ஆவிக்குரிய நிலையில் திருப்தியடையாது முன்னேறவும் (எபி 6:12, எபே 4:11), உலகப் பொருளிலோ உள்ளதில் திருப்தியாயிருக்கும் படியாகவும் (1தீமோ6:6-12) வேதம் போதிக்கிறது. ஆனால் நாமோ நம்முடைய ஆவிக்குரிய நிலைமையில் ஏக திருப்தியாகவும், உலகப் பொருளிலோ சற்றும் திருப்தியடையாமல் தா,தா எனும் அட்டையின் குமாரத்திகளைப் போல (நீதி 30:15) திறந்த வாயுடன் வானத்தின் பலகணிகள் திறக்காதா என்று காத்துக் கொண்டிருக்கிறோம்
இயேசு மனிதர்களை நேசித்தார், பொருட்களைப் பயன்படுத்தினார் நாமோ பொருட்களை நேசிக்கிறோம், மனிதர்களைப் பயன்படுத்திக் கொள்ளுகிறோம்.
இயேசு சாத்தானுக்கு ராஜசிங்கமாகவும், மனிதர்கள் தனது தாடியை இழுத்து கன்னத்தில் அறைந்தபோது ஆட்டுக்குட்டியாகவும் அமைதிகாத்தார். நாமோ மனிதர்களிடம் சிங்கமாக சீறுகிறோம், சாத்தானிடமோ அவன் இழுக்கும் இழுவைக்கெல்லாம் வளைந்து கொடுக்கும் சாதுவான ஆட்டுக்குட்டியாக இருக்கிறோம்.
”என் வீடு பாழாய்க் கிடக்கிறது நீங்களோ அவனவன் தன் தன் வீட்டுக்கு ஓடிப் போகிறீர்களே” என்று ஆண்டவர் அங்கலாய்த்த காலத்தில் (ஆகாய் 1:4,9) ஒருவனும் ஆலயம் கட்டுவதில் ஆர்வம் காட்டவில்லை. இன்றோ கட்டிடங்கள் தேவையில்லை, நீங்களே அந்த ஆலயம் என்ற பிறகு ஐக்கியத்தில் ஆர்வம் காட்டாது மாய்ந்து மாய்ந்து ஆலயக் கட்டிடங்களைக் கட்டுகிறோம்
என்னை தசம பாகத்தில் வஞ்சிக்கிறீர்களே! (மல் 3:8) என்று கர்த்தர் கர்ஜிக்கும் அளவுக்கு கஞ்சமகா பிரபுக்களாக அன்றைய பழைய ஏற்பாட்டுக்காரர்கள் இருந்தார்கள். தசமபாகக் காலமெல்லாம் ஒழிந்து புதிய உடன்படிக்கை பூத்தபின் தசமபாகத்தை தூசுதட்டிஇன்று இயேசுவைப் போதிப்பதைவிட தசமபாகத்தைப் பற்றி அதிகமாக போதித்துக் கொண்டிருக்கிறார்கள்.
இயேசு மதவாதிகளை தூரத்தில் நிறுத்தி வைத்தார். பாவிகளோடு நெருங்கிப் பழகினார். சீஷர்களை உருவாக்கினார். நாமோபாவிகளை தூரத்தில் நிறுத்தி வைத்து விட்டோம், பரிசேயர்களிடம் பிரசங்கபீடங்களைக் கொடுத்துவிட்டோம், இரட்டிப்பான நரகத்தின் மகன்களை உருவாக்கிக் கொண்டிருக்கிறோம்.
முதல் நூற்றாண்டில் சபை உலகத்துக்குள் போய் உலகைப் பாதித்தது. இன்று உலகம் சபைக்குள் வந்து சபையை பாதிக்கிறது.
ஆதிஅப்போஸ்தலர் பொருளாதாரத்தில் தரித்திரர், ஆவிக்குரிய ஐசுவரியவான்கள் நாமோ பொருளாதாரத்தில் ஐசுவரியவான்கள் ஆவிக்குரிய தரித்திரர்.
இயேசு சரீர சுகத்தைப் பற்றி ஒரு போதனையும் செய்யவில்லை ஆனால் எண்ணிறைந்த சுகமளிக்கும் அற்புதங்களைச் செய்தார். நாமோ வாய்கிழிய அற்புத சுகத்தைப் பற்றி பிரசங்கிக்கிறோம், காரியத்திலோ பூஜ்ஜியம்!
