கர்த்தராகிய தேவன் பற்றி வேதாகமத்தில் இவ்வாறு எழுதப்பட்டுள்ளதை பார்க்கிறோம்!
உபாகமம் 10:17உங்கள் தேவனாகிய கர்த்தர் தேவாதி தேவனும், கர்த்தாதி கர்த்தரும், மகத்துவமும் வல்லமையும் பயங்கரமுமான தேவனுமாயிருக்கிறார்; அவர் பட்சபாதம் பண்ணுகிறவரும் அல்ல, பரிதானம் வாங்குகிறவரும் அல்ல.
அவர் மனுஷர்களை வேறுபடுத்தி பார்த்து பட்சபாதம் பண்ணுகிறவர் அல்ல என்பதை நாம் அறிய முடியும்.
அனேக கொடைகளை