மத்தேயு 5.38. கண்ணுக்குக் கண், பல்லுக்கு பல் என்று உரைக்கப்பட்டதைக் கேள்விப்பட்டிருக்கிறீர்கள். 39. நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்; தீமையோடு எதிர்த்து நிற்கவேண்டாம்; ஒருவன் உன்னை வலது கன்னத்தில் அறைந்தால், அவனுக்கு மறு கன்னத்தையும் திருப்பிக் கொடு. 40. உன்னோடு வழக்காடி உன் வஸ்திரத்தை எடுத்துக்கொள்ளவேண்டுமென்றிருக்கிறவனுக்கு உன் அங்கியையும் விட்டுவிடு. 41. ஒருவன் உன்னை ஒரு மைல் தூரம் வரப் பலவந்தம் பண்ணினால், அவனோடு இரண்டு மைல் தூரம் போ.
இது போலவெல்லாம் உன்னால் நடக்க முடியுமா என்று கிருத்துவர்களை கிண்டல் செய்ய மற்றவர்கள் உபயோகிக்கும் வசனம் இயேசு கிருஸ்துவின் வார்த்தையான இந்த வசனங்கள். இதை இயேசு சொன்னதால் ஆஹா எவ்வளவு அருமையான வசனம் ஆனால் பின்பற்றத்தான் முடியாது என்று சொல்லி வியக்கும் கிருத்துவர்கள் இந்த வசனத்தை வேறு யாராவது சொல்லியிருந்தால் இதெல்லாம் ஒரு போதனையா என்று சொல்லவும் கூடும்.
இந்த வசனத்துக்கு நேரிடையான அர்த்தம் கொண்டால் கோழையான ஒரு சமுதாயத்தை உருவாக்க சொல்லப்பட்டது போல தெரியும். ஆனால் அனேகருக்கு தெரியாதது இந்த வசனத்தின்படி இயேசுவே நடக்கவில்லை என்பதுதான்.
யோவான் 18.22. இப்படி அவர் சொன்னபொழுது, சமீபத்தில் நின்ற சேவகரில் ஒருவன்: பிரதான ஆசாரியனுக்கு இப்படியா உத்தரவு சொல்லுகிறது என்று, இயேசுவை ஒரு அறை அறைந்தான்.
23. இயேசு அவனை நோக்கி: நான் தகாதவிதமாய்ப் பேசினதுண்டானால், தகாததை ஒப்புவி; நான் தகுதியாய்ப் பேசினேனேயாகில், என்னை ஏன் அடிக்கிறாய் என்றார். அப்படியானால் இயேசு எதற்காக இந்த வசனத்தை ஏன் சொன்னார்? யாருக்கு சொன்னார்? போன்ற கேள்விகளுக்கு விடை தெரிந்தாலே இந்த வசனங்கள் சொல்லும் காரியத்தை அறிய முடியும்.
இயேசுவின் மலை பிரசங்கம் : மத்தேயு 5.1. அவர் திரளான ஜனங்களைக் கண்டு மலையின் மேல் ஏறினார்; அவர் உட்கார்ந்தபொழுது, அவருடைய சீஷர்கள் அவரிடத்தில் வந்தார்கள். 2. அப்பொழுது அவர் தமது வாயைத் திறந்து அவர்களுக்கு உபதேசித்துச் சொன்னது என்னவென்றால்:
இயேசுவின் மத்தேயுவில் வரும் மலைபிரசங்கம் மிகவும் எளிமையானதும், அழகானதும், எல்லா மதத்தவர்களாலும் பாராட்டப்பட்டதுமாகும். தன்னிகரில்லாததுமாகும்
இயேசுவை காண, அவர் யாரென்று அறிய, அவரிடமிருந்து எதையாவது பெற்று கொள்ள ஏராளமான ஜனக்கூட்டம் அவரை சூழ்ந்திருந்தது. அவர்களுக்கு தேவ ராஜ்ஜியத்தை பற்றிய நற்செய்தியை அறிவிக்க விரும்பினார். ஆனால் அங்கிருந்த ஒவ்வொருவருக்கும் வேறு வேறு சிந்தனைகள். சிலருக்கு வேதனைகள், சிலருக்கு வஞ்சனைகள், சிலருக்கு ஆர்வம், சிலருக்கு வேடிக்கை, சிலருக்கு ஆராய்ச்சி.
