முதல் முதல் அந்தியோகியாவிலே சீஷர்களுக்குக் கிறிஸ்தவர்கள் என்கிற பேர் வழங்கிற்று என அப்போஸ்தலர் 11:26 கூறுகிறது.
கிறிஸ்துவின் மெய்யான சீஷனே கிறிஸ்தவன் .... யார் கிறிஸ்துவின் மெய்யான சீஷன்?
யோவான் 8:31 இயேசு தம்மை விசுவாசித்த யூதர்களை நோக்கி: நீங்கள் என் உபதேசத்தில் நிலைத்திருந்தால் மெய்யாகவே என் சீஷராயிருப்பீர்கள்; 32 சத்தியத்தையும் அறிவீர்கள், சத்தியம் உங்களை விடுதலையாக்கும் என்றார்.
யோவான் 15:8 நீங்கள் மிகுந்த கனிகளைக் கொடுப்பதினால் என் பிதா மகிமைப்படுவார், எனக்கும் சீஷராயிருப்பீர்கள்.
யோவான் 14:15 நீங்கள் என்னிடத்தில் அன்பாயிருந்தால் என் கற்பனைகளைக் கைக்கொள்ளுங்கள்.
யோவான் 14:21 என் கற்பனைகளைப் பெற்றுக்கொண்டு அவைகளைக் கைக்கொள்ளுகிறவனே என்னிடத்தில் அன்பாயிருக்கிறான், என்னிடத்தில் அன்பாயிருக்கிறவன் என் பிதாவுக்கு அன்பாயிருப்பான்; நானும் அவனில் அன்பாயிருந்து, அவனுக்கு என்னை வெளிப்படுத்துவேன்.
யோவான் 14:23 ஒருவன் என்னில் அன்பாயிருந்தால், அவன் என் வசனத்தைக் கைக்கொள்ளுவான், அவனில் என் பிதா அன்பாயிருப்பார்; நாங்கள் அவனிடத்தில் வந்து அவனோடே வாசம்பண்ணுவோம்.
லூக்கா 14:26 யாதொருவன் என்னிடத்தில் வந்து, தன் தகப்பனையும் தாயையும் மனைவியையும் பிள்ளைகளையும் சகோதரரையும் சகோதரிகளையும், தன் ஜீவனையும் வெறுக்காவிட்டால் எனக்குச் சீஷனாயிருக்கமாட்டான்.
27 தன் சிலுவையைச் சுமந்துகொண்டு எனக்குப் பின்செல்லாதவன் எனக்குச் சீஷனாயிருக்கமாட்டான்.
33 உங்களில் எவனாகிலும் தனக்கு உண்டானவைகளையெல்லாம் வெறுத்துவிடாவிட்டால் அவன் எனக்குச் சீஷனாயிருக்கமாட்டான்.
இயேசுவின் உபதேசத்தின்படி நடப்பதன் மூலம் அவர் மீது அன்புகூருபவன்தான் இயேசுவின் மெய்யான சீஷன். அவன்தான் மெய்யான கிறிஸ்தவன்.
இயேசுவின் வசனத்தின்படி நடப்பதற்கு அவனது ஜீவனோ தாயோ தகப்பனோ மனைவியோ பிள்ளைகளோ சகோதரரோ பொருட்களோ தடையாயிருந்தால் அவர்களை/அவற்றை வெறுத்துவிட்டு இயேசுவின் வசனத்தின்படி நடப்பவன்தான் அவரது மெய்யான சீஷன்; அவன்தான் மெய்யான கிறிஸ்தவன்.
இயேசுவின் வசனத்தின்படி நடப்பதினிமித்தம் இவ்வுலகில் நேரிடும் உபத்திரவங்களை (அதாவது தன் சிலுவையை) ஏற்றுக்கொண்டு இயேசுவின் பின் செல்பவனே (அதாவது இயேசுவின் வசனத்தின்படி நடப்பதில் உறுதியாயிருப்பவனே) இயேசுவின் மெய்யான சீஷன்; அவன்தான் மெய்யான கிறிஸ்தவன்.
