நமது ஆண்டவரும் இரட்சகருமான கிறிஸ்து இயேசுவானவர் ஒரு வாக்குத்தத்தத்தை தமது சீஷர்களுக்கு கொடுத்தார். ‘சமாதானத்தை உங்களுக்கு வைத்துப் போகிறேன். என்னுடைய சமாதானத்தையே உங்களுக்குக் கொடுக்கிறேன். உலகம் கொடுக்கிற பிரகாரம் நான் உங்களுக்குக் கொடுக்கிறதில்லை. உங்கள் இருதயம் கலங்காமலும் பயப்படாமலும் இருப்பதாக’ (யோவான் 14 : 27) என்பதே அந்த வாக்குத் தத்தம்.
இன்று அநேகர் மரணமடைவதற்கு முன் சில காரியங்களை செய்துவிட்டோ, அல்லது தமது சந்ததிக்கு சொத்துக்களை சேர்த்து வைத்துவிட்டோ போகின்றார்கள். ஆனால் இயேசுவானவர் இவ்வாறான விடயங்களை வைத்துவிட்டுப் போகாமல் சமாதானத்தை தமது சீஷர்களுக்குக் கொடுத்துவிட்டு சென்றார்.
ஏனென்றால், இந்த உலகத்தில் எல்லாப் பொருட்களையும் எல்லா உறவுகளையும், எல்லா ராஜ்யங்களையும்விட சமாதானம் தான் மிகவும் விலை உயர்ந்ததொன்றாக இருக்கின்றது.
இயேசுவானவர் தமது சீஷர்களைப் பார்த்து பேசி அவருடைய சமாதானத்தை கொடுத்துவிட்டு பரமேறிச் சென்றார். உண்மையாகவே, கடவுளை நாம் அறிந்துகொள்ளும் போது அவர் தருகின்ற சமாதானத்தையும் அதின் நிறைவையும் நாம் பெற்றுக்கொள்ள முடியும். அதை மற்றவர்களோடு பகிர்ந்துகொள்ளவும், பகிர்ந்தளிக்கவும் முடியும். அவர் போதித்தபடி நாம் மற்றவர்களோடு நல்ல உறவைக் கட்டியெழுப்பவும் முடியும்.
உலகமானது ‘சமாதானத்திற்கான யுத்தம்’ என்றும், ‘பொருளாதார சமாதானம்’ என்றும், ‘மனதை அடக்குவதே சமாதானம்’ என்றும் பலவழிகளை தனது சொந்த பெலத்தினால் உலகத்தாருக்கு கற்பித்து ஏமாற்றுகின்றது. இவை சமாதானம் அல்ல. உடற் பயிற்சியோ, யோகா பயிற்சியோ நிரந்தர சமாதானத்தை உங்களுக்குத் தரமுடியாது. பணமோ, பதவியோ, புகழோ அச்சமாதானத்திற்கு ஈடாகாது. கர்த்தர்மேல் நம்பிக்கை வைக்காமல் சமாதானத்தை தேடுகிறவர்கள் கடைசியில் பயங்கரமான நெருக்கடியையும் சிக்கல்களையுமே அனுபவிக்கிறார்கள்.
சரீரத்திற்கு உணவும் ஆத்துமாவுக்கு சமாதானமும் தேவை. அந்த நிரந்தரமான சமாதானத்தை மனிதனாலோ, பிற பொருட்களினாலோ கொடுக்க முடியாது. அது தேவன் கொடுக்கிற கொடை. வருத்தத்தோடே ஆடம்பரமான உணவை சாப்பிடுவதைவிட, சமாதானத்தோடே கஞ்சியைக் குடிப்பது மேன்மையானது. சண்டைக்காரியோடே ஒரு வீட்டில் குடியிருப்பதைக் காட்டிலும், மூலையில் சமாதானமாக குந்தியிருப்பதுமேல். அதனை உப்பு சப்பற்ற ஜெபத்தின் மூலமோ, தியானத்தின் மூலமோ, பெறமுடியாது. நிம்மதி, சந்தோஷம், அன்பு, சமாதானம் இல்லாமல் நாம் எவ்வளவுதான் ஊழியம் செய்தாலும், ஜெபித்தாலும் அதனால் பயனொன்றுமில்லை.
