உலகத்தில் மனிதனாக பிறந்துவிட்டாலே ஏதாவது ஒருவழியில் எதிரிகள் உருவாகிவிடுவது இயற்க்கை!
நாம் என்னதான் விலகி விலகி போனாலும், நம்மை வம்புக்கு இழுத்து தங்களை தாங்களே பிறருக்கு எதிர்யாக்கிகொள்பவர்களும், ஒருவர் என்னதான் நன்மை செய்தாலும் அதை புறங்கணித்து நம்மை எதிரியாகவே பாவிப்பவர்களும் எப்பொழுதும் உலகத்தில் உண்டு. நல்லவனுக்கு தீயவன் எதிரி, தீயவனுக்கு இன்னொரு தீயவன் எதிரி. மற்றும் மதம், ஜாதி, மண், பெண். பணம் போன்ற பல்வேறு காரணிகளின் அடிப்படையில் எதிரிகள் உருவாகி விடுகின்றனர். தற்காலங்களில் இணைய தளத்தில் எழுதுவதன்மூலம் கூட முகத்தை பார்க்காமலேயே சில சத்துருக்கள் உருவாகி விடுகின்றனர் என்பது சோகமான செய்தி.
ஆண்டவராகிய இயேசுவாகிய பரிசுத்தரையே எதிரியாக எண்ணி அவரை கொலைசெய்ய துணிந்தார்களே!பிறகு நாம் போன்ற சாதாரண மனிதர்கள் எம்மாத்திரம்?
இவ்வாறு "எதிரிகள் உருவாவது தடுக்கமுடியாது" என்றாலும் நாம் நமது எதிரிகள் யாரென்பதை சரியாக அடையாளம் கண்டு அவர்கள் குறித்து மிகுந்த எச்சரிக்கையுடனும் கவனத்துடனும் நடந்துகொள்வது மிகுந்த அவசியம். இல்லையேல் சாத்தான் நம்மை சாதாரணமாக விழதள்ளி விடுவான்.
"சத்துரு" என்றவுடன் நாம் நமது சொந்த பந்தங்களில் நமக்கு பிடிக்காதவர்கள் அல்லது நம்முடைய ஜென்ம பகையாளி அல்லது அலுவலகத்தில் நமக்கு பிடிக்காத அதிகாரி என்று யாரையாவது எண்ணிக்கொண்டு இருக்கலாம். ஆனால் வேதவசனம் சற்றும் எதிர்பார்க்காதவிதமாக ஒரு மனிதனுக்கு முக்கியமான சத்துரு என்று யாரை சொல்கிறது?
மத்தேயு 10:36ஒரு மனுஷனுக்குச் சத்துருக்கள் அவன் வீட்டாரே. மீகா 7:6மனுஷனுடைய சத்துருக்கள் அவன் வீட்டார்தானே.
ஒவ்வொரு மனிதனுக்கு சத்துரு, அவனோடு கூட இருக்கும் அல்லது அவன் அதிகம் நேசிக்கும் அவனது வீட்டார்தானே! என்று திட்டமாக சொல்கிறது. இந்த வசனத்தை நாம் பலமுறை படித்திருந்தும் இதை அக்கறையோடு ஆராய்வது இல்லை. ஒரு எதிரி இருக்கும் இடத்தில் நாம் எவ்வளவு எச்சரிக்கையோடு நடந்து கொள்வோம்! ஆனால் நமது வீடே நமக்கு ஆவிக்குரிய சத்துரு இருக்கும் இடமாக இருக்கும் பட்சத்தில் அங்கு நாம் அவ்வளவு ஆவிக்குரிய எச்சரிக்கையோடு இருக்கிறோமா என்று கேட்டால், நிச்சயம் இல்லை! எனவேதான் வெளியில் இருந்து வரும் அனேக எதிரிகளை முறியடித்து விடுவோரும், அலுவலகத்தில் உள்ள அனேக எதிர்ப்புகளை சமாளித்து விடுவோர்கூட வீட்டில் இருக்கும் சத்துருக்களை சரியாக அறியாததால் அவர்களை மேற்கொள்ளமுடியாமல் வீழ்ந்துபோகின்ற்றனர். எனவே அவர்களின் கிரியைகளை அறிந்து அவர்களை மேற்கொள்வது ஆவிக்குரிய வாழ்வுக்கு மிகவும் அவசியம்.
