தேவனால் சிருஷ்டிக்கப்பட்ட தேவதூதர்கள் சுயாதீனமுள்ளவர்களாக நன்மையையோ தீமையையோ செய்ய முழு சுதந்தரமுள்ளவர்களாக இருந்தனர். ஆகிலும், அவர்கள் நன்மையை மட்டுமே செய்யவேண்டும் என்பது தேவனின் எதிர்பார்ப்பாகவும் விருப்பமாகவும் இருந்தது.
தேவதூதர்களில் ஒருவன் எல்லா தூதர்களுக்கும் தலைமையானவனாக விசேஷமானவனாக இருந்தான். அவனைக் குறித்து பின்வரும் வசனங்கள் கூறுகின்றன.
ஏசாயா 14:11-15 அதிகாலையின் மகனாகிய விடிவெள்ளியே, நீ வானத்திலிருந்து விழுந்தாயே! ஜாதிகளை ஈனப்படுத்தினவனே, நீ தரையிலே விழ வெட்டப்பட்டாயே! நான் வானத்துக்கு ஏறுவேன், தேவனுடைய நட்சத்திரங்களுக்குமேலாக என் சிங்காசனத்தை உயர்த்துவேன்; வடபுறங்களிலுள்ள ஆராதனைக் கூட்டத்தின் பர்வதத்திலே வீற்றிருப்பேன் என்றும், நான் மேகங்களுக்கு மேலாக உன்னதங்களில் ஏறுவேன்; உன்னதமானவருக்கு ஒப்பாவேன் என்றும் நீ உன் இருதயத்தில் சொன்னாயே. ஆனாலும் நீ அகாதமான பாதாளத்திலே தள்ளுண்டுபோனாய்.
பிரதான தூதனாக விசேஷித்தமானவனாக இருந்த அவனுக்கு, “தேவனை எல்லோரும் துதித்து மகிமைப்படுத்துவதைப் போல, தன்னையும் எல்லோரும் துதித்து மகிமைப்படுத்த வேண்டும்” என்ற எண்ணம் வந்தது. இது ஒரு தீமையான எண்ணம். ஏனெனில் தேவன் ஒருவர் மட்டுமே எல்லாராலும் துதிக்கப்பட்டு மகிமைப்படுத்தப்படுவதற்குத் தகுதியுடையவர். இப்படியிருக்க, “தேவனுக்குச் சமமாக தானும் துதிக்கப்படவேண்டும், மகிமைப்படுத்தப்படவேண்டும்” என நினைப்பது தேவனுக்கு எதிரான எண்ணமாகும். எனவே இவ்வெண்ணம் ஒரு தீமையாகும்.
இத்தீமை செயலாக்கமாகவேண்டும் என பிரதான தூதன் நினைத்தான். எனவே அவன் தன்னைத் தேவனுக்குச் சமமாக உயர்த்திக் கொண்டான். அப்படி அவன் தன்னை உயர்த்தினபோது தேவதூதரில் பலர் தேவனுக்குச் சமமாக அவனையும் துதித்து மகிமைப்படுத்தினர். அதினிமித்தம் அவன் பெருமைப்படவும் செய்தான்.
இத்தீமையை அவன் செய்ததனிமித்தம், தேவன் அவனை பாதாளத்தில் தள்ளினார். அவ்வாறு தள்ளப்பட்ட அவனே சாத்தான் என்றும் பிசாசு என்றும் அழைக்கப்பட்டான். அவனோடுகூட அவனைத் துதித்து மகிமைப்படுத்திய தூதர்களையும் தேவன் தள்ளினார். இவர்களே சாத்தானின் தூதர்கள் என அழைக்கப்படுகின்றனர்.
தேவனால் தண்டிக்கப்பட்டு தள்ளப்பட்ட சாத்தான், தேவனுக்கெதிராக கலகம் செய்தான். அதாவது தான் தண்டிக்கப்பட்டது நியாயமல்ல என்று சொல்லி கலகம் செய்தான். அவனது வாதம் இதுதான்:
தேவன் எதிர்பார்க்கிறபடி தீமையே செய்யாமல் யாராலும் இருக்கமுடியாது என்பதே அவன் வாதம்.
இது தேவனுக்கெதிராக சாத்தானால் எழுப்பப்பட்ட ஒரு சவாலாகும். தேவன் இச்சவாலைச் சந்தித்து சாத்தானின் கூற்று தவறு என நிரூபித்தால்தான் அவர் சாத்தானைத் தண்டித்தது நியாயம் என்றாகும். எனவே சாத்தானின் சவாலை சந்திக்க தேவன் சித்தங்கொண்டார்.
தேவதூதர்களில் ஒருவன் ஏற்கனவே தீமை செய்துவிட்டதால், சாத்தானின் சவாலை தேவதூதர்களில் ஒருவன் மூலம் முறியடிக்காமல், தேவதூதரிலும் சற்று சிறியவராக “மனிதர்” எனப்படுவோரைச் சிருஷ்டித்து, அவர்களில் ஒருவன் மூலம் சாத்தானின் சவாலை முறியடிக்க தேவன் சித்தங்கொண்டார்.