ஆவியானவர் சந்நிதியில் அப்போஸ்தலர் பிரித்தெடுக்கப்பட்டது அன்று (அப் 13:2), அரசியல்வாதிகள் முன்னிலையில் திருமண்டலத் தேர்தல்கள் நடக்கின்றன இன்று.
தேவன் யுத்ததில் சிறந்த குதிரையாக நம்மை நிறுத்த விரும்புகிறார் (சக 10:3). நாமோ தாறுமாறாய் ஓடுகிற வேகமான பெண்ணொட்டகமாய் மாறிப்போனோம்.(எரே 2:23). அவர் நம்மை முற்றிலும் நற்கனிதரும் உயர்குலத் திராட்சச்செடியாக நாட்டினார்; நாமோ அவருக்கு காட்டுத்திராட்சச்செடியின் ஆகாத கொடிகளாய் மாறிப்போனோம் (எரே 2:21)
அன்றைய பழைய ஏற்பாட்டுக்காரர்கள் புதிய ஏற்பாட்டு வாழ்க்கைக்காக ஏங்கினார்கள் (பேதுரு 1:10-12). இன்றைய புதிய ஏற்பாட்டுக்காரர்கள் கட்டடங்களை மகிமைப்படுத்துவது, பண்டிகைகளை ஆசரிப்பது, தசமபாகம், பொருளாதார ஆசீர்வாதம், பிரமாணத்துவம் என்று பழைய ஏற்பாட்டுக்கே திரும்பிக் கொண்டிருக்கிறார்கள்.
இயேசு பாவிகளோடு வாழ்ந்தாலும் பாவத்தை வெறுத்தார், நாமோ பாவிகளை வெறுத்தாலும் பாவத்தோடுதான் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.
அன்று சபையை சம்பாதிக்க பணத்தைப் பயன்படுத்தினார்கள். இன்று பணத்தை சம்பாதிக்க சபையைப் பயன்படுத்துகிறார்கள்.
எல்லாம் தலைகீழ், எதிலும் முரட்டாட்டம்…இதுவே நம் இன்றைய கிறிஸ்தவம். ”முரட்டாட்டம் பண்ணுதல் அவபக்திக்கும் விக்கிரகாராதனைக்கும் சரியாய் இருக்கிறது (1 சாமு 15:23).” தேவன் வெறுப்பவறையெல்லாம் விரும்புகிறோம். தேவன் விரும்புபவற்றையெல்லாம் அசட்டை செய்கிறோம். ஒன்றைத் தவிர…
ஒன்றே ஒன்றைத் தவிர…
தேவன் நாம் பரலோகத்துக்கு வரவேண்டும் என்று விரும்புகிறார். நமக்கும் அதே ஆசை நிறைய இருக்கிறது. ஆம், எப்படியேனும் கடைசியில் பரலோகம் மட்டும் சேர்ந்துவிட வேண்டும் என்று வாஞ்சிக்கிறோம். சேர்ந்துவிடுவோம் என்றும் நம்புகிறோம்.
பிரியமானவர்களே! ஒரு கதை சொல்லுகிறேன் கேளுங்கள். இதுவும் நம்முடைய சொந்தக் கதை சோகக் கதை போலவேதானிருக்கும் (1 கொரி 10:11)
எகிப்து எனும் இரும்புக் காளவாயிலிருந்து ஒரு கூட்ட ஜனத்தை கிருபையாக இரட்சித்து தேவன் அழைத்து வந்தார். அவர்களோ வழியில் முரட்டாட்டம் பண்ணினார்கள், வனாந்திரத்திலேயே அழிக்கப்பட்டார்கள். அவர்களில் ஒருவனும் வாக்குப்பண்ணப்பட்ட கானானுக்குள் பிரவேசிக்கவில்லை. கீழ்படிந்த யோசுவாவும் காலேபும் மாத்திரம் பிரவேசித்தார்கள். அவர்களுடைய தவறுதலினாலே புறஜாதிகளுக்கு இரட்சிப்பு கிடைத்தது (ரோமர் 11:11) சுபாவக்கிளைகள் ஒலிவமரத்திலிருந்து முறித்துப் போடப்பட்டது. காட்டு ஒலிவமரத்தின் கிளைகளாகிய நம்மை எடுத்து கிருபையாக ஒலிவமரத்தோடு ஒட்டவைத்தார். ஒரு புதிய சகாப்தம் தொடங்கியது, ஆனால் தேவன் மாறாதவர்.
