வலை தளத்தில் கிடைத்ததும் இயேசுவின் சீஷராகிய தாமஸ் எனப்படும் தோமாவால் எழுதபட்டதாக கூறப்படும் வசனங்களை:
உயிர் வாழும் கிறிஸ்துவால் சொல்லப்பட்டதும் திதிமோஸ் யூதாஸ் தாமஸ் எழுதியதுமான ரகஸிய வசனங்கள் இவை:
I ] அவர் மீண்டும் ”இவ்வசனங்களின் யதார்த்தத்தை கண்டுபிடிப்பவன் இறப்பதில்லை” என்று சொன்னார்.
2]யேசு சொன்னார் : ”தேடுபவன் கண்டடைவது வரை தேடுவானாக! கண்டடையும்போது அவன் அமைதியிழக்கிறான். அமைதியிழக்கும்போது அவன் ஆச்சரியப்படவும் அனைத்தையும் வென்றடக்கவும் செய்வான்.”
3]யேசு சொன்னார் ”:உங்கள் மீட்பர்கள் உங்களிடம் ” இதோ பரலோகம் வானிலிருக்கிறது ” என்று சொல்வார்களெனில் வானத்துப் பறவைகள் உங்களுக்கு முன்பாகசெல்லும். அவர் உங்களிடம் “அது சமுத்திரத்தில்” என்று சொல்வார்களெனில் மீன்கள் உங்களுக்குமுன்பாக செல்லும்.உண்மையில் பரலோகம் உங்களுக்குள் இருக்கிறது .அது உங்களுக்கு வெளியேயும் உள்ளது . நீங்கள் எப்போது உங்களை அறிகிறீர்களோ அப்போது நீங்கள் அறியப்படுபவர்கள ஆவதுடன் வாழும் பிதாவின் மைந்தர் நீங்களே என புரிந்துகொள்ளவும் செய்வீர்கள் . ஆனால் நீங்கள் உங்களை அறியவில்லையென்றால் நீங்கள் வறுமையில் வசிக்கிறீர்கள் . அவ்வறுமையே நீங்கள் தான்”
4]ஏசு சொன்னார் :வயது முதிர்ந்து கிழவனான ஒருவன் ஏழுநாள் மட்டுமே வயதான சிசுவிடம் வாழ்க்கையைப்பற்றி பயிலத் தயங்கவில்லையெனில் அவன் வாழ்வான். ஏனெனில் முன்னே செல்லும் பலரும் பின்தங்கவும் அவர்கள் ஒருவராக ஆகவும் நேரக்கூடும்.
5]ஏசு சொன்னார்: உங்கள் கண்முன்னால் இருப்பதை அங்கீகரியுங்கள் .உங்களில் இருந்து மறைந்திருப்பதும் அப்போது உங்களுக்கு தெளிவாக தெரியவரும்.ஏனெனில் மறைந்திருப்பது எதுவும் வெளிப்படாது போவதில்லை .
6 ] சீடர்கள் அவரிடம் ” நாங்கள் உண்ணாவிரதம் மேற்கொள்ளவேண்டுமென நீ சொல்வாயா? நாங்கள் எப்படி பிரார்த்திப்பது ? நாங்கள் தானங்கள் செய்யவேண்டுமா? என்னென்ன விரதங்கள் கடைப்பிடிக்கவேண்டும்?” என்று கேட்டார்கள் . யேசு அவர்களிடம் ” பொய் சொல்லாதிருங்கள் . நீங்கள் வெறுப்பதை ஒருபோதும் செய்யாதிருங்கள் .ஏனெனில் சொர்கத்தின் பார்வைக்கு எல்லாமே தெள்ளதெளிவாக தெரியும் . எவ்வாறெனில் மறைந்திருக்கும் யாதொன்றும் வெளிப்படாமலோ மூடப்பட்ட்ட யாதொன்றும் திறக்கபடாமலோ இருப்பதில்லை” என்றார்
7] ஏசு சொன்னார்: “மனிதனால் உள்வாங்கப்பட்டு மனிதனாக மாறும் சிங்கம் ஆசிர்வதிக்கப்பட்டதாகிறது .மனிதன் சிங்கத்தால் உள்வாங்கப்பட்டு சிங்கம் மனிதனாக ஆகுமென்றால் அந்த மனிதன் சபிக்கப்பட்டவனாகிறான்”
8] அவர் மீண்டும் சொன்னார் : ” மனிதன் கடலில் வலைவீசும் ஒரு அறிவுள்ள மீனவனைப்போன்றவன். வலை நிரம்ப சிறு மீன்களை அவன் பிடித்தான். அவற்றுக்கு இடையில் அறிவுள்ள மீனவன் ஒரு பெரியமீனையும் கண்டான் .எந்த சிரமமும் இன்றி அந்த அறிவாளியான மீனவன் பெரியமீனை தேர்ந்தெடுத்த பிறகு சிறிய மீன்களையெல்லாம் கடலுக்கே திருப்பி வீசிவிட்டான். கேட்க செவி உடையவர்கள் கேட்பார்களாக! ”.