அதன்படி ஆதியில் ஆதாம் ஏவாளைச் சிருஷ்டித்த தேவன், அவர்கள் தமது விருப்பப்படி நடந்து காட்டி சாத்தானின் சவாலை முறியடிப்பதற்கேதுவாக, அவர்களிடம் ஒரு கட்டளையை இட்டார். இக்கட்டளைப்படி ஆதாம் நடந்து, சாத்தானின் சவால் முறியடிக்கப்பட்டதை அறிந்துகொள்வதற்கேதுவாக, தேவன் ஒரு காலஅளவை நியமித்திருந்திருப்பார். அக்கால அளவுக்குள், ஆதாம் தேவகட்டளையை மீறினால் அது சாத்தானுக்கு வெற்றியாகிவிடும்; மாறாக, ஆதாம் தேவகட்டளையை மீறாவிடில் அது சாத்தானுக்குத் தோல்வியாகிவிடும்.
இந்நிலையில், குறிக்கப்பட்ட காலஅளவுக்குள், ஆதாமை தேவகட்டளையை மீறச்செய்துவிடவேண்டும் என சாத்தான் நினைத்தான்.
தொடரும் ....
(பின்குறிப்பு: இப்பதிவில் நான் கூறின பல காரியங்களுக்கு வேதஆதாரம் கிடையாது. வேறொருவர் என்னிடம் சொன்ன சில தகவல்களுடன் எனது சிந்தனையையும் கலந்து உருவான கருத்துக்களே இவை. எனவே இக்கருத்துக்களுக்கு வேதஆதாரம் இல்லை எனச் சொல்லி யாரும் விமர்சிக்கவேண்டாம்.)
-- Edited by anbu57 on Thursday 13th of January 2011 06:45:43 AM
சகோதரர் அன்பு அவர்களே தங்களுடைய இந்த கட்டுரையில் முந்திய பகுதியில் பல கேள்விகள் உண்டு ஆகினும் அதைப்பற்றி பின்னால் பார்க்கலாம். இப்பொழுது எனக்கு ஒரே ஒரு விளக்கம் மட்டும் தாருங்கள்
சகோ. அன்பு எழுதியது
///அதன்படி ஆதியில் ஆதாம் ஏவாளைச் சிருஷ்டித்த தேவன், அவர்கள் தமது விருப்பப்படி நடந்து காட்டி சாத்தானின் சவாலை முறியடிப்பதற்கேதுவாக, அவர்களிடம் ஒரு கட்டளையை இட்டார். இக்கட்டளைப்படி ஆதாம் நடந்து, சாத்தானின் சவால் முறியடிக்கப்பட்டதை அறிந்து கொள்வதற்கேதுவாக, தேவன் ஒரு காலஅளவை நியமித்திருந்திருப்பார். அக்கால அளவுக்குள், ஆதாம் தேவகட்டளையை மீறினால் அது சாத்தானுக்கு வெற்றியாகிவிடும்; மாறாக, ஆதாம் தேவகட்டளையை மீறாவிடில் அது சாத்தானுக்குத் தோல்வியாகிவிடும்.///
தங்களின் இந்தகருத்தில் நான் ஏற்கெனவே கேட்டுள்ள என்னுடைய நியாயமான கேள்வி ஒன்றுக்கு நீங்கள் பதில் தரவேண்டும்
இரண்டுபேருக்கு இடையே ஒரு போட்டி வைப்போமேன்றால் இருவரும் சமநிலை தகுதியுடயவர்களாக இருக்கவேண்டும் அதிலும் இங்கு போட்டி வைப்பது நீதியுள்ள தேவன் அவ்வாறிருக்க
ஒருபுறம் ஆதாமும் ஏவாளுமோ நன்மை தீமை தெரியாத குழந்தை நிலையில் இருக்கிறான்
இன்னொருபுறம் சாத்தானோ மிகுந்த தந்திரம் உள்ளவனாக இருக்கிறார்.
இவ்வளவு வளர்ந்து அறிவுள்ள நம்மையே சில தந்திரக்காரர்கள் ஏமாற்றி விடும்போது இந்த போட்டியில் ஆதாம் ஏவாள் தோற்றுபோனத்தில் வியப்பேதும் இல்லையே!
ஒன்றாம் வகுப்பு படிப்பவனும் பத்தாம் வகுக்கு படிப்பவனும் வைக்கப்படும் போட்டியில் ஒன்றாம் வகுப்பு படிப்பவர் ஜெயித்தல்தான் ஆச்சர்யம் பத்தாம் வகுப்பு படித்தவர் ஜெயிப்பான் என்பது நிச்சயம்.
இந்நிலையில் இப்படியொரு போட்டியில் நன்மை தீமையே அறியாத குழந்தை நிலையில் இருந்த ஆதாம் ஏவாள் ஜெயிப்பான் என்று தேவன் எதிர்பார்த்தார் என்று சொல்வது என்ன நியாயம்?
அப்படியே அவர் செய்தாலும் இச்செயல் நீதிபரராகிய தேவனின் நீதிக்கு இழுக்காககிவிடாதா ?
சற்று விளக்குங்கள்...
