இறைவன்

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: இரட்சிப்பு


இளையவர்

Status: Offline
Posts: 28
Date:
இரட்சிப்பு
Permalink  
 


 

கிறிஸ்துவாலேயன்றி வேறொருவராலும் இரட்சிப்பு இல்லை; நாம் இரட்சிக்கப்படும் படிக்கு வானத்தின் கீழெங்கும், மனுஷர்களுக்குள்ளே கிறிஸ்துவினுடைய நாமமேயல்லாமல் வேறொரு நாமம் கட்டளையிடப்படவும் இல்லை”  (அப். 4:2)

மனிதன் பிறக்கிறான்; சிலகாலம் வாழ்கிறான். அந்தக்காலத்தில் அவன் அனுபவிக்கிற கஷ்டங்கள், துன்பங்கள், சோதனைகள், வேதனைகள், அவலங்கள் எத்தனை? எத்தனை? இப்படி பஞ்சம், பட்டினி, நோய், கலவரம், விபத்து, போர் இயற்கையின் சீற்றம் முதலியவற்றால் அலைக்கழிக்கப்பட்டு துன்பத்தில் வாடுகின்ற மனிதன் சமாதானத்தை தேடியும் கிடைக்காமல் முடிவில் இறந்து விடுகின்றான். மனிதனின் இந்த அவல வாழ்க்கைக்கு ஒரு முடிவே இல்லையா? இப்படிப்பட்ட அவல நிலையே இல்லாத வாழ்க்கையை மனிதன் இந்த பூமியில் பெற்றால் இந்த பூமியே ஒரு சொர்க்கமாகவல்லவா இருக்கும்! தற்போதைய துயர வாழ்க்கை நீங்கி, சந்தோஷ, சமாதான வாழ்க்கைக்கு, மரணமே இல்லாத வாழ்க்கைக்கு, ஒரு தெய்வீகத் திட்டம் இருப்பதை நீர் அறிவீரோ? இந்த தெய்வீகத் திட்டத்தை பைபிள் என்கிற வேதத்தைத் தவிர வேறு எங்கும் காண முடியாது. இத்திட்டத்தை அறிய நீர் ஆவலுள்ளவராய் இருக்கறீரா?

ஆதியிலே தேவன், பாவமில்லாத, சுயாதீனமுள்ள முதல் மனிதன் ஆதாமை தேவ சாயலாக (தேவ சாயலென்பது சரீரத்தை குறிக்காதபடிக்கு குண நலன்களை குறிக்கும்) சிருஷ்டித்தார். பின் ஆதாமிலிருந்து ஏவாளை உண்டாக்கி, அவ்விருவருக்கும் ஒரு கட்டளையை கொடுத்திருந்தார். அந்த தேவ கட்டளையை அவர்கள் மீறி பாவம் செய்ததால் (1 யோவான் 3:4) மரணம் என்ற தண்டனைக்குள்ளானார்கள்.  ஆதாம் பாவம் செய்த போதும், பாவத்தின் சம்பளமாகிய (தண்டனையாகிய) மரணத்தை தேவன் ஆதாமுக்கு கொடுத்த போதும், நாம் அனைவரும் ஆதாமுக்குள் பிறவாத சந்ததியாக இருந்தோம்.  ஆகையால் ஆதாமினுடைய பாவத்திலும், அதின் பலனான மரணத்திலும் நாம் அனைவரும் பங்குபெற வேண்டியதாகிவிட்டது.  இவ்வாறு ஆதாம் என்கிற ஒரு மனிதனாலே உலகுக்கு பாவமும், பாவத்தினால் மரணமும் உண்டாயிற்று.(ரோமர்.6:23; 5:12,15,18,19)
 

அந்தப்படி ஆதாமிலிருந்து உலகத்தில் பிறக்கிற ஒவ்வொரு மனிதனும், தன்னுடைய வாழ்க்கை முழுவதும் பலவிதமான அவல நிலைக்கு ஆளாகி முடிவில் மரணத்தை ருசி பார்க்கிறான்.  இந்த அவல நிலையிலிருந்தும், மரணத்திலிருந்தும் விடுதலை பெறுவதே “இரட்சிப்பு” என்பதாகும். வேதம் “இரட்சிப்பு” என்பதை சில இடங்களில் “நித்திய ஜீவன்” என்றும் குறிப்பிடுகிறது. நித்தியஜீவன் என்றால் பாவத்திலிருந்தும், மரணத்திலிருந்தும் விடுதலையாகி முடிவில்லா வாழ்வை பெறுவது, அதாவது நித்திய காலமும் ஜீவனோடிருப்பது என்பதாகும்.