நமது வீட்டார் என்று என்று வேதம் சொல்லும் அடிப்படையில் எடுத்து கொண்டால் ஒரு வீட்டில் முக்கியமாக யாரெல்லாம் இருப்பார்கள்?
1. தாய் / தகப்பன்
2. சகோதர / சகோதரிகள்
3. கணவன் / மனைவி
4. மகன் / மகள்கள்
5. மாமனார் / மாமியார்கள்
6 மருமகன் / மருமகள்கள்
இவர்களே பொதுவாக ஒருவீட்டில் இருக்கும் "வீட்டார்கள்" என எடுத்துக்கொள்ளலாம். வேதம் சொல்லும் இந்த வீட்டிலுள்ள சத்துருக்களின் கிரியைகள் பற்றியும் அவைகளை எவ்வாறு மேற்கொள்வது என்பது பற்றியும் முடிந்தஅளவு ஆராயலாம்!
அதக்கு முன்னர், "எல்லா மனிதனுக்கு பொதுவான எதிரி அல்லது சத்துரு தேவனின் சத்துருவாகிய சாத்தான்தான்" என்பதை நாம் சரியாக அறிய வேண்டும். அவனற்றி வேறுஒரு சத்துருவும் நமக்கு இல்லை! நம்முடய போராட்டம் எல்லாமே அந்த பொல்லாத சாத்தானின் ஆவிகளாகிய சத்துருக்க ளோடுதான் என்பதை அறிந்துகொண்டு, அவன் தூண்டுதலின் அடிப்படையிலேயே நமது வீட்டில் உள்ளவர்கள் நமக்கு எவ்வாறு சத்துருவாக செயல்படுகின்றனர் என்பதை கர்த்தருக்கு சித்தமானால் தொடர்ந்து தியானிப்போம்!
__________________
நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)அவர்(கர்த்தராகியதேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்; (ஏசா 25:8)
"மனுஷனுக்கு எதிரி அவனது வீட்டார்தான்" என்பது ஆண்டவராகிய இயேசுவின் பார்வைக்கு தீர்க்கமாக தெரிந்த ஒருவிஷயம். ஆனால் மனிதனுக்கோ அது புரியாத ஒரு விஷயம் இந்நிலையில் தாய் தகப்பன்மார்கள் ஒரு மனுஷனுக்கு ஆவிக்குரிய நிலையில் எவ்வாறு சத்துருவாக செயல்பட்டு வருகின்றனர் என்பதை நாம் சற்று விளக்கமாக ஆராயலாம்.
1. எதிர் காலத்தில் நமது பிள்ளைகள் நன்றாக இருக்கவேண்டும் என்ற எண்ணத்தில் தேவனின் நடத்துதலில் இருந்து அவர்களை பிரித்து, இந்த உலக சுழற்ச்சி முறைக்குள் தள்ளி விடுகின்றனர்.
ஆம்! எல்லா தாய் தகப்பன்மாரும் செய்யும் முதல் மிகப்பெரிய தவறு பிள்ளைகளுக்கு தேவனை பற்றிய விசுவாசத்தை அதிகமதிகமாக ஊட்டாமல் அவர்களை இந்த உலக சுழற்ச்சி முறைக்குள் வலுகட்டாயமாக தள்ளிவிடுவதே ஆகும்.
