யோபு 42:2தேவரீர் சகலத்தையும் செய்ய வல்லவர்; நீர் செய்ய நினைத்தது தடைபடாது என்பதை அறிந்திருக்கிறேன்.
இறைவன் செய்ய நினைத்தது ஒன்றும் தடைபடாது என்பது விவிலியம் தெளிவாக நமக்கு சொல்லும் உண்மை.
இவ்வாறு இருக்கையில் இறைவனின் சித்தம் அல்லது விருப்பம் அல்லது எதிர்பார்ப்பு என்னவென்பது குறித்து விவிலியம் சொல்லும் கருத்து என்னவெனில்:
மத்தேயு 18:14இந்தச் சிறியரில் ஒருவனாகிலும் கெட்டுப்போவது பரலோகத்திலிருக்கிற உங்கள் பிதாவின் சித்தமல்ல.
I தீமோத்தேயு 2:4எல்லா மனுஷரும் இரட்சிக்கப்படவும், சத்தியத்தை அறிகிற அறிவை அடையவும், அவர் சித்தமுள்ளவராயிருக்கிறார்.
II பேதுரு 3:9ஒருவரும் கெட்டுப்போகாமல் எல்லாரும் மனந்திரும்பவேண்டுமென்று விரும்பி, நம்மேல் நீடிய பொறுமையுள்ளவராயிருக்கிறார்.
"ஒருவரும் கெட்டுபோககூடாது" என்பதில் தேவன் அக்கறையுள்ளவராக அல்லது எதிர்ப்பர்ப்புள்ளவராக இருக்கிறார் என்றும் அதற்காகவே அவர் பொறுமையுள்ளவராகவும் இருக்கிறார் என்பதை நாம் அறியமுடிகிறது.
இறைவனின் இந்த எதிர்பார்ப்பு அல்லது விருப்பம் நிறைவேறாமல் போக முடியுமா? அவர் விருப்பத்தையும் சித்தத்தையும் மீறி எவரொருவராவது கெட்டுபோக முடியுமா?
//இறைவனின் இந்த எதிர்பார்ப்பு அல்லது விருப்பம் நிறைவேறாமல் போக முடியுமா? அவர் விருப்பத்தையும் சித்தத்தையும் மீறி எவரொருவராவது கெட்டுபோக முடியுமா?//
தேவனின் சித்தத்தையும் அவர் செய்ய நினைப்பதையும் இணைத்துப் பார்ப்பதால்தான் இக்குழப்பம்.
தேவன் ஒரு செயலைச் செய்ய நினைத்தால் அதை அவரால் நிச்சயம் செய்யமுடியும்; அவர் செய்ய நினைப்பதை யாராலும் தடைசெய்ய முடியாது. இவ்வுண்மையைத்தான் யோபு 42:2 கூறுகிறது.
ஆனால் தேவன் தமது எல்லா சித்தத்தையும் (அதாவது விருப்பத்தை) செயல்படுத்தியேயாக வேண்டும் என்ற அவசியமுமில்லை, அவ்வாறு செயல்படுத்த தேவன் நினைப்பதுமில்லை.
எல்லா பெற்றோரும் தங்கள் பிள்ளைகள் பேரும் புகழும் பெறவேண்டும் என்றே விரும்புகின்றனர்; அதாவது சித்தங்கொள்கின்றனர். சில பெற்றோர் பற்பல பிரயாசங்கள் எடுத்து தங்கள் பிள்ளைகளை பேரும் புகழும் பெற வைத்துவிடுகின்றனர். ஆனால் பிள்ளைகள் தாங்களாக தங்கள் சுயமுயற்சியில் பேரும் புகழும் பெறுவதுதான் சிறந்தது/மேலானது.
அவ்வாறே தேவனுங்கூட தமது ஜனங்கள் கெட்டுப்போகக்கூடாது என சித்தங்கொண்டுள்ள போதிலும், அந்த சித்தத்தை மனிதர்கள் அவர்களாகவே நிறைவேற்றுவதுதான் சிறந்தது/மேலானது. எனவேதான் மனிதர்களில் ஒருவரும் கெட்டுப்போகக்கூடாது என்ற தமது சித்தத்தை வலுக்கட்டாயமாக தேவன் நிறைவேற்றுவதில்லை. காரணம், மனிதர்களின் சுயாதீனத்தில் தலையிட தேவன் விரும்புவதில்லை.
மாறாக, இப்படியிப்படி செய்தால் பிழைப்பீர்கள், இல்லாவிடில் கெட்டுப்போவீர்கள் என்ற உண்மையை மட்டும் மனிதர்களிடம் சொல்லிவிட்டு, அவர்கள் தங்களது சுயாதீனப்படி பிழைக்கவோ கெட்டுப்போகவோ விட்டுவிடுகிறார்.
எனவே தேவனின் சித்தத்தை (விருப்பத்தை) மீறி மனிதர்களில் சிலர்/பலர் கெட்டுப்போகமுடியும் என்பதே உண்மை. இதற்கும் தேவனின் இயலாமைக்கும் சம்பந்தம் எதுவுமில்லை.