 ஆதாமும் அவனுடைய சந்ததியாரும் மன்னிப்படைந்து இரட்சிப்பைப் பெற வேண்டுமானால், இரத்தம் சிந்தப்பட வேண்டும்.  ஏனென்றால் “….. இரத்தம் சிந்துதலில்லாமல் (பாவ) மன்னிப்பு உண்டாகாது” என்று வேதம் கூறுகிறது. (எபிரேயர் 9:22, லேவியராகமம்.17:11) இந்த தேவ நீதியின்படி ஆதாம் என்கிற ஒரு பூரண மனுஷன் இரத்தம் சிந்தி பலியாக வேண்டும்.  ஆனால் பாவமில்லாத பூரண மனிதன் உலகில் யாருமில்லை.  ஆகையால் ஆதாமினுடைய பாவத்தையும், அதற்கு தண்டனையாகிய மரணத்தையும் ஏற்றுக் கொண்டு ஆதாமுக்கு சரிசமமான ஈடுபலியை (மீட்கும் பொருளை) கொடுக்க யாராலும் இயலவில்லை. (சங்கீதம் 49:7-8) எனவே தேவன் மனுக்குலத்தின் மேல் வைத்த அன்பினாலே தமது ஒரே பேறான குமாரனாகிய இயேசு கிறிஸ்துவை இரண்டாம் ஆதாமாக உலகுக்கு அனுப்பினார்.  இயேசு கிறிஸ்து ஆதாமினுடைய சந்ததியினரைப் போல பிறவாதபடிக்கு, கன்னியினிடத்தில், பரிசுத்த ஆவியினால் பிறந்த காரணத்தினால் பாவம் இல்லாத, பூரண மனுஷனாக இருந்தார். இவர் தமது வாழ்க்கை முழுவதும் தேவனுக்குக் கீழ்படிந்து பாவமில்லாமல் வாழ்ந்து, அவர் தமது சரீரத்திலே நம்முடைய பாவங்களை சிலுவையின் மேல் சுமந்தார்; தம்மைத் தாமே ஜீவபலியாக ஒப்புக்கொடுத்தார். எனவேதான், “இயேசு கிறிஸ்துவின் இரத்தம் சகல பாவங்களையும் நீக்கி நம்மை சுத்திகரிக்கும்” என்றும், “இயேசு கிறிஸ்து” சர்வலோகத்தின் பாவங்களையும் நிவர்த்தி செய்கிற கிருபாதார பலியாகியிருக்கிறார்” என்றும் வேதம் கூறுகிறது.  அதாவது ஆதாமினுடைய மீறுதலினாலே எல்லா மனுஷருக்கும் ஆக்கினைக்கு ஏதுவான தீர்ப்பு உண்டானது போல, கிறிஸ்துவினுடைய கீழ்படிதலினாலே எல்லா மனுஷருக்கும் ஜீவனை அளிக்கும் நீதிக்கு ஏதுவான தீர்ப்பு உண்டாயிற்று. கிறிஸ்துவின் பலியை தேவன் ஏற்றுக் கொண்டதினால், மனுக்குலத்திற்கு நித்திய ஜீவனை தேவன் வாக்குத்தத்தம் பண்ணினார். (1கொரிந்தியர்.15:45; 1பேதுரு.2:24; மத்தேயு.20:28;             1யோவான்.1:7;  2:2; ரோமர். 5:18; 1யோவான்.2:25)


 தேவன் வாக்குத்தத்தம் பண்ணின நித்திய ஜீவனை பெறுவது எப்படி? ஒன்றான மெய்த்தேவனாகிய யேகோவாவையும், அவரால் அனுப்பப்பட்ட இயேசு கிறிஸ்துவையும் அறிந்து கொள்ள வேண்டும். இவர்களைக் குறித்து அறிய சுவிசேஷமாகிய சத்திய வசனத்தைக் கேட்பதோடு கூட வேத வாக்கியங்களை ஆராய்ந்து பார்க்கவும் வேண்டும். சுவிசேஷம் என்பது கிறிஸ்துவை பற்றிய பிரசங்கமே.  இந்த சுவிசேஷமே இரட்சிக்கப்படுகிறவர்களுக்கு தேவ பெலனாயிருக்கிறது.  இதையே வேதமும், “உமது வசனமே சத்தியம்” என்றும் “சத்தியமே விடுதலையாக்கும்” என்றம் கூறுகிறது. மேலும் எல்லா மனுஷரும் இரட்சிக்கப்படவும், சத்தியத்தை அறிகிற அறிவை அடையவும் தேவன் சித்தமுள்ளவராயிருக்கிறார் என்றும் வேதம் கூறுகிறது.  (யோவான் 17:3; 5:39; ரோமர். 16:26; யோவான்.17:17; 1தீமோத்தேயு.2:4)

