கண்ணுக்குப் புலப்படாமல் மனிதனுடைய உடலுக்குள் இருக்கும் தனிப்பட்ட ஒரு உறுப்புதான் “ஆத்துமா” என்று அநேகர் எண்ணிக் கொண்டிருக்கிறார்கள். குறிப்பாக கிறிஸ்துவர்கள் மத்தியிலும் மனிதனுக்கு “ஆத்துமா” என்ற உறுப்பு இருக்கிறது என்ற நம்பிக்கை இருக்கிறது. மனிதன் செய்யும் நல்ல காரியங்களுக்கும் கெட்ட காரியங்களுக்கும் ஏற்றாற்போல் அவனது ஆத்துமா ஆசீர்வதிக்கவோ, தண்டிக்கவோபடுகிறது என்றும் நம்புகிறார்கள்.
ஆனால் ஆதி மனிதன் சிருஷ்டிக்கப்பட்ட வரலாற்றை வேதத்தில் பார்க்கும்போது “தேவனாகிய கர்த்தர் மனுஷனைப் பூமியின் மண்ணினாலே உருவாக்கி, ஜீவசுவாசத்தை அவன் நாசியிலே ஊதினார். மனிதன் ஜீவாத்துமாவானான்” என்று ஆதியாகமம் 2:7-ல் வாசிக்கிறோம். மண்ணிலிருந்து உருவாக்கப்பட்ட சாரீரம் ஆத்துமா அல்ல: ஊதப்பட்ட ஜீவசுவாசமும் ஆத்துமா அல்ல: சாரீரம் ஜீவசுவாசம் இவ்விரண்டின் சேர்க்கையால் சிந்தனையும் செயலுமுள்ள ஜீவியாக உருவாக்கப்பட்ட மனிதனே “ஆத்துமாவானான்.” ஆத்துமா என்ற தனிப்பட்ட ஒன்று அவனுக்குள் வைக்கப்படவில்லை.
சரீரம் + ஜீவசுவாசம் = ஜீவாத்துமா
உடலும், உயிர்க்காற்றும் சேர்ந்தது மனிதனாகிய “ஜீவாத்துமா” உயிருள்ள மனிதனையே ஆத்துமா என்று வேதம் கூறுகிறது. ஆத்துமாக்களின் எண்ணிக்கையே ஆட்களின் எண்ணிக்கை (யாத் 12:4,15,19; எண்.9:13) மேலும் அப்போஸ்தலர் நடவடிக்கை.2:41; 7:14; 27:37; வசனங்களில் தமிழ் வேதாகமத்தில் “பேர்” என்று இருப்பது ஆங்கில வேதாகமத்தில் ‘SOUL’ என்று இருப்பதை கவனிக்கவும். மனிதன் செய்யும் செய்கையை ஆத்துமா செய்வதாக கூறப்படுகிறது. ஆத்துமா ஆசீர்வதிக்கிறது. (ஆதி 27:4) ஆத்துமா புசிக்கிறது (யாத் 12:4) ஆத்துமா பாவம் செய்கிறது. (எசே 18:4) ஒவ்வொரு மனிதனும் ஒரு ஆத்துமாவாக இருப்பது போல மாடுகளும், ஆடுகளும் கழுதைகளும் கூட ஆத்துமாக்கள் என்றே வேதம் கூறுகிறது. (எண்.31:28;And levy a tribute unto the LORD of the men of war which went out to battle: one soul of five hundred, both of the persons, and of the beeves, and of the asses, and of the sheep) யோசுவா பட்டயத்தால் நரஜீவன்களை எல்லாம் வெட்டி சங்காரம் பண்ணினான் என்று சொல்லப்பட்ட இடங்களில் (யோசுவா.10:28; 30,32,35,37,39 மேலும் 11:11). நரஜீவன்கள் என்ற வார்த்தைக்கு Souls (ஆத்துமாக்கள்) என்று உள்ளது. ஆகவே உயிருள்ள ஜீவியே ஆத்துமாவாக இருக்கிறது.
