சமீபத்தில் எனக்கு மிகவும் வேண்டிய மிகவும் நேர்மையான ஒரு இந்து நண்பனிடம் பேசிக்கொண்டு இருந்தபோது அவன் என்னிடம் "எனக்கு சபரி மலைக்கு போக மாலை போடலாம் என்று எண்ணம் இருந்தது ஆனால் எங்கள் வீட்டுக்கு பக்கத்தில் ஒரு மோசமான பேர்வழி உண்டு. மது சிகரெட் மற்றும் எல்லா கெட்ட பழக்கமும் கொண்ட அவர், ஒவ்வொரு வருடமும் சபரி மலைக்கு போக மாலைபோட்டுவிடுகிறார். ஒருவேளை நானும் மாலைபோட்டால் அவரோடு சேர்ந்துதான் பஜனை பாட வேண்டும் மலைக்கு போகவேண்டும். நான் நடக்கும் நேர்மையான நிலைக்கும் அவரது கேடான நிலைக்கும் ஏணி வைத்தால் கூட எட்டாது அவ்வாறு இருக்க அவரோடு சேர்ந்து நானும் ஒரேசாமியை கும்பிடுவது எவ்விதத்தில் சரியாகும்" என்று பேசிக்கொண்டு இருந்தான்.
இயேசுவை ஏற்று ரட்சிப்பின் அனுபவத்தை பெற்று தன்னை நித்திய ஜீவனுக்கு ஆயத்தபடுத்தாமல் இருக்கும் அவரைபார்த்தால் நமக்கு பரிதாபமாக இருக்கிறது, ஆனால் அவரோ "அடுத்தவனைவிட நான் நல்லவன்" என்றொரு பெருமையின் நிலையில் இருக்கிறார் இந்த வார்த்தைகளை கேட்ட எனக்கு ஆண்டவராகிய இயேசு குறிப்பிட்ட பரிசேயன் ஆயக்காரன் உவமைதான் நியாபகத்துக்கு வந்தது.
லூக்கா 18:10,11,13இரண்டு மனுஷர் ஜெபம்பண்ணுபம்படி தேவாலயத்துக்குப் போனார்கள்; ஒருவன் பரிசேயன், மற்றவன் ஆயக்காரன். பரிசேயன் நின்று; தேவனே! நான் பறிகாரர், அநியாயக்காரர், விபசாரக்காரர் ஆகிய மற்ற மனுஷரைப்போலவும், இந்த ஆயக்காரனைப்போலவும் இராததனால் உம்மை ஸ்தோத்திரிக்கிறேன். ஆயக்காரன் தூரத்திலே நின்று, தன் கண்களையும் வானத்துக்கு ஏறெடுக்கத் துணியாமல், தன் மார்பிலே அடித்துக்கொண்டு; தேவனே! பாவியாகிய என்மேல் கிருபையாயிரும் என்றான்.
ஆம்! அன்பானவர்களே பெருமை என்பது பணம் பெருமை பதவி அந்தஸ்து அழகு இவற்றினால் மட்டும்தான் வரும் என்று கருதுவீர்களானால் அது தவறான ஒரு நிலை. பெருமை என்பது எதில் வேண்டுமானாலும் வரலாம்.
1. ஒரு நீதிமான் தன்னை பெரிய நீதிமான் என்றும் மற்றவரை பாவிகள் என்றும் எண்ணி கொள்வதும் ஒரு பெருமைதான்.
2.நான் இயேசுவை அறிந்துகொண்டேன் என்ற காரணத்துக்காக மற்றவர்களுக்காக பரிதபிக்காமல் மற்றவர்களை நரகம்தான் போவாய் என்று நியாயம் தீர்ப்பதும் ஒரு பெருமைதான்.
3. ஒரு பாஸ்டர் எல்லோரும் தன்னை பாஸ்டர் என்று அழைக்கவேண்டும் என்று
எதிர்பார்ப்பதும் பெருமைதான்.
4. நான் ஒரு ஊழியர் எனக்கு மேடையில் முதன்மையான இடம் வேண்டும் கனம் வேண்டும் என்று எதிர்பார்ப்பதும் பெருமைதான்.
5. எனக்கு ஆவிக்குரிய காரியங்களில் அதிக வெளிப்பாடுகள் உண்டு என்று பெருமிதம் கொள்வதும் ஒரு பெருமைதான்.
6. ஒரு பாஸ்டர் தனது சக ஊழியர்களை அன்பாக நடத்தாமல் அடிமைபோல நடத்துதும் பெருமைதான்.