__________________
நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)அவர்(கர்த்தராகியதேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்; (ஏசா 25:8)
sundar wrote: //இரண்டுபேருக்கு இடையே ஒரு போட்டி வைப்போமேன்றால் இருவரும் சமநிலை தகுதியுடையவர்களாக இருக்கவேண்டும். அதிலும் இங்கு போட்டி வைப்பது நீதியுள்ள தேவன்.
அவ்வாறிருக்க,
ஒருபுறம் ஆதாமும் ஏவாளுமோ நன்மை தீமை தெரியாத குழந்தை நிலையில் இருக்கிறார்கள்,
இன்னொருபுறம் சாத்தானோ மிகுந்த தந்திரம் உள்ளவனாக இருக்கிறார்.
இவ்வளவு வளர்ந்து அறிவுள்ள நம்மையே சில தந்திரக்காரர்கள் ஏமாற்றி விடும்போது இந்த போட்டியில் ஆதாம் ஏவாள் தோற்றுபோனத்தில் வியப்பேதும் இல்லையே!//
சகோதரரே! இங்கு போட்டி என எதுவும் கிடையாது. அதுவும் ஆதாமுக்கும், சாத்தானுக்கும் போட்டி என்பது நிச்சயம் கிடையாது. தேவனுக்கும் சாத்தானுக்குமிடையேயான “சவால்” என்று வேண்டுமானால் சொல்லிக் கொள்ளலாம்.
மேலும், இச்சவாலை எழுப்பியது சாத்தானேயன்றி, தேவனல்ல. தீமைசெய்த சாத்தான் தண்டிக்கப்பட்டபோது, “தனக்களிக்கப்பட்ட தண்டனை நியாயமானதல்ல” என்பது சாத்தானின் வாதம்.
“தான் மட்டுமல்ல, தேவனால் சிருஷ்டிக்கப்படும் எல்லோருமே ஒரு சந்தர்ப்பத்தில் தேவனுக்கு எதிராக நிற்கத்தான் செய்வார்கள்” என்பது சாத்தானின் வாதம்.
சாத்தானின் இவ்வாதம் “சரியே” என்றால், “தேவனின் சிருஷ்டிப்பில் யாருமே தேவசித்தப்படி நடக்கமாட்டார்கள், எல்லோருமே தேவனுக்கு எதிராகத்தான் செயல்படுவார்கள்” என்றாகிவிடும். அப்படியானால், “அவர்கள் அப்படி நடப்பற்குப் பொறுப்பு சிருஷ்டிகளாகிய அவர்களல்ல,சிருஷ்டிகராகிய தேவனே” என்றாகிவிடும்.
“சிருஷ்டியின் தவறுக்கு தேவனே பொறுப்பு” என்றால் சாத்தானின் தவறுக்கும் தேவனே பொறுப்பு என்றாகிவிடும். எனவே, தேவனுக்கு எதிராக செயல்பட்ட சாத்தானைத் தண்டிப்பது நியாயமல்ல என்றாகிவிடும். இவ்வாதத்தின் அடிப்படையில்தான், “தன்னைத் தண்டிக்கக்கூடாது, தன்னைத் தண்டிப்பது நியாயமல்ல” என தேவனிடம் சாத்தான் முறையிட்டான்.
நீதிபரராகிய தேவன், சாத்தானின் முறையிடுதலிலுள்ள நியாயத்தை ஏற்றுக்கொண்டார். எனவே சாத்தானைத் தண்டிக்கவேண்டுமெனில், “தமது சிருஷ்டிப்பில் தமது சித்தப்படி நடக்கக்கூடிய ஒருவராகிலும் உண்டு” என்பதை தேவன் நிரூபித்தாக வேண்டும்.
எனவே சாத்தானின் முறையீட்டை தேவன் ஒரு சவாலாக ஏற்றுக்கொண்டு, “தமது சிருஷ்டிப்பில் தமது சித்தப்படி நடக்கக்கூடிய ஒருவராவது உண்டு” என நிரூபிக்க முற்பட்டார். தேவதூதர்கள் அனைவரும் சாத்தானுக்கும் தேவனுக்குமிடையேயான சவாலை அறிவார்கள் என்பதால், அதை அறியாத மற்றொரு பிரிவினரை சிருஷ்டித்து, அவர்கள் மூலம் சாத்தானின் சவாலை தேவன் சந்திக்க முற்பட்டார்.
அதன்படி உலகத்தைச் சிருஷ்டித்து, ஆதாம் ஏவாளையும் சிருஷ்டித்து அவர்களை உலகத்தில் வைத்தார். ஆதாம் ஏவாளை தேவதூதரிலும் சற்று சிறியவராக தேவன் சிருஷ்டித்தார். அவர்களுக்கு நன்மை தீமை அறியத்தக்க அறிவு கொடுக்கப்படவில்லை. அவர்களிடம் தேவனிட்ட கட்டளையையும் அவர்கள் அதை மீறியதையும் நாம் நன்கறிவோம்.
ஆனால் ஆதாம் ஏவாளின் வீழ்ச்சி என்பது சாத்தானுக்கு வெற்றியுமல்ல, தேவனுக்குத் தோல்வியுமல்ல.