ஆத்துமா என்ற சொல்லுக்கு எபிரேய மொழியில் ‘Nephesh’என்றும் கிரேக்க மொழியில் ‘Psuche’ என்றும் சொல்லப்படுகிறது. இதன் பொருளை Strong’s என்ற எபிரேய Concordance No.5315-ல் சொல்லும்போது உயிருள்ள ஜீவி(Breathing Creature i.e. animal) என்று கூறுகிறது. Nephesh என்ற வார்த்தை எபிரேய வேதாகமத்தில் 754 முறை சொல்லப்பட்டுள்ளது. இந்த ஒரே வார்த்தை ஆத்துமா, உள்ளம், ஆவி, உயிர், மனது, சிந்தை, இருதயம் என்றும்,மேலும் பலவாறாகவும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. Nephesh பெரும்பாலும் மனிதனையும், உயிரினங்களையும் குறிக்கிறது.
ஆத்துமா அழியுமா? அழியாதா? ஆத்துமா சாகுமா? சாகாதா?
சாகக்கூடிய தன்மையுள்ள மனித சரீரத்தைவிட்டு சாவாமையுள்ள ஆத்துமா பிரிவதே மரணம் என்றும், சரீரத்திலிருந்து பிரிந்த ஆத்துமா அழியாது என்றும், மனிதன் இறந்த பின்பும் அவன் ஆத்துமா உயிரோடு உணர்ச்சியோடு இருக்கிறது என்றும் அது இன்னொரு கூட்டைத் தேடிப்போகிறது என்றும் அநேகர் போதிக்கிறார்கள். ஆத்துமா அழியாது என்ற கொள்கையுடைய கிறிஸ்துவ போதகர்களும் மனிதன் மரித்தபின்பும் அவன் செய்த பாவ புண்ணியங்களுக்குத்தக்கபடி அவனது ஆத்துமா நரகத்துக்கோ மோட்சத்துக்கோ போகிறது என்று போதிக்கிறார்கள்.
சரீரத்தோடு ஜீவசுவாசம் சேரும்போது ஆத்துமாவான மனிதன் சிருஷ்டிக்கப்பட்டான் என்று முன்னமே பார்த்தோம். ஜீவாத்துமாவான மனிதன் முடிவில்லா காலம் உயிரோடு இருக்கும்படி நித்திய ஜீவனில் படைக்கப்பட்டான். ஆனால், அவன் தேவக்கட்டளையை மீறி பாவம் செய்தபடியால் பாவத்தின் சம்பளமான மரணத்தையடைய நேரிட்டது. அந்தப்படி மனித சரீரத்தை விட்டு ஜீவசுவாசம் அல்லது ஆவி பிரியும்போது அவன் மரித்து அழிந்து போகிறான். ஆவியில்லாத சரீரம் செத்ததாய் இருக்கிறது (யாக் 2:26) அதுபோல உடலை விட்டு ஆவி பிரியும்போது மனிதன் மரிக்கிறான். மனிதன் உண்டாக்கப்படுவதற்கு முன்பு அவன் எப்படி ஒன்றுமில்லையோ அப்படியே செத்தபின்பும் ஒன்றுமில்லாமல் போகிறான்.
யோபு.14:10-12; மனிதனோவென்றால் செத்தபின் ஒழிந்து போகிறான். மனுபுத்திரன் ஜீவித்துப்போனபின் அவன் எங்கே? தண்ணீர் ஏரியிலிருந்து வடிந்து, வெள்ளம் வற்றிச் சுவறிப்போகிறது போல, மனுஷன் படுத்துக்கிடக்கிறான். வானங்கள் ஒழிந்து போகுமளவும் எழுந்திருக்கிறதும் இல்லை. நித்திரை தெளிந்து விழிக்கிறதும் இல்லை.
யோபு.20:7; அவன்தன் மலத்தைப்போல என்றைக்கும் அழிந்துபோவான். அவனைக் கண்டவர்கள். அவன் எங்கே? என்பார்கள்.
