கிறிஸ்து(மஸ்) பிறந்த நாள்
ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாதம் 25-ம் நாள் மீட்பராகிய இயேசு கிறிஸ்துவின் பிறந்தநாளாக “கிறிஸ்துமஸ் பண்டிகை” கொண்டாடப்பட்டு வருகிறது. மெய்யாகவே இயேசுவின் பிறந்த நாள் டிசம்பர் 25-ம் தேதிதானா? இதை ஏன் டிசம்பர் 25-ம் தேதி கொண்டாடி வருகிறார்கள்? இதன் அவசியம் என்ன? இதன் அடிப்படை காரணம் என்ன? என்று அறிந்து கொள்ள அநேகர் முயற்சிசெய்வதில்லை. எந்த ஒரு காரியமாய் இருந்தாலும் அதை நன்றாய் ஆராய்ந்தறிந்து, பகுத்து, தெளிவடைந்து கைக்கொள்வதே நன்று. நமது முன்னோர்கள் செய்துவரும் சில பாரம்பரிய வழக்கத்தின்படியே, பண்டிகைகளையும், தேர் திருவிழாக்களையும் கொண்டாடி வருகிறோம். எல்லாவற்றையும் சோதித்துப் பார்த்து நலமானதைப் பிடித்துக்கொள்ளுங்கள் என்ற புனித பவுல் அறிவுரையின்படி கிறிஸ்துமஸ் பண்டிகை வேதத்திற்கு இசைவான காரியம்தானா? என்பதை நமது திருமறையான பைபிள் அடிப்படையில் சில காரியங்களை கவனிக்கலாம்.
இயேசுவின் பிறந்தநாள் டிசம்பர் 25-ம் தேதி அல்ல என்பதற்கு ரூபகாரம்-1.
அதாவது, இயேசு கிறிஸ்துவுக்கு முன்னோடியான யோவான் ஸ்நானகன் என்ற ஸ்நான அருளப்பர் வயதிலேயே இயேசுவுக்கு ஆறு மாதங்களுக்கு மூத்தவர். எப்படியெனில் காபிரியேல் தூதர் இயேசுவின் தாயாகிய மரியாளுக்கு வாழ்த்துதல் கூறும்போது யோவான் ஸ்நானகனின் தாயாகிய எலிசபெத்துக்கு இது ஆறாம் மாதம் என்றார். ஆகவே, இயேசுவின் பிறந்த நாளை கண்டு பிடிக்க யோவான் ஸ்நானகனின் பிறப்பை கவனிப்பது அவசியம். எனவே, லுக்கா 1:5 முதல் 20 வசனங்களை வாசிக்கவும்.
இதில் 5-ம் வசனத்தில் அபியா என்ற ஆசாரிய முறைமையில் (Order) சகரியா என்ற ஒருவன் இருந்தான் என்றும், 8-9 வசனங்களில் சகரியா தன் ஆசாரிய முறைமையின்படி தேவ சந்நிதியிலே தூபங்காட்டுகிறதற்கு சீட்டைப் பெற்றான் என்று வாசிக்கிறோம். எனவே யோவான் ஸ்நானகனின் தகப்பனாகிய சகரியா ஆலயத்திலே ஊழியம் செய்த, அந்த அபியாவின் முறை என்னவென்றும், அது எக்காலம் என்றும் நாம் அறிவது அவசியம். அதாவது தாவீது அரசனின் காலத்தில் ஆலயத்தில் ஆசாரிய ஊழியம் செய்ய, முறைமை வகுக்கப்பட்டது எப்படியெனில் ஆசாரிய ஊழியம் செய்ய 24 ஆசாரியர்கள் இருந்தார்கள். அவர்கள் ஒவ்வொருவரும் ஒரு மாதத்திற்கு இரண்டு இரண்டு பேராக 12 மாதத்திற்கும் 24 ஆசாரியர்களாக முறைப்படுத்தப்பட்டனர். ஒரு மாதத்தின் முதல் 15 நாட்களுக்கு ஒரு ஆசாரியனும் பின் 15 நாட்களுக்கு ஒரு ஆசாரியனுமாக