இந்நாள் நற்செய்தி அறிவிக்கும் நாள்; நாம் மவுனமாயிருந்து, பொழுது விடியுமட்டும் காத்திருந்தால் குற்றம் நம்மேல் சுமரும்..' - (2 இராஜாக்கள் 7:9).
டி.எல். மூடி என்ற தேவ மனிதரை தெரியாதவர்கள் எவருமில்லை. ஒரு நாள் இரவு தன்னுடைய ஊழியத்தை முடித்து மிகவும் களைப்புடன் தனது ஓட்டல் அறையில் தூங்க சென்றார். அப்போது திடீரென்று கர்த்தருடைய ஆவியானவர் அவரோடு பேசி, 'மகனே பக்கத்து அறையில் உள்ள வாலிபனோடு சென்று பேசு' என ஏவினார். இவரோ, 'ஆண்டவரே நான் மிகவும் களைத்து போயிருக்கிறேன் என்பது உமக்கு தெரியாதா, காலையிலிருந்து மாலை வரை அநேக இடங்களில் உம்மை பற்றி அறிவித்து விட்டேன். அந்த மனிதனை நாளை சந்தித்து உம்மை பற்றி கூறுகிறேன்' என்று சொல்லி விட்டு, தூங்கி விட்டார். மறுபடியுமாக மூன்று முறை ஆவியானவர் அவரிடம், 'நான் அந்த வாலிபனை இரட்சிக்க ஆயத்தமாயிருக்கிறேன், நீ போய் பேசு' எனறார். இவரோ, 'ஆண்டவரே நான் காலையில் போய் சொல்கிறேன்' என கூறிவிட்டு தூங்கி விட்டார்.
பின்பு அதிகாலையில் யாரோ அங்குமிங்குமாக ஓடுவது போலவும், பரபரப்பாய் நான்கைந்து பேர் பேசி கொண்டிருக்கிற சத்தத்தையும் கேட்டு திடுக்கிட்டு எழுந்த மூடி அறை கதவை திறந்து பக்கத்து அறைக்கு ஓடினார். அந்த கதவை உடைத்து கொண்டிருந்தார்கள். என்னவென்று பார்க்கும்போது அந்த வாலிபன் தூக்கிலே தொங்கி கொண்டிருந்தான். அப்போதுதான் இரவு ஆண்டவர் பேசினதை நினைத்து கதறி அழ ஆரம்பித்தார். உங்களுக்கும் கூட சுவிசேஷம் சொல்ல எத்தனையோ தருணம் ஆண்டவர் கொடுத்திருந்தும் அவரை பற்றி சொல்லாமல் இருந்திருக்கலாம், அல்லது அலட்சியப்படுத்தி இருந்திருக்கலாம்.
ஒரு நபருக்கு நரகத்தை பற்றி நன்றாக தெரிந்திருக்குமானால், அவர்கள் யாரை பார்த்தாலும் அழகையோ, அந்தஸ்தையோ படிப்பையோ பார்க்காமல் இவர் இரட்சிக்கப்பட்டவரா, இல்லiயா என்பதையே கவனித்து பார்ப்பார்கள். கொடுமையான நரகத்திற்கு அவர்கள் போய் விட கூடாதே என் அங்கலாய்ப்பார்கள். நீங்கள் கேட்கலாம், 'அதற்குதான் ஆண்டவர் ஊழியர்களை ஏற்படுத்தியிருக்கிறாரே' என்று. இல்லை பிரியமானவர்களே, சுவிசேஷம் அறிவிப்பது இயேசுவை அறிந்த ஒவ்வொருவரின் மேலும் விழுந்த கடமை என்பதை மறந்து விடாதீர்கள். உலகிலுள்ள மக்கள் நன்றாய் படித்து பட்டம் பெற்று நல்ல வேலை பார்த்து கை நிறைய சம்பாதிக்கிறார்கள். இன்னும் சிலர் தங்களாலியன்ற எல்லா உதவிகளையும் மற்றவர்களுக்கு செய்கிறார்கள். அநேகருக்கு வாழ வகை செய்கிறார்கள். தான தருமமும் செய்து சமுதாயத்திற்கு தூணாக இருக்கிறார்கள். ஆனால் இயேசுவை ஏற்று கொள்ளாத ஒரே காரணத்தினால் நரகத்தை நோக்கி போய் கொண்டிருக்கிறார்கள். சன்மார்க்கனும் துன்மார்க்கனும் தேவனுடைய இராஜ்யத்தை சுதந்தரிப்பதில்லை!
இந்த காரியத்தை நீங்கள் மனதில் வைத்தால் உங்களால் சும்மா இருக்வே முடியாது. யாருக்காவது சுவிசேஷம் அறிவிக்க வேண்டும் என்கிற வாஞ்சை உங்கள் இருதயத்தில் இருக்க வேண்டும். ஒரு நாளைக்கு ஒருவருக்காவது கிறிஸ்துவை குறித்து கூற வேண்டும் என்று ஒரு தீர்மானம் எடுத்து, ஒருவருக்காவது கூற முயற்சியுங்கள். அவர்கள் கண்டிப்பாக ஏற்று கொள்ள வேண்டும் என்று எதிர்பாராதிருங்கள். சொல்ல வேண்டியது நமது கடமை, அவர்களை ஏற்று கொள்ள செய்ய வேண்டியது கர்த்தருடைய காரியம். ஆகவே நம் வேலையை நாம் செய்வோம். கர்த்தர் தம்முடைய காரியத்தை ஏற்ற வேளையில் செய்வார். கர்த்தருடைய வார்த்தை ஒரு நாளும் வெறுமையாக திரும்பாது. நீங்கள் வேதத்திலிருந்து ஒரு வசனத்தை சொல்வீர்களென்றால், கேட்ட அந்த மனிதர், அப்போது இல்லாவிட்டாலும், பின்னர் அதை குறித்து சிந்திப்பார். கர்த்தர் அந்த வேளையில் அவரை தொடுவார். ஆகவே இந்த வருடத்தில் ஒரு தீர்மானத்தை நாம் எடுப்போம். ஒரு நாளைக்கு ஒருவருக்காவது கர்த்தரை குறித்து ஏதாவது ஒரு வகையில் சொல்ல வேண்டும் என்று முயற்சி செய்வோம். கர்த்தர் அந்த வாஞ்சையை நிறைவேற்றுவார். ஆனால், அதையும் ஞானமாக செய்ய வேண்டும். சொல்ல கூடாது என்கிற இடத்தில் சொல்லி, உங்கள் வேலைக்கு பாதகம் வர வைக்க கூடாது. ஞானமாய் கர்த்தருடைய வார்த்தைகளை சொல்லி, கர்த்தருடைய நாமத்தை அறிவிப்போம். கர்த்தர் சீக்கிரம் வருகிறார்! மாரநாதா!
THANKS,
அக்னஸ்
-- Edited by EDWIN SUDHAKAR on Monday 21st of November 2011 06:34:55 PM
__________________
காரியத்தின் கடைத்தொகையை கேட்போமாக, தேவனுக்குப் பயந்து, அவர் கற்பனைகளைக் கைக்கொள்; எல்லா மனுஷர்மேலும் விழுந்த கடமை இதுவே. (பிரசங்கி :12:13)