இப்படியாக எவன் மெய்யான சீஷன்/கிறிஸ்தவன் என்பதைக் குறித்து வேதாகமம் சொல்லியிருக்க, வேதாகம காலத்திற்குப் பின்வந்த சபைத்தலைவர்களும் மூப்பர்களும் கிறிஸ்தவன்/சீஷன் எனும் வார்த்தைகளுக்கு புது அர்த்தங்களைக் கொடுத்து அவற்றை நடைமுறைப் படுத்திவிட்டனர். ஆக, இந்நாட்களில் யார் கிறிஸ்தவன் எனும் கேள்வியைக் கேட்டால், வேதாகம் சொல்லும் பதிலுக்கு முற்றிலும் வித்தியாசமான பதிலைத்தான் பல தரப்பினரும் சொல்கின்றனர். அவர்கள் சொல்லும் பதில்களில் சில:
1. குழந்தைப் பருவத்திலோ அல்லது வயதான பின்னரோ ஞானஸ்நானம் பெறவேண்டும், 2. திரித்துவத்தை ஏற்கவேண்டும், 3. பிதாதான் இயேசுவாக அவதரித்தார் என நம்பவேண்டும், 4. அவரது உருவப்படத்தை வீட்டில் வைத்து மரியாதை செய்யவேண்டும், 5. இயேசுவை விசுவாசிப்பவனுக்கு பரலோகம், விசுவாசியாதவனுக்கு நரகத்தில் நித்தியவேதனை என நம்பி இக்கருத்தை ஜனங்களிடையே பரப்ப வேண்டும், 6. பழைய ஏற்பாட்டின் வாக்குத்தத்த வசனங்களை வீட்டிலும் சுவரிலும் எழுதிப் போடவேண்டும் 7. வாரம் தவறாமல் ஆலயம் செல்லவேண்டும், 8. இயேசுவுக்கே ஆராதனை எனச் சொல்லவேண்டும், 9. அவ்வப்போது திருவிருந்தில் பங்கு பெறவேண்டும், 10. ஆலயத்திற்கும் ஊழியங்களுக்கும் உற்சாகமாகக் காணிக்கை கொடுக்கவேண்டும், 11. சபைத் தலைவர்களை பாஸ்டர் என்றோ, குருவானவர் என்றோ, பேராயரென்றோ சொல்லி கனப்படுத்த வேண்டும், 12. சில ஆவிக்குரிய தலைவர்களை தந்தை என்றும் அழைத்து கனப்படுத்த வேண்டும், 13. கிறிஸ்துவின் பிறந்த நாளை டிசம்பர் 25-ல் கொண்டாட வேண்டும், 14. புத்தாண்டு பிறக்கையில் எல்லோருக்கும் புத்தாண்டு வாழ்த்து சொல்லி கொண்டாட வேண்டும், 15. பண்டிகைக் காலங்களில் ஆடம்பரமான புத்தாடை உடுத்தி, வீட்டையும் தங்களையும் அலங்காரம் செய்து, வாணவேடிக்கை நிகழ்த்தி, விருந்து உண்டு கொண்டாட வேண்டும்; கூடவே கடமைக்காவும் புகழ்ச்சிக்காகவும் ஏழைகளுக்கு சில உதவிகளைச் செய்யவேண்டும், 16. கிறிஸ்தவ டிவி நிகழ்ச்சிகளைப் பார்க்கவேண்டும், 17. உபவாசம், இராவிழிப்பு ஜெபம் போன்றவற்றில் நாட்டம் இருக்கவேண்டும்.
