ஒரு முழு இரவு ஜெபத்தில் நடந்த சம்பவத்தின் அடிப்படையில் இந்த பதிவு எழுதப்படுகிறது.
ஜெபத்தை நடத்திய போதகர் ஆவியில் நிறைத்து ஜெபிக்கும் போது, கூட்டத்தில் இருந்த அநேகருக்கு ஆட்டம் வந்து விட்டது. அதில் எது பரிசுத்த ஆவியினால் வரும் ஆட்டம் எது அசுத்த ஆவியினால் வரும் ஆட்டம் என்று ஒரு புரியாத சூழல் அங்கு உருவானது. அவரவர் ஒவ்வொரு விதமாக சத்தம் போட்டுகொண்டு ஆட ஆரம்பித்தனர். எனக்கும் சற்று உதறல் வருவதுபோல் இருந்தாலும் எதிரில் இருந்த இருக்கையை இறுக்கமாக பற்றிக்கொண்டு நின்றுகொண்டிருந்தேன்.
எனக்கு சற்று அருகில் இருந்த ஒரு வாலிப பெண்மணி முதலில் லேசாக ஆட ஆரம்பித்து அதிகமாகி அதிகமாக குதித்து குதித்து ஆட ஆரம்பித்து விட்டார். ஆவியானவர் வந்தால் இப்படியெல்லாம் ஆட்டம் வருமா என்று எனக்கு சந்தேகமாக இருந்தது. ஆகினும் நான் எதையும் கண்டுகொள்ளாமல் தேவனை தேடுவதிலேயே குறியாக இருந்தேன்.
சிறிது நேரத்தில் மேடையில் இருந்த பாஸ்டர் கீழே இரங்கி ஒரு விசிட் வந்தார். எனது பக்கத்தில் அதிகமாக ஆடிய அந்த வாலிப சகோதரியை சற்று உற்று பார்த்தார். திடீர் என்று அந்த வாலிப சகோதரி தன்னுடய பக்கத்தில் ஆடி கொண்டிருந்த இன்னொரு சகோதரியை பார்த்து "இயேசுவின் நாமத்தில் சொல்கிறேன் வெளியே போ சாத்தானே" என்று சத்தமிட்டு கத்திவிட்டு அவரே பொத்தென்று அப்படியே கீழே விழுந்துவிட்டார்.
பக்கத்தில் நின்ற பாஸ்டர் "இவரின் ஆட்டத்தை பார்த்த உடனே அது அசுத்தஆவிதான் என்று கண்டுகொண்டேன் நான் நினைத்ததுபோலவே அவர் கீழே விழுந்துவிட்டார் அவரை எழுப்பாதீர்கள் அப்படியே கொஞ்ச நேரம் கிடக்கட்டும் சரியாகிவிடும்" என்பதுபோல் சொல்லிவிட்டு சென்றார்!
I யோவான் 4:3மாம்சத்தில் வந்த இயேசுகிறிஸ்துவை அறிக்கைபண்ணாத எந்த ஆவியும் தேவனால் உண்டானதல்ல;
என்று வசனம் தேவனால் உண்டாகாத ஆவியை குறித்து அடையாளம் காட்டியிருக்க, இங்கு இயேசுவை அறிக்கை பண்ணும் ஒரு சகோதரியே அசுத்த ஆவியில் பிடியில் இருந்து இயேசுவின் நாமத்தை உச்சரித்து இன்னொரு ஆவியை துரத்தியதை கேட்டு நான் அசந்து போனேன்.
I யோவான் 4:1பிரியமானவர்களே, உலகத்தில் அநேகங் கள்ளத்தீர்க்கதரிசிகள் தோன்றியிருப்பதினால், நீங்கள் எல்லா ஆவிகளையும் நம்பாமல், அந்த ஆவிகள் தேவனாலுண்டானவைகளோ என்று சோதித்தறியுங்கள்.
என்று வேதம் சொல்கிறது ஆனால் இந்நாட்களில் எது தேவ ஆவியால் உண்டானது எது அசுத்த ஆவியால் உண்டானது என்பதை நிதானித்து அறிவது கடினமே. ஆவிகளை பகுத்தறியும் வரம் பெற்றவர்களால் மட்டுமே உண்மையான தேவ ஆவியை அடையாளம் காணமுடியும் என்றே கருதுகிறேன்.
__________________
நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)அவர்(கர்த்தராகியதேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்; (ஏசா 25:8)