முறைப்படுத்தப்பட்டு, ஆசாரியர்களின் பெயர்களை எழுதி சீட்டுப் போட்டு யார் யார் எப்போது ஆலயத்திலே ஊழியம் செய்ய வேண்டும் என்று, தாவீது அரசன் முறைப்படுத்தி இருந்தான். முதலாம் சீட்டுப் பெற்றவன் முதலாம் மாதம் முன் 15 நாட்களுக்கும், இரண்டாவது சீட்டுப் பெற்றவன் முதலாம் மாதம் பின் 15 நாட்களுக்கும் ஆசாரிய ஊழியம் செய்ய வேண்டும். அந்தப்படி, எட்டாவது அபியா என்ற ஆசாரியனுக்கு சீட்டு விழுந்தது. எட்டாவது எண்ணும்போது அபியாவின் ஊழியகாலம் எபிரேயரின் மாதப்படி 4-ம் மாதமாகிய தம்மூஸ் மாதம் பின் 15 நாட்களாகும். இந்த காரியங்களை 1 நாளாகம புஸ்தகம் 21-ம் அதிகாரத்தில் பார்க்கலாம். எனவே, சகரியா ஆலயத்தில் ஊழியம் செய்த காலம் அவனது முன்னோரான அபியாவின் முறைமையின்படி எபிரேய மாதமான 4-ம் மாதம், தம்மூஸ் மாதத்தின் பின் 15 நாளாகும். சகரியாவின் இந்த ஊழியகாலம் நிறைவேறிய பின்பு அவன் வீட்டுக்குப்போனான். எந்த ஆசாரியனும் தனது ஆலய ஊழியக்காலத்தில் வீட்டிற்குப் போகமாட்டான். அந்த 15 நாட்களும் ஆலயத்திலே தங்கியிருப்பார்கள். ஊழியகாலம் நிறைவேறிய பின்பே தங்கள் வீடுகளுக்குப் போவது வழக்கம் அதன்படி, சகரியா தனது ஊழிய காலம் நிறைவேறின பின்பு, தனது வீட்டிற்குப் போனான். அதன் பிறகு அவன் மனைவி கர்பவதியானாள். (லுக்.1:23-24) எனவே, யோவான் ஸ்நானகளின் தாய் எலிசபெத்து கர்ப்பம் தரித்து எபிரேய மாதப்படி 5-ம் மாதமாகிய ஆப் என்னும் மாதம் இது தமிழ் மாதத்திற்கு ஆடிமாதம், ஆங்கில மாதத்திற்கு ஜீலை மாதமாகும். எலிசபெத்தின் ஆறாம் மாதத்தில் காபிரியேல் தூதர் மரியாவிடம் அனுப்பப்பட்டார். (லுக்.1:26-28) ஆகவே, காபிரியேல் மரியாளை சந்தித்து தேவசித்தத்தை தெரிவிக்கவும். உன்னதமானவரின் பெலன் நிழலிடவும், மரியாள் கர்ப்பவதியானாள். எனவே மரியாள் கர்ப்பம் தரித்தது எலிசபெத்தின் ஆறாம் மாதத்தில், அதவாது, ஆடி மாதத்திலிருந்து ஆறு மாதம் தள்ளி மார்கழி மாதத்திலிருந்து பத்தாம் மாதம் இயேசு பிறந்த மாதம். அதாவது மார்கழி 1, தை 2, மாசி 3, பங்குனி 4, சித்திரை 5, வைகாசி 6, ஆனி 7, ஆடி 8, ஆவணி 9, புரட்டாசி 10. புரட்டாசி மாதமே இயேசு பிறந்தமாதம். இது ஆங்கில மாதத்திற்கு அக்டோபர் மாதம். எனவே, இயேசு பிறந்தது டிசம்பர் 25-ம் தேதியல்ல தமிழ் மாதமாகிய புரட்டாசி கடைசியிலும், ஆங்கில மாத்திலே அக்டோபர் முதலுக்குமாகும். இது எபிரேய மாதத்திற்கு ஏழாம் மாதம் எத்தானீம் மாதமாகும்.
இயேசுவின் பிறந்தநாள் டிசம்பர் 25-ம் தேதி அல்ல என்பதற்கு ரூபகாரம்-2.