9] ஏசு சொன்னார்: ”விதைப்பவன் ஒரு கைமுழுக்க விதைகளை எடுத்துக் கொண்டுசென்று விதைத்தான் .சில விதைகள் வழியிலே விழுந்தன.பறவைகள் அவற்றை உண்டன. சில விதைகள் பாறை மீது விழுந்தன. அவை வேர்விடவோ தளிர்க்கவோ கதிர்கொள்ளவோ செய்யவில்லை. சில விதைகள் முட்களுக்கிடையே விழுந்தன. முட்கள் அவற்றை நெருக்கின.புழுக்கள் அவற்றை தின்றன. சில விதைகள் நல்ல மண்ணில் விழுந்து நல்ல கதிர்களை முளைக்கவைத்தன. அவை அறுபது பங்கும் நூற்றியிருபது பங்கும் விளைந்தன.”
I0] ஏசு சொன்னார்: ” நான் உலகத்தின்மீது நெருப்பை விதைத்திருக்கிறேன், கண்திறந்து காணுங்கள்.அது பரவும் வரை அதை நான் பேணுகிறேன்”
II] ஏசு சொன்னார் :”இந்த சொர்க்கம் அகன்று போகும் . அதன் மீதுள்ளவையும் அகன்று போகும் .மரித்தவர் உயிர்வாழவில்லை , உயிர்வாழ்பவர் மரிப்பதுமில்லை .நீங்கள் மரித்தவற்றை உள்வாங்கும்போது அவற்றை உயிருள்ளவையாக ஆக்குகிறீர்கள் .நீங்கள் ஒளியில் வாழ நேரும்போது என்ன செய்வீர்கள் ? நீங்கள் ஒன்றாக இருந்த நாளில் நீங்கள் இரண்டாக ஆகிறீர்கள் . ஆனால் நீங்கள் இரண்டாக ஆகும்போது நீங்கள் என்ன செய்வீர்கள்?”
12]சீடர்கள் யேசுவிடம் : “நீ எங்களை விட்டுவிட்டுப் போய்விடுவாய் என எங்களுக்கு தெரியும். [அதன் பிறகு] எங்களை வழிநடத்தவேண்டியவர் யார்? ” என்று கேட்டார்கள் . யேசு அவர்களிடம் ” நீங்கள் எங்கிருந்தாலும் அறத்தில் நிலைபெற்றவனான ஜேம்ஸிடம் போவீர்களாக .அவனுக்காகவே சொற்கமும் பூமியும் உருவாயின ” என்றார்
13] யேசு தன் சீடர்களிடம்: என்னை யாரிடமாவது ஒப்பிட்டு நான் யாரைப்போலிருக்கிறேன் என்று சொல்லுங்கள் “என்றார் .சீமோன் பேதுரு அவரிடம் ” நீ நீதியுள்ள ஒரு தேவனைப் போலிருக்கிறாய் ” என்றார். மத்தேயு “நீ ஞானியான ஒரு தத்துவமேதையைப்போலிருக்கிறாய் “என்றார்
தாமையர் ” ஆசிரியனே நீ யாரைப்போன்றவன் என்று சொல்ல என் நாக்குக்கு முற்றிலும் சக்தி இல்லை ” என்றார் .
யேசு அவரிடம் “நான் உனது ஆசிரியனல்ல. நான் அளந்து ஊற்றிய நுரைக்கும் குடுவையை அருந்தியமையால் உனக்கு இப்போது போதை ஏறிவிட்டிருக்கிறது “என்று சொன்னார் .யேசு அவரை அழைத்துச் சென்று மூன்று விஷயங்களை அவருக்கு மட்டுமாக சொன்னார் .