மிக விலையுயர்ந்த முத்துக்கள் போன்ற உண்மைகளை அறிய அங்கே யாரும் தயாராக இல்லை. தேவனை இயேசுவின் வழியாக பார்க்கவும், உண்மையை அறிந்து கொள்ளும் தாகத்துடனும் அங்கே எவரும் இல்லை. எல்லோர் மனதையும் உலக கவலைகளும், நாளைய தினத்தை பற்றிய எண்ணங்களும், அவர்கள் வேதனைகளும், வஞ்சனைகளும் ஆக்கிரமித்திருந்தன. விதை போட்டால் விளையத்தக்க பண்பட்ட நிலத்தை அங்கே காண முடியவில்லை.
மிகவும் விலையுயர்ந்த முத்துக்கள் போன்ற வார்த்தைகளை கூட்டத்தில் சொல்ல முடியாது. அதற்கென தனியாக தெரிந்தெடுக்கப்பட்ட, பண்படுத்தப்பட்ட நிலத்தில் மாத்திரமே விதையை விதைக்க முடியும். இப்படி பல்வேறு சிந்தனைகள் கொண்ட மனிதர்கள் மத்தியில் விலையுயர்ந்த முத்துக்களை போட விரும்பாமல் அவர் ஜனக்கூட்டத்திற்க்கு விலகி மலையின் மேல் ஏறினார். எங்கு சென்றாலும் அவரை தொடரும் சீடர்கள் அவரோடு கூடவே சென்றனர். பண்படுத்தப்பட்ட நிலமான அவர்களுக்கு இயேசு சொன்னவைகளே இந்த வசனங்கள்.
இயேசு அவர்களுக்கு சொன்ன இந்த முதல் வ்சனமானது முழுமையான மற்றும் இறுதியான ஒரு வசனமாகும். இதற்கு பின் வரும் வசனங்களும் இதற்கு ஒப்பான வசனம் அல்ல. ஏனெனில் இந்த வசனம் மட்டுமே நிகழ் காலத்திற்குரியது. மற்ற வசனங்கள் எதிர்காலத்திற்குரியது.
இதன் பொருள் என்னவெனில், எவர் ஒருவர் தன்னை முழுவதும் வெறுமையாக்கி, தான் ஒன்றுமில்லாமல், தன்னை கடவுளுக்கு ஒப்புக் கொடுக்கிறாரோ அவர் தேவனுடைய ராஜ்ஜியத்தில் அப்போதே இருக்கிறார். எவர் கடவுளோடு ஐக்கியம் கொண்டு அதனால் அகங்காரம் அழியப் பெற்று இருக்கிறாரோ, அவர் தேவனுடைய ராஜ்ஜியத்தில் அப்போதே (நிகழ் காலத்திலேயே) இருக்கிறார். இப்படிப்பட்ட மனிதர்களுக்கு வேண்டுதல் என்று ஒன்றும் இல்லை. தேவனிடத்தில் அறிய வேண்டிய காரியமும் ஒன்றும் இல்லை. அவர்கள் எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல், தேவையும் இல்லாமல் கடவுளிடம் தங்களை ஒப்புக் கொடுக்கின்றனர்.
அதாவது யார் ஒருவர் தன்னை உள்ளீடற்ற வெற்று மூங்கிலாக கடவுளிடம் ஒப்புக் கொடுக்கிறாரோ அவர் தேவன் பயன்படுத்தும் புல்லாங்குழலாக மாறுவார். அவர் மூலமாக தேவனின் நாதம் வெளிப்படும்.