அதாவது இயேசுவின் மரணநாள் வேதத்தில் திட்டமாக கூறப்பட்டுள்ளது. இது யூதர் முறைப்படியான நீசான் மாதம் 14-ம் தேதி, முதல் மாதமாகிய நீசான் மாதம் நமது தமிழ் மாதமான பங்குனி மாதத்திற்கு சமமானது. ஆங்கில மாதம் மார்ச் கடைசியிலோ அல்லது ஏப்ரல் மாதம் முதலுக்கோ இருக்கும். இயேசு தமது 33½ வசயதில் மரித்தார் என்பதை தானியேல் தீர்க்கதரிசியின் புத்தகத்தின் வாயிலாக திட்டமாக அறியலாம். (தானி.9:24-47) இயேசு 33 வயதில் அல்ல. 33½ வயதில் மரித்தார். இது மார்ச் மாதக் கடைசியிலோ அல்லது ஏப்ரல் முதலுக்கோ வருகிறது என்றால் அவரது பிறந்தநாள் அதற்கு 6 மாதத்திற்கு முன்னதாக இருக்க வேண்டும். எனவே, மார்ச் மாதத்திலிருந்து பின்நோக்கி 6 மாதம் சென்றால் மார்ச் 1, பிப்ரவரி 2, ஜனவரி 3, டிசம்பர் 4, நவம்பர் 5, அக்டோபர் 6. எனவே, இயேசு பிறந்தது டிசம்பர் 25 அல்ல. அக்டோபர் மாதத்தில் என்பது தெளிவு.
இயேசுவின் பிறந்தநாள் டிசம்பர் 25-ம் தேதி அல்ல என்பதற்கு ரூபகாரம்-3.
இயேசுகிறிஸ்து டிசம்பர் 25-ல் பிறக்கவில்லை என்பதற்கு மேலும் ஒரு எடுத்துக்காட்டு உண்டு. அதாவது, இயேசுகிறிஸ்து பிறந்தபோது அவரது பிறப்பை தேவ தூதர் மேய்ப்பர்களுக்கு அறிவித்தார் என வாசிக்கிறோம். தேவ தூதர் மேய்ப்பர்களுக்கு தரிசனமானபோது அவர்கள் வயல்வெளிகளில் ஆட்டு மந்தைகளை வைத்திருந்தார்கள். (லூக்.2:8:11) டிசம்பர் மாதத்தில் நம் நாட்டில் இருப்பதுபோல கிஸ்லேவ் என்ற ஒன்பதாம் மாதம் பலஸ்தீனாவில் கடுங்களிராகயிருக்கும் அது அடைமழை காலமாகவும், குளிர்காலமாகவும் இருப்பதால் அக்காலங்களில் மேய்ப்பர்கள் தங்கள் மந்தைகளை வயல்வெளிகளில் நிறுத்தமாட்டார்கள் இதை எஸ்றாவின் புத்தகத்திலும், பலஸ்தீனா சரித்திரங்களிலும் நாம் அறியலாம். (எஸ்றா. 10:9,13: எரே. 3:22) எனவே, மேய்ப்பர்கள் வயவெளியில் தங்கியிருந்த காலம் மழைக்காலமாகிய டிசம்பருக்கு முன்னான காலமாக இருக்க வேண்டும். அக்டோபர் மாதமே மந்தைகளை வயல்வெளிகளில் வைப்பதற்கு ஏற்ற காலம். எனவே, இயேசு பிறந்தது டிசம்பர் மாதத்தில் அல்ல. அது டிசம்பருக்கு முன்னான அக்டோபர் மாதத்தில்தான் என்பதை நிதானித்து பார்க்கும் போது அறிந்து கொள்ளலாம்.
இயேசுவின் பிறந்தநாள் டிசம்பர் 25-ம் தேதி அல்ல என்பதற்கு ரூபகாரம்-4.
