சகோ. Johnson கென்னடி அவர்கள் மெயிலில் அனுப்பியதும் நான் படித்ததில் எனக்கு மிகவும் பிடித்த இந்த செய்தியை தங்கள் பார்வைக்கு முன்வைக்கிறேன்.
கிருபையினாலே விசுவாசத்தைக்கொண்டு இரட்சிக்கப்பட்டீர்கள்; இது உங்களால் உண்டானதல்ல, இது தேவனுடைய ஈவு; ஒருவரும் பெருமைபாராட்டாதபடிக்கு இது கிரியைகளினால் உண்டானதல்ல; - எபேசியர். 2:8, 9.
டேவிட் மோர்ஸ் (David Morse) என்னும் அமெரிக்க மிஷனரியும், அவர் இந்தியாவில் ஊழியம் செய்தபோது, ராம்பாபு என்னும் முத்துக் குளிப்பவரும் நெருங்கிய நண்பர்களானார்கள். டேவிட் ராம்பாபுவின் குடிசையில் மணிக்கணக்காக இருந்து வேதத்தை வாசித்து அவருக்கு இரட்சிப்பின் வழியை போதித்து வ்நதார். ராம்பாபுவும் விருப்பத்தோடு கர்த்தருடைய வார்த்தைகளை கேட்டு வந்தாலும், டேவிட் அவரை கர்த்தரை சொந்த இரட்சகராக ஏற்றுக் கொள்ள சொல்லும்போது, ராம்பாபு, ‘பரலோகத்திற்கு செல்ல உங்கள் கிறிஸ்தவ வழி மிகவும் எளிதானது. அப்படி நான் ஏற்றுக் கொண்டு போனால், ஏதோ தேவன் என்மேல் இரக்கப்பட்டு, பிச்சையாக எனக்கு ஒரு இடத்தைக் கொடுத்ததைப் போல இருக்கும். அப்படியல்ல, எனக்கென்று ஒரு இடத்தை நானே உழைத்துப் பெற போகிறேன்’ என்றுக் கூறினார். டேவிட் என்னச் சொன்னாலும் அதைக் கேட்கும் நிலையில் ராம்பாபு இல்லை. அப்படியே சில வருடங்கள் உருண்டோடின.
ஒரு நாள் ராம்பாபு டேவிட் இடம் வந்த 'ஐயா, தயவுசெய்து எங்கள் வீட்டிற்கு வாருங்கள். ஒரு முக்கியமான செய்தி உங்களிடம் பேச வேண்டும்' என்று வருந்தி அழைத்தார். டேவிட் உடன் சென்றபோது, ராம்பாபு அவரிடம், ‘நான் இப்போது பரலோகத்தில் ஒரு இடத்தை எனக்காக ஆயத்தம் பண்ண புறப்படப் போகிறேன்.’ பாம்பேயிலிருந்து, டெல்லிக்கு என் முழங்காலிலேயே செல்லப் போகிறேன், இன்னும் சில நாட்களில் கிளம்பப் போகிறேன் என்றுக் கூறினார். டேவிட், ''உனக்கென்ன பைத்தியமா? ஏறக்குறைய 900 மைல்கள் எப்படி நீ முழங்காலிலே செல்ல முடியும், உன் கால் முழங்கால்கள்; என்ன ஆவது?. நீ போய் சேருவதற்குள் உன் கால் என்னவாகும் என்று யோசித்தாயா? வேண்டாம் இந்த விபரீத காரியம்'' என்றுப் பதறிப் போய் வேண்டினார். ஆனால் ராம்பாபு, ''நீர் என்னச் சொன்னாலும் சரி, நான் போய்த்தான் ஆக வேண்டும். என்னுடைய உபத்திரவம் இனிமையாக இருக்கும் ஏனென்றால் அது எனக்கு பரலோகத்தில் ஒரு இடத்தை வாங்கிக் கொடுக்கும்'' என்றார். அப்போது டேவிட், ''இல்லை ராம்பாபு, அது உனக்கு இடத்தை ஆயத்தம் பண்ணாது. இயேசுகிறிஸ்து உனக்காக மரித்து இரட்சிப்பை இலவசமாக வாங்கிக் கொடுத்திருக்கிறார். அவருடைய கிருபையே உனக்கு பரலோகத்தில் இடம் வாங்கிக் கொடுக்கும்'' என்றுக் கூறினாலும், ராம்பாபு பிடிவாதமாக 'இல்லை ஐயா, நீர் என்னச் சொன்னாலும் என்னை இந்தக் காரியத்திலிருந்து உம்மால் திருப்ப முடியாது என்று திட்டவட்டமாகக் கூறிவிட்டு, உள்ளேச் சென்று ஒரு சிறிய கையளவு பெட்டியை அவரிடம் கொண்டு வந்து, 'ஐயா, இந்தப் பெட்டி என்னிடம் அநேக வருடங்களாக இருக்கிறது. எனக்கு ஒரு மகன் இருந்தான்' என்று இழுத்தார். அப்போது டேவிட், 'நீ என்னிடம் ஒரு மகன் இருந்ததாக இதுவரை சொல்லவேயில்லையே' என்றுக் கேட்டார். அப்போது அந்த வயதான மனிதன், கண்கள் பனிக்க, 'ஆம் ஐயா, எனக்கு ஒரு மகன் இருந்தான். அவனும் முத்துக் குளிப்பவன். ஆனால் அவன் அதில் மிகச் சிறந்தவன். அநேக முத்துக்களை அவன் சேகரித்து என்னிடம் கொண்டுவந்துக் கொடுப்பான். ஒரு தரம் அவன் மிகவும் பிரயத்தனப்பட்டு, மிகவும் ஆழத்தில் போய், மிக நேர்த்தியான