இம்மாதிரியான செயல்களை ஒருவன் எவ்வளவு அதிகமாய் செய்கிறானோ அவ்வளவாய் அவன் ஒரு சிறந்த கிறிஸ்தவனாக அங்கீகரிக்கப்படுவான். இதுதான் கிறிஸ்தவன் என்பவன் யார் எனும் கேள்விக்கு இன்றைய கிறிஸ்தவம் தருகிற பதில்.
மேலே கூறப்பட்ட காரியங்களில் எதையாவது ஒன்றை ஒரு கிறிஸ்தவனின் அடையாளமாக வேதாகமம் நேரடியாகக் கூறியுள்ளதா என வேதாகமத்தில் தேடிப்பார்த்தால், நமக்கு ஏமாற்றமே மிஞ்சும்.
ஞானஸ்நானத்தைக் குறித்து வேதாகமம் கூறியுள்ளதென்பது மெய்தான். ஆனால் அதை சீஷத்துவத்தின் முக்கிய அடையாளமாக இயேசுவோ அப்போஸ்தலரோ கூறவில்லை. ஒருவன் தன்னை இயேசுவின் சீஷன் என உலகத்திற்குச் சொல்வதற்கான ஒரு புறம்பான அடையாளமே ஞானஸ்நானம். ஆனால் இந்த அடையாளத்தைப் பெறுவதால் ஒருவன் மெய்யான சீஷனாகவோ கிறிஸ்தவனாகவோ ஆகிவிடுவதில்லை. கிறிஸ்துவின் உபதேசத்தின்படி நடப்பவன்தான் மெய்யான கிறிஸ்தவனாவான்.
ஆனால் இன்றைய சபைத்தலைவர்களோ, ஒருவன் ஞானஸ்நானத்தைப் பெறுவதுதான், அதுவும் குறிப்பிட்ட முறைமையின்படி ஞானஸ்நானம் பெறுவதுதான் மெய்யான கிறிஸ்தவனுக்கான முக்கிய அடையாளம் எனும் விதமாக ஞானஸ்நானத்தை வலியுறுத்தி போதிக்கின்றனர்.
அடுத்ததாக, வேதாகமம் சொல்லாத திரித்துவத்தை கேள்விகேட்காமல் ஏற்கவேண்டும்; பிதாவும் இயேசுவும் ஒன்றுதான் என நம்பவேண்டும்; இயேசுவை ஆராதிக்க வேண்டும் என விதவிதமான போதனைகளைச் சொல்லி, இவற்றைச் செய்பவனே மெய்யான கிறிஸ்தவன் எனக் கூறுகின்றனர்.
இயேசு தம்மை தேவனுடைய குமாரன் எனப் பல வசனங்களில் தெளிவாகக் கூறியுள்ளார்; தம்மைப் பிதாவிடமிருந்து வேறுபட்டவராக தனி ஆள்த்தத்துவமுள்ளவராக பிதாவுக்குக் கீழ்ப்பட்டவராக தெளிவாக வெளிப்படுத்தியுள்ளார். மாத்திரமல்ல, தேவனாகிய கர்த்தர் ஒருவரையே ஆராதனை செய்யும்படி கூறின அவர், தம்மை ஆராதனை செய்யும்படி ஒரு வசனத்திலும் கூறவில்லை. ஆனாலும் இந்த திரித்துவவாதிகள் மிகவும் சிரமப்பட்டு பல வசனங்களை அப்படியும் இப்படியுமாக ஒருங்கிணைத்து இயேசுவையும் ஆராதனை செய்யவேண்டும், அப்படிச் செய்பவன் தான் மெய்யான கிறிஸ்தவன், மற்றவரெல்லாம் இயேசுவின் விரோதிகள் எனும் கருத்தை வலியுறுத்தி வருகின்றனர். ஆனால் இம்மாதிரி போதனைகளை இயேசுவும் சொல்லவில்லை, அப்போஸ்தலரும் சொல்லவில்லை.
