நல்ல திருச்சபைகளைக் தேடிக்கண்டுபிடிப்பது எப்படி? என்பதே அந்தக் கேள்வி. கேள்விக்குக் காரணம் நல்ல திருச்சபைகளை அடையாளம் காணுமளவுக்கு வேத ஞானம் இல்லாததும், அத்தகைய திருச்சபைகள் அரிதாக இருப்பதும்தான். திருச்சபைகள் திருச்சபையாக வேத அடிப்படையில் இயங்கி வருகின்ற நிலை நம்மினத்தில் பெரிதாக இல்லை என்பது நமக்குத் தெரியாத ஒன்றல்ல. நிலைமை அப்படியிருப்பதால் திருச்சபையை நாம் அலட்சியப்படுத்திவிட்டு கிறிஸ்தவனாக எப்படியும் வாழ்ந்துவிட முடியுமா, அப்படி வாழ்வதற்கு வேதம் அனுமதிக்கிறதா? என்று கேட்டுப்பார்க்காமல் இருந்துவிட முடியாது.
நம்மைப் படைத்த கடவுள் பாவத்தில் உழன்று கொண்டிருக்கும் மனித வர்க்கத்தின் விடுதலைக்காகத் தன்னுடைய ஒரே குமாரனை இந்த உலகத்துக்கு அனுப்பினார். அப்படி இயேசு இந்த உலகத்தில் பிறந்தபோது தனிமனிதனின் பாவ விடுதலைக்காக மட்டும் வராமல் பிதாவினால் முன்குறிக்கப்பட்டு தெரிந்தெடுக்கப்பட்ட அனைத்து மக்களுக்குமாக வந்தார் என்பதை வேதம் தெளிவாக விளக்குகிறது (எபேசியர் 1:4). முன்குறிக்கப்பட்டு திரித்துவ தேவனால் தெரிந்தெடுக்கப்பட்ட அனைத்து மக்களையும் வேதம் இயேசுவின் சரீரமாக (சபையாக) விளக்குகிறது. இதன் மூலம் இயேசு எந்த மக்களுக்காக வந்தாரோ அந்த மக்களைத் தன்னுடைய சபையாக (தன்னுடைய மணவாட்டியாகப்) பார்க்கிறார் என்பதை நாம் தெரிந்துகொள்ளுகிறோம் (எபேசியர் 5:23). தான் விடுதலை தர வந்திருக்கும், தான் நேசிக்கும் அந்த மணவாட்டியை தன்னுடைய சரீரப் பலியின் மூலம் இந்த உலகத்தில் பாவத்தில் இருந்து விடுதலை தந்து தான் மறுபடியும் வருகிறவரை தன்னுடைய மகிமைக்காக சபையாகக் கட்டுகிறார் என்று வேதம் விளக்குகிறது (மத்தேயு 16:18). அந்த மணவாட்டியை, தன் சபையைத் தான் அதிகம் நேசிப்பதாகவும் இயேசு சொல்லியிருக்கிறார். இயேசு தன் சபையின் மேல் எந்தளவுக்கு அக்கறை காட்டி போஷிக்கிறார் என்பதை எபேசியர் 5ம் அதிகாரம் தெளிவாக விளக்குகிறது. அதுமட்டுமல்லாமல் தன் மீட்பின் திட்டங்கள் அனைத்தையும் கடவுள் தன்னுடைய சபையை முன்னிலைப்படுத்தி அதனூடாக, அதற்காகவே கிறிஸ்து மூலமாக நிறைவேற்றுகிறார். இதிலிருந்து இயேசு கிறிஸ்துவை அவருடைய சபையில் இருந்து பிரித்துப் பார்க்க முடியாது என்பதை நாம் உணர வேண்டும். இயேசு கிறிஸ்துவை மனந்திரும்பி விசுவாசிக்கிறவர்களை இயேசு தன்னுடைய சபையாகிய சரீத்தில் இணைத்துக்கொள்ளுவதோடு இந்த உலகத்தில் அவர் கட்டியெழுப்பிக் கொண்டிருக்கும் சபையில் அவர்கள் தம்மை இணைத்துக்கொண்டு அவருடைய வார்த்தைகளைப் பின்பற்றி அவருடைய மகிமைக்காக குடும்பத்தோடு வாழ வேண்டும் என்றும் எதிர்பார்க்கிறார் (மத்தேயு 28:18-20). இந்த உண்மையை நாம் மறுக்க முடியாது. ஆனால், நல்ல சபைகளில்லை என்கிற நிலைமையைப் பயன்படுத்திக்கொண்டும், அறியாமையாலும் பலர் சபையில்லா வாழ்க்கையை வாழ்ந்து வருகிறார்கள்.