ஏனெனில் சாத்தானின் பொய் எனும் வஞ்சகத்தால்தான் ஆதாம் வீழ்ச்சியுற்றாரேயொழிய, தானாகவே தேவனுக்கெதிராகச் செயல்பட்டு அவர் வீழ்ச்சியடையவில்லை.
ஆதாமுக்கு நியமிக்கப்பட்ட காலக்கெடுவுக்குள் அவர் தேவனுக்கு எதிராக செயல்பட்டால்தான் தனது சவாலில் தான் ஜெயிக்கமுடியும் என்பதால், எப்படியாவது அக்காலக் கெடுவுக்குள் தேவனுக்கெதிராக ஆதாமை செயல்படவைத்துவிடவேண்டும் என சாத்தான் திட்டமிட்டான். தனது திட்டத்தைச் செயல்படுத்த, அவன் ஒரு குறுக்குவழியைக் கையாண்டான். அதுதான் பொய் எனும் வஞ்சகம். இந்தப் பொய் எனும் வஞ்சகத்திற்கு ஆளாகாமல், தேவனுக்கு எதிராக ஆதாம் செயல்பட்டால்தான், மெய்யாகவே அது சாத்தானுக்கு வெற்றியாகவும் தேவனுக்கு தோல்வியாகவும் இருந்திருக்கும்.
ஆனால் அதற்கு வழியின்றி, பொய் எனும் ஆயுதத்தால் ஆதாமை சாத்தான் வீழ்த்தியதால், ஆதாம் விஷயம் தேவனுக்குத் தோல்வியாகவும் சாத்தானுக்கு வெற்றியாகவும் தோன்றினாலும், உண்மையில் அது தேவனுக்குத் தோல்வியுமல்ல, சாத்தானுக்கு வெற்றியுமல்ல.
ஆனால் இப்போது தேவனுக்கு மற்றொரு பொறுப்பும் உண்டானது.
சாத்தானின் வஞ்சகத்தால் மரணமெனும் ஆக்கினைக்குள்ளான மனிதனை, மரணத்திலிருந்து விடுவிக்க வேண்டும் என்பதே அப்பொறுப்பு. அதோடுகூட, சாத்தானோடு உண்டான சவாலில் ஜெயிக்கவேண்டும் எனும் பொறுப்பு ஏற்கனவே இருந்தது. இந்த 2 பொறுப்புகளையும் ஒரு சேர நிறைவேற்றத்தான், தேவன் தமது குமாரனாகிய இயேசுவை இப்பூமியில் மனிதனாகப் பிறக்கச் செய்தார்.
தொடரும் ....
-- Edited by anbu57 on Saturday 15th of January 2011 07:49:11 AM
இக்கட்டுரையை நான் முழுமையாக முடிப்பதற்குமுன், இடையில் யாரும் தங்கள் கேள்விகளைக் கேட்கவேண்டாமென அன்புடன் வேண்டுகிறேன்.
எனது கருத்துக்களைத் தொடர்வதற்குமுன் “இயேசுகிறிஸ்துவைக்” குறித்த சில குறிப்புகளைக் கூற ஆசிக்கிறேன். எனது குறிப்புகளுக்கு ஆதாரமான பின்வரும் வசனங்களை முதலாவது படிப்போம்.
நீதிமொழிகள் 8:22 கர்த்தர் தமது கிரியைகளுக்குமுன் பூர்வமுதல் என்னைத் தமது வழியின் ஆதியாகக் கொண்டிருந்தார். 23 பூமி உண்டாகுமுன்னும், ஆதிமுதற்கொண்டும் அநாதியாய் நான் அபிஷேகம்பண்ணப்பட்டேன். 24 ஆழங்களும், ஜலம் புரண்டுவரும் ஊற்றுகளும் உண்டாகுமுன்னே நான் ஜநிப்பிக்கப்பட்டேன். 30 நான் அவர் அருகே செல்லப்பிள்ளையாயிருந்தேன்; நித்தம் அவருடைய மனமகிழ்ச்சியாயிருந்து, எப்பொழுதும் அவர் சமுகத்தில் களிகூர்ந்தேன்.
சங்கீதம் 2:7 கர்த்தர் என்னை நோக்கி: நீர் என்னுடைய குமாரன், இன்று நான் உம்மை ஜெநிப்பித்தேன்; 8 என்னைக் கேளும், அப்பொழுது ஜாதிகளை உமக்குச் சுதந்தரமாகவும், பூமியின் எல்லைகளை உமக்குச் சொந்தமாகவும் கொடுப்பேன்; 9 இருப்புக்கோலால் அவர்களை நொறுக்கி, குயக்கலத்தைப்போல் அவர்களை உடைத்துப்போடுவீர் என்று சொன்னார்.
எபேசியர் 3:11 இயேசுகிறிஸ்துவைக்கொண்டு எல்லாவற்றையும் சிருஷ்டித்த தேவனுக்குள்ளே ....