"தேவனால் எல்லாம் கூடும்" என்று விசுவாசிக்கும் ஒருவர், அவரது பிள்ளைகளுக் கென்று எந்த ஒரு எதிர்கால திட்டத்தையும் போடாமல் (ஊழியராக வேண்டும் என்ற திட்டம்கூட) தேவனது கரத்தில் பிள்ளையை ஒப்புகொடுத்த அவருக்கு சித்தமான வழியில் பொறுப்பேற்று நடத்தட்டும் என்றும் விசுவாசித்து விடுவது இல்லை. தேவனை தேடினால் எல்லாமே கூடகொடுக்கப்படும் என்று வசனத்தை மட்டும் வைத்துகொண்டு வாயடிக்கும் நாம், நமக்கான திட்டங்கள் எல்லாவற்றையும் நாமே போட்டுகொண்டு அதை நிறைவேற்றுவதர்க்குதான் தேவனை அழைக்கிரோமேயன்றி தேவன் கையில் ஒரு சிறு காரியத்தை கூட முழுமையாக விடுவது இல்லை.
ஒவ்வொரு தாய் தகப்பனும் தனது பிள்ளை படித்து பட்டம் பதவி பெற்றாலும் அல்லது ஊழியத்து என்று சென்றாலும் சொகுசான வாழக்கை வாழ வேண்டும் என்றெ எதிர்பார்க்கின்றனர். அந்த நல் எண்ணமே பிள்ளைக்கு விரோதமான ஒரு செயலாக மாறுகிறது.
தேவனுக்கென்று வைராக்கியமாக வாழ நினைக்கும் பிள்ளைகளை கூட பல பெற்றோர்கள் கஷ்டப்பட்டு புத்தி சொல்லி, தங்கள் விருப்பத்துக்கு ஏற்ப வளைத்து விடுகின்றனர். "அவனை பார் உன்போன்ற பையன்தான் அப்படி இருக்கிறான் இவனைபார் இவ்வளவு நல்ல மதிப்பெண் வாங்கி இந்த வேலை பார்க்கிறான் நீயும் இருக்கிறாயே"! நன்றாக படித்து டாக்டராக வேண்டும் அல்லது IAS படித்து கலெக்டராகு என்று சொல்லி சொல்லி சிறு வயதில் இருந்தே உலக ஆசைகளை பிள்ளைகள் உள்ளத்தில் ஊட்டிவிடுகின்றனர். படிக்க வைத்து ஒரு வேலையை பார்க்கவைத்து உடனே வேக வேகமாக ஒரு திருமணத்தை முடித்து, தாங்கள்தான் உலகத்துக்குள் உழன்று கெட்டது போதாது என்று தங்கள் பிள்ளைகளையும் அதே நிலைக்கு திருப்பி விட்டுவிட்டு, "அப்பாடா" என்று நிம்மதியாக விலகி விடுகின்றனர்.
இது உலகத்து பார்வைக்கு ஒருவர் தனது கடமையை சரியாக செய்ததுபோல் தோன்றுகிறது ஆனால் ஆவிக்குரிய கண்களுடன் இந்த செயலை நாம் பார்த்தால், அவர் சத்துருவாகிய சாத்தனின் கடமையைதான் சரியாக செய்து முடிக்கிறாரே யன்றி அவனது ஆன்மாவுக்கு தேவையான எந்த ஒரு நல்ல காரியத்தையும் செய்யவில்லை.
சாத்தானின் தந்திரமும் அதுதான் இந்த உலகத்தில் பிறக்கும் ஒவ்வொரு ஆத்துமாவையும் யார்மூலமாவது செயல்பட்டு பிடித்து எப்படியாவது உலக ஆசையை காட்டி இழுத்து, உலக சுழற்ச்சி நிலைக்குள் தள்ளிவிடுவது! பின்னர் அவன் அதிலிருந்து அவன் வெளியில் வருவது என்பது மிக மிக கடினமான காரியம். (இயேசுவைகூட அவ்வாறு தள்ளிவிட முயன்று தோற்றுபோனான்)
2. உலகத்தோடு ஒத்து வாழ கற்றுக்கொடுப்பது!