தன்னுடைய மக்கள் தங்களை சபையில் இணைத்துக்கொண்டு வாழ வேண்டும் என்று இயேசு எதிர்பார்ப்பதால்தான் அவர்களுக்கு மிகவும் அவசியமான, திருமுழுக்கையும், திருவிருந்தையும் கொடுக்கும் அதிகாரத்தை அவர் தன்னுடைய சபைக்கு மட்டுமே அளித்திருக்கிறார். தன்னுடைய மக்கள் பரிசுத்தமாக வாழ்வதற்கும், அவர்களுக்கு உலகத்தில் இருந்தும், பிசாசின் கரத்தில் இருந்தும் பாதுகாப்பு அளிப்பதற்கும் சபை ஒழுங்குக் கட்டுப்பாட்டையும் திருச்சபையில் ஏற்படுத்தியிருக்கிறார் (மத்தேயு 18:15-20; 1 கொரிந்தியர் 7). அவர்கள் சத்தியத்தை அறிந்து, அதில் வளர்ந்து நிலைத்திருப்பதற்கு துணையாக திருச்சபைக்கு போதக சமர்த்தர்களாக இருக்கும் போதகர்களை அளிக்கிறார் (எபேசியர் 4:11-15; 1 தீமோத்தேயு 3; தீத்து). அவர்கள் நடைமுறையில் சக விசுவாசிகளோடு ஐக்கியத்தில் இருப்பதற்காக சபையை அவசியமாக்கியிருக்கிறார் (எபேசியர் 4). அவர்கள் தங்களுடைய ஈவுகளை நியாயபூர்வமாக திருச்சபையில் வாழ்ந்து திருச்சபை மூலமாக பயன்படுத்துவதற்காக திருச்சபைக்கு இயேசு ஈவுகளை அளிக்கிறார் (எபேசியர் 4:11). இதெல்லாம் எந்தளவுக்கு திருச்சபையில்லாமல் ஒரு கிறிஸ்தவன் வாழ முயல்வது முறையல்ல என்பதற்கு அத்தாட்சியங்களாக இருக்கின்றன. திருச்சபையில்லாமல் வாழ்வதால் ஒரு கிறிஸ்தவன் அடையும் பயன்கள் எதுவுமில்லை. அவன் கிறிஸ்துவைத் தன்னுடைய வாழ்க்கையில் மகிமைப்படுத்துவதும் இயலாத காரியம். கிறிஸ்து தான் முன்குறித்து தெரிந்துகொண்ட ஒவ்வொருவரையும் திருச்சபையாகிய கண்ணாடி வழியாகவே பார்க்கிறார்.