அடுத்து, பரலோகம் என்றால் என்ன, நித்திய ஜீவன் என்றால் என்ன, யாருக்குப் பரலோகம், யாருக்கு நித்திய ஜீவன் என்றெல்லாம் வேதத்தின்படி அறியாமல், இயேசுவை விசுவாசித்து ஏற்பது மட்டுமே மிகமிக அவசியமானது என்றும் அப்படிச் செய்தால் பரலோகம் நிச்சயம் என்றும் தங்கள் இஷ்டம்போல் சொல்லி அவற்றைப் பரப்பி வருகின்றனர்.
பரலோகம் செல்தல் வேறு, நித்திய ஜீவனை சுதந்தரித்தல் வேறு எனும் அடிப்படை உண்மைகூட தெரியாமல், இரண்டையும் ஒன்றாக்கி, கிறிஸ்தவர்கள் அனைவருக்கும் பரலோகம் மற்ற எல்லாருக்கும் நரகத்தில் நித்தியவேதனை எனும் கருத்தைப் பரப்பி வருகின்றனர்.
கிறிஸ்தவன் என்பவன் வாரந்தவறாமல் ஆலயம் வந்து காணிக்கை கொடுக்கவேண்டும் என்பதில் தீவிரப்படும் சபைத்தலைவர்கள், அவன் இயேசுவின் கற்பனைகளின்படி நடப்பதைப் பற்றியோ கனிதரும் வாழ்வைப்பற்றியோ சற்றும் கரிசனை கொள்வதில்லை.
இயேசுவைத் தவிர வேறு யாரையும் போதகரென்றோ குருவென்றோ சொல்லவேண்டாம், பரலோகப் பிதாவைத் தவிர வேறு யாரையும் பிதாவெனச் சொல்ல வேண்டாம் என இயேசு நேரடியாகச் சொல்லியுள்ளபோதிலும், இதற்கு விரோதமாக போதகர், குரு, ரெவரெண்ட், ஃபாதர், பாஸ்டர் எனும் பட்டங்களை உண்டாக்கி அவ்விதமாக தங்களை எந்த உறுத்தலுமின்றி அழைக்கவைப்பதில் இன்றைய சபைத்தலைவர்கள் வெற்றிபெற்றுவிட்டனர். இப்படியாக அழைப்பதும் அழைக்கப்படுவதும் கிறிஸ்தவத்தில் சர்வ சாதாரணமாகக் காணப்படுகிறது.
அடுத்து, கிறிஸ்தவர்கள் என்றால் அவர்கள் கண்டிப்பாக கிறிஸ்துவின் பிறப்பைக் கொண்டாட வேண்டும், புது வருடப் பிறப்பைக் கொண்டாட வேண்டும் எனும் நடைமுறையும் இன்றைய கிறிஸ்தவத்தில் தீவிரமாக அமல்படுத்தப்படுகிறது. இம்மாதிரி பண்டிகை கொண்டாட்டம் பற்றி இயேசுவோ அப்போஸ்தலரோ எதுவும் சொல்லவில்லையே, இயேசுவின் வசனங்களுக்குக் கீழ்ப்படிவதைப்பற்றிதானே மீண்டும் மீண்டும் சொல்லியுள்ளனர், இதைச் செய்வதில் தீவிரப்படாமல், வேதாகமம் சொல்லாத பண்டிகைகளைக் கொண்டாடுவதில் தீவிரப்படுகிறோமே என இன்றைய கிறிஸ்தவர்கள் மனதில் கேள்விஎழும்புவதில்லை. இதைக் குறித்து ஒன்றிரண்டு பேர் கேள்வி எழுப்பினாலும், அவர்களை கிறிஸ்தவத்தின் விரோதிகள் என முத்திரை குத்தி புறக்கணித்துவிடுகின்றனர். இவ்வளவாய் வேதாகமம் சொல்லாத பண்டிகைகள் மீது இன்றைய கிறிஸ்தவர்கள் பைத்தியமாயுள்ளனர்.
