லூக்கா 8 :30.31இயேசு அவனை நோக்கி: உன் பேர் என்னவென்று கேட்டார்; அதற்கு அவன்: லேகியோன் என்றான்; அநேகம் பிசாசுகள் அவனுக்குள் புகுந்திருந்தபடியால் அந்தப் பேரைச் சொன்னான். தங்களைப் பாதாளத்திலே போகக் கட்டளையிடாத படிக்கு அவைகள் அவரை வேண்டிக்கொண்டன.
31.அப்பொழுது, பிசாசுகள்: நீர் எங்களைத் துரத்துவீரானால், நாங்கள் அந்தப் பன்றிக்கூட்டத்தில் போகும்படி உத்தரவு கொடும் என்று அவரை வேண்டிக்கொண்டன. 32. அதற்கு அவர்: போங்கள் என்றார்.
.
மேலே நாம் குறிப்பிட்டுள்ள வசனத்தில் இயேசுவானவர் சாத்தானின் வேண்டுதலை கேட்டு அவைகளுக்கு செவிகொடுத்து அதன்படி செய்ததுபோல ஒரு தோற்றம் உள்ளது. ஆனால் நாம் வேதாகமம் முழுவதும் தேடிப்பார்த்தால், இயேசுவானவர் அநேகமான பிசாசுகளையும் அசுத்த ஆவிகளையும் துரத்தியிருக்கிறார். ஆனால் எங்குமே அவைகளை பாதாளத்துக்கு போக சொன்னதாக பதிவு செய்யப்படவில்லை. இப்படி இருக்கும் போது மேலேயுள்ள வசனத்தில் குறிப்பிட்டுள்ள இந்த பிசாசு கூட்டங்கள் மட்டும் " எங்களை பாதாளத்துக்கு அனுப்ப வேண்டாம்" என்று ஏன் என்று கேட்டுகொண்டன? என்பதை நாம் சற்று யோசிக்க வேண்டும். இயேசு எல்லா பிசாசுகளையும் பாதாளத்துக்கு துரத்தியிருந்தால், இந்த பிசாசுகளும் பயந்ததினால் "எங்களையும் பாதாளத்துக்கு துரத்த வேண்டாம்" என்று கேட்பதில் நியாயம் உண்டு! ஆனால் இயேசு எந்த பிசாசையுமே பாதாளத்துக்கு துரத்தாத பட்சத்தில், இந்த பிசாசுகள் முந்திக் கொண்டு இயேசுவிடம் விண்ணப்பம் வைப்பதில் ஏதோ மாய்மாலம் இருப்பதை நாம் அறியமுடியும். அதை அறியும் முன்னர் இயேசு "சாத்தானின் கிரியை அழிக்க வந்தாரா? அல்லது அவைகள் சொல்லின்படி கேட்டு இரக்கபட்டு அதன்படி செய்ய வந்தாரா? என்பதை அறியவேண்டும். இதை குறித்து வேதம் சொல்கிறது?
.
I யோவான் 3:8பிசாசினுடைய கிரியைகளை அழிக்கும்படிக்கே தேவனுடைய குமாரன் வெளிப்பட்டார்.
.
தேவ குமாரனாகிய இயேசு "பிசாசின் கிரியைகளை அழிக்கும்படி வெளிப்பட்டார்" என்ற உண்மை இருக்கையில், சாத்தானின் கிரியைகளை அழிக்கவந்த இயேசு, பிசாசு சொன்ன வார்த்தையாகிய "எங்களை பாதாளத்துக்கு அனுப்பவேண்டாம்" என்ற பிசாசின் மாய்மால வார்த்தைகளை அறியாதவர் அல்ல!
நாமும் பிசாசின் வார்த்தைகளை உண்மை என்று நம்பி ஏமாந்துவிட கூடாது.
.
முதலில் கீழேயுள்ள வசனத்தில் சாத்தானின் வார்த்தைகளை சற்று கவனியுங்கள்:
மத்தேயு 8 :29. அவர்கள் அவரை நோக்கி: இயேசுவே, தேவனுடைய குமாரனே, எங்களுக்கும் உமக்கும் என்ன? காலம் வருமுன்னே எங்களை வேதனைப்படுத்த இங்கே வந்தீரோஎன்று கூப்பிட்டார்கள்.