இதுவரை நாம் பார்த்த உண்மைகளுக்கு மேலும் அழுத்தம் கொடுக்கும்வகையில் திருச்சபை பற்றிய பவுல் அப்போஸ்தலனின் குடும்பம் பற்றிய போதனைகள் இருக்கின்றன. எபேசியருக்கு எழுதிய நிருபத்திலும், கொலோசெயருக்கு எழுதிய நிருபத்திலும் பவுல் ஆரம்பத்தில் மெய்க்கிறிஸ்தவ விசுவாசம் எது என்பதை ஆரம்ப அதிகாரங்களில் விளக்கிவிட்டு அதன் அடிப்படையில் மெய்க்கிறிஸ்தவர்களாக கிறிஸ்துவால் எழுப்பப்பட்டிருப்பவர்கள் கிறிஸ்தவ வாழ்க்கையை எப்படி வாழ வேண்டும் என்று விளக்குகிறார். எபேசியருக்கு எழுதிய நிருபத்தில் அதை 4-6 வரையுள்ள அதிகாரங்களிலும் கொலோசெயருக்கு எழுதிய நிருபத்தில் அதை 3-4 வரையுள்ள அதிகாரங்களிலும் காண்கிறோம். இரண்டு நிருபங்களும் திருச்சபைகளுக்கு எழுதப்பட்ட நிருபங்கள் என்பதையும், அதுவும் திருச்சபையைச் சேர்ந்த அங்கத்தவர்களுக்கு எழுதப்பட்டவை என்பதையும் நாம் மனதில் வைத்து இவற்றை வாசிக்க வேண்டும். இரண்டு நிருபங்களிலும் பவுல் சுயபாவங்களை அழித்து வாழ்வது பற்றியும், சபை அங்கத்தவர்களோடு எப்படி ஒற்றுமையாக வாழ்வது என்பது பற்றியும், குடும்ப வாழ்க்கையில் கணவன் மனைவி உறவு பற்றியும், பிள்ளை வளர்ப்பு பற்றியும், தொழிலொழுக்தத்தைப் பற்றியும் கடவுள் அளித்துள்ள கட்டளைகளையும் விளக்கி அவற்றைப் பின்பற்றி மெய்க்கிறிஸ்தவர்கள் வாழவேண்டும் என்று வலியுறுத்தியிருக்கிறார். இக்கட்டளைகளை கிறிஸ்தவர்கள் திருச்சபை வாழ்க்கைக்கு தங்களைக் குடும்பத்தோடு ஒப்புக்கொடுத்து நிறைவேற்றுமாறு எதிர்பார்த்து பவுல் எழுதியிருக்கிறாரே தவிர திருச்சபைக்கு வெளியில் இருந்து நிறைவேற்ற வேண்டும் என்ற எண்ணத்தில் எழுதவில்லை. பாவமுள்ள இந்த உலகத்தில் நாம் கிறிஸ்தவர்களாக வாழுகிறபோது அதில் இயேசு உருவாக்கியிருக்கும் திருச்சபையில் அங்கத்தவர்களாக இருந்தே இந்தக் கட்டளைகளை நாம் நிறைவேற்ற வேண்டும் என்று கடவுள் நம்மிடம் எதிர்பார்க்கிறார். எந்தளவுக்கு குடும்ப வாழ்க்கையை ஒரு கிறிஸ்தவர் அன்போடு வைத்திருந்தாலும் சபையில்லாமல் அதைக் கடவுளுக்கு மகிமையாக வைத்திருக்க முடியாது. சபையில் இருந்து அதற்கு மதிப்புக்கொடுத்து வாழாத குடும்பத்தில் உள்ள குடும்ப அங்கத்தவர்கள் கடவுளை அறிந்துகொள்ளுவதும், அவருடைய மகிமைக்காக வாழ்வதும், வளர்வதும் எப்படி முடியும்? இப்படி ஒவ்வொரு கிறிஸ்தவரும் சபையைத் தன்வீடாகக் கொண்டு வாழ்கிறபோதுதான் சபைக்கு சரியான, பக்தியுள்ள தலைமையும் கிடைக்க வழியுண்டு. அக்காரணத்தால்தான் பவுல், ‘தன் வீட்டை சரியாக விசாரிக்காதவன் சபையை எப்படி விசாரிப்பான்’ என்று போதகருக்குரிய இலக்கணங்களில் கேட்கிறார் (1 தீமோத்தேயு 3). இதிலிருந்து சபையில் இருந்து வாழ்ந்து, வளர்ந்து தகுதிகள் பரிசோதிக்கப்படாத எவரும் சபைப் போதகராகவோ, உதவிக்காரராகவோ இருக்க வேதம் இடங்கொடுக்கவில்லை என்பது புரிகிறதா?