தோமையர் திரும்பிவந்தபோது மற்ற சீடர்கள் யேசு உன்னிடம் மட்டுமாக அப்படி என்ன சொன்னார் என்று கேட்டார்கள் .தோமையர் அவர்களிடம் “அவர் என்னிடம் சொன்னவற்றில் ஒரே ஒரு சொல்லை நான் உங்களிடம் சொன்னால்கூட நீங்கள் என்னை கல்லாலடிப்பீர்கள் . அக்கற்களில் இருந்து நெருப்பு எழுந்துவந்து உங்களை பொசுக்கும்.” என்றார்.
14] யேசு அவர்களிடம் :” நீங்கள் உண்ணாவிரதமிருந்தால் உங்களுக்கே பாவம் உண்டாகும். பிரார்த்தனை செய்தால் நீங்கள் அலட்சியம் செய்யப்படுவீர்கள் .தானம் செய்தால் உங்கள் ஆத்மாவை கறைப்படுத்திக் கொள்வீர்கள் . நீங்கள் ஏதாவது அயல்நாடுகளுக்கு செல்கையில் அங்குள்ளவர்கள் உங்களை வரவேற்று உங்கள் முன் பரிமாறுவதை உண்ணுங்கள் .அவர்களில் உள்ள நோயாளிகளை பரிசரியுங்கள் .ஏனெனில் உங்கள் வாய்க்குள் போவது உங்களை அசுத்தமாகுவதில்லை .உங்கள் வாயிலிருந்துவெளிவருவது எதுவோ அதுவே உங்களை அசுத்தப்படுத்துகிறது.” என்றார்
15] யேசு சொன்னார் : ”பெண்களில் இருந்து பிறக்காதவனாகிய ஒருவனைக் கண்டால் அவன் முன் விழுந்து அவனை வணங்குங்கள் . அவனே உங்கள் பிதா” .
16] யேசு சொன்னார் : ” ஒருவேளை நான் பூமிமீது அமைதியை உருவாக்க வந்தவன் என்று சிலர் எண்ணக்கூடும் .நான் அமைதியின்மையை விதைக்க வந்தவன் என அவர்கள் அறிவதில்லை .அக்கினியும், வாளும், வெஞ்சமரும். ஏனெனில் ஒரு வீட்டில் ஐந்து பேர் இருந்தார்களென்றால் இருவர் மூன்று பேருக்கு எதிராகவும் மூன்றுபேர் இருவருக்கு எதிராகவும் தகப்பன் மகனுக்கு எதிராகவும் மகன் தகப்பனுக்கு எதிராகவும் மாறுவார்கள் . அவர்கள் தனிமைப்பட்டவர்களாக இருப்பார்கள்”
17] யேசு சொன்னார் : ”எந்தக் கண்ணும் இதுவரை பார்த்திராததும் எந்தக் காதும் இதுவரை கேட்டிருக்காததும் எந்தக் கையும் இதுவரை தொட்டறிந்திராததும் மனிதமனதிற்கு இதுவரை தோன்றியிருக்காததுமான ஒன்றை நான் உங்களுக்கு காட்டுவேன்.”
18] சீடர்கள் யேசுவிடம் சொன்னார்கள் : “எங்கள் முடிவு எப்படிப்பட்டதாக இருக்குமென சொல்லுங்கள்”. யேசு அவர்களிடம் ” அப்படியானால் நீங்கள் உங்கள் தொடக்கத்தை கண்டறிந்துவிட்டீர்களா என்ன ? ஏனெனில் தொடக்கம் எங்கோ முடிவும் அங்குதான். தொடக்கத்தில் தன் நிலையை உறுதிச் செய்பவன் ஆசீர்வதிக்கப்பட்டவன். அவன் முடிவையும் அறிவான் . அவன் இறப்பதில்லை ” என்றார்
19] யேசு சொன்னார்: ”படைப்புக்கு முன்னரே படைக்கப்பட்டவன் ஆசீர்வதிக்கப்பட்டவன். நீங்கள் என் சீடர்களாக ஆகி என் சொற்களை செவிமடுப்பீர்களென்றால் இந்த கற்கள் உங்களை உபசாரம் செய்யும். ஏனெனில் சொற்கத்தில் உங்களுக்காக ஐந்து மரங்கள் உண்டு .வேனிற்காலத்திலும் குளிர்காலத்திலும் யாரும் அவற்றை தொடுவதில்லை .அவற்றின் இலைகள் உதிர்வதில்லை . அவற்றை அறிபவர்களுக்கு மரணமுமில்லை” .