சங்.103:15,16 மனுஷருடைய நாட்கள் புல்லுக்கு ஒப்பாயிருக்கிறது: வெளியின் புஷ்பத்தைப்போல் பூக்கிறான். காற்று அதன் மேல் வீசினவுடனே அது இல்லாமற்போயிற்று: அது இருந்த இடமும் இனி அதை அறியாது.
சங்.144:4 மனுஷன் மாயைக்கு ஒப்பாயிருக்கிறான்: அவன் நாட்கள் கடந்துபோகிற நிழலுக்குச் சமானம்.
யாக்கோபு.4:14; உங்கள் ஜீவன் எப்படிப்பட்டது? கொஞ்சக் காலந்தோன்றிப் பின்பு தோன்றாமற்போகிற புகையைப்போலிருக்கிறதே.
ஒருவன் மரணமடையும்போது ஆவி (ஜீவசுவாசம்) எடுத்துக்கொள்ளப்படுகிறபடியால் அவன் செத்து, மண்ணான அவனது சரீரம் தான் முன்னிருந்த பூமிக்கு திரும்பி அழிந்து போகிறான். (ஆதி.3:19) அவனுடைய ஆவி பிரியும்போது, அவன் தன் மண்ணுக்குத் திரும்புவான். அந்நாளிலே அவன் யோசனைகள் அழிந்துபோம். (சங்.146:4; பிர.12:7; யோபு.17:1; 14:1-14) மனிதரல்லாத மிருகங்கள். பறவைகள் போன்ற உயிரினங்களும் இப்படியே மரித்து அழிந்து போகின்றன. மிருகத்தைப் பார்க்கிலும் மனிதன் மேன்மையுள்ளவன் அல்ல. (சங்.104:29; பிர.3:19,20,21) ஆகவே மனிதன் அழிந்துபோகும் மிருகங்களுக்கு ஒப்பாயிருக்கிறான். (சங்.49:12,20)
மரித்தோர் அழிந்து இல்பொருளானபடியால் (ஏசா.41:12) அவர்கள் இனி உயிரோடும் உணர்ச்சியோடும் இருக்க முடியாது. உயிரோடு இருப்பவர்களுக்குத்தான் உணர்வும் சிந்தனையும் செயல்பாடும் இருக்குமேயொழிய மரித்தவர்களுக்கு இவை ஒன்றுமிராது. (ஏசா.38:18,19) மரித்தோர் ஒன்றும் அறியார்கள். (பிர 9:6) ஏனெனில் மரித்தபின் அவர்கள் கிடக்கிற பாதாளத்திலே (குழி அல்லது கல்லறையிலே) செய்கையும் வித்தையும் அறிவும் ஞானமும் இல்லை. (பிர.9:10; சங்.49:14; 88:3-12) மரித்தவர்கள் பாதாளம் என்னும் அழிந்துபோகும் பிரேதக்குழிக்குப்போவதாக வேதவசனம் கூறுகிறது.
மரித்த பின்பும் ஒருவன் உயிரோடும் உணர்ச்சியோடும் இருக்கிறான் என சாதிப்பவர்கள் “நீ சாகவே சாவாய்” என்று தேவன் சொல்லியிருக்க “ நீங்கள் சாகவே சாவதில்லை.” என்று சாத்தான் சொன்ன பொய்யை நம்புகிறவர்களாகவும் அந்தப் பொய்யைப் போதிக்கிறவர்களாகவும் இருக்கிறார்கள். (ஆதி.2:17; 3:4; யோவா.8:44) செத்தவன் குரலைப்போல் பேசுவதும், செத்தவர்களின் செயல்களைப்போல செய்வதும், செத்தவர்களைக்கொண்டு பேசுவதும், செத்துப்போன உறவினர்கள் நண்பர்களுடன் தொடர்பு கொண்டு ஆவியுடன் பேசுவதும் (Sprit Mediums) இறந்து போனவர்களிடம் தங்களுக்குத் தெரியாத விஷயங்களையும் இனிவரும் காரியங்களையும் கேட்டு தெரிந்து கொள்ள அஞ்சனம் பார்ப்பதும் குறிகேட்பதும் இவையாவும் சாத்தான் தான் ஆதியில் சொன்னப் பொய்யை மெய்ப்பிக்க செய்யும் முயற்சியே. உண்மையில் மரித்தவர்கள் யாரும் திரும்ப செயல்படுவதில்லை. சாத்தானும் பிசாசுக்களும் மனிதனை வஞ்சிக்க செய்யும் காரியம்தான் இவைகள்.
