ஊழியக்காரர் வீட்டுக்கார அம்மாவிடம் ஒரு செம்பு தண்ணீரை வாங்கி அதை இயேசுவின் இரத்தமாக மாறும்படி கட்டளையிட்டு(!) ஜெபித்து காத்து கருப்பு அண்டாதிருக்க வீட்டின் நிலைக்கால்களிலெல்லாம் தெளிக்கிறார் (காட்டப்படும் ஆதாரம் யாத்திராகமம் 12)
கிருபையும் இரக்கமுமுள்ள பிதாவே! மீண்டும் ஒருமுறை ஐயாவின் குடும்பத்தைக் காணச் செய்த கிருபைக்காக நன்றி! இதோ குடும்பத்தின் ஒவ்வொரு நபரையும் உமது ஆசீர்வதிக்கும் கரங்களில் ஒப்புக் கொடுக்கிறேன் கர்த்தாவே! ஒவ்வொருவரையும் பேர்பேராக ஆசீர்வதியும்.
குடும்பத்தின் தலைவரான ஐயாவை உமது கரங்களில் ஒப்புக்கொடுக்கிறேன். ஊழியக் காரியங்களுக்கு உற்சாகமாய்க் கொடுக்கிற மகன் கர்த்தாவே! இன்னும் அதிகதிகமாய்க் கொடுக்கும்படி அவருடைய கரங்களை பலப்படுத்தும். ஐயாவுடைய தொழிலை ஆசீர்வதியும்!(உபா 28:8), கையின் பிரயாசங்களை வாய்க்கப் பண்ணும் (சங் 128:2), வியாபாரத்தின் எல்லைகளை விரிவாக்கும் (1 நாளா 4:10), மேலும் புதிய புதிய ஆர்டர்களைத் தாரும் ஸ்வாமி.
சிறிது நேர நிசப்தம்… (ஊழியர் தரிசனம் காண்கிறார்)
மகனே! இதோ! கர்த்தர் உங்களுக்கு தொழிலில் உள்ள பிரச்சனைகளை எனக்கு தரிசனத்தில் காட்டுகிறார்! ஆம்! உங்கள் வியாபாரத்துக்கு எதிராக பில்லிசூனியம் வைக்கப்பட்டிருக்கிறது. ”பா” என்ற எழுத்தில் ஆரம்பிக்கும் பேரையுடைய ஒரு நபர் இதைச் செய்திருக்கிறார். இதனிமித்தம் உங்கள் கல்லாவின் மீது ஒரு சர்ப்பம் அமர்ந்திருப்பதைக் காண்கிறேன்!
(உரத்த சத்தமாக) இயேசுவின் நாமத்தினாலே போ! பிசாசே! உன்னைக் கடிந்து, கட்டி, சபித்து, நரகத்திலே தூக்கி எறிகிறேன்!!! (வீட்டார் அனைவரும் நடுங்குகிறார்கள்)
கர்த்தருடைய ஸ்தானாதிபதியாக அந்தகார வல்லமைகளை நோக்கி இயேசுவின் நாமத்தில் பேசுகிறேன். இது தசமபாகத்தில் சத்தியத்துக்குக் கீழ்ப்படியும் குடும்பம். தசமபாகத்தில் கீழ்ப்படிவதால் சத்துருவாகிய நீ இவர்கள் பொருளாதாரத்தில் கைவைக்க முடியாது. இவர்கள் 10 சதவிகிதத்தில் கீழ்ப்படிந்ததால் மீதமுள்ள 90% சதவிகிதமும் என்னுடைய காவலுக்குக் கீழ் உள்ளது என கர்த்தர் சொல்லுகிறார்.
ஆ…….மேன்! இதோ! சத்துரு அலறி ஓடுகிறதைக் காண்கிறேன்! மகனே! உனக்கு உண்டான கர்த்தருடைய வார்த்தையைக் கேள்! உனக்கு விரோதமான ஆயுதம் வாய்க்காது (ஏசா 54:17), உனக்கு விரோதமான மந்திரவாதமுமில்லை குறி சொல்லுதலும் இல்லை என்று கர்த்தர் சொல்லுகிறார் (எண் 23:23). கர்த்தரை கனப்படுத்து, அவருடைய ஊழியக்காரரை கனப்படுத்து உன் பிரச்சனைகளை நான் பார்த்துக் கொள்வேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்.