20] சீடர்கள் யேசுவிடம் :” சொர்க்கம் எப்படிப்பட்டது என எங்களிடம் சொல்லுங்கள் .” என்றார்கள் . அவர் அவர்களிடம் சொன்னார் , ” அது விதைகளீல் மிகச்சிறிய விதையான கடுகு போன்றது . ஆனால் உழப்பட்ட மண்ணில் விழுந்தால் அது செடியாக மாறுகிறது . அதில் விண்ணின் பறவைகள் கூடணையும். ”
21] மேரி யேசுவிடம் ” உன் சீடர்கள் யாரைப்போன்றவர்கள் ?” என்று கேட்டாள். அவர் சொன்னார்”அவர்கள் தங்களுடையதல்லாத இடத்தில் தங்க நேர்ந்த குழந்தைகளைப்போல. இடத்தின் உரிமையாளன் வந்து “என் இடத்தை திருப்பிக் கொடுங்கள் ” என்று சொல்லும்போது அவர்கள் அவன் முன்னால் வைத்தே உடுப்புகளை கழற்றி திருப்பித்தந்துவிட்டு இடத்தை அவனுக்கு விட்டுக் கொடுப்பார்கள் .ஆகவே உங்களுக்கு சொல்கிறேன் திருடன் வரப்போகிறான் என ஒரு வீட்டுக்காரன் அறிந்தானென்றால் திருடன் வந்து வீட்டில் கன்னம் வைத்து பொருட்களைக் கொண்டுபோவதற்கு முன்னரே அவன் காவல் இருப்பான் . அதைப்போல நீங்களும் இவ்வுலகுக்கு எதிராக உங்களை காத்துக் கொள்ளுங்கள் . திருடர்கள் உங்களுக்குள் வராமலிருக்கும் பொருட்டு மகத்தான வல்லமை கொள்ளுங்கள் .ஏனெனில் எதிர்பார்க்கப்படும் அந்த துயரம் கண்டிப்பாக உண்டாகும் . உங்களுக்கிடையில் ஞானியான ஒருவன் இருக்கவேண்டும்
தானியம் விளைந்தபோது அவன் தன் கையில் அரிவாளுடன் சீக்கிரமாக வந்து அறுவடை செய்தான் . கேட்க செவி உடையவர்கள் கேட்பார்களாக”.
22] முலைப்பால் குடிக்கும் சிசுக்களை கண்ட யேசு தன் சீடர்களிடம் “முலைகுடிக்கும் இந்தக் குழந்தைகள் சொற்கத்தில் நுழைபவர்களைப்போல “என்று சொன்னார் .
சீடர்கள் அவரிடம் “அப்படியானால் நாங்கள் குழந்தைகளாக மாறி சொற்கத்திற்குள் பிரவேசிக்கலாமா?” என்றார்கள் .
யேசு அவர்களிடம் “எப்போது நீங்கள் இரண்டை ஒன்றாக்குகிறீர்களோ ,எப்போது நீங்கள் அகம் புறம் போலவும் , புறம் அகம் போலவும் , மேலே இருப்பது கீழே இருப்பது போலவும் ஆகிறீர்களோ , எப்போது நீங்கள் ஆண் ஆணும் பெண் பெண்ணும் அல்லாமலாகும்படி ஆணையும் பெண்ணையும் ஒன்றாக ஆக்கிக் கொள்கிறீர்களோ எப்போது நீங்கள் ஒரு கண்ணுக்கு பதிலாக பல கண்களும் , ஒரு கைக்கு பதிலாக இன்னொரு கையும் ஒரு பாதத்துக்கு பதிலாக இன்னொரு பாதமும் ஒரு சமானத்தன்மைக்கு பதிலாக இன்னொரு சமானத்தன்மையும் உள்ளவர்களாகிறீர்களோ அப்போது நீங்கள் சொர்க்க ராஜ்யத்துக்குள் பிரவேசிப்பீர்கள்” என்றார் .
23] யேசு சொன்னார் :”நான் உங்களை ஆயிரத்துக்கு ஒருவராகவும் பத்தாயிரத்துக்கு இருவராகவும் தெரிவு செய்வேன் .அவர்கள் தனித்தனியாக நிலைகொள்வார்கள்”.