மெய் சமாதானத்தை தர கிறிஸ்துவினால் மட்டுமே முடியும். அவர்தரும் சமாதானத்தினாலேயே நம்மால் சந்தோஷமாகவும் நிம்மதியாகவும் ஜெபிக்கவும், ஊழியம் செய்யவும் முடியும். ‘உலகம் கொடுக்கிற பிரகாரம் நான் உங்களுக்குக் கொடுக்கிறதில்லை’ (யோசான் 14 : 27) என்று இயேசு கூறியுள்ளார்.
பலவிதமான வெளிப்பிரகாரமான சூழ்நிலையின் மத்தியிலும், அசைக்க முடியாத அமைதியான சமாதானத்தை கிறிஸ்து மட்டுமே கொடுக்கிறவராக இருக்கின்றார். ஆகவேதான் பவுலடியாரும், ‘சமாதானத்தின் தேவன் தாமே உங்களை முற்றிலும் பரிசுத்தமாக்குவாராக’ என்று 1 தெச 5 : 23ல் எழுதுகிறார். இயேசு தருகின்ற சமாதானம் பரிசுத்தம் மிக்கது. சந்தோஷம் மிக்கது. நிரந்தரமானது. நித்தியமானது. அதிலே பொறாமையில்லை. வஞ்சகம் இல்லை. ஏமாற்றுதல் இல்லை. தேவன் தருவது உண்மையான சமாதானம், அது நிரந்தரமான சமாதானம்.
இயேசுவானவர் இப்பூமியிலே அவதரித்தபோது தேவதூதர்கள் ‘பூமியின் மேல் சமாதானம்’ (லூக்கா 2 : 11) என்று பாட்டுப்பாடி போற்றியதற்கு காரணம் இதுதான். இயேசு ஊழியம் செய்த நாட்களில் பிணியாளிகளை சொஸ்தமாக்கி, பாவம் மன்னிக்கப்பட்டவர்களாய் அவர்களை ‘சமாதானத்தோடே போ’ (லூக்கா 7 : 50) என்று கூறி அனுப்பியதன் காரணமும் அதுதான்.
கிறிஸ்து ஒருவரே சமாதானத்தின் காரண கர்த்தா. அவர் தாமே மரிப்பதற்கு முன் சீஷர்களுக்கு சமாதானத்தைக் கொடுத்தார். அவர்களின் உபத்திரவத்தின் மத்தியிலும், சஞ்சலங்களின் நடுவிலும் அந்த சமாதானமே அருமருந்தாக அமைந்தது.
அவர் உயிர்த்தெழுந்த பின்னும் உங்களுக்கு ‘சமாதானம் உண்டாவதாக’ என்று கூறி காட்சியளித்தார். ஆக மொத்தத்தில், சமாதான காரணரான கிறிஸ்து இயேசுவையே சீஷர்களும் நற்செய்தியாக பிரசங்கித்தார்கள். (எபேசியர் 6 : 15)
இன்று கடவுளோடும், சமூகத்தோடும், இயற்கையோடும், தனக்குள்ளும் சமாதானமின்றி, பலவிதமான சிந்தனைகளினாலே அலைக்கழிக்கப்படுகின்றவர்களே நீங்கள் கிறிஸ்துவிடம் வாருங்கள். அவர் தரும் சமாதானத்தைப் பெற்றுக்கொள்ளுங்கள். குடும்பத்திலே, உறவுகளிலே, தனிப்பட்ட வாழ்விலே அவர் தருகின்ற சமாதானத்தை அனுபவியுங்கள் கிறிஸ்துவிடம் அர்ப்பணியுங்கள் அவர் தரும் சமாதானம் ஒன்றே மெய்யான பாதுகாப்பின் வழி.
‘எல்லா புத்திக்கும் மேலான தேவ சமாதானம்’ என்று பவுலும் அதை வலியுறுத்து கிறார். தேவன் தருகின்ற சமாதானமானது இன்பமானதும் தீங்கு அற்றதுமாகும். அதை பெற்றுக்கொண்டு அனுபவிப்பவர்களுக்கே அதன் தாற்பரியம் புரியும்.