அடுத்ததாக பெற்றோர்கள் பிள்ளைகளுக்கு உண்மை நேர்மை உத்தமம் ஆண்டவரின் வார்த்தைகள் இவற்றை கற்றுக்கொடுபதைவிட, இந்த உலகத்தோடு ஒத்தவேஷம் போட்டு வாழ்வதற்கு தேவையான அனைத்து காரியங்களையும் அதிகமதிகமாக கற்றுக்கொடுத்து அவனுக்கு ஆவிக்குரிய எதிரியாக செயல்படுகின்றனர்.
அதாவது பொய்சொல்ல வேண்டிய இடத்தில் பொய் சொல்ல வேண்டும் என்றும், எவனும் அடித்தால் திருப்பி நாலு போடு போடு என்றும், செய்த தவறுகளை எவ்வாறு மறைப்பது என்றும், அடுத்தவரை எவ்வாறு ஏமாற்றுவது போன்றது மட்டுமல்ல இன்னும் சில வீடுகளில் கடிப்பது, கல்லெறிவது, கெட்ட வார்த்தையால் திட்டுவது, தேவையானபோது திருடுவது போன்ற காரியங்கள் கூட பெற்றோர்களாலேயே கற்றுக்கொடுக்கப்படுகிறது, நானறிந்து ஒருவர் தன் மகளிடம் "மக்கா பக்கத்து வீட்டு கோழி முட்டை போட்டிருப்பதை பார்த்தால், யாருக்கும் தெரியாமல் எடுத்துக்கொண்டு ஓடியே வந்து விடு" என்று சொல்லியிருக்கிறார்கள்.
அகசியா ராஜா துன்மார்க்கமாய் நடக்க அவனது தாயே ஆலோசனைக்கரியாக இருந்தாளாம்:
II நாளாகமம் 22:3துன்மார்க்கமாய் நடக்க அவனுடைய தாய் அவனுக்கு ஆலோசனைக்காரியாயிருந்தாள்.
பிள்ளைகள் தவறு செய்யும்போது அவர்களை கண்டித்து அறிவுரை கூறி சரியான வழியில் திருத்தாமல், அவர்களை கண்டு கொள்ளாமல் விட்டு, அவர்கள் தவறை நியாயப்படுத்த முயலும் ஒவ்வொரு தாய் தகப்பனும் அந்த பிள்ளையின் ஆத்துமாவுக்கு எதிரிகளே!
நீதிமொழிகள் 23:13. பிள்ளையை தண்டியாமல் விடாதே; அவனைப் பிரம்பினால் அடித்தால் அவன் சாகான். 14 நீ பிரம்பினால் அவனை அடிக்கிறதினால் பாதாளத்துக்கு அவன் ஆத்துமாவைத் தப்புவிப்பாயே.
நான் சிறு பிள்ளையாக இருக்கும்போது ஒருமுறை கடையில் இருந்து ஒரு கேரட்டை திருடி எடுத்து வந்துவிட்டேன்.அதை பார்த்த என் தகப்பனார் (இந்துதான் என்னை அதிகமாய் கடிந்துகொண்டு அந்த கேரட்டை எடுத்த இடத்தில் கொண்டு போட்டுவிட்டு வா என்று சொல்லி விராட்டிவிட்டார்கள். அந்த கேரட்டை நான் எடுத்த இடத்திலேயே கொண்டு போட்டு வந்தது எனக்கு இன்னும் நியாபகம் இருக்கிறது. ஆனால் எனது தயார் அவ்வாறு செய்ததில்லை.
எனவே பெற்றோர்கள் பிள்ளைகளை தேவனை நம்பி வாழும் ஒரு வாழ்க்கையை கற்றுக்கொடுக்காமல் "இந்த உலகத்துக்கு ஒத்த வேஷம் போட்டு" வாழ கற்று கொடுத்தல் என்பது, அவர்களது ஆத்துமாவுக்கு எதிரிடையான செயலேயற்றி வேறல்ல.
__________________
நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)அவர்(கர்த்தராகியதேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்; (ஏசா 25:8)