24] அவரது சீடர்கள் அவரிடம் : “நீ இருக்குமிடத்தை எங்களுக்கு சொல்லிவிடு .நாங்கள் உன்னை மிகவும் தேடவேண்டியிருக்கிறது ” என்றார்கள் . அவர் அவர்களிடம் ” கேட்கச் செவியுள்ளவர்கள் கேட்பார்களாக. ஒளிமிக்க மனிதனுக்குள்ளே ஒளி உள்ளது .அது இவ்வுலகையே ஒளிமிக்கதாக ஆக்குகிறது . அவன் ஒளிவிடவில்லை என்றால் அவன் இருட்டாக இருக்கிறான் ” என்றார்
25] யேசு சொன்னார்” உங்கள் சகோதரனை நீங்கள் உங்கள் ஆத்மாவைப்போல நேசியுங்கள் .அவனை உங்கள் கண்களின் மணி போல காத்துகொள்ளுங்கள்
26] யேசு சொன்னார் :” உங்கள் சகோதரனின் கண்ணில் உள்ள தூசியை நீங்கள் காண்கிறீர்கள் , ஆனால் உங்கள் கண்ணில் உள்ள குச்சியை நீங்கள் காண்பதில்லை . உங்கள் கண்களில் உள்ள குச்சியை எடுத்து வீசினீர்கள் என்றால் உங்கள் சகோதரனின் கண்களில் உள்ள தூசியை எடுப்பதற்கு உங்களுக்கு நன்றாகக் கண் தெரியுமே.”
27] யேசு சொன்னார் : ‘இவ்வ்வுலகில் இருந்து நீங்கள் விலகி உபவசிக்காவிட்டால் நீங்கள் [ பரலோக] ராஜ்யத்தைக் காணப்போவதில்லை . சபாத்தை சபாத்தாக கடைப்பிடிக்காவிட்டால் நீங்கள் பிதாவை காணப்ப்போவதில்லை .”
28] யேசு சொன்னார் :” நான் உலகுக்கு மத்தியில் இடம் பிடித்து உடலுடன் அவர்களுக்கு முன்னால் வந்தேன் .ஆனால் அவர்களெல்லாம் குடித்து போதையேறியவர்களாக இருப்பதையே கண்டேன் . தாகமுள்ளவர்கள் எவரையுமே நான் காணவில்லை . உள்ளத்தால் குருடர்களாக இருக்கும் மனிதர்களுக்காக என் ஆத்மா வேதனை கொண்டது . ஏனெனில் அவர்கள் ஒன்றுமில்லாமல் இவ்வுலகுக்கு வந்தார்கள் . வெறும் கையுடன் உலகை விட்டு செல்லும் பாதையையே தேடுகிறார்கள் .இப்போது அவர்கள் பித்தெடுத்தவர்களாக இருக்கிறார்கள் . ஆனால் மதுவின் போதை இறங்கும்போது அவர்கள் வருத்தம் கொள்வார்கள்”
29] யேசு சொன்னார் ” ஆத்மாவினால்தான் உடல் உருவாயிற்றென்றால் அது ஒரு ஆச்சரியமான் விஷ்யம்தான். உடல்மூலம் ஆத்மா உருவாயிற்றென்றால் அது ஆச்சரியங்களில் ஆச்சரியமான விஷயம் . அந்த பெரும் செல்வம் இவ்வறுமைக்குள் எவ்வாறு குடியேறியது ?”
30 ] யேசு சொன்னார் : ”எங்கு மூன்று தேவர்கள் இருக்கிறார்களோ அவர்கள் தேவர்கள். எங்கே இரண்டு பேர் அல்லது ஒருவர் இருக்கிறார்களோ நான் அவர்களுடன் இருக்கிறேன்”
31] யேசு சொன்னார் : ”எந்த தீர்க்கதரிசியும் தன் ஊரில் வரவேற்கப்படுவதில்லை . எந்த வைத்தியனும் அவனை தெரிந்தவர்களை குணப்படுத்துவதில்லை”
32] ”ஓர் உயர்ந்த மலைமீது கோட்டைகட்டி அதனுள்ளே கட்டப்படும் நகரம் அழிவதில்லை ,அதை ஒளித்துவைக்கவும் முடியாது” .