சபையில் இருந்து வாழ்வது என்பது வெறுமனே எதாவது வீட்டுக்குப் பக்கத்தில் இருக்கும் ஒரு சபைக்கு ஆராதனைக்குப் போய்வருதல்ல. அதைத்தான் அநேகர் சபை வாழ்க்கையாக நினைத்துக்கொண்டிருக்கிறார்கள். அது முழுத்தவறு. சபை வாழ்க்கைக்கு ஒப்புக்கொடுப்பதென்பது ஆராய்ந்து செய்ய வேண்டிய ஒரு காரியம். இயேசு கிறிஸ்துவின் கட்டளைகளையெல்லாம் அவருடைய மகிமைக்காக குடும்பமாகப் பின்பற்றி வாழ துணை செய்யும் நல்ல சபையொன்றை நாம் தேடிப்போய் அதில் நம்மை இணைத்துக்கொண்டு விசுவாசமாக வாழ்வதே ஒழுங்கான சபை வாழ்க்கை வாழ்வதற்கு ஆரம்பப் படி. அந்த சபை, சத்தியத்தைத் துல்லியமாக வேதபூர்வமாகப் பயன்பாடுகளோடு போதிக்கிறதா? அதில் பரிசுத்த வாழ்க்கை வாழ்வதற்கான சகலவித ஆவிக்குரிய ஆலோசனைகளும், உதவிகளும் கிடைக்க வழி இருக்கின்றதா? ஆவிக்குரிய மக்களை மட்டும் கொண்டு அமைக்கப்பட்டு திருநியமங்களை அது வேதபோதனைகளுக்குட்பட்டு அனுசரிக்கின்றதா? அதன் தலைமை வேதபூர்வமாக சபையால் தெரிவுசெய்யப்பட்டதாக தாழ்மையோடு செயல்பட்டு வருகின்றதா?
பரவசத்தை மட்டும் நாடி உணர்ச்சிவசப்பட்டு செயலாற்ற வைக்கும் இசைக்கும், கைதட்டலுக்கும், ஆட்டத்திற்கும், சுயவிளம்பரத்துக்கும், தனிமனித ஆர்ப்பாட்டங்களுக்கும் இடமளிக்காமலும், காணிக்கைக்கு மட்டும் முக்கியத்துவம் கொடுக்காமலும் கடவுளால் ஏற்றுக்கொள்ளக்கூடிய வேதபூர்வமான ஆராதனை அங்கு நடக்கின்றதா? சுவிசேஷ வாஞ்சையோடு ஆத்தும ஆதாயத்துக்கான ஆவிக்குரிய பணிகளைத் தவறாது நடத்தி வருகின்றதா? என்றெல்லாம் ஆராய்ந்து பார்க்காமல் சபை என்ற பெயர் வைத்திருக்கும் ஏதாவது ஒரு சபைக்கு ஓய்வுநாளில் ஓர் ஆராதனைக்கு மட்டும் போய்ப் பட்டும் படாமலும், தொட்டும் தொடாமலும் இருந்துவிட்டு வருவது சபை வாழ்க்கைக்கு அக்கறையோடு நம்மை அர்ப்பணித்ததற்கு அடையாளமாகாது.