உயிருள்ளவர்களுக்காக செத்தவர்களிடம் விசாரிக்கக் கூடாது என தேவன் சொல்லியிருக்க (ஏசா 8:19) அசுத்த ஆவி ஆட்கொண்ட சவுல் அரசனைப்போல அஞ்சனம் பார்ப்போரும் குறிகேட்போரும் கீழ்ப்படியாதவர்களாய் இருக்கிறார்கள். (பிர 9:5,6,10; 1சாமு.28:3-20) மரித்தோர் ஒன்றும் அறியார்கள். மரித்தவர்கள் நமக்காக வேண்டுதல் செய்ய முடியாது. மரித்தோர் தேவனை துதியார்கள். (சங்.88:10-12; 6:5; ஏசா.38:18; சங்.115:17) புனிதர் என்றும் பரிசுத்தவான்கள் என்றும் பட்டம் பெற்றவர்களும்கூட உயிரோடிருக்கிறவர்களுக்காக மரித்தவர்கள் வேண்டுதல் செய்ய முடியாது. நாமும் மரித்தவர்களுக்காக தானதர்மங்களோ, வேண்டுதலோ செய்தாலும் எந்தப்பயனும் மரித்தவர்களுக்கு போய்சேராது.(பிர.9:6)
பாவம் செய்கிற ஆத்துமா சாகும். (எசே.18:4,20) ஆதாம் பாவம் செய்தான். அவன் மரித்தான்.(ஆதி.5:5) ஏதேன் தோட்டத்திலே தேவக்கட்டளையை மீறி ஆதாம் பாவம் செய்தபோது “ நீ மண்ணாயிருக்கிறாய். மண்ணுக்குத் திரும்புவாய்” என்று கடவுள் கூறினார். ஆகவே பாவத்தின் சம்பளம் மரணம். (ரோமர். 6:23) ஆத்துமா அழியும் என்றே வேதம் கூறுகிறது. (சங் 22:29)
நரகமா? கல்லறையா?
துன்மார்க்கன் மரித்தவுடன் நரகத்துக்குப்போய் அங்கே அவன் ஆத்துமா நித்திய காலமாய் அக்கினியில் வேதனைப்படும். நீதிமான் மரித்தவுடன் பரலோகம் சென்று நித்திய இன்பம் அனுபவிப்பார்கள் என்ற போதனையும் வேதத்திற்கு விரோதமானது. நித்திய நரக வேதனை என்ற உபதேசம், அன்பு, இரக்கம், கருணை, காருண்யமுள்ள தேவனின் உன்னதமான குணத்தை அவமாக்கும் பிசாசின் தவறான உபதேசம். நித்திய காலம் அக்கினி எரிந்து கொண்டிருக்கும் நரகம் என்ற ஒரு இடமே இல்லை. தமிழ் வேதாகமத்திலுள்ள நரகம், பாதாளம், குழி என்ற மூன்று வார்த்தைகளும் ஷியோல்’ (Sheol) என்ற ஒரே எபிரேய பதத்தின் மொழிப்பெயர்ப்பாகும். ‘ஷியோல்’ என்ற எபிரேய வார்த்தையை நீதிமான்களைக் குறிக்கும் இடங்களில் ‘பாதாளம், குழி’ என்றும் பொல்லாதவர்களையும் துன்மார்க்கரையும் குறிக்கும் இடங்களில் அதே வார்த்தைக்கு ‘நரகம் ‘ என்றும் மொழிபெயர்த்து விட்டார்கள் (உ-ம் சங்.9:17; யோபு.14:13)
