நாம் துன்மார்க்கத்தைவிட்டு விலகி ஜீவித்தால் மட்டும் போதாது துன்மார்க்கனுக்கு துணை போவதையும் துன்மார்க்கன்கையை திடப்படுத்துவத்தையும் நிதானித்தறிந்து அதை தவிர்த்தல் அவசியம் இல்லையே கர்த்தரின் கோபத்துக்கு ஆளாக நேரிடும்.
இன்றைய உலகில் அநேகர் தாங்கள் என்ன செய்கிறோம் என்று அறியாமலேயே துன்மார்க்கனுக்கு துணைநின்று அவனது கையை திடப்படுத்துகின்றனர். அறியாமல் செய்பவர்களை ஆண்டவர் மன்னிப்பார் என்றாலும், முற்றிலும் குறறமற்றவர்களாக விடாமல் சில அடிகளாவது அவர்களுக்கு கிடைக்க வாய்ப்புண்டு எனவே துன்மார்க்கருக்கு துணைபோதல் என்றால் என்னவென்பதை நாம் சற்று ஆராயலாம் என்று கருதுகிறேன்.
துன்மார்க்கனின் ஆலோசனைப்படி நடத்தல்:
தேவனுக்கு உகந்த பிள்ளையாக ஜீவிக்க விரும்பும் நாம், எந்த ஒரு நிர்பந்தத்தின் அடிப்படையிலும் உலக காரியங்களுக்காகவோ அல்லது வேறு எந்த காரியங்களுக்காகவும் துன்மார்க்கன் சொல்லும் துன்மார்க்கமான ஆலோசனையின்படி நடக்ககூடாது என்று வேதம் நம்மை எச்சரிக்கிறது.
இந்த உலகில் எங்கு பார்த்தாலும் துன்மார்க்க ஆலோசனை இலவசமாக கிடைக்கிறது. சன்மார்க்க வார்த்தைகள் எத்தனை சொல்லப்பட்டாலும் அதை சற்றும் ஏற்காத அநேகரின் மனது, துன்மார்க்க ஆலோசனைக்கோ உடனடியாக இசைந்துவிடும். தாய் தகப்பனில் ஆரம்பித்து சொந்த பந்தங்கள் மற்றும் கணவன் மனைவிகள் கூட துன்மார்க்க ஆலோசனை கொடுப்பதில் சற்றும் சளைத்தவர்கள் அல்ல.
சிலர் சொல்லும் ஆலோசனைகள் நமக்கு நன்மை பயப்பதுபோலவே இருந்தாலும் அது ஆவிக்குரிய நிலையில் தீமை பயக்ககூடித சூதானவைகளாகவே இருக்கும்
அதாவது ஆவிக்குரிய மேன்மையான நிலையில் இருந்து ஒருவனை கவிழ்த்து போடுவதே, துன்மார்க்கனின் முக்கிய நோக்கமாகும். அவனுடய ஆலோசனையும் அதன் அடிப்படையிலேயே இருக்கும். அவனுடைய ஆலோசனயிநிமித்தம் துன்பம் அல்லது பிரச்சனை வரும்போது அந்த துன்மார்க்கன் அடுத்தவரை மாட்டிவிட்டு தான் தப்பித்துவிடுவான். இறுதியில் துன்பத்துக்குள் மாட்டுவது அவனின் ஆலோசனையை கேட்டு நடக்கும் நல்ல மனுஷன்தான்.
நமது ஆண்டவராகியே இயேசுவுக்கு இன்னொரு பெயரும் உண்டு அது "ஆலோசனை கர்த்தர்" என்பது. அநேகர் சொல்வதுபோல் நமது ஆண்டவர் இன்று பேசாமல் மௌனமாகிவிட்ட ஆண்டவர் அல்ல. அவர் இன்றும் தமக்கு கீழ்படிந்து நடக்கும் பிள்ளைகளுடன் பேசுகிறார். குழப்பத்தில் இருபவர்களுக்கு எல்லாவிதமான சரியான ஆலோசனையை இலவசமாக தருகிறார் எந்தஒரு காரியத்துக்கும் அவரது சமூகத்தில் அமர்த்து ஆலோசனை கேட்டு அதன்படி நடவுங்கள்
நமது ஜாதிக்காரன், நமது சொந்தக்காரன், நமது தெருக்காரன் நமது சபைக்காரன் நமது விசுவாசக்காரன் என்ற எந்த ஒரு இணக்கத்தின் அடிப்படையிலும் துன்மார்க்கானுடன் சவகாசம் வைத்து அவன் ஆலோசனைப்படி நடப்பதை முற்றிலும் தவிருங்கள். இல்லையேல் அவனோடு சேர்ந்து நீங்களும் தண்டனை அடைய நேரிடும்.
__________________
நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)அவர்(கர்த்தராகியதேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்; (ஏசா 25:8)