ஆண்டவரே! இவர்கள் சத்துருக்கள் கண்களுக்கு முன்பாக இவர்களுக்கு ஒரு பந்தியை ஆயத்தப் படுத்தி இவர்கள் தலையை எண்ணையால் அபிஷேகியும் (சங் 23:5). இவர்களுக்கு எதிராக எழும்பின சத்துருக்கள் வெட்கப்பட்டுப் போவார்களாக! உம் பிள்ளைகளுடைய களஞ்சியங்கள் பூரணமாய் நிரம்பியிருக்கட்டும், ஆலைகளில் திராட்சைரசம் புரண்டு ஓடட்டும் (நீதி 3:10) இவர்களது அம்பாரம் மீந்திருக்கட்டும் (2 நாளா 31:10)
ஆண்டவரே! அடுத்தவாரம் ஐயாவுடைய கடைக்கு அரசு அதிகாரிகள் பரிசோதனையிட வருவதாக அவர் கூறியதை நீர் அறிந்திருக்கிறீர். சோதோம் பட்டணத்து மக்களைக் குருட்டாட்டம் பிடிக்கச் செய்தவரே! இயேசுவின் நாமத்தினாலே அந்த அதிகாரிகளின் கண்களைக் கட்டி ஜெபிக்கிறேன்.(ஆதி 19:11) அவர்களால் எந்தப் பிரச்சனைகளும் உண்டாகாதபடி காத்துக் கொள்ளும்.
ஜெபத்தை கேட்டு கர்த்தர் பதிலளித்தபடியால் கரங்களைத் தட்டி ஆண்டவரை ஸ்தோத்தரிப்போமா!
ஆண்டவரே! அம்மாவுக்காக வருகிறேன். வீட்டுக் காரியங்களைக் கூட கிடப்பின் போட்டுவிட்டு உம்முடைய ஆலயமே கதியாகக் கிடக்கின்ற மகள் ஆண்டவரே! பலமுறை வீட்டில் கணவனாருக்கும் பிள்ளைகளுக்கும் சமைக்காமல் கூட விட்டுவிட்டு தவறாமல் வந்து ஆலயத்தின் காரியத்தில் ஜாக்கிரதையாய் பங்கு கொண்ட தியாகத்தை அறிந்திருக்கிறீர். உம்முடைய அடியேன் வீட்டுக்குவரும் பொழுதெல்லாம் நல்ல உணவளித்து உபசரிக்கிற மகள் கர்த்தாவே! இதோ! சீஷன் என்னும் நாமத்தினிமித்தம் இந்தச் சிறியரில் ஒருவனுக்கு ஒருகலசம் தண்ணீர் மாத்திரம் குடிக்கக் கொடுக்கிறவனும் தன் பலனை அடையாமற்போகான் என்று சொன்னீரே (மத் 10:42)
ஆண்டவரே! அம்மாவுக்கு பக்கத்து வீட்டுப் பெண்ணுடன் கடந்தவாரம் ஏற்பட்ட பிரச்சனையை அறிவீர். கர்த்தாவே! உனக்கு விரோதமானவர்கள் உன் பட்சத்தில் வருவார்கள் என்று வாக்குத்தத்தம் சொல்லுகிறது.(ஏசா 54:15). அதின்படியே அம்மாவுக்கு விரோதமானவர்கள் அம்மாவின் பட்சத்தில் வலிய வருவார்களாக! உம்முடைய மகளை வெட்கப்பட விடாதேயும் ஆண்டவரே! (சங் 31:17)
ஆண்டவரே! அம்மாவுக்கு கால் எலும்பில் உள்ள பிரச்சனையை அறிந்திருக்கிறீர். ஆண்டவரே அம்மாவின் கால்களில் கிலேயாத்தின் பிசின் தைலமாகிய இயேசுவின் இரத்தம் பூசப்படுவதாக! என் கரங்களின் கிரியைகளைக்குறித்தும் எனக்குக் கட்டளையிடுங்கள் என்று சொன்னவரே! (ஏசா 46:13). இதோ! அம்மாவுடைய கால் கூட உம்முடைய கரத்தின் கிரியைதானே சுவாமி! உம்முடைய வார்த்தையின்படியே உம்முடைய கரத்தின் கிரியை குறித்து உமக்குக் கட்டளையிடுகிறேன்.
இதோ! ஜெபத்தை கேட்டு அம்மாவுக்கு சுகங்கொடுத்த படியால் கரங்களைத் தட்டி ஆண்டவரை ஸ்தோத்தரிப்போமா!
அன்பான பாட்டியம்மாவுக்காக ஜெபிக்கிறேன் ஆண்டவரே! சுகம், பெலன் நீடிய ஆயுள் தாரும். கண்கள் முன்பு போல தெரியவில்லை டி.வி கூட பார்க்க முடியவில்லை என்று சொல்லி வருத்தப் பட்டார்கள் ஆண்டவரே!
இதோ!…பர்திமேயுவின் கண்களைத் தொட்ட ஆண்டவர் பாட்டியம்மாவின் கண்களைத் தொட்டு சுகமாக்கும்படியாய் ஜெபிக்கிறேன்.