தாவீது மரித்து தன் பிதாக்களோடே கல்லறையில் அடக்கம் பண்ணப்பட்டு அழிந்து போனான். தாவீது பரலோகம் போகவில்லை. (அப்.13:36; 2:29,34) ஆபேல், ஏனோக்கு, ஆபிரகாம் போன்ற நீதிமான்களும் மரித்தார்கள். யோபு, யாக்கோபு போன்ற நீதிமான்கள் மரித்து பாதாளம் சென்றதுபோல பொல்லாதவர்களாகிய கோராகின் கூட்டத்தாரும் பாதாளத்திற்கே போனார்கள். (ஆதி.42:38; யோபு.14:13; எண்.16:33)
நம்முடைய இரட்சகராகிய இயேசுவும் மரித்தபின்பு பாதாளத்திற்குப் போய் மூன்று நாட்கள் இருந்தார். (மாற்.15:46; அப்.2:31; ரோம.10:7) இவ்விதமாக நீதிமான்களும் அநீதிமான்களுமான யாவரும் மரித்தவுடன் வெவ்வேறு இடங்களுக்கு போகாமல் உணர்ச்சியற்ற செய்கையில்லாத பாதாளமாகிய பிரேதகுழிக்கே (ஷியோல்) போகிறார்கள். மிருகங்களும்கூட இந்த பாதாளத்திற்கே போகின்றன. ஆகவே மனிதர்களும் மிருகங்களும் மரித்தவுடன் பரலோகத்துக்கோ நரகத்துக்கோ போகாமல் பிரேதக்குழிக்கே போகிறார்கள் என்று வேதம் தெளிவாக கூறுகிறது. (பிர 9:5,10. 3:19,20; சங்.49:12,14)
பழைய ஏற்பாடு முழுவதும் பாதாளம், நரகம், பிரேதக்குழி என்றுள்ள தமிழ் பதங்களுக்கு ஷியோல்(Sheol) என்ற ஒரே எபிரேயபதம் பயன்படுத்தப்பட்டுள்ளது. பழைய ஏற்பாட்டில் 65 முறை ஷியோல் என்ற வார்த்தை உள்ளது. அதில் 31 இடங்களில் பாதாளம் கல்லறை அல்லது பிரேத குழி என்றும் 31 இடங்களில் நரகம் என்றும் 3 இடங்களில் குழி என்றும் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது. (Ref. Strongs Heb.Concordance No. 7585 Sheol - Meaning:World of dead,grave,hell,pit ) பாதாளம், நரகம், கல்லறை எல்லாம் ஒரே அர்த்தம் உடையவை. ஷியோல் (Sheol) என்ற எபிரேய பதத்திற்கு சரியாக புதிய ஏற்பாட்டில் ஹேடஸ் (Hades) என்ற கிரேக்க பதம் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. ஷியோல் என்ற வார்த்தையும் ஹேடஸ் என்ற வார்த்தையும் பிரேதக்குழியையே குறிக்கும். ஆகவே பரிசுத்த வேதாகம வசனங்களின்படி நரகம் (Hell) என்பது ஒரு வேதனை உள்ள இடம் அல்ல. அது உணர்ச்சியற்ற, சிந்தனை செயலற்ற பாதாளம் அல்லது பிரேத குழியேயாகும்.
அப்பேதுரு இயேசுகிறிஸ்துவின் உயிர்த்தெழுதலைக் குறித்து பேசும்போது பழைய ஏற்பாட்டிலிருந்து சங்.16:10-ம் வசனத்தை மேற்கோள் காட்டியுள்ளார்.
அப்.2:27; என் ஆத்துமாவைப் பாதாளத்தில் விடீர்; உம்முடைய பரிசுத்தர் அழிவைக் காணவொட்டீர்.
