தேவன் என்னை தெரிந்துகொண்ட புதிதில், என்னை அழைத்து அபிஷேகித்து மும்பை பட்டணத்தில் அதிகமாக அசுத்த ஆவிகள் கிரியை செய்யும் சில இடங்களுக்கு சென்று சிலகாரியங்களை செய்யும்படி கட்டளையிட்டார். எந்த கடவுளையும் நம்பாத நான், அப்பொழுதுதான் புதிதாக ஆண்டவரை அறிந்திருந்த தால் அவருடைய வார்த்தையின் மகத்துவம் அறியாதவனாக அவரின் வார்த்தைக்கு முழுமையாக கீழ்படிய முடியாமல் என் மாம்சத்தின் ஏவுதல்படி நடந்து, சில தவறுகளை செய்ய நேர்ந்தது.
அப்பொழுது ஒரு இடத்தில் தேவ வழி நடத்துதல் மறைக்கபட்டு போகவே, என்ன செய்வதென்று அறியாதவனாக நடு தெருவில் நின்றுகொண்டிருந்த நான், என் கையில் இருந்த வேத புத்தகத்தை திறந்தபோது என் கண்ணுக்கு தென்பட்டு ஆண்டவரே நேரடியாக என்னோடு பேசியதுபோல்பேசி என்னை வேதனைக் குள்ளாக்கிய வசனம் இது:
பிரசங்கி 10:15ஊருக்குப் போகும் வழியை மூடன் அறியாததினால், அவன் தொல்லை ஒவ்வொருவரையும் இளைக்கப்பண்ணும்.
"மூடனே! உன்னோடு பெரிய ரோதனையா போச்சு! நான் ஒண்ணு சொன்னா நீ ஒண்ணு செய்யிறே! இப்படியே போனால் எப்படி ஊர் போய்சேர்வது?" என்று கடிந்து கொண்டதுபோல இருந்தது!
அவர் என்னிடம் மிகுந்த கோபத்துடன் "நான் சொல்லும் சொல்லுக்கு அப்படியே கீழ்படிந்து நட! எந்த மாற்றமும் செய்யாதே! உன் மாம்சஅறிவை இங்கு பயன்படுத்தி வார்த்தைகளை கூட்டவோ குறைக்கவோ செய்யாதே. அவ்வாறு நடந்தால் மட்டுமே நீ சரியான இலக்கை நோக்கி முன்னேற முடியும். இல்லையேல் உன்னை தள்ளிவிட நேரிடும்" என்றார்.
ஒரு குறிப்பிட்ட ஊருக்கு புறப்பட்டு போகும்முன்னர், நாம் எந்த வழியில் போக வேண்டும், என்னென்ன கொண்டு சொல்லவேண்டும், எவ்வளவு பணம் எடுத்துபோக வேண்டும் என்பதுபோன்ற காரியங்களை முன்கூட்டியே அறிந்து செயல்படவில்லை என்றால் சிரமப்பட நேரிடும். அதிலும் மூடனான ஒருவர், ஊருக்கு போகும் வழி தெரியாமல் நம்முடன் வருவானாகில் அவனது தொல்லை நிச்சயம் நம்மை வேதனை படுத்தும் என்பதில் ஐயமில்லை. அதுபோல் அன்று சரியான வழி தெரியாமல் நான் ஆண்டவரை அதிகம் வேதனை படுத்திவிட்டேன்!
இன்றும்கூட இந்த உலக நிலையில் இருந்து மனம்திரும்பி, சமீபமாக இருக்கும் தேவனுடைய ராஜ்யத்தை நோக்கி நடக்கும் நாம் அதற்க்குரிய சரியான வழியை அறியாத மூடர்களாக இருந்தால் அதனால் உண்டாகும் தொல்லையானது நம்மை மட்டுமல்ல அநேகருக்கு தொல்லையை தருவதும், அநேகரை இடரப் பண்ணுவதுமாக இருக்கும் என்பதை அறியவேண்டும். அத்தோடு அது தேவனின் திட்ட நிறைவேறுதலையும் காலதாமதபடுத்தும்.
இன்று கிறிஸ்த்தவஸ்த்திலேயே சகோதரருக்குள் ஒரு ஒத்த கருத்து இல்லாமலும் ஒவ்வொருவரும் ஒவ்வொரு கொள்கையின் அடிப்படையில் செயல்படுகிறவர களாகவும் இருக்கின்றனர். ஒருவர் ஒரு வசனத்தை வைத்து கொண்டு கிறிஸ்த்தவர்கள் ஐஸ்வர்யவானாக வாழ்வது தவறல்ல என்று வாதிடுகிறார். இன்னொருவர் அது தவறு என்கிறார். ஒருவர் வேத வார்த்தைகளை கைகொள்ள வேண்டும் என்கிறார், ஒருவர் அது தேவையில்லை இயேசுவை ஏற்றுகொண்டாலே போதும் இரட்சிப்பு உண்டு என்கிறார். ஒருவர் எல்லோருக்கும் இரட்சிப்பு என்கிறார் ஒருவர் இயேசுவை ஏற்றுகொண்டவர்களுக்கு மட்டுமே இரட்சிப்பு மற்றவர்களுக்கு இல்லை என்கிறார். இப்படி அவரவர் தாங்கள் சொல்லும் ஒவ்வொரு கருத்துக்கும் ஏதாவது வசன ஆதாரம் வைத்திருக்கின்றனர். அவர் இவரை கள்ள உபதேசம் என்கிறார் இவர் அவரை கள்ளஉபதேசம் என்கிறார் எங்கு பார்த்தாலும் ஒரே குழப்பம்.