33] யேசு சொன்னார் :”நீங்கள் கேட்பவற்றை வீட்டுக்கூரை மீது ஏறி நின்று உலகுக்கு சொல்லுங்கள் .ஏனெனில் யாரும் விளக்கை ஏற்றி பாறையின் அடியில் மறைத்து வைப்பதில்லை .வருபவர்களும் போகிறவர்களும் வெளிச்சம் பெறுவதன் பொருட்டு அதை உயர்ந்த விளக்குக் கம்பம்மீதுதான் வைக்கிறார்கள்”
35] யேசு சொன்னார் :”பலசாலியான ஒருவனின் கைகள் கட்டி போடாமல் அவன் வீட்டை ஆக்ரமித்து அதை கையகப்படுத்த எவராலும் முடியாது .அவனை கட்டிப்போட்ட பிறகோ அவன் வீட்டை எளிதில் கொள்ளையடிக்க முடியும்.”
36] ”காலை முதல் அந்திவரை அந்திமுதல் காலைவரை நீங்கள் அணியப்போவதென்ன என்பதைப்பற்றி சிந்திக்காதிருங்கள்”
37] சீடர்கள் யேசுவிடம் :” நீ எப்போது எங்களுக்கு முன்னால் வெளிப்படுவாய்? எப்போது நாங்கள் உன்னை காண்பது ? என்று கேட்டார்கள்
யேசு சொன்னார் :” சிறுகுழந்தைகள் போல என்று நீங்கள் உங்கள் ஆடைகளையெல்லாம் அவிழ்த்து காலுக்குகீழே போட்டு மிதிப்பீர்களோ அன்று நீங்கள் வாழும் பிதாவின் குமாரனைக் காண்பீர்கள்” .
38] யேசு சொன்னார் “நான் உங்களுக்கு சொல்லும் இச்சொற்களைகேட்க நீங்கள் பலமுறை ஆசைப்பட்டதுண்டு .இதைச் சொல்லிக்கேட்க உங்களுக்கு வேறு யாரும் இல்லை. நீங்கள் என்னை தேடி அலைந்து கண்டடையமுடியாத நாட்கள் வரும்”
39] யேசு சொன்னார் :” பரீசர்களும் அறிஞர்களும் ஞானத்தின் சாவிகளை எடுத்து ஒளித்துவைத்திருக்கிறார்கள். அவர்கள் தாங்கள் உள்ளே நுழைந்ததுமில்லை . உள்ளே நுழைய விரும்புபவர்களை அனுமதித்ததுமில்லை . நீங்கள் சர்ப்பத்தைப்போல அறிவுக்கூர்மையுள்ளவர்களும் புறாக்களைப்போல களங்கமற்றவர்களும் ஆவீர்களாக.”
40] யேசு சொன்னார் : ”என் பிதாவுக்காக நான் வெளியே ஒரு முந்திரிக்கொடியை நட்டிருக்கிறேன், ஆனால் கொழுகொம்பில்லாமையால் அது வேருடன் பிழுதுவீசப்படும்.”
41] யேசு சொன்னார் : ”தன் கையில் ஏதேனும் சிலவற்றை வைத்திருப்பவனுக்கே ,மேலும் கிடைக்கும் . இல்லாதவனுக்கு அவனுக்குரிய அப்பம் கூட கிடைக்காமலாகும்”.
42] யேசு சொன்னார் : ” வழிப்போக்கர்களாக ஆகுங்கள்”
43] சீடர்கள் கேட்டார்கள் :” இவ்விஷயங்களை எங்களுக்கு சொல்ல நீ யார் ?” ஏசு அவர்களுக்கு சொன்னார் ” நான் உங்களுக்கு சொல்வதில் இருந்து நான் யார் என நீங்கள் புரிந்துகொள்வதில்லை . நீங்கள் யூதர்களைப்போல இருக்கிறீர்கள் .எப்படியென்றால் அவர்கள் மரத்தை நேசிக்கிறார்கள் அதன் பழத்தை வெறுக்கிறார்கள் அல்லது பழத்தை நேசிக்கிறார்கள் ஆனால் மரத்தை வெறுக்கிறார்கள் ”
44] யேசு சொன்னார் :”பிதாவுக்கு எதிராக புறம் கூறுபவன் மன்னிக்கப்படுவான். சுதனுக்கு எதற்றாக புறம் கூறுபவன் மன்னிக்கப் படுவான் ஆனால் ஆவிக்கு எதிராக புறம் கூறுபவன் பூமியிலும் சொற்கத்திலும் மன்னிக்கப்படுவதில்லை ”.