"தேவனுடைய குமாரன் பிசாசின் கிரியைகளை அழிக்கவே வந்திருக்கிறார்" என்று தெரிந்தும் "எங்களுக்கும் உமக்கும் என்ன?" என்றொரு கேள்வியை கேட்டதோடு "காலம் வரும் முன்னே எங்களை வேதனைபடுத்த வந்தீரோ" என்று கேட்கின்றன. ஆனால் வசனம் இயேசுவை குறித்து சொல்வது என்ன?
இயேசு சரியான காலத்தில்தான் வந்தார் அனால் இந்த பிசாசுகளோ "காலம் வரும் முன்னே எங்களை வேதனைபடுத்த வந்தீரோ" என்று சொல்லி ஒரு பொய்யான தகவலை சொல்கின்றன. எனவே "பொய்யனும் பொய்க்கு பிதாவுமாகிய" பிசாசுகளின் வார்த்தைகள் எல்லாமே வெறும் மாய்மால மான பசப்பல் வார்த்தைகள் என்பதை அறியவேண்டும்.
.
மேலும் பிசாசுக்கு தற்ச்சமயம் எப்படிபட்ட ஒரு நிலையில் இளைப்பாறுதல் இல்லாமல் இருக்கிறது? இதை குறித்து வேதம் என்ன சொல்கிறது என்பதையும் நான் சற்று ஆராய்தல் அவசியம்!
.
லூக்கா 11:24அசுத்த ஆவி ஒரு மனுஷனை விட்டுப்புறப்படும்போது, வறண்ட இடங்களில் அலைந்து, இளைப்பாறுதல்
தேடியும் கண்டடையாமல்:
.
அசுத்த ஆவியானது ஒரு மனுஷனில்தான் இளைப்பாறுகிறது, அது மனுஷனை விட்டு புறப்படும்போதுதான் அதற்க்கு இளைப்பாறுதல் இல்லாமல் போகிறது என்று வேதம் சொல்கிறது.
.
எனவே பிசாசுகள் அந்த மனுஷனை விட்டு துரத்தப்பட்டால்அவைகளுக்கு இளைப்பாறுதல் இல்லாமல் போகும் என்ற பயத்திலேயே "எங்களை வேதனை படுத்த வந்தீரோ?" என்று பிசாசுகள் கேட்டதேயன்றி, அங்கு வேறு எந்த நோக்கமும் இல்லை என்பதை நாம் அறியவேண்டும்.
இறுதியில் அங்கு நடந்த சம்பவத்தை வைத்து பார்க்கும் போது, இறுதியில் அவைகளுக்கு இளைப்பாறுதல் இல்லாத நிலையைதான் இயேசு ஏற்ப்படுத்தினார் என்பதை நாம் அறிய முடியும்.
மாற்கு 5:13. இயேசு அவைகளுக்கு உத்தரவு கொடுத்தவுடனே, அசுத்த ஆவிகள் புறப்பட்டுப் பன்றிகளுக்குள் போயின; உடனே ஏறக்குறைய இரண்டாயிரம் பன்றிகளுள்ள அந்தக்கூட்டம் உயர்ந்த மேட்டிலிருந்து ஓடி, கடலிலே பாய்ந்து, கடலில் அமிழ்ந்து மாண்டது.
.
அதாவது அந்த பிசாசுகள் அனுப்பபட்ட பன்றிகள், கடலில் பாய்ந்து மாண்டுபோனத்தால் மீண்டும் அவை சரீரம் இல்லாமல் இளைப்பாறுதல் இல்லாத நிலையையே அடைந்தன. எனவே இங்கு இயேசு பிசாசின் வார்த்தைகளுக்கு செவிகொடுததுபோல் தெரிந்தாலும், தான் வந்ததன் நோக்கம் எதுவும் சிதையாமல் அதை செய்து முடித்தார்.
-- Edited by SUNDAR on Tuesday 18th of September 2012 03:37:55 PM
__________________
நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)அவர்(கர்த்தராகியதேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்; (ஏசா 25:8)