கொலோசெயர் 1:15-17 அவர் அதரிசனமான தேவனுடைய தற்சுரூபமும், சர்வ சிருஷ்டிக்கும் முந்தின பேறுமானவர். ஏனென்றால் அவருக்குள் சகலமும் சிருஷ்டிக்கப்பட்டது; ... சகலமும் அவரைக்கொண்டும் அவருக்கென்றும் சிருஷ்டிக்கப்பட்டது. 17 அவர் எல்லாவற்றிற்கும் முந்தினவர், எல்லாம் அவருக்குள் நிலைநிற்கிறது.
எபிரெயர் 1:6 தமது முதற்பேறானவரை உலகத்தில் பிரவேசிக்கச்செய்தபோது: தேவதூதர் யாவரும் அவரைத் தொழுதுகொள்ளக்கடவர்கள் என்றார். தேவதூதரைக்குறித்தோ: தம்முடைய தூதர்களைக் காற்றுகளாகவும், தம்முடைய ஊழியக்காரரை அக்கினிஜுவாலைகளாகவும் செய்கிறார் என்று சொல்லியிருக்கிறது
எபிரெயர் 3:1 பரம அழைப்புக்குப் பங்குள்ளவர்களாகிய பரிசுத்த சகோதரரே, நாம் அறிக்கைபண்ணுகிற அப்போஸ்தலரும் பிரதான ஆசாரியருமாயிருக்கிற கிறிஸ்து இயேசுவைக் கவனித்துப்பாருங்கள்;
(இயேசுவை ஒரே தேவனுக்குச் சமமான மற்றொரு தேவனென்றோ அல்லது ஒரே தேவன் இயேசுதான் என்றோ அறிக்கை செய்பவர்கள் இவ்வசனத்தைக் கவனமாகப் படிப்பார்களாக. இவ்வசனம் கூறுகிற பிரகாரமாக, இயேசுவை தேவனின் பிரதான ஆசாரியரென அறிக்கை பண்ணாத அவர்கள், பரம அழைப்புக்குப் பங்குள்ளவர்களாக மாட்டார்கள் என்பதை அறிவார்களாக. பிரதான ஆசாரியாகிய இயேசு, தேவனுக்குச் சமமாக இருக்கமுடியுமா என்பதையும் அவர்கள் சிந்திப்பார்களாக.)
இவ்வசனங்கள் மூலம் இயேசுவைக் குறித்து நாம் அறிபவை:
1. எபிரெயர் 1:6-ன்படி பார்த்தால், இயேசு தேவதூதர்களில் ஒருவரல்ல என்பது தெளிவாகிறது.
2. கொலோசெயர் 1:15-17-ன்படி பார்த்தால், தேவதூதர்கள் உட்பட்ட சர்வ சிருஷ்டிக்கும் முந்தினவராக இயேசு இருக்கிறார் என்பது தெளிவாகிறது.
3. எபேசியர் 3:11 மற்றும் கொலோசெயர் 1:15-17-ன்படி பார்த்தால், இயேசுவானவர் சிருஷ்டிகர் அல்ல, தேவனே சிருஷ்டிகர் என்பது தெளிவாகிறது. ஒரு வீட்டைக் கட்டுபவர் எப்படி கொத்தனாரைக் கொண்டு அவ்வீட்டைக் கட்டுகிறாரோ, அவ்வாறே, சிருஷ்டிகராகிய தேவன் இயேசுவைக் கொண்டு சகலத்தையும் சிருஷ்டித்தார்.
4. இயேசுவை தேவனுடைய சிருஷ்டிக்கு ஆதியாயிருக்கிறவர் (முதலாமனவராக இருக்கிறவர்) என வெளி. 3:15 கூறுகிறது. மூலபாஷை வார்த்தையின் அர்த்தப்படி, சிருஷ்டிப்பின் தொடக்கமாக (commencement) இயேசு இருக்கிறார் எனப் பார்க்கிறோம். இவ்வசனத்தை நீதிமொழிகள் 8:22 மற்றும் சங்கீதம் 2:7 உடன் இணைத்துப் பார்க்கையில், சர்வ சிருஷ்டிகளுக்கும் முந்தினவராக விசேஷித்த விதத்தில் தேவனால் நேரடியாகச் சிருஷ்டிக்கப்பட்டவராக இயேசு இருக்கிறார் எனச் சொல்லலாம். இயேவை தேவனுக்குச் சமமாகவோ அல்லது தேவனாகவோக் கருதி ஆராதனை செய்பவர்களுக்கு இக்கருத்தை ஏற்பதற்கு கடினமே. இயேசுவானவர் தேவனால் நேரடியாகச் சிருஷ்டிக்கப்பட்டதால் அவரை ஜெனிப்பிக்கப்பட்டவர் என சங்கீதம் 2:7 கூறுவதாக நான் அறிகிறேன்.
