ஆன்மீக வழியில் நல்ல கருத்துக்களை போதிக்க இந்த உலகத்தில் எழும்பிய அனேக பரிசுத்த மனிதர்களையும், இறைவழியில் சில இனிய புரட்சிகளை செய்த நல்ல மனிதர்களையும், அவர்கள் என்ன கருத்துக்கள் சொன்னார்கள் என்பதை எல்லாம் சற்றும் கண்டுகொள்ளாமல் அதை ஒரு ஓரத்தில் ஒதுக்கி தள்ளிவிட்டு, அவர்களையே தேவனாகவே உயர்த்தி அவர்களை கும்பிட்டுவிடுவது என்பது இந்த உலகமக்களின் பெருந்தன்மைகளில் ஓன்று!.
உதாரணமாக நமது இந்திய நாட்டை எடுத்துகொண்டால் புத்தர், மகாவீரர், சாய்பாபா, வள்ளலார், ராகவேந்திரா போன்றவர்களையும் கிறிஸ்த்தவத்தில் தோமையார், மரியாள், அந்தோனியார், மிகவேல் என்று பல புனிதர்களையும் தெய்வமாகவே வழிபடும் பக்தர்கள் இன்று நிறையவே இருக்கிறார்கள்.
ஆனால் இந்த செய்கையானது உண்மையில் மனிதனின் பெருந்தன்மை அல்ல! இது ஒரு சாத்தானின் மிகப்பெரிய திசைதிருப்பும் தந்திரம் ஆகும்!
ஏசாயா 45:5நானே கர்த்தர், வேறொருவரில்லை; என்னைத்தவிர தேவன் இல்லை.
ஏசாயா 45:21நீதிபரரும் இரட்சகருமாகிய என்னையல்லாமல் வேறே தேவன் இல்லை; என்னைத்தவிர வேறொருவரும் இல்லை.
கர்த்தராகிய தேவன் இங்கு அங்கே வசனங்களில் மிக தெளிவாக சொல்கிறார் "நானே தேவன் என்னையன்றி வேறு தேவன் இல்லை" என்று
அவ்வாறு இருக்க, இன்று அநேகர், தாங்கள் தங்கள் விருப்பபடி உலகத்தில் மனிதனாக பிறந்து வந்த யாரையாவது தேவனுக்கு சமமாகவும் தேவனுக்கு மேலாகவும் உயர்த்த நினைப்பது என்பது எதை காட்டுகிறது தெரியுமா?
தேவனால் தள்ளபட்டு விழுந்துபோன சாத்தானின் நிறைவேறாத முக்கிய விருப்பம் என்ன?
ஏசாயா 14:14நான் மேகங்களுக்கு மேலாக உன்னதங்களில் ஏறுவேன்; உன்னதமானவருக்கு ஒப்பாவேன் என்றும் நீ உன் இருதயத்தில் சொன்னாயே.
அதாவது தேவனுக்கு ஒப்பாக அல்லது தேவனுக்கு மேலாக ஆகவேண்டும் என்பதே அவனுடைய விருப்பம். இவ்வாறு நிறைவேறாமல் போன அவனது விருப்பத்தை இந்த பூமியில் மனிதர்கள் மூலமாக அவன் நிறைவேற்றிக் கொள்கிறான் என்றே நான் கருதுகிறேன்.
அதாவது சில நல்ல மனிதர்களையும் தேவனால் அனுப்பபட்ட பரிசுத்தர்களையும் தேவனுக்கு இணையாகவும் தேவனுக்கு மேலாகவும் உயர்த்தி, பிசாசானவன் தனது இச்சையை தீர்த்து கொள்கிறான் எனவே நாம் மிகுந்த எச்சரிக்கையாய் இருப்பது அவசியமாகிறது.