பிள்ளைகளுக்காக வருகிறோம் கர்த்தாவே! இதோ, கர்ப்பத்தின் கனி கர்த்தரால் வரும் சுதந்திரம் என்று சொன்னீரே! இம்மட்டும் பிள்ளைகளை ஆசீர்வதித்து வந்த கிருபைக்காக உமக்கு ஸ்தோத்திரம். படிப்பில் நல்ல ஞானத்தைத் தாரும். அடுத்தவாரம் நடக்கவிருக்கிற தேர்வுகளுக்காக வருகிறோம். நல்லபடியாக எழுத கிருபைதாரும். பேப்பர் திருத்துகிறவர்களின் கண்களில் தயவைத் தாரும், நல்ல மதிப்பெண்களை வழங்கக் கட்டளையிடும். பிள்ளைகள் மருத்துவராக இஞ்சினியராக வாழ்க்கையில் உயரட்டும் ஆண்டவரே!
ஆண்டவரே! இப்பொழுதும் கூட ஐயாவின் கரங்களில் இருக்கும் காணிக்கையை உம்முடைய கரத்தில் ஒப்புவிக்கிறேன். ஒன்று பத்து முப்பது நூறாகப் பெருகச் செய்து தரவேண்டுமாய் ஜெபிக்கிறேன். அடியேன் மீண்டும் அடுத்தமாதம் முதல் வாரத்தில் வரும்வரை குடும்பத்தார் அனைவரையும் கண்ணின் மணி போல காத்தருளும்.
இதோ! ஜெபத்தையெல்லாம் கேட்டு கர்த்தர் பதிலளித்துவிட்டபடியால் கரங்களைத் தட்டி ஆண்டவரை ஸ்தோத்தரிப்போமா!
இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறோம் நல்ல பிதாவே! ஆமேன். ஆமேன் ஆமேன்.
பிரியமானவர்களே! இதை இன்றைய ஊழியர்களைக் கிண்டல் செய்யும் நோக்கத்தோடு எழுதவில்லை. தேவமனிதர் கிறிஸ்துவை ஆராதிப்பதை விட்டுவிட்டு தங்கள் வயிற்றை ஆராதிக்கத் துவங்கியதேலேயே! மிகுந்த துக்கத்தோடு இவைகளை எழுதுகிறேன். ஒருவரைப் பார்த்து ஒருவர் கெட்டுப் போகும் மோசமான வியாதி இன்றைய கிறிஸ்தவத்தில் காணப்படுகிறது.
இவர் இக்குடும்பத்தாருக்காக ஜெபிப்பதாகத் தோன்றினாலும் இவரது ஜெபம் தன்னைச் சுற்றியே இருப்பதைப் பாருங்கள்! முழுக்க முழுக்க உலக ஆசீர்வாதங்கள்! நித்தியத்தைக் குறித்த அறிவும் இவருக்கு இல்லை வாஞ்சையும் இல்லை. இப்படிப்பட்டவர்களைக் குறித்து பவுல் எச்சரிக்கிறார்
அநேகர் வேறுவிதமாய் நடக்கிறார்கள். அவர்கள் கிறிஸ்துவின் சிலுவைக்குப் பகைஞரென்று உங்களுக்கு அநேகந்தரம் சொன்னேன், இப்பொழுது கண்ணீரோடும் சொல்லுகிறேன். அவர்களுடைய முடிவு அழிவு. அவர்களுடைய தேவன் வயிறு, அவர்களுடைய மகிமை அவர்களுடைய இலச்சையே, அவர்கள் பூமிக்கடுத்தவைகளைச் சிந்திக்கிறார்கள். (பிலி 3:18,19)
--
__________________
வேத வசனங்களை ஆராய்ந்து பாருங்கள் , அவைகளில் நித்திய ஜீவன் உண்டு
2. நீங்கள் இச்சித்தும் உங்களுக்குக் கிடைக்கவில்லை; நீங்கள் கொலைசெய்தும், பொறாமையுள்ளவர்களாயிருந்தும், அடையக்கூடாமற்போகிறீர்கள்; நீங்கள் சண்டையும் யுத்தமும் பண்ணியும், நீங்கள் விண்ணப்பம் பண்ணாமலிருக்கிறதினாலே, உங்களுக்குச் சித்திக்கிறதில்லை.
3. நீங்கள் விண்ணப்பம்பண்ணியும், உங்கள் இச்சைகளை நிறைவேற்றும்படி செலவழிக்கவேண்டுமென்று தகாதவிதமாய் விண்ணப்பம்பண்ணுகிறபடியினால், பெற்றுக்கொள்ளாமலிருக்கிறீர்கள்.
4. விபசாரரே, விபசாரிகளே, உலக சிநேகம் தேவனுக்கு விரோதமான பகையென்று அறியீர்களா? ஆகையால் உலகத்துக்குச் சிநேகிதனாயிருக்க விரும்புகிறவன் தேவனுக்குப் பகைஞனாகிறான்.