புறஜாதியாருடைய பண்டிகை நாளான டிசம்பர் 25ம் திகதியையே கொன்ஸ்டன்டைன் கிறிஸ்மஸ் பண்டிகை நாளாக்கினான். பல கிறிஸ்தவர்களும் புறமத தெய்வத்தின் பண்டிகை நாளே கிறிஸ்மஸ் பண்டிகை நாளாக்கப்பட்டுள்ளதாகக் கருதுகின்றனர். ஆனால், இது தவறான கருத்தாகும். உண்மையில் கிறிஸ்தவர்களின் பழக்கத்தை அடிப்படையாகக் கொண்டே புறஜாதி மக்கள் தங்களுடைய பண்டிகையை டிசம்பர் 25ம் திகதி கொண்டாடியுள்ளனர். எனவே. டிசம்பர் 25ம் திகதி பண்டிகை புறமதத்திலிருந்து கிறிஸ்தவத்திற்கு வந்த கொண்டாட்டம் அல்ல.
புறமதப் பண்டிகையின் நாளே கிறிஸ்மஸ் பண்டிகையின் நாளாக மாற்றப்பட்டது என்னும் கருத்து முதற்தடவையாக கி.பி. 17ம் நூற்றாண்டின் இறுதிப்பகுதியிலேயே உருவானது. (1) ஆனால் கி.பி 70ல் எருசலேம் தேவாலயம் ரோமர்களால் அழிக்கப்பட்ட பின்னர் கிறிஸ்தவம் முழுமையாக யூதமாரக்கத்திலிருந்து பிரிந்து தனியான ஒரு மதமாகியது. அதன்பின்னர் இயேசுக்கிறிஸ்துவின் மரணம் சம்பவித்த நாளைக் கிறிஸ்தவர்கள் கணிப்பிடத் தொடங்கினார்கள். அக்காலத்தில் வித்தியாசமான கலண்டர்கள் உபயோகத்தில் இருந்தமையால், கிழகத்திய சபைகள் ஏப்ரல் 6ம் திகதியையும் மேற்க்கத்திய சபைகள் மார்ச் 25ம் திகதியையும் இயேசுக்கிறிஸ்து சிலுவையில் மரித்த நாளாகக் கணித்தனர். பழைய ஏற்பாட்டுத் தீரக்கதரிசிகள், தாங்கள் கருவுற்ற அல்லது பிறந்த தினத்திலேயே மரித்தார்கள் என்னும் நம்பிக்கையின்படி இயேசுக்கிறிஸ்து சிலுவையில் மரித்த நாளை அடிப்படையாகக் கொண்டு, கிழக்கத்திய சபைகளில் இயேசு கிறிஸ்து ஜனவரி 6ம் திகதி பிறந்தார் என்றும் மேற்கத்திய சபைகளில் அவர் டிசம்பர் 25ம் திகதி பிறந்தார் என்றும் முடிவு செய்யப்பட்டது. (2). எனவே, கிறிஸ்மஸ் பண்டிகையின் நாள், புறமதப் பண்டிகை நாளின் கிறிஸ்தவ மாற்றம் அல்ல.
கொன்டஸ்டன்டைன் என்னும் அரசன் டிசம்பர“ 25ம் திகதி கிறிஸ்மஸ் பண்டிகை கொண்டாடியதைப் பற்றிய குறிப்புகள் எதுவும் இல்லை. உண்மையில் இவ்வரசனுடைய மரணத்திற்கும் (கி.பி. 337) பின்பே. அதாவது கி.பி 379ம் ஆண்டே முதற்தடவையாக இயேசுக்கிறிஸ்துவின் பிறப்பை நினைவு கூரும் கிறிஸ்மஸ் பண்டிகை டிசம்பர் 25ம் திகதி கொண்டாடப்பட்டது. எனவே, கொன்ஸ்டன்டைன் என்னும் அரசனே புறமதப் பண்டிகை நாளைக் கிறிஸ்மஸ் பண்டிகையின் நாளாக மாற்றினான் என்பதை ஏற்றுக் கொள்ள முடியாது.
(இவ்வாக்கமானது சகோ. எம்.எஸ் வசந்தகுமார் அவர்கள் எழுதிய டாசின்சியின் ஓவியத்தைப் பற்றிய நாவல் உண்மைச் சரித்தையா? என்னும் நூலிலிருந்து பெறப்பட்ட்தாகும்) பின்குறிப்பு :- இத்தலைப்புக்கு ஏற்றவித்த்தில் மூலகருத்திற்கு எவ்வித மாற்றமும் ஏற்படுத்தாமல் சிலவற்றை Edit செய்துள்ளேன்)
References : (1) W.J. Tighe, : “Calculating Christmas’ in Touchstone, December 2003 (2) C.E. Olson & S. Miesel, The Da Vinci Hoax : Exposing the Errors in Da Vinci Code p, 162-163