45] யேசு சொன்னார் : ”முட்களிலிருந்து முந்திரி பறிக்கமுடியாது . நெருஞ்சியிலிருந்து அத்திப்பழங்களைப் பறிப்பதுமில்லை . ஏனெனில் அவை காய்ப்பதில்லை . நல்ல மனிதன் தன் களஞ்சியத்திலிருந்து நன்மைகளை கொண்டுவருகிறான்.தீயமனிதன் தன் தீமையின் களஞ்சியத்திலிருந்து தீயவற்றையே கொண்டுவருகிறான் . தீமை நிரம்பிய களஞ்சியம் அவனது இதயம்தான். அவன் தீயவற்றையே சொல்கிறான் ஏனெனில் தன் இதயத்தின் விரிவில் இருந்தும் அவன் தீயவற்றையே கண்டடைகிறான் .”
46] யேசு சொன்னார்: ” பெண்களில் இருந்து பிறந்தவர்களில் ஆதாம் முதல் யோவான் ஸ்நானகன் வரையிலானவர்களில் யோவானுக்கு முன்னால் கண்களை தாழ்த்தவேண்டாதவர்களாக அவரைவிட மேலானவர்களாக யாருமில்லை . ஆனால் நான் சொல்கிறேன் உங்களில் யார் ஒரு குழந்தைபோல ஆகிறீர்களோ அவன் [கடவுளின்] ராஜ்யத்தை அறியவும் யோவான் ஸ்நானனகனை விட மேன்மையானவனாக ஆகவும் செய்வான்” .
47] யேசு சொன்னார் : “ஒரு மனிதனால் ஒரேசமயம் இரு குதிரைகள்மீது ஏறவோ , இரு விற்களை வளைக்கவோ முடியாது .ஒரு சேவகனால் இரு தலைவர்களுக்கு சேவை செய்வதும் முடியாத காரியம். அப்படியானால் அவன் ஒருவரை மதிக்கவும் இன்னொருவரை நிந்திக்கவும் செய்வான் . யாரும் பழைய மது குடித்தபிறகு புதிய மது குடிக்க விரும்புவதில்லை . பழைய பாத்திரங்கள் உடையாமலிருக்கையில் அவற்றில் புதிய மது நிரப்புவதில்லை .கெட்டுப்போகும் என்பதனால் பழைய மதுவை புதிய பாத்திரங்களில் நிறைப்பதுமில்லை .கிழிந்துபோகும் என்பதனால் பழைய துணித்துண்டை புதிய துணியுடன் சேர்த்து தைப்பதில்லை” .
48 யேசு சொன்னார் :”ஒருவீட்டில் இருவர் ஒருவருக்கொருவர் சமாதானத்தை உருவாக்குகிறார்கள் என்றால் அவர்கள் மலைகளிடம் ‘விலகிச்செல்லுங்கள் ‘ என்று சொன்னால்கூட அவை விலகிச்செல்லும்”.
50] யேசு சொன்னார் : ”அவர்கள் உங்களிடம் ‘ நீங்கள் எங்கிருந்து வருகிறீர்கள் ?’ என்று கேட்டால் ‘நாங்கள் ஒளியிலிருந்து வந்தோம். எங்கு ஒளி தானாகவே உருவாகி , தன்னைத்தானே நிறுவிக்கொண்டு, அவர்களுடைய உருவங்கள் வழியாக வெளிப்படுகிறதோ அங்கிருந்து வந்தோம்’ என்று சொல்லுங்கள் . அவர்கள் உங்களிடம் ‘ அது நீங்கள் தானா ?’ என்று கேட்டார்களென்றால் ‘ ஆம் நாங்கள் தன் குழந்தைகளும் வாழ்ந்துகொண்டிருக்கும் பிதாவினால் தேர்வு செய்யப்பட்டவர்களுமாவோம் என்று சொல்லுங்கள் . அவர்கள் உங்களிடம் ‘ உங்கள் பிதாவின் அடையாளமாக உங்களிடமுள்ளது என்ன ? ‘ என்று என்று கேட்டார்களேயானால் ‘ அது இயக்கமும் ஓய்வும் தான் ‘ என்று பதில் சொல்லுங்கள் .
