாமல் அனைவரும் இந்த தீர்க்கதரிசனத்தை பற்றி சொல்லியுள்ளனர். இப்படிப்பட்ட ஒரு நாள் வரப் போவது உண்மையே. ஆனாலும் இவர்கள் சொன்ன கடைசி காலம் இவர்கள் சொல்லி ஆயிரக்கணக்கான ஆண்டுகள் ஆகியும் வரவில்லை.
இதில் அறிய வேண்டிய ஒரு செய்தி என்னவெனில், இந்த கடைசி நாள் குறைந்த பட்சம் இன்னும் இரண்டு ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு வராது என்பது இவர்களுக்கு தெரியும் என்பதே. அப்படியானால் கடைசி காலத்தை பற்றி ஏன் இவர்கள் சொன்னார்கள் என்ற கேள்வி வர கூடும்.
இவர்கள் அனைவரும் தேவ பயத்தையும்,. பக்தியையும் அனேக மக்களுக்கு எடுத்து செல்ல வேண்டிய பணியில் இருந்தனர். இந்த கடைசி காலத்தை பற்றின போதகத்தை சொல்லுவதன் மூலம் ஒரு கூட்டமான மனந்திரும்புதலை இவர்கள் எதிர்பார்த்தனர்.
இவர்கள் சொன்னது பொய்யில்லை அதாவது கடைசி காலம் ஒன்று உண்டு. ஆனால் எப்போது என்பதை இவர்கள் சொல்லாமல் அது இப்போது கூட வர வாய்ப்புண்டு என்ற எண்ணத்தை, பயத்தை மக்களின் மனதில் ஏற்படுத்தி அதன் மூலம் பெருவாரியான மக்களின் மனந்திரும்புதலை கொண்டு வர விரும்பினர். இவர்கள் இதில் எந்த அளவு வெற்றி பெற்றார்கள் என்பது தெரியவில்லை. ஆனால் இவர்கள் யாரிடம் இதை குறித்து சொன்னார்களோ அவர்கள் அனைவரும் கடைசி காலத்தை பார்க்காமலேயே இறந்து போயினர்.
ஆன்மிகத்தில் இப்படிப்பட்ட உபாயங்களை பயன்படுத்துவது என்பது ஏற்றுக் கொள்ளப்பட்ட ஒரு விசயம். (அதாவது உண்மையின் ஒரு பகுதியை மற்றும் சொல்வது)
இதே கடைசி காலத்தை பற்றி தங்களுக்கு வெளிப்பாடு கிடைத்ததாக பல போதகர்கள், கர்த்தர் வர போகிற வருடம், மாதம், நாள், நேரம், நொடி என்று அனைத்தையும் சொல்லி, சொன்ன நேரத்துக்கு கர்த்தர் வராமல் போய் தங்களை போலி ஊழியர்கள் என மக்களுக்கு நிரூபித்தனர்.
தீர்க்கதரிசிகள் சொன்ன பிறகும் பல வருடங்களுக்கு இந்த நாள் வராமல் போகவே, கடைசி காலத்தை பற்றின போதகம் இப்போது இருக்கும் நிலையில் மக்கள் மனதில் சிரிப்பையே ஏற்படுத்துகிறது. ஒரு சில போதகர்களே, ஒன்று கர்த்தரின் நாள் வரும் அல்லது உங்களின் இறப்பு நாள் வரும் என்று ஞானமாக போதிக்கின்றனர். ஆனால் "புலி வருது" கதையாக மக்கள் நினையாத வேளையில் இந்த கடைசி காலம் வரும்.
இதை படித்த பின், இயேசுவே எனக்கு தெரியாது என்ற சொன்னது எப்படி தீர்க்கதரிசிகளுக்கும், அப்போஸ்தலர்களுக்கும் தெரியும் என்று சொல்கிறாய் என்ற கேள்வி எழலாம். கீழ்கண்ட வசனத்தை இன்னொரு தரம் படித்து பார்த்தால் அது புரிய வரும்.
மத்தேயு 24.36. அந்த நாளையும் அந்த நாழிகையையும் என் பிதா ஒருவர் தவிர மற்றொருவனும் அறியான்; பரலோகத்திலுள்ள தூதர்களும் அறியார்கள். நாளும், நேரமும் தான் தெரியாதே தவிர, வருடம் அல்ல என்பது விளங்கும். குத்து மதிப்பாக வருடம் வெளிப்படுத்தப்பட்டாலும் அதை சொல்ல கூடாது என்பது தேவ கட்டளை. ஆனால் அதற்குரிய அடையாளங்கள் பலவற்றை இயேசு சொல்லியுள்ளார்.