”சுபாவக்கிளைகளை தேவன் தப்பவிடாதிருக்க, உன்னையும் தப்பவிடமாட்டார் என்று எச்சரிக்கையாயிரு.
ஆகையால், தேவனுடைய தயவையும் கண்டிப்பையும் பார்; விழுந்தவர்களிடத்திலே கண்டிப்பையும், உன்னிடத்திலே தயவையும் காண்பித்தார்; அந்தத் தயவிலே நிலைத்திருப்பாயானால் உனக்குத் தயவுகிடைக்கும்; நிலைத்திராவிட்டால் நீயும் வெட்டுண்டுபோவாய்.(ரோமர் 11:21,22).”
ஆம், தேவனோடு நாம் விளையாட முடியாது. அவரது நீடிய இரக்கத்தை நாம் ஏமாளித்தனம் என்று எண்ணக் கூடாது. நமக்கு நமது அனலுமற்ற குளிருமற்ற மதரீதியான கிறிஸ்தவத்தை விட்டு வெளியே வர மனதில்லையானால் தேவன் நம்மைக் கடந்து செல்ல தயங்க மாட்டார்.
ஜலப் பிரளயத்தில் முழு உலகமும் அழிக்கப்பட்டாலும் நோவா உட்பட 8 பேரை மீதம் வைத்திருந்தார். வனாந்திரத்தில் கலகம் பண்ணின இஸ்ரவேலர் முழுவதும் அழிக்கப்பட்டார்கள், அவர்கள் சந்ததியாரும் , யோசுவாவும் காலேபும் மீந்திருந்தார்கள். யெசபேல் கர்த்தருடைய தீர்க்கதரிசிகள் அனைவரையும் அழித்துப் போட்டாலும் பாகாலின் பாதங்களை முத்தமிடாத 7000 பேரை மீதம் வைத்திருந்தார். ஹிட்லர் போன்ற கொடூரர்களால் யூதர்கள் உலகம் முழுவதிலும் வேட்டையாடப்பட்டாலும் 1948-இல் வாக்குப் பண்ணப்பட்ட தேசத்தை உருவாக்குவதற்கென்று ஒரு கூட்ட யூதர்களை தேவன் மீதம் வைத்திருந்தார்.
அதுபோலவே இன்று உலகம் முழுவதிலும் கிறிஸ்தவம் வியாபார மயமாக்கப்பட்டாலும், பெரும்பாலான கிறிஸ்தவர்கள் தேவபக்தியின் வேஷம் தரித்து அதின் பலனை மறுதலிப்பவர்களாக இருந்தாலும். சபைகள் எங்கிலும் வஞ்சகம் தலைவிரித்து ஆடினாலும். எல்லாம் சாத்தானின் கைக்குள் அடங்கிவிட்டதுபோல தோன்றினாலும்…பரவாயில்லை. தாம் எச்சரித்தபடியே இயேசு அவர்களை வாந்திபண்ணிப் போடத்தான் போகிறார் (வெளி 3:16)
ஆனாலும், தேவன் ஒரு சிறு கூட்ட ஜனத்தை சபைப் பாகுபாடின்றி ஆயத்தப்படுத்திக் கொண்டுதான் இருக்கிறார். இவர்கள் தேவனை எல்லாவற்றிற்கும் மேலாக நேசிப்பவர்கள். தன்னை நேசிப்பது போல தன் சகோதரனை நேசிப்பவர்கள். கிறிஸ்துவுக்காக தன்னை விற்றுப் போட்டவர்கள். பாபிலோனின் பணக்கறை படியாதவர்கள். கும்பலோடு போகாமல் கும்பலுக்கு எதிர்பட்டுப் போகிறவர்கள். மதரீதியான கிறிஸ்தவமே இவர்களது முதல் எதிரி. வேத வசனத்தைத் தவிர வேறு எதனுடனும் யாருடனும் ஒத்துப் போகமாட்டார்கள். உலகத்தோடும் மாம்சத்தோடும் பிசாசோடும் வெறிகொண்டு மோதுபவர்கள். இவர்களைக் கொண்டுதான் இந்தக் கடைசி காலத்தில் ஒரு மாற்றத்தை தேவன் ஏற்படுத்தப் போகிறார்,
இதோ ஒரு ட்ரில்லியன் டாலர் கேள்வி….
அந்தக் கூட்டத்தில் நீங்களும் நானும் இருக்கிறோமா??????