51] அவரது சீடர்கள் அவரிடம் ” இறந்தவர்களின் ஓய்வு எப்போது வந்து சேரும் ? புதிய உலகம் என்று வரும்?” என்று கேட்டார்கள் . அவர் அவர்களுக்கு சொன்னார் ” நீங்கள் வரக்காத்திருப்பது எதுவோ அது ஏற்கனவே வந்துவிட்டது .ஆனால் நீங்கள்தான் அதை அடையாளம் காணவில்லை ”
52] அவரது சீடர்கள் அவரிடம்: ‘ இருபத்துநான்கு தீர்க்கதரிசிகள் இஸ்ரேலில் உரையாற்றினார்கள் . அவர்களனைவருமே உன்னிலிருந்து உரையாற்றினார்கள் ” என்றனர். அவர் அவர்களிடம் ” நீங்களெல்லாம் உங்கள் மத்தியிலே வாழ்பவர்களை பொருட்படுத்தாமல் இறந்துபோனவர்களைப்பற்றி மட்டும் பேசுகிறீர்கள்” என்றார்
வலை தளத்தில் கிடைத்ததும் இயேசுவின் சீஷராகிய தாமஸ் எனப்படும் தோமாவால் எழுதபட்டதாக கூறப்படும் வசனங்களை:
உயிர் வாழும் கிறிஸ்துவால் சொல்லப்பட்டதும் திதிமோஸ் யூதாஸ் தாமஸ் எழுதியதுமான ரகஸிய வசனங்கள் இவை:
I ] அவர் மீண்டும் ”இவ்வசனங்களின் யதார்த்தத்தை கண்டுபிடிப்பவன் இறப்பதில்லை” என்று சொன்னார்.
தோமாவின் வாசனங்களில் அநேகமானவை மற்ற சுவிசேஷத்தை ஒத்து இருப்பது போலவே தோன்றுகிறது. பல்வேறு வேத வசனத்தின் அடிப்படையிலான எனது அடிப்படை கருத்தாகிய "வேத வசனத்தின் உண்மைகளை கண்டுகொண்டவன் மரணத்தை ஜெயித்து சாத்தானை ஜெயம்கொள்ள முடியும்" என்பதற்கு ஒத்த கருத்து இங்கு முதல் முதலில் சொல்லப்பட்டிருப்பது ஆச்சர்யமே!
தேவனாகிய கர்த்தர் "உங்களை மரணத்துக்கு நீக்கலாக்குவேன்" என்று தீர்க்கதரிசி மூலம் வாக்கு கொடுத்துள்ளார்!
ஓசியா 13:14அவர்களை நான் பாதாளத்தின் வல்லமைக்கு நீங்கலாக்கி மீட்பேன்; அவர்களை மரணத்துக்கு நீங்கலாக்கி விடுவிப்பேன்
பரிசுத்த ஆவியில் நிறைந்து சங்கீதம் பாடிய தாவீது அப்படி ஒரு வழி இருப்பதை அறிந்து அதை முன்னறிவித்துள்ளார்
தேவன் ஞானத்தால் நிரப்பபட்ட சாலமோன் அந்த வழி எப்படிப்பட்டது என்பதை சொன்னதோடு அதை உறுதியும் செய்துள்ளார்
நீதிமொழிகள் 12:28நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை.
ஆண்டவராகிய இயேசு மிக "என் வார்த்தையை கைகொள்ளுவதே அந்த வழி" என்று மிக தெளிவாக போதித்து வானமும் பூமியும் ஒழிந்துபோனாலும் என் வார்த்தை ஒழியாது என்று போதித்துள்ளார்
யோவான் 8:51ஒருவன் என் வார்த்தையைக் கைக்கொண்டால், அவன் என்றென்றைக்கும் மரணத்தைக் காண்பதில்லைஎன்று மெய்யாகவே மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்.
உண்மையை மறுப்பவர்களும் மறைப்பவர்களும் திசை திருப்புகிறவர்களும் உலகில் இருந்து கொண்டேதான் இருப்பார்கள். அவர்களை பொருட்படுத்தாமல்
மத்தேயு 4:4மனுஷன் அப்பத்தினாலேமாத்திரமல்ல, தேவனுடைய வாயிலிருந்து புறப்படுகிற ஒவ்வொரு வார்த்தையினாலும் பிழைப்பான் என்று எழுதியிருக்கிறதே என்றார்.
உபாகமம் 8:3மனுஷன் அப்பத்தினால் மாத்திரம் அல்ல, கர்த்தருடைய வாயிலிருந்து புறப்படுகிற ஒவ்வொரு வார்த்தையினாலும் பிழைப்பான்.
என்ற வசனத்தை முன்வைத்து இலக்கை நோக்கி முன்னேருவோமாக!
__________________
நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)அவர்(கர்த்தராகியதேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்; (ஏசா 25:8)