5. நீதிமொழிகள் 8:22-ன்படி, ஆதியிலேயே தேவனுடைய குமாரனாகவும் செல்லப்பிள்ளையாகவும் இருந்தவர் இயேசு ஒருவரே என அறிகிறோம். எப்பீராயிம், தாவீது, சாலொமோன், இஸ்ரவேலர் போன்ற பலரை தேவனுடைய குமாரன் அல்லது பிள்ளைகள் என வேதாகமம் கூறுவதால் தேவனுடைய எத்தனையோ குமாரர்களில் ஒருவர்தான் இயேசு எனக் கூறுகிற முகமதியரின் கருத்து தவறு என்பதற்கு நீதிமொழிகள் 8:22 ஆதாரமாயுள்ளது. ஆம், இயேசுவானவர் பத்தோடு பதினொன்றான தேவகுமாரன் அல்ல. ஆதியிலேயே தேவனோடு செல்லப்பிள்ளையாக இருந்து, அவரது வார்த்தைகளை அப்படியே செயல்படுத்தின/செயல்படுத்துகிற தேவகுமாரனே அவர்.
எனவேதான் தேவன் தமது குமாரனாகிய இயேசுவை, புருஷசித்தம் இல்லாமல் ஸ்திரீயின் வித்தாக இவ்வுலகில் பிறக்கச்செய்தார். சாத்தானால் வஞ்சிக்கப்படுவதற்கு முன் ஆதாம் எந்த நிலையில் இருந்தாரோ அதே நிலையில் இயேசுவும் இருந்தார். எனவேதான் இயேசுவும் “ஆதாம்” என அழைக்கப்பட்டார் (1 கொரி. 15:45).
ஆதாமை சோதித்ததைப்போலவே இயேசுவையும் சாத்தான் சோதித்தான் (மத்தேயு 4:1-10). ஆனால் இயேசுவிடம் பொய் எதையும் சாத்தான் சொல்லவில்லை. சாத்தானின் ஆரம்ப சோதனைகளை முறியடித்த இயேசு, மரணபரியந்தமும் அவனின் சோதனைகளை முறியடித்து, தேவனுக்கெதிரான சாத்தானின் சவாலில் தேவனுக்கு முழுமையான வெற்றியை பெற்றுத்தந்தார்.
இந்த வெற்றியின் மூலம் சாத்தானுக்கு நியமிக்கப்பட்ட ஆக்கினை உறுதியாக்கப்பட்டது; அதோடுகூட, ஆதாமின் மீறுதலால் மரணத்திற்குள்ளான மனித குலம், மரணத்திலிருந்து விடுதலை பெறும் நிலையும் உண்டானது (1 கொரி. 15:22).
ஆதாமின் மீறுதல் மன்னிக்கப்பட்டதைப் போலவே, சகல மனிதரின் பாவங்களும் இயேசுவின் மூலம் மன்னிக்கப்பட ஏதுவாயின.
இவ்விதமாக இயேசுவின் மூலம் சாத்தானின் சவாலில் தேவன் வெற்றிபெற்றதோடு, மனிதரை மரணத்திலிருந்து மீட்கும் தேவதிட்டமும் இயேசுவின் மூலம் நிறைவேறியது.
பின்குறிப்பு: இக்கட்டுரை இத்துடன் நிறைவடைகிறது. இனி, இது சம்பந்தமாக கேள்வி எழுப்புவோர் தங்கள் கேள்விகளைக் கேட்கலாம்.
அன்பு எழுதியது: //1. எபிரெயர் 1:6-ன்படி பார்த்தால், இயேசு தேவதூதர்களில் ஒருவரல்ல என்பது தெளிவாகிறது.//
எபி 1:5. எப்படியெனில், நீர் என்னுடைய குமாரன், இன்று நான் உம்மை ஜெநிப்பித்தேன் என்றும்; நான் அவருக்குப் பிதாவாயிருப்பேன், அவர் எனக்குக் குமாரனாயிருப்பார் என்றும், அவர் தூதர்களில் யாருக்காவது எப்போதாகிலும் சொன்னதுண்டா?
ஏன் தூதர்களூடன் மாத்திரம் ஒப்பீட்டு பேச படுகிறார்!! மிகாவேல் (மிக்கேல்) என்கிற தூதன், மிக் என்றால் தேவ சாயல என்றும் ஏல் என்றால் தேவன் என்றும் அர்த்தம் கொண்டு, தேவனின் சாயலானவர் என்கிற அர்த்தம் கொண்டிருக்கிறாரே,
கொலோ 1:15. அவர் அதரிசனமான தேவனுடைய தற்சுரூபமும், சர்வ சிருஷ்டிக்கும் முந்தின பேறுமானவர்.
தேவனுடைய தற்சுரூபமானவர் ஏன் பிரதான தூதனாக இருக்க கூடாது!! பழைய ஏற்பாட்டில் அநேக இடங்களில் தூதனானவர் என்றும் தேவனின் தூதன் என்றும் விசேஷமாக போட்டிருக்கும் வசனங்கள் இருக்கிறதே, ஏதோ ஒரு தூதன் என்று எப்படி எடுத்துக்கொள்ல முடியும்!!
யாத்திராகமம் 3:2 அங்கே கர்த்தருடைய தூதனானவர் ஒரு முட்செடியின் நடுவிலிருந்து உண்டான அக்கினிஜுவாலையிலே நின்று அவனுக்குத் தரிசனமானார். அப்பொழுது அவன் உற்றுப்பார்த்தான்; முட்செடி அக்கினியால் ஜுவாலித்து எரிந்தும், அது வெந்துபோகாமல் இருந்தது.