மேலும், சில காரியங்களை கவனிப்போமானால் இந்த கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடும் வழக்கம், திருச்சபையின் தொடக்க காலங்களில் இல்லை. சுமார் 4-ம் நூற்றாண்டு வாக்கிலேதான் கிறிஸ்துமஸ் பண்டிகை முதல் முதலாகக் கொண்டாடப்பட்டதாக Encyclopaedia மூலமாக அறியலாம். இதை ஆதி திருச்சபை வரலாறு நமக்குத் தெளிவாக்குகிறது. அதாவது வடஜரோப்பா கண்டத்தில் வாழ்ந்த துத்தானிய ஜாதியினர் கிறிஸ்து மார்க்கத்தை தழுவும் முன்னே, அவர்கள் இயற்கை சக்திகளை வழிபட்டு வந்தார்கள். சூரியனை வணங்கி அதன் கால மாற்றங்களை பண்டிகையாக கொண்டாடி வந்தனர். அதாவது சூரியனுக்கும், பூமிக்கும் உள்ள தொடர்பில், சூரியன் பூமத்திய ரேகையிலிருந்து வடக்கு நோக்கி சஞ்சரித்து டிசம்பர் 22-ந் தேதி வடஅட்சத்தில் கடகரேகையை அடைகிறது. இது வட ஐரோப்பாவில் சூரியன் தென்படும் உச்ச நிலையாகும். இது ஜுலியன் காலண்டர்படி டிசம்பர் 25-ம் தேதி என கணிக்கபட்டது. ஆகவே, அந்த நாளிலே அங்கு வாழ்ந்த மக்கள் சூரியனுக்கு ஒரு பெரிய பண்டிகையாக “ஒளித்திருவிழா” (Festival of Fires) என்று கொண்டாடி வந்தனர்.இதன் தொடர்ச்சியாக அதிலிருந்து 8-ம் நாள் “மகிழ்ச்சி திருவிழா” (Joy Festival ) என்று ஜனவரியில் கொண்டாடி வந்தனர். ஜெர்மானிய துத்தானிய ஜாதியினரான இவர்கள் தாங்கள் கிறிஸ்தவர்களாக மாறியும் தங்கள் பழைய பழக்கவழக்கங்களை விட்டுவிட மனம் இல்லாததால் டிசம்பர் 25 கிறிஸ்து பிறந்த நாளாகவும் அதிலிருந்து 8-ம் நாள் ஜனவரி முதல் தேதி இயேசுவின் விருத்தசேதன நாளாகவும் பிரகடனப்படுத்திவிட்டனர். மேலும், கிறிஸ்துமஸ் பண்டிகையன்ற நடைபெறும் “கிறிஸ்துமஸ் மரம்” வைத்தல், “கிறிஸ்துமஸ் தாத்தா” கிறிஸ்துமஸ் கேக் வெட்டுதல், வாத்து புசித்தல் போன்ற சடங்குகள் புராதன நகரமான பாபிலோனிலிருந்து வந்தது என்பதை The world book Encyclopaedia - The Encyclopaedia of Religion and Ethics - the Encyclopaedia Americana போன்ற புத்தகங்களால் அறியலாம்.
இயேசுவின் பிறந்தநாள் டிசம்பர் 25-ம் தேதி அல்ல என்பதற்கு ரூபகாரம்-5.
இயேசுவின் பிறந்தநாளை கொண்டாடும்படி வேதத்தில் எங்கும் சொல்லப்படவில்லை. சீடர்களும் கொண்டாடவில்லை. ஆனால் கிறிஸ்துவின் மரண நாளை நினைவுகூறும்படி கற்பிக்கப்பட்டுள்ளது (லூக். 22:19) கர்த்தரின் ஞாபகார்த்தபஸ்காவாகிய இராப்போஜன பண்டிகையே அவரது மரணத்தை நினைவு கூறும் நாளாயிருக்கிறது. (1. கொரி. 11:22-26)
கிறிஸ்துமஸ் பண்டிகை நாளன்று நடைபெறும் காரியங்களை பார்க்கும் போது மிகவும் அருவருக்கத்தக்கதாய் இருக்கிறது. கிறிஸ்துமஸ் நாளை மகிழ்ச்சியாக கொண்டாடுகிறேன், என்று கூறிக்கொண்டு குடிவெறியாலும் நல்ல உணவுகளை தயாரித்து உண்டு பெருந்தீனியினாலும், சினிமா, டிராமா, பாட்டுக்கச்சேரிபோன்ற களியாட்டங்களினாலும் விளையாட்டு விழா போன்ற காரியங்களில் நேரத்தை செலவிட்டு என் வசனத்தைக் கைக்கொண்டு நடங்கள் என்ற கட்டளையை அவமாக்குகிறார்கள்.
ஆகவே, பிரியமானவர்களே பாரம்பரிய சடங்காச்சாரங்களையும் வேதத்தில் சொல்லப்படாத பண்டிகை நாட்களையும் தவிர்த்து தேவனுக்கு உகந்த பிள்ளைகளாக ஜீவிப்போமாக.