இன்னும் உபவாசம் இராவிழிப்பு ஜெபம் என்பது போன்ற பல நடைமுறைகள் இன்றைய கிறிஸ்தவத்தில் தீவிரமாகச் செயல்பட்டு வருகின்றன. எல்லாவற்றிற்கும் மேலாக, பழைய ஏற்பாட்டில் இஸ்ரவேலர்களுக்கு வாக்களைக்கப்பட்ட உலக ஆசீர்வாதங்களை இன்றைய கிறிஸ்தவன் பெற்றேயாக வேண்டும் எனும் கருத்து மிகத்தீவிரமாக கிறிஸ்தவர்களிடையே பரப்பப்பட்டு வருகிறது.
இக்கருத்துக்கு ஆதாரமாக பழையஏற்பாட்டு வாக்குத்தத்தங்களையெல்லாம் எடுத்துப் போட்டு, அவற்றையே மீண்டும் மீண்டும் சொல்லி, எந்த உலகத்தை வெறுக்க வேண்டும் என இயேசுவும் அப்போஸ்தலரும் கூறினார்களோ, அந்த உலகத்தை வெகுவாய் சிநேகிக்கத்தக்கதாக கிறிஸ்தவத்தை தலைகீழாக மாற்றிவிட்டனர். இதுதான் இன்றைய சபைத்தலைவர்களும் ஊழியர்களும் கிறிஸ்தவத்திற்குச் செய்துவருகிற மாபெரும் துரோகம்.
இன்றைய பண்டிகை கொண்டாட்டங்களும் வாழ்த்துக்களும் உலக சிநேகத்தை வளர்ப்பதாகத்தான் இருக்கின்றனவேயொழிய, உலகத்தை வெறுக்கச் செய்வதாக இல்லை. கிறிஸ்துவினிமித்தம் நம் ஜீவனைக் கூட வெறுக்கவேண்டும், உற்றார் உறவினர் உலக பந்தங்கள் அனைவரையும் வெறுக்க வேண்டும் என வேதாகமம் சொல்லியிருக்க, உலகத்தைச் சிநேகிக்கச் செய்யும் பணியைத்தான் தலையாய பணியாக இன்றைய சபைத்தலைவர்களும் ஊழியர்களும் செய்துவருகின்றனர்.
உலகசிநேகம் தேவனுக்கு விரோதமான பகை, தேவனுக்கும் உலகத்திற்கும் உங்களால் ஊழியஞ்செய்யக்கூடாது என்றெல்லாம் வேதாகமம் தெளிவாகச் சொல்லியுள்ள போதிலும், உலக சிநேகத்திற்கடுத்த காரியங்களில்தான் இன்றைய கிறிஸ்தவர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
இவ்விதமாக போலிக்கிறிஸ்தவர்களாக நடமாடி வருகிற நாம், இக்கட்டுரையின் தொடக்கத்தை மீண்டும் படித்து, யார் மெய்யான கிறிஸ்தவன்/சீஷன் என வேதாகமம் சொல்வதை நினைவுகூர்ந்து, அதன்படி நடப்பதன்மூலம் மெய்யான கிறிஸ்தவனாக/சீஷனாக ஆகிறதற்குத் தீவிரப்படுவோமாக.
"சொன்னாதை விட்டுவிட்டு சுரையை பிடுங்கினான்" என்றும் "தும்பை விட்டு வாலை பிடித்தான்" என்று பழமொழி உண்டு. அதைபோல் இறைவன் என்ன எதிர்பாக்கிறார் அதை செய்யவேண்டும் என்பதை அநேகர் விட்டுவிட்டனர். ஆன்மீக சடங்குகளில் அதிகம் நாட்டம் கொள்கின்றனர்.
அவரை அறிந்திருக்கிறேனென்று சொல்லியும், அவருடைய கற்பனைகளைக் கைக்கொள்ளாதவன் பொய்யனாயிருக்கிறான், அவனுக்குள் சத்தியமில்லை. I யோ 2:4