யாத்திராகமம் 14:19 அப்பொழுது இஸ்ரவேலரின் சேனைக்கு முன்னாக நடந்த தேவதூதனானவர் விலகி, அவர்களுக்குப் பின்னாக நடந்தார்; அவர்களுக்கு முன் இருந்த மேக ஸ்தம்பமும் விலகி, அவர்கள் பின்னே நின்றது.
யாத்திராகமம் 23:20 வழியில் உன்னைக் காக்கிறதற்கும், நான் ஆயத்தம்பண்ணின ஸ்தானத்துக்கு உன்னைக் கொண்டுபோய்ச் சேர்க்கிறதற்கும், இதோ, நான் ஒரு தூதனை உனக்கு முன்னே அனுப்புகிறேன்.
யாத்திராகமம் 23:23 என் தூதனானவர் உனக்குமுன் சென்று, எமோரியரும் ஏத்தியரும் பெரிசியரும் கானானியரும் ஏவியரும் எபூசியரும் இருக்கிற இடத்துக்கு உன்னை நடத்திக்கொண்டுபோவார்; அவர்களை நான் அதம்பண்ணுவேன்.
யாத்திராகமம் 32:34 இப்பொழுது நீ போய், நான் உனக்குச் சொன்ன இடத்துக்கு ஜனங்களை அழைத்துக்கொண்டுபோ; என் தூதனானவர் உனக்குமுன் செல்லுவார்; ஆகிலும், நான் விசாரிக்கும் நாளில் அவர்களுடைய பாவத்தை அவர்களிடத்தில் விசாரிப்பேன் என்றார்.
யாத்திராகமம் 33:2 நான் ஒரு தூதனை உங்களுக்கு முன்பாக அனுப்பி, கானானியனையும் எமோரியனையும் ஏத்தியனையும் பெரிசியனையும் ஏவியனையும் எபூசியனையும் துரத்திவிடுவேன்.
இப்படி இந்த வசனங்களில் சொல்லப்பட்ட "என் தூதன்" அல்லது தூதனானவர் என்கிற பதங்கள் எல்லாம் குறிபிடப்பட்ட அந்த தூதன் ஒரு சாதாரன தூதனாக இருந்திருக்கும் வாய்ப்பு இல்லை என்பதையே காண்பிக்கிறது!!
தேவதூதர்களில் ஒருவர் இல்லை என்பதை எழுதிய தாங்கள், அவர் என்னவாக இருந்தார் என்பதையும் வசனத்துடன் எழுதியிருந்தால் நலமாக இருந்திருக்குமே!!
ஆனாலும் தங்களின் கடைசி பதிவு அருமையான சத்தியத்தை சொல்லியிருக்கிறது!! கிறிஸ்து ஆதாமின் நிலையில் இயேசுவாக பிறந்தார் என்பது தான் உண்மை, ஆகவே தான் இரண்டாம் ஆதாம் எனப்படுகிறார்!!
ஏன் தூதர்களூடன் மாத்திரம் ஒப்பீட்டு பேச படுகிறார்!! மிகாவேல் (மிக்கேல்) என்கிற தூதன், மிக் என்றால் தேவ சாயல என்றும் ஏல் என்றால் தேவன் என்றும் அர்த்தம் கொண்டு, தேவனின் சாயலானவர் என்கிற அர்த்தம் கொண்டிருக்கிறாரே,
கொலோ 1:15. அவர் அதரிசனமான தேவனுடைய தற்சுரூபமும், சர்வ சிருஷ்டிக்கும் முந்தின பேறுமானவர்.
தேவனுடைய தற்சுரூபமானவர் ஏன் பிரதான தூதனாக இருக்க கூடாது!!
சகோதரர் வேத மாணவன் அவர்களே இயேசுவை தூதன் என்ற நிலைக்கு தயவு செய்து தாழ்த்த வேண்டாம் அது நிச்சயம் சரியான கருத்து அல்ல. நான் ஏற்கெனவே ஜெநிப்பித்தலுக்கும படைத்தலுக்கும் உள்ள வேறுபாட்டை சொல்லி யிருக்கிறேன். தூதர்கள் தேவனால் படைக்கப்பட்டவர்கள் இயேசு தேவனால் ஜெனிப்பிக்கப்பட்டவர்.
மேலும் தங்களோ அல்லது சகோ. அன்பு அவர்களோ எடுத்து விளக்குவதுபோல் மூல பாஷை வரை ஆராய்ந்து விளக்க விரும்பவில்லை! நான் எழுதுவது எல்லாமே ஆவியானவரின் போதனையின் அடிப்படையில் மட்டுமே. அந்த போதனைக்கு வசன ஆதாரங்களை தேடி எடுத்து எழுதுகிறேன் அவ்வளவே.