இயேசு பல இடங்களில் நல்ல மேய்ப்பன் நானே என்று சொல்கிறார். இதன் பொருள் நாம் மனிதர்கள் மத்தியில் ஆடு இருப்பது போல ஒரு ஆடாக மாறி விட வேண்டும் என்பதே. அப்போதுதான் கடவுள் மேய்க்க முடியும். கடவுளின் முன்னிலையில் நம் படிப்பு, பணம், இன்பம். துன்பம் முதலியவை உள்ள மனிதனாக இருந்தால் கடவுளாலும் நம்மை மேய்க்க முடியாது.
வேதத்தில் தேவ மனிதர்கள் இன்னும் ஒருபடி அதிகமாக போய் தங்களை களிமண் என்றும் ஓடு என்றும் சொல்கின்றனர்.
இந்த வசனத்தை சொன்ன பிறகு இயேசு சீடர்களை பார்த்தார். ஆனால் அவர்கள் இதை புரிந்து கொள்ளவில்லை. இந்த வசனம் அவர்களுக்கு அதிகமாகவும், இப்போதே என்ற வார்த்தை நம்பமுடியாததாகவும் இருந்தது. சீடர்கள் இந்த முதல் வசனத்தை ஏற்று கொள்ளாமல் தவற விடுகின்றனர். அம்பு அவர்கள் இத்யங்களில் பாயவில்லை. அதனால் அவர்கள் புரிந்து கொள்ளும் வகையில் இறங்கி வந்து மற்ற வசனங்களை சொல்கிறார்.
தேவை எதுவும் இல்லாமல், எதிர்பார்ப்பு எதுவும் இல்லாமல் தேவனிடம் சரணடைவது எப்படி என்பதை சீடர்களால் புரிந்து கொள்ள முடியவில்லை. ஆகவே பிற வசனங்களை இயேசு சொல்கிறார்.
4. துயரப்படுகிறவர்கள் பாக்கியவான்கள்; அவர்கள் ஆறுதலடைவார்கள்.
பூமியில் உங்கள் தேவைகளினிமித்தம், துன்பத்தினிமித்தம் ஒரு ஆதரவற்ற குழந்தையை போல கடவுளிடம் கதறுங்கள். இவ்வாறு செய்வதனால் தேவன் உங்களை ஆறுதல்படுத்த வருவார்.. உங்கள் தேவைகளை நிறைவேற்றுவார். அவ்வாறு தேவைகள் நிறைவேறா விட்டாலும் தேவனுடைய ஆறுதலை அவருடைய தாயன்பை, தந்தையன்பை அறிந்து கொள்ளுவீர்கள்.
அவர் உங்கள் கண்ணீரை துடைப்பார். அழுகிற குழந்தையின் கண்ணீரை துடைக்க தாயாய், தந்தையாய் அவர் வருவார். இவ்வாறு கர்த்தருடைய சன்னிதியில் தன் இருதயத்தை ஊற்றி விட்ட அன்னாள் அதன் பிறகு துக்க முகமாய் இருக்கவில்லை.
முதல் வசனத்தில் தேவை எதுவும் இல்லை. ஆனால் இங்கே வேண்டுதல், தேவை உண்டு.
5. சாந்தகுணமுள்ளவர்கள் பாக்கியவான்கள்; அவர்கள் பூமியைச் சுதந்தரித்துக்கொள்ளுவார்கள்.
சாந்தகுணம் என்பது இந்த பூமியில் நம்மை சுற்றி நடக்கும் காரியங்களால் பதறிப் போய் தேவ அன்பை விட்டு விடாமல் இருத்தலும், தேவனுக்குள்ளாக நம் சமாதானத்தை, சந்தோஷத்தை காத்து கொள்வதும் ஆகும். மோசே எல்லா மனிதர்களையும் விட சாந்த குணமுள்ளவனாக இருந்ததால் பூமியை சுதந்தரித்து கொள்ள இஸ்ரவேலரை வழினடத்தும்படி தேவனால் வைக்கப்பட்டான்.
பல சந்தர்ப்பங்களில் தன் சமாதானத்தை காத்து கொண்ட மோசேயினாலும் ஒரு சந்தர்ப்பத்தில் முடியாமல் போனது. அதனால் அவன் சுதந்தரிக்க வேண்டிய தேசத்தில் கால் வைக்க முடியவில்லை.