அப்.2:31;அவன் கிறிஸ்துவினுடையஆத்துமா,பாதாளத்திலேவிடப்படுவதில்லையென்றும் அவருடைய மாமிசம் அழிவைக் காண்பதில்லையென்றும் முன்னறிந்து, அவர் உயிர்தெழுதலைக் குறித்து இப்படிச் சொன்னான்.
இதை ஆங்கில வேதத்தில் பார்க்கும்போது (KJV) Acts.2:27;Because thou wilt not leave my soul in hell, neither wilt thou suffer thine Holy One to see corruption. Acts.2:31. He seeing this before spake of the resurrection of Christ, that his soul was not left in hell, neither his flesh did see corruption.
நமது இரட்சகரான இயேசு கிறிஸ்து நமக்காக சிலுவையிலே மரித்து கல்லறையிலே அடக்கம் பண்ணப்பட்டு பிரேதக்குழியாகிய பாதாளம் என்னும் நரகத்திலே(Hell-ஆங்கில வேதம்படி) மூன்று நாட்கள் இருந்தார். பாதாளத்திலே (நரகம் - Hell ) இருந்த இயேசுவை பாதாளத்திலேயே விட்டுவிடாபடி, அவரை தேவன் உயிரோடே எழுப்பினார். (அப்.2:32)
ஆகவே நரகம் (Sheol,Hades) என்பது அக்கினி எரிகிற இடம் அல்ல. அது பிரேதக்குழி (கல்லறை) தான் என்று வேதம் உரைப்பதை அறிந்து கொள்வோமாக.
எரிநரகமா? குப்பை கொட்டும் பள்ளத்தாக்கா?
கெகன்னா (GEHANNA) என்பதை எரிநரகம் அல்லது நரகம் என்று தமிழ் வேதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. மத்தேயு.5:22. 29,30-ல் குறிப்பிடும் இந்த இடம் கெகன்னா என்ற பள்ளத்தாக்கு. இது எருசலேமுக்கு தென்புறத்தில் உள்ளது. இதற்கு இன்னோம் பள்ளத்தாக்கு (Valley of Hinnom) என்றும் பெயர். எருசலேம் நகரத்தில், சேகரிக்கப்படும் குப்பைகளை இந்த பள்ளத்தாக்கில் கொட்டி எரிப்பார்கள். தொடர்ந்து அக்கினி எரிந்து குப்பைகளை அழிக்கும். அதிலே குப்பை மற்றும் கழிவுகள் மட்டுமல்லாது இறந்து போன மிருகங்களின் உடல்களையும் தற்கொலை செய்து கொண்ட மற்றும் மரண தண்டனை பெற்று மரித்த மனிதர்களின் உடல்களையும்போட்டு விடுவார்கள். குப்பைகளை எரிப்பதற்காக வைக்கப்பட்ட அக்கினி, குப்பைகளோடு போடப்பட்ட உடல்களையும் எரிக்கும். அதுவரைக்கும் அந்த உடல்கள் அழுகி புழுபுழுத்து புழு சாகாமலும் இருக்கும். இந்த இடத்தைத்தான் இயேசு கிறிஸ்து தன் பிரசங்கத்தில் குறிப்பிடுகிறார். மத்.5:22,29,30;10:28;18:9;23:15,33 மாற்கு 9:43,45,47;லூக்.12:5) கெகன்னா பள்ளத்தாக்கு தேவனின் நியாயத்தீர்ப்புக்கு அடையாளமாக பேசப்பட்டுள்ளது. கெகன்னாவில் போடப்பட்டவன் அழிந்து போவது போல பாவி அழிந்துபோவான்...