இதுவரை நாம் மேலே பார்த்த வேத அடையாளங்களைக் கொண்ட சபையை அடையாளங் கண்டுகொண்டால் அதற்கு நம்மை முழுமையாக அர்ப்பணித்து கடவுளின் மகிமைக்காக அதிலிருந்து குடும்பத்தோடு வாழ்வதே வேதம் போதிக்கும் மெய்யான சபை வாழ்க்கை. அத்தகைய சபை வாழ்க்கையை மனதில் வைத்துத்தான் இயேசு தன்னுடைய திருச்சபையை இந்த உலகத்தில் கட்டிவருகிறார். அதனால்தான் தனக்கும் தன்னுடைய மனைவியாகிய சபைக்கும் இருக்கும் அன்பின் அடிப்படையிலான பிரிக்க முடியாத விசுவாச உறவை நமக்கு உதாரணமாக அவர் எபேசியர் 5ல் விளக்குகிறார். இயேசுவுக்கும் அவருடைய மணவாட்டிக்கும் இருக்கும் உறவு நிழலான உறவல்ல; அது நிதர்சனமானது. அதை நடைமுறையில் விளக்கும் வகையில் இந்த உலகத்தில் சபைகள் இருப்பதையே இயேசு விரும்புகிறார். அவருடைய மக்களும் சபையில் வாழ்ந்து வளர்ந்து அவருக்குக் கீழ்ப்பட்டு அன்போடு பணிசெய்பவர்களாக இருப்பார்கள். இதையெல்லாம் மனதில் வைத்துத்தான் பவுலும், பேதுருவும், ஏனைய புதிய ஏற்பாட்டு ஆசிரியர்களும் தங்களுடைய நிருபங்களை சபைகளுக்கு எழுதியிருக்கிறார்கள். இந்த முறையில் சபையைப் பற்றிய எண்ணங்களோடு அந்த நிருபங்களை வாசித்தால் மட்டுமே அவற்றின் போதனைகள் நமக்கு நடைமுறையில் பயனளிக்க முடியும்.
ஆவிக்குரிய வாழ்க்கைக்கு உதவக்கூடிய பல அம்சங்களில் ஒன்றாக மட்டும் சபையைக் கருதி, அதில் இருக்க முடிந்தால் நல்லது இல்லாவிட்டால் பரவாயில்லை என்ற எண்ணப்போக்கோடு வாழும் கிறிஸ்தவர்கள் பெரிய தவறு செய்கிறார்கள். இந்த எண்ணப்போக்கோடு அவர்கள் கிறிஸ்துவை மகிமைப்படுத்தும் விதத்தில் வாழுவது முடியாத காரியம். சபையில்லாமல் குடும்பங்கள் கிறிஸ்தவ குடும்பங்களாக நடைமுறையில் இருக்க கிறிஸ்து வழிகாட்டவில்லை. இதை வாசிக்கின்ற வாசகர்கள் கொஞ்சம் சிந்தித்துப் பாருங்கள். கிறிஸ்துவை அனைத்திற்கும் மேலாக உயர்த்தி அவருக்கு மேல் ஒன்றும் இல்லை என்றளவுக்கு சகல அதிகாரங்களுக்கும் அவரை உரித்தாக்கி சபைக்கு அவரைத் தலைவராக்கி இத்தனையையும் சபைக்காக செய்தேன் என்று எபேசியர் 1:20-23ல் பவுல் மூலம் கடவுள் நமக்கு விளக்கியிருக்கிறாரென்றால் எத்தனை உயர்வான இடத்தில் அவர் தன்னுடைய சபையை வைத்திருக்கிறார் என்பது உங்களுக்குப் புரிகின்றதா? அத்தனை உயர்வான சபை வாழ்க்கை இல்லாமல் நாமும் நமது குடும்பமும் ஆவிக்குரிய வாழ்க்கையில் உயர்வது என்பது எத்தனை பெரிய கனவு. நிழல் ஒரு நாளும் நிஜமாகாது. வேதம் நமக்கு தெளிவாக விளக்கும் நிஜமான சபை வாழ்க்கைக்கு உங்களை குடும்பத்தோடு ஒப்புக்கொடுங்கள். கிறிஸ்துவை அவர் உயிராய் நேசிக்கும் சபை மூலமாக உங்கள் வாழ்க்கையில் மகிமைப்படுத்துங்கள்.