பொறுத்தவன் பூமி ஆள்வான். பதறாத காரியம் சிதறாது. சுற்றி நடக்கும் காரியங்களால் பாதிக்கபடாமல் தேவனை நோக்கி நீடிய பொறுமையோடு காத்திருப்பவர்களுக்கு அவர் தரும் ராஜ்ஜியம், அவரின் தொல்லையில்லாத பூமி வைக்கப்பட்டுள்ளது.
6. நீதியின்மேல் பசிதாகமுள்ளவர்கள் பாக்கியவான்கள்; அவர்கள் திருப்தியடைவார்கள்.
யார் ஒருவர் கர்த்தரை விசுவாசித்து, அவர் வழினடத்துதலுக்காக தினமும் காத்து இருக்கின்றனரோ அவர்களுக்கு தேவன் தன் அனுதின உணவையும், ஜீவ தண்ணீரையும் தந்து அவர்கள் பசி, தாகத்தை போக்குவார். கர்த்தர் தந்த உணவின் பலத்தினால் ஒரு நாள் முழுவதையும் தேவ சமாதானத்தோடு கடந்து செல்லலாம்.
7. இரக்கமுடையவர்கள் பாக்கியவான்கள்; அவர்கள் இரக்கம் பெறுவார்கள்.
எதை கொடுக்கிறீர்களோ அதையே திரும்ப பெறுவீர்கள். இது இறைவன் வகுத்த நியதி. தேவன் உங்களுக்கு இரங்க வேண்டுமானால் நீங்கள் பிறருக்கு இரங்குங்கள். சிறுமைப்பட்டவனின் மேல் சிந்தை உள்ளவனை தீங்கு நாளில் கர்த்தர் பாதுகாப்பார். நம் எதிர்காலத்தை நாமறியோம். தீங்கு நமக்கு வருமா, வராதா என்றோ அல்லது எப்போது வரும் என்றோ நமக்கு தெரியாது, நம் தீங்கு நாளில் கர்த்தர் நம் மேல் இரக்கம் காட்டும்படி நாம் பிறருக்கு இரக்கம் காட்ட வேண்டும். இரக்கம் கொள்ளும் இதயம் தேவனிடம் மட்டுமல்லாது பிற மனிதர்களிடமும் இரக்கம் பெறும்.
8. இருதயத்தில் சுத்தமுள்ளவர்கள் பாக்கியவான்கள்; அவர்கள் தேவனைத் தரிசிப்பார்கள்.
இருதயத்தில் கீழ்கண்ட துர்குணங்கள் யாருக்கு இல்லாமல் இருக்கிறதோ அவர்கள் தேவனை தரிசிப்பார்கள். அவர்களுக்கு தேவையானது தேவனை தரிசிக்க வேண்டும் என்ற தாகம் மட்டுமே.
4. துயரப்படுகிறவர்கள் பாக்கியவான்கள்; அவர்கள் ஆறுதலடைவார்கள்.
பூமியில் உங்கள் தேவைகளினிமித்தம், துன்பத்தினிமித்தம் ஒரு ஆதரவற்ற குழந்தையை போல கடவுளிடம் கதறுங்கள். இவ்வாறு செய்வதனால் தேவன் உங்களை ஆறுதல்படுத்த வருவார்.. உங்கள் தேவைகளை நிறைவேற்றுவார். அவ்வாறு தேவைகள் நிறைவேறா விட்டாலும் தேவனுடைய ஆறுதலை அவருடைய தாயன்பை, தந்தையன்பை அறிந்து கொள்ளுவீர்கள்.
மனதை தொடும் மிக அழகான வார்த்தைகள்.
நம் தேவன் கண்ணீரை காண்கின்றவர்.
துன்பபடுகிறவனின் துன்பத்தை அறிப்பமாக எண்ணாதவர் நம்முடைய கண்ணீர் எல்லாம் அவருடய கணக்கில் இருக்கிறது
சங்கீதம் 56:8கண்ணீரை உம்முடைய துருத்தியில் வையும்; அவைகள் உம்முடைய கணக்கில் அல்லவோ எழுதியிருக்கிறது?