7. நான் ஜெபித்தால் பேய் ஓடிவிடும் நான் ஜெபித்தால் அசுத்த ஆவிகள் ஆடும் என்று எண்ணுவது பெருமையே!
8. எல்லோர் செய்வதும் உங்கள் கண்ணுக்கு தவறாகவே தெரிகிறதா? நான் மட்டும்தான் சரியாக இருக்கிறேன் என்ற பெருமையே அதற்க்கு காரணம்.
9. மிகவும் தாழ்ந்த நிலையில் ஒருவர் நமக்கு சமமாக அமர்ந்திருந்தால் வயிறு எரிகிறதா அங்கு பெருமை குடிகொண்டுள்ளது.
10௦. ஒரு அற்ப விசுவாசியை கண்டால் அவர் பேசினால்கூட பேச மனதில்லையா அங்கு பெருமை குடியிருக்கிறது.
வேத வசனத்தை எடுத்துகூறி அதன அடிப்படையில் விசுவாசத்துடன் போதிப்பது வேறு. வேத வசனத்தை கையில் எடுத்து பிறரை நியாயம் தீர்ப்பது வேறு! தேவன் பரிசுத்தர் அவர் எப்படி வேண்டுமானாலும் வசனம் சொல்லுவார். "துன்மார்க்கனே நீ சாவாய்" என்றும் "வேத பாரகரே உங்களுக்கு ஐயோ" என்றெல்லாம் சொல்ல அவர் ஒருவருக்கே அதிகாரம் உண்டு. ஆனால் நமக்கோ பிறரை மன்னிக்கவும் அவர்களுக்காக ஜெபிக்கவுமே அதிகாரம் உண்டு. ஏனெனில் உனக்கு ஐயோ என்று சொல்லும் தேவன் "எல்லோரும் இரட்சிக்கப்படவேண்டும் என்றும் விரும்புகிறார் எனவே பிறரை நியாயம்தீர்க்கும் பெருமை நமக்கு தேவையில்லை ஒருவரின் குறைகளை சுட்டிக்காட்டும் முன் அவருக்காக மன்றாடி ஜெபியுங்கள் அது நிச்சயம் நம்மை ஒரு இரக்கம் உள்ள தாழ்மையான நிலைக்கு கொண்டு செல்லும்.
லூசிபரை சத்தானாக்கி கீழே விழத்தள்ளியது "பெருமை" என்ற ஒரே ஒரு சிறிய பாவமே! அது இன்று உலகமக்கள் மத்தியிலும் ஆவிக்குரிய மக்கள் மத்தியிலும் வெவேறு ரூபங்களில் தன்னை ஒளித்துக் கொண்டு வாழ்ந்து வருவதை அறிய முடிகிறது. அதை இனம் கண்டுபிடித்து அழித்தால் ஒழிய ஆவிக்குரிய ரீதியில் அதிகம் முன்னேற முடியாது என்பது உறுதி!
யோபு சொல்லும் ஒரே ஒரு காரியத்தை எப்பொழுதும் மனதில் கொள்ளுங்கள்:
யோபு 9:30. நான் உறைந்த மழைத் தண்ணீரில் முழுகி, என் கைகளைச் சவுக்காரத்தினால் சுத்தம்பண்ணினாலும் 31 நீர் என்னைச் சேற்றுப்பள்ளத்திலே அமிழ்த்துவீர். அப்பொழுது என் வஸ்திரமே என்னை அருவருக்கும்.
நான் என்னதான் என்னை சுத்தம்பண்ணி எனதுகை கால்களைகழுவி பரிசுத்தமாக ஜீவிக்க விரும்பினாலும், தேவன் நம்மை சேற்று பள்ளத்தில் அமிழ்த்த நினைத்தால் நமது வஸ்திரமே நம்மை அருவருக்கும் அளவுக்கு அழுக்காகி போவோம்.
எனவே அன்பானவர்களே! நாம் நிலைநிற்ப்பது நமது திறமையோ அல்லது நமது பெலமோ அல்லது நமது நியாயத்திலோ அல்ல! என்றென்றும் அவர் கிருபையே நம்மை தாங்குகிறது என்று எண்ணி, எல்லோரையுமே நம்மைவிட மேன்மையானவர்களாக கருதி நம்மை தாழ்த்தி தேவன் பாதத்தில் நம்மை ஒப்புகொடுபோமாக.
-- Edited by SUNDAR on Tuesday 21st of December 2010 11:22:11 AM
__________________
நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)அவர்(கர்த்தராகியதேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்; (ஏசா 25:8)