ஒரு முத்தை என்னிடம் கொண்டு வந்துக் கொடுத்தான். அந்த முத்து, மிகவும் விலையுயர்ந்தது, ஆனால், அது என் மகனின் உயிரை வாங்கி விட்டது. இந்த முத்தை என்னிடம் கொடுத்து விட்டு அவன் மரித்துப் போனான். நான் இப்போது டெல்லிப் போகிறேன், நான் திரும்ப வரப் போகிறோனோ இல்லையோ என்பது எனக்குத் தெரியாது, ஆகவே எனக்கு பிரியமான உங்களுக்கு இந்த முத்தை கொடுப்பதாக முடிவு செய்தேன். தயவுசெய்து ஏற்றுக் கொள்ளுங்கள் என்றுக் கூறி கண்களில் கண்ணீர் வழிய அந்த முத்தை அவரிடம் கொடுத்தார். டேவிட் அதை வாங்கிப் பார்த்தபோது, அவரால் பேச முடியவில்லை. அந்த அளவு மிகவும் அழகாக நேர்த்தியாக அந்த முத்து பளிச்சிட்டது. உடனே அவர் மனதிலும் மின்னல்போல ஒரு எண்ணம் பளிச்சிட்டது. இந்த தருணத்திற்காகத்தானே அவர் இத்தனை நாட்கள் காத்திருந்தார், இயேசுகிறிஸ்துவின் தியாகத்தைக் குறித்துச் சொல்ல.. ஆகவே, உடனே ராம்பாபுவிட்ம், 'சரி, நான் எடுத்துக் கொள்கிறேன். ஆனால் அதற்கு நான் கிரயம் செலுத்துவேன்' என்றுக் கூறினார். அப்போது ராம்பாபு, ‘இந்த முத்து மிகவும் விலையேறப் பெற்றது, இதற்கு எந்த விலைக் கொடுத்தாலும் போதாது. உங்களுக்கு இதை நான் பரிசாகத்தான் தருகிறேன்’ என்றுக் கூறினார். அப்போது டேவிட், இல்லை ராம்பாபு, இந்த முத்தை பெறுவது எனக்கு பெருமை, ஆகவே நான் இதற்கு விலைக் கொடுத்தே ஆகவேண்டும், இதற்காக நான் உழைத்து உனக்கு விலையைக் கொடுத்தே ஆவேன் என்று உறுதியாகக் கூறினார். ராம்பாபு அதற்கு பதிலாக, ‘ஐயா உமக்கு புரியவில்லை. என்னுடைய ஒரே மகன் தன் உயிரையும் இரத்தத்தையும் கொடுத்து, இந்த முத்தை எடுத்துக் கொடுத்திருக்கிறான், அதற்கு எந்த விலைக்கொடுத்தாலும் தகாது. இதை நான் விற்க முடியாது. இதை உமக்கு இலவசமாகத் தருகிறேன்’ என்றுக் தொண்டை செரும, கண்களில் கண்ணீர் வழியக் கூறினார்.
அப்போது, மிஷனரி, ராம்பாபு இதைத்தானே நான் இத்தனை நாட்களாக உன்னிடம் கூறி வந்தேன், தேவன் உனக்கு இரட்சிப்பை இலவசமாகக் கொடுத்திருக்கிறார். அது மிகவும் விலையேறப் பெற்றது, அதை எந்த மனிதனும், விலைக் கொடுத்து வாங்க முடியாது. எந்த மனிதனாலும் சம்பாதிக்கவும் முடியாது. எந்த மனிதனின் நல்ல குணங்களும் இதை சம்பாதிக்க முடியாது. ஏனென்றால் இது தேவனுக்கு தம்முடைய சொந்தக் குமாரனையே இந்த உலகத்திற்கு அனுப்பி அவருடைய மாசில்லாத இரத்தத்தை சிந்தி, இரட்சிப்பை வாங்கிக் கொடுக்க வைத்தது. உன்னுடைய எந்த புண்ணிய யாத்திரையும், எந்த காணிக்கைகளும:, எந்த நற்கிரியைகளும், எந்த தியாகமும் அதற்கு ஈடாகாது. ஆனால் நீ ஒரு பாவி என்று உணர்ந்து அவரிடத்தில் வந்து, அவருடைய இரட்சிப்பை பெற்றுக் கொண்டால் அதுவே உன்னை பரலோகத்தில் சேர்க்கும். நான் உன்னுடைய அன்பின் பரிசாக இந்த முத்தை தாழ்மையோடு பெற்றுக் கொள்கிறேன், நீ தேவனின் அந்த விலை யேறப்பெற்ற இரட்சிப்பை, தம்முடைய மகனையேக் கொடுத்து சம்பாதித்த இரட்சிப்பை பெற்றுக் கொள்வாயா?’ என்று உருக்கத்தோடு கண்களில் கண்ணீரோடு கேட்டார். அப்போது அந்த வயதான மனிதனுக்கு புரிய ஆரம்பித்தது. அவர், ஐயா இப்போது எனக்கு புரிகிறது. மூன்று வருடங்களாக இயேசுகிறிஸ்துவைக் குறித்த கேள்விப்பட்டேன், ஆனால் அவருடைய இரட்சிப்பு இலவசம் என்பதை என்னால் புரிந்துக் கொள்ளமுடியவில்லை. இப்போது எனக்கு புரிந்து விட்டது. சில காரியங்கள் என்ன விலைக் கொடுத்தாலும் வாங்க முடியாது, இதோ, இரட்சிப்பதற்கு என்னை அர்ப்பணிக்கிறேன்|; என்று அப்போதே இரட்சிப்பை இலவசமாயப் பெற்றுக் கொண்டார்.