எல்லா கொள்கைகளிலும் ஒருமித்த கருத்துடைய இரண்டு கிறிஸ்த்தவர்களை காண்பது மிகவும் அரிதான காரியமாக இருக்கிறது. அதாவது "வெளிப்பாடுகளையும், பிரபலமான தேவ ஊழியர்களை நம்பாதவர்களும், தேவ கற்பனைகளை கைகொள்ளவேண்டிய அவசியமில்லை என்று கருதுபவர்களும் தங்களுடைய கருத்துக்களை தங்கள் உள்ளே புதைத்து வைத்துகொண்டு, பிறருடன் சுமுகமான உறவை வளர்க்கும் நிலையே இன்று இருக்கிறது. இல்லையேல் உள்ளுக்குளேயே பெரிய பிரிவினை உண்டாகும் நிலை ஏற்ப்படலாம்.
கிறிஸ்த்தவம் எத்தனை குழப்பமாக இருந்தாலும் "ஊருக்கு போகும் வழியான, தேவ ராஜ்ஜியம் போகும் வழி" அங்குதான் இருக்கிறது என்பது பரம உண்மை ஆனால் இந்தனை குழப்பமான இந்த கிறிஸ்த்தவத்தில் ஊருக்கு போகும் சரியான வழியை அறிந்தவர் யார்? அந்த வழியில் சரியாக நடந்து ஊரில்போய் சேரப் போகிறவர் எத்தனைபேர் என்பதுதான் புரியாத புதிராக இருக்கிறது!
தற்போது மட்டுமல்ல! ஊருக்கு போகும் வழியை சரியாக அறியாமல் நடத்து, பல்வேறு பிரச்சனைகளை ஏற்ப்படுத்திய பல அண்ணன்மார்கள் கதைகள் எல்லாம் வேதாகமத்தில் இருக்கிறது. அதிலும் முக்கியமாக கானான் தேசம் என்னும் ஊருக்கு புறப்பட்டு பாதிவழியில் தங்கள் மூடத்தனத்தைகாண்பித்து மோசேக்கும் தேவனுக்கு பெருந்தொல்லையை ஏற்ப்பத்தி மாண்டுபோன பல அண்ணன்மார்களின் கதைகளை படித்தால் சிரிப்புதான் வரும்.
அதாவது கர்த்தர் "நீங்கள் உடனே போய் அந்த தேசத்தை சுதந்தரித்து கொள்ளுங்கள்" என்று சொன்னால். "ஐயோ! அவர்கள் பலவான்கள் மிகப்பெரிய மனிதர்கள் அவர்களை நம்மால் ஜெயிக்க முடியாது" என்று சொல்லுவார்கள், "சரி திரும்பி வனாந்திரத்துக்கு போங்கள்" என்று சொன்னால் "நாங்கள் உடனே போய் அதை சுதந்தரிப்போம் என்று மலைக்குமேல் ஏறுவார்கள்" இப்படி அனேக ஏட்டிக்கு போட்டியான காரியங்களை செய்து அடிவாங்கி கட்டிய அநேக அண்ணன்மார்கள் பற்றி நாம் வேதத்தில் வாசிக்கலாம்.
இங்குநாம் அறியவேண்டிய ஒரு முக்கியமான செய்தி என்னவெனில், எத்தனையோ லட்சம்பேர் சென்ற அந்த கூட்டத்தில் கானான் தேசம் என்னும் ஊருக்குபோக கர்த்தர் வைத்திருந்த வழியை சரியாக அறிந்திருந்தவர்கள் மொத்தம் மூணே மூணுபேர்தான். மோசே, ஜோசுவா, காலேப் என்பவர்களே அம்மூவர்.
அதிலும், மிகுந்த சாந்த குணமுள்ளவனாகிய தேவ மனிதனாகிய மோசேயையே கூட இந்த வழி தெரியாத மூடர்கள் எரிச்சலடையவைத்து அவன் கானானுக்குள் பிரவேசிக்க முடியாமல் கெடுத்து போட்டார்களே!
பரம கானானுக்கு செல்லும் நம்முடய பாதையில் இன்றும்கூட அதே நிலைதான் தொடர்கிறது என்பதை நாம் அறியவேண்டும் அநேகமாயிருக்கும் போலிகளை நம்பி ஏமாந்து போகாதீர்கள். ஊருக்கு போகும் சரியான வழியை உன்னதமான தேவனிடத்தில் மற்றாடி கேட்டு அறிந்துகொண்டு, சரியான வழியில் நடவுங்கள் என்று அன்புடன் வேண்டுகிறேன்.
-- Edited by SUNDAR on Thursday 25th of August 2011 09:41:54 PM
__________________
நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)அவர்(கர்த்தராகியதேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்; (ஏசா 25:8)