நீதிமான்களுக்கு நித்திய ஜீவன் வாக்களிப்பட்டிருப்பதுபோல பாவிகளுக்கும் துன்மார்க்கருக்கும் நித்திய அழிவையே தேவன் நியமித்திருக்கிறார். (சங்1:4-6: ஏசா 66:24; 2தெச.1:10; ரோம.6:23; ஆதி.2:17) துன்மார்க்கனின் முடிவு மரணம். ஒரு காலத்தில் மரணமும் பரிகரிக்கப்படும். (1கொரி.15:26) இந்த மரணத்தோடு கூட பாதாளமும் (நரகமும்) அழிக்கப்படும் .(வெளி.20:14)
ஆத்துமாவாகிய மனிதன் சாகாமல் அழிவிலிருந்து தப்பிப்பிழைத்து நித்திய ஜீவனை அடைய ஒரேவழி தேவக்குமாரனாகிய இயேசுகிறிஸ்துவே. (யோவா.3:16; அப்.4:12)
ஒன்றான மெய்த் தேவனாகிய உம்மையும் நீர் அனுப்பினவராகிய இயேசு கிறிஸ்துவையும் அறிவதே நித்திய ஜீவன். (யோவா 17:3)
சகோதரர் அவர்களே "பாதாளம்" என்ற சொல்லைபற்றிய தாங்கள் கணிப்பு தவறானதாகவே எனக்கு தெரிகிறது. பாதாளம் எனபது சில இடங்களில் பிரேத குழியை குறிக்கும் ஒரு சொல்லாக இருக்கலாம் ஆனால் எல்லா இடங்களிலும் அவ்வார்த்தை பிரேதகுழியை குறிக்கவில்லை.
பாதாளம் என்பது பூமிக்கு அடியில் இருக்கும் ஒரு படுகுழி! அது பிசாசின் சாம்ராஜ்யம். அதன் அதிபதி அப்பொல்லியோன் என்னும் சாத்தான் ஆவான் . மதியம் சுமார் ஒரு மணியளவில் நான் பட்ட பகலில் பூமிக்கு கீழேயுள்ள பாதாளம் என்னும் படுகுழி உள்ளிறங்கி ஏன் ஆத்துமா பார்த்த காரியங்கள் பற்றிய விளக்கங்களை அறிய கீழ்கண்ட சுட்டியை சொடுக்கவும்.
பாதாளம் என்பதை வெறும் பிரேத குழி என்று எடுத்துக்கொண்டுள்ள தங்கள் கருத்தின் அடிப்படையில் பார்க்கும்போது முரண்பாடாக தெரியும் வசனங்களை இங்கு பதிவிடுகிறேன். விளக்கம் தரவும்.
நீதிமொழிகள் 23:14நீ பிரம்பினால் அவனை அடிக்கிறதினால் பாதாளத்துக்கு அவன் ஆத்துமாவைத் தப்புவிப்பாயே.
ஒருவன் தான் மகனை பிரம்பால் அடித்தால் அவனை பிரேத குழிக்கு தப்புவித்துவிடலாமா?
பாதாளம் என்பது மரித்தவரை வைக்கும் வெறும் பிரேத குழியானால் அதன் நடுவில் இருந்து ஒருவர் பேசமுடியுமா?
எசேக்கியேல் 32:23பாதாளத்தின் பக்கங்களில் அவர்களுடைய பிரேதக்குழிகள் இருக்கிறது
இங்கு பாதாளம் வேறு அதன் பக்கங்களில் இருக்கும் பிரேதகுழி வேறு என்று வசனம் சொல்கிறது.
ஆதியாகமம் 37:35நான் துக்கத்தோடே என் குமாரனிடத்தில் பாதாளத்தில் இறங்குவேன்
அதாவது மகனை வைத்துள்ள அதே பிரேத குழிக்குள் இவரும் அவனோடு இறங்க போகிறாரா?
லூக்கா 16:22பின்பு அந்தத் தரித்திரன் மரித்து, தேவதூதரால் ஆபிரகாமுடைய மடியிலே கொண்டுபோய் விடப்பட்டான்; ஐசுவரியவானும் மரித்து அடக்கம் பண்ணப்பட்டான். லூக்கா 16:23பாதாளத்திலே அவன் வேதனைப்படுகிறபோது,
மரித்த ஐஸ்வர்யவன் பாதாளத்தின் வேதனைபட்டதாக இயேசு கூறுகிறார்? இல்லாத ஒன்றை உவமையாக கூறி இயேசு எல்லோரையும் பயம்காட்டினாரா?