ஒன்றான மேய் தெய்வமாகிய தேவன் ஒருவரே! இயேசுவை வல்லமையுள்ள தேவன் என்று ஏசாயா சொல்வதோடு பல வசனங்கள் அவரை தேவன், தேவனுக்கு சமமானவர் என்று சொல்வதால் அவர் தூதரா? என்ற கேள்விக்கே இங்கு இடமில்லை. ஒரு பெரிய தேவன் அவர் படைத்த இன்னொரு சின்ன தேவன் என்றெல்லாம் நிச்சயம் கிடையாது. ஆகினும் இயேசுவை தூதர்களோடு ஒப்பிட்டு சில வசனங்கள் சொல்லபட்டதர்க்கு காரணம் அவர் தூதர் என்று எண்ணி ஏமாந்துவிட வேண்டாம் என்பதை அறிவுறுத்தவே எழுதப்பட்டுள்ளது என்பதே எனது கருத்து! அவர் தூதரிலும் மேலானவர் என்பதை சொல்வதற்கு மாத்திரமே.
இந்த கருத்தில் நான் உறுதியாக இருப்பதால், இயேசு ஒரு தூதரா? என்ற வாதம் இங்கு தயவுசெய்து வேண்டாம்.
இதற்க்கு அடிப்படையாக நான் எடுத்துகொள்ளும் வாசனம் "வேறொரு பலியில்லை" என்ற வசனம இயேசு ஒரு தூதராக இருந்தால் இன்னும் எத்தனை தூதரை வேண்டுமானாலும் தேவன் படைத்து பாவத்துக்கு பலியாக செலுத்திக் கொண்டே இருக்க முடியும். ஆனால் தேவன் இந்த உலகத்தையும் அதிலுள்ள சிருஷ்ட்டிகளையும் படைப்பதற்கு பயன்படுத்திய வார்த்தை என்னும் வல்லமை ஒன்றே ஒன்றுதான் அதை இயேசுவாக ஜெனிப்பித்தார் அவர் மூலம் ஏறக்குறைய தேவனே மாம்சமாக பூமிக்கு இறங்கிவதார்! எனவே இனி செலுத்துவதற்கு இன்னொரு பலியே இல்லை. எனவே இயேசுவின் பலியை ஏற்காமல் அசட்டை செய்பவர்களுக்கு வேறொரு பலியும் இல்லாமல் தண்டனை என்பது நிச்சயமாகிவிடுகிறது.
இதை நாம் அறிந்தாலே சுவிஷேஷத்தின் மேன்மை என்பது புரிந்துவிடும்.
இந்த கருத்துக்களை நான் பலமுறை எனது தளத்தில் பல்வேறு விதத்தில் விளக்கி சொல்லி விட்டேன் அதை ஏற்றுக்கொள்ள மனதில்லாமல் மீண்டும் மீண்டும் இதைப்பற்றி விவாதிப்பது சரியானதல்ல என்றே நான் கருதுகிறேன். தேவ ஆவியாகிய பரிசுத்த ஆவியானவரை பெற்றால் மட்டுமே இயேசுவை யாரென்று சரியாக நிதானிக்க முடியும். பரிசுத்த ஆவி வெறும் வல்லமை என்று எண்ணி அவரை வாஞ்சித்து தேடி பெற்றுக்கொள்ளாதவர்கள் இயேசுவை யாரென்று நிதானிப்பது கடினம். (நனற்றாக ஆராய்ந்து பாருங்கள் இயேசுவை தேவனல்ல என்று சொல்பவர்கள் எல்லோருமே பரிசுத்த ஆவியை வெறும் வல்லமை என்றே சொல்கிறார்கள்)
ஆக மனிதன் பாவத்தினால் மரணத்திற்கு உட்பட்டு நித்திய ஜீவனை இழந்து போனான், அந்த நித்திய ஜீவனை பெற்று தரவே கிறிஸ்து வந்தார்!! இது பல முறை எழுதியதாகிற்று!! ஆனால் அன்பு அவர்கள், அவர் தூதராக இருக்க முடியாது என்று பதிவு செய்ததை முன்னிட்டு தான் நான் பதிவை வைத்தேன்!! இது உங்களுக்கு பிடிக்காத பதிவாக இருந்து அதை தாங்கள் சாடுவதற்கு முன்பு நானே உங்களின் பதிவிற்கு பதில் என் தளத்தில் வைத்திருக்கிறேன், பிரியப்பட்டால் தாராளமாக வந்து பார்த்துவிட்டு, தங்களின் தளத்தில் பதிவை பதியலாம்!!
இயேசு யார் என்பதைக் குறித்த விவாதம் இங்கு தேவையில்லை என்பதோடு, இயேவை தேவதூதர் அளவுக்குத் தாழ்த்தவும் வேண்டாம் என சகோ.சுந்தர் கேட்டுக்கொண்டுள்ளார். எனவே சகோ.பெரியன்ஸ் தந்துள்ள வசனஆதாரங்களின் அடிப்படையில் மேற்கொண்டு எதுவும் சொல்ல இயலாத நிலையில் நான் இருக்கிறேன்.
எனினும் எனது “நித்தியஜீவன்” தளத்தில் இது சம்பந்தமாக ஒரு திரி துவக்கியுள்ளேன். விருப்பமானவர்கள் அத்திரியில் தங்கள் கருத்தைப் பதிக்கும்படி வேண்டுகிறேன்.