கர்த்தரின் பார்வைக்குப் பொல்லாப்பானதைச் செய்த அநேகரை பற்றிய விபரங்கள் வேதத்தில் பதியப்பட்டுள்ளது. இவர்கள் எந்தெந்த விஷயத்தில் கர்த்தரின் பார்வைக்கு பொல்லாப்பானதை செய்தார்கள் என்பதை நாம் ஒவ்வொன்றாக ஆராய்ந்து அறிவது நம்மை நாமே நிதானித்து அறிந்து திருத்திகொள்ள எதுவாக அமையும் என்பதால் நமக்கு தெரிந்த வேதாகம மனுஷர்களில் கர்த்தரின் பார்வைக்கு பொல்லாப்பானதை செய்தவர்களை பற்றி இங்கு ஆராயலாம்.
கர்த்தரை மறந்து அந்நிய தேவர்களை சேவித்தல்!
நியாயாதிபதிகள் 3:7இப்படி இஸ்ரவேல் புத்திரர் கர்த்தரின் பார்வைக்குப் பொல்லாப்பானதைச் செய்து, தங்கள் தேவனாகிய கர்த்தரை மறந்து, பாகால்களையும் தோப்பு விக்கிரகங்களையும் சேவிக்கிறபோது,
ஆண்டவரை ஏற்றுக்கொண்டு அவர் நல்லவர் என்பதை ருசித்துபார்த்த யாரும் அவ்வளவு சீக்கிரத்தில் கர்த்தரை மறந்து அந்நிய தேவர்களையோ அல்லது விக்கிரங்களையோ வணங்க சென்றுவிடுவது இல்லை என்பது உண்மை என்றாலும் அதற்காக ஒருவர் பெருமை பட்டுகொள்ள வேண்டாம்! காரணம் கர்த்தரை மறந்து "பணம் உலக பொருள்" என்னும் தேவனை சேவிக்க போன விசுவாசிகள் மற்றும் பாஸ்டர்கள் அநேகர் இங்கு இருக்கிறார்கள்.
தேவன் மேல் முழு விசுவாசம் இல்லாமல் பணத்தின்மேல் விசுவாசம் வைத்து யார் எவ்வளவு பணம் தருவார் நாம்எப்படி நமது தேவைகளை
சந்திக்கலாம் என்று பணத்தின் மீதும், அதை தரும் மனுஷர்கள் மீதும் நம்பிக்கை வைப்பதும் கர்த்தரின் பார்வைக்கு விக்கரக ஆராதனை போல பொல்லாப்பான காரியமே!
சுருங்க சொல்லின் தேவனை தவிர்த்து வேறு எந்த மனுஷன் மீதுமோ மீதுமோ அல்லது எந்த பொருளின் மீதுமோ அல்லது உன் சொந்த பந்தங்கள் மீதோ அல்லது உனக்கு இருக்கும் சொத்து சுகங்கள் மீதோ ஒருவர் நம்பிக்கை வைப்பாராகில் அவர் தேவனின் பார்வையில் பாகாலை சேவித்த விக்கிரக ஆராதனைகாரர்போல பொல்லாப்பு செய்தவர்களே என்பதை நாம் அறியவேண்டும்.