லூக்கா 8:31தங்களைப் பாதாளத்திலே போகக் கட்டளையிடாதபடிக்கு அவைகள் அவரை வேண்டிக்கொண்டன.
இங்கு பிசாசின் ஆவிகளை பிரேத குழிக்குள் போகேண்டாம் என்று வேண்டிகொண்டனவா? ஆவிகளை பிரதேகுழிக்குள் போகவைக்க முடியுமா?
அதுபோல் "ஆத்துமா" என்னும் வார்த்தை அனேக இடங்களில் ஒரு மனித உயிரை குறிப்பதர்க்கோ
அல்லது மனித சரீரத்தை குறிப்பதர்க்கோ பயன்படுத்தபட்டுள்ளது என்பதை நானும் ஏற்கிறேன். ஆகினும் மனிதனுக்கு "ஆவி ஆத்துமா சரீரம்" என்ற மூன்று நிலைகள் இருக்கிறது என்பதை சொல்லும் வசனங்களும் உண்டு அதற்க்கான விளக்கம் என்ன?
கீழ்கண்ட இரண்டு வசனத்திலும் ஆவி வேறு ஆத்துமா வேறு சரீரம் அல்லது ஊன் வேறு என்று வேறுபடுத்தி காட்டபட்டுள்ளது.
I தெசலோனிக்கேயர் 5:23உங்கள் ஆவி ஆத்துமா சரீரம்முழுவதும், நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்து வரும்போது குற்றமற்றதாயிருக்கும்படி காக்கப்படுவதாக
ஆத்துமாவை தனியேயும் சரீரத்தை தனியேயும் கொல்ல முடியும் என்று கீழ்கண்ட வசனம் போதிக்கிறது.
மத்தேயு 10:28ஆத்துமாவைக் கொல்ல வல்லவர்களாயிராமல், சரீரத்தை மாத்திரம் கொல்லுகிறவர்களுக்கு நீங்கள் பயப்படவேண்டாம்; ஆத்துமாவையும் சரீரத்தையும் நரகத்திலே அழிக்க வல்லவருக்கே பயப்படுங்கள்.
ஒருவர் கொல்லப்பட்டபின்னர்கூட ஆவிக்குரிய கண்களால் ஆத்துமவை பார்க்கமுடியும் என்பதை கீழ்கண்ட வசனங்கள் நமக்கு தெரிவிக்கின்றனர்
வெளி 6:9அவர் ஐந்தாம் முத்திரையை உடைத்தபோது, தேவவசனத்தினிமித்தமும் தாங்கள் கொடுத்த சாட்சியினிமித்தமும் கொல்லப்பட்டவர்களுடைய ஆத்துமாக்களைப் பலிபீடத்தின்கீழே கண்டேன்
வெளி 20:4 . இயேசுவைப்பற்றிய சாட்சியினிமித்தமும் தேவனுடைய வசனத்தினிமித்தமும் சிரச்சேதம்பண்ணப்பட்டவர்களுடைய ஆத்துமாக்களையும், ..............கண்டேன்.
பின்னர்தான் அவர்கள் உயிர்க்கிறார்கள் என்பதை கீழ்கண்ட வசனம் சொல்கிறது.
அவர்கள் உயிர்த்து கிறிஸ்துவுடனேகூட ஆயிரம் வருஷம் அரசாண்டார்கள்.
எந்த ஒரு வேத வசனமும் தன்னில்தனே வல்லமை உள்ளது! எனவே எனது கருத்துப்படி நாம் கொண்டிருக்கும் கொள்கைக்கு எதிராக ஒரேஒரு வசனம் இருந்தாலும் அதக்கான தெளிவை பெறுவது அவசியம் அல்லது இரண்டையுமே கட்டாயம் ஏற்றே ஆகவேண்டும்.
__________________
நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)அவர்(கர்த்தராகியதேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்; (ஏசா 25:8)