சத்தியத்தை அறிந்து, இயேசுவை ஜீவனுள்ள தேவனுடைய குமாரனாகிய கிறிஸ்து என்று முதலில் விசுவாசிக்க வேண்டும்.  இந்த கிறிஸ்துவின் விலையேறப் பெற்ற இரத்தத்தினால் தான் நாம் மீட்கப்பட்டிருக்கிறோம் என்றும் விசுவாசிக்க வேண்டும்.  ஏனெனில் தேவன் தம்முடைய ஒரே பேரான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டு போகாமல் நித்திய ஜீவனை அடையும்படிக்கு கிறிஸ்துவை நமக்காக தேவன் தந்தருளியிருக்கிறார்.  மேலும் இந்த கர்த்தராகிய கிறிஸ்துவை நீ உன் வாயினாலே அறிக்கையிட்டு தேவன் அவரை மரித்தோரிலிருந்து எழுப்பினார் என்றும் விசுவாசிக்க வேண்டும்.  இதைத் தான் அப்போஸ்தலனாகிய பேதுருவும், “கிறிஸ்துவாலேயன்றி” வேறொருவராலும் இரட்சிப்பு இல்லை; நாம் இரட்சிக்கப்படும்படிக்கு, வானத்தின் கீழெங்கும் மனுஷர்களுக்குள்ளேகிறிஸ்துவினுடைய நாமமேயல்லாமல் வேறொரு நாமம் கட்டளையிடப்படவும் இல்லை” என்ற அப்போஸ்தலர்.4:12-ல் கூறுகிறார்.  இந்த விசுவாசம் இல்லாமல் தேவனுக்கு பிரியமாயிருப்பது கூடாத காரியம்.  (மத்தேயு.16:16; யோவான்.3:16; ரோமர். 10:9; எபிரேயர்.11:6)

 அதன்பிறகு ஒவ்வொரு மனிதனும் தான் பாவி என்கிறதை உணர்ந்து மனந்திரும்ப வேண்டும். ஏனெனில் அறியாமையுள்ள காலங்களை தேவன் காணாதவர் போலிருந்தார்.  இப்பொழுதோ மனந்திரும்ப வேண்டுமென்று எங்குமுள்ள மனுஷரெல்லாருக்கும் கட்டளையிடுகிறார்.  இவ்வாறு மனந்திரும்பியவர்கள், பாவ மன்னிப்புக்கென்று இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே ஞானஸ்நானம் (தேவனோடு நல்மனசாட்சியின் உடன்படிக்கை) பெறவேண்டும்.  ஞானஸ்நானம் பெறாமல் இரட்சிப்புக்குள்ளாக வர முடியாது.  இவ்வாறு மனந்திரும்பி ஞானஸ்நானம் பெறுபவர்களை தேவன் நீதிமானாக்குகிறார்.  தேவன் பொறுமையாயிருந்த முற்காலத்தில் நடந்த பாவங்களை தாம் பொறுத்துக் கொண்டதைக் குறித்து தம்முடைய நீதியைக் காண்பிக்கும் பொருட்டாக இயேசு கிறிஸ்துவினிடத்தில் விசுவாசமாயிருக்கிறவனை தேவன் நீதிமானாக்குகிறார்.  (2கொரி.7:9; அப்போஸ்தலர். 17:30; 2:38; யோவான்.3:3; ரோமர். 3:25; அப்போஸ்தலர். 8:37,38)

 ஞானஸ்நானத்தின் மூலமாக பரிசுத்த ஆவியைப் பெற்று, அது முதல் நித்திய ஜீவ பாதையில் நடந்து ஆவியின் கனிகளை வெளிப்படுத்தி மரண பரியந்தம் நிலைத்திருந்தால் உயிர்த்தெழுதலுக்குப் பின் “இரட்சிப்பு” உண்டாகும்.  சிலர் இயேசு கிறிஸ்துவை விசுவாசிப்பதன் மூலமாக இக்காலத்திலேயே மரணத்திலிருந்து விடுதலை கிடைக்குமா? என்று கேட்கிறார்கள்.  அப்படியல்ல, இப்பொழுது நாம் விசுவாசித்து, இரட்சிப்பிற்குள்ளாக வந்தாலும், நாம் ஆதாமின் சந்ததியினராக இருப்பதால், ஆதாமுக்குள் நாம் எல்லோரும் மரித்தே ஆக வேண்டும்.  கிறிஸ்து நம்முடைய பாவங்களுக்காக மரித்து உயிர்த்தெழுந்ததினால், நாமும் கிறிஸ்துவுக்குள்ளாக உயிர்த்தெழுந்து பிறகு நாம் “நித்தியஜீவனை” அதாவது “இரட்சிப்பை” பெற்றுக் கொள்வோம். ஆகையால் இம்மைக்காக மாத்திரம் நாம் கிறிஸ்துவின் மேல் நம்பிக்கையுள்ளவர்களாயிருந்தால் எல்லா மனுஷரைப் பார்க்கிலும் பரிதபிக்கப்படத்தக்கவர்களாயிருப்போம்.  (அப்.2:38; கலா.5:22,23; மத்தேயு. 24:13; யோவான்.5:28,29; 1கொரிந்தியர்.15:21,22; 15:19)


 மேலும் அவபக்தியுள்ளவர்கள் நிறைந்த பூர்வஉலகத்தை தேவன் ஜலப்பிரளயத்தினால் அழித்தார்.  நீதியை பிரசங்கித்தவனாகிய நோவா முதலான எட்டு பேரை மட்டும் அதிலிருந்து காப்பாற்றினார். அதைப்போலவே இந்த உலகமும் இப்போது அக்கினிக்கு இரையாக வைக்கப்பட்டிருக்கிறது.  (2பேதுரு.2:5; 3:5-7) உலகம் உண்டானது முதல் இதுவரை சம்பவித்திராததும், இனிமேலும் சம்பவியாததுமான பெரிய ஆபத்தை இந்த உலகம் எதிர் நோக்கியிருக்கிறது (மத்தேயு.24:21) இதில் நோவாவைப் போன்ற விசுவாசிகள் மட்டுமே காக்கப்படுவார்கள்.  மற்ற அனைவரும் அழிக்கப்படுவார்கள்.  இந்த மாபெரும் அழிவிலிருந்து காக்கப்பட வேண்டுமெனில் இப்போதே இயேசு கிறிஸ்து என்னும் பேழைக்குள் வந்து விடுங்கள்.


 இந்த உலகம் அழிக்கப்பட்ட பிறகு இயேசு கிறிஸ்து எல்லோரையும் உயிர்த்தெழுப்பி விசுவாசிகளுக்கு நித்திய ஜீவனையும், அவிசுவாசிகளுக்கு ஆக்கினைக்கு ஏதுவான தீர்ப்பையும் வழங்குவார்.  இந்த நியாத்தீர்ப்பின் நாளில் அவிசுவாசிகளுக்கு தண்டனையைக் கொடுத்து, அதே சமயத்தில் சத்தியத்தையும் போதிப்பார்.  சத்தியத்தைக் கேட்டு மனந்திரும்புகிறவர்களை ஆசீர்வதித்து, மனந்திருந்தாதவர்களை இரண்டாம் மரணத்தில் அழிப்பார். பிறகு வியாதி, கண்ணீர், மரணம், பாவம், எல்லாம் முற்றிலுமாக ஒழிக்கப்பட்டு, இந்த உலகம் முற்றிலுமாக புதுப்பிக்கப்படும்.  எல்லா மனுஷர்களும், சந்தோஷத்துடனும், சமாதானத்துடனும் வாழ்வார்கள்.  அப்போது இந்த உலகமே ஒரு சொர்க்கமாக இருக்கும்.  (யோவான்.5:28,29; ஏசாயா.26:9; வெளி.21:8,4)
 

இவ்வளவு பெரிதான இரட்சிப்பைக் குறித்து நாம் கவலையற்றிருப்போமானால் தண்டனைக்கு எப்படித் தப்பித்துக் கொள்வோம்? (எபிரேயர்.2:4) நீதிமானே இரட்சிக்கப்படுவது அறிதானால், பக்தியில்லாதவனும், பாவியும் எங்கே நிற்பான்?          (1பேதுரு.4:18) ஆகையால் நீ உன் வாலிபப்பிராயத்திலே உன் சிருஷ்டிகரை நினை. (பிரசங்கி.12:1) இதோ இப்பொழுதே அநுக்கிரககாலம், இப்பொழுதே இரட்சணிய நாள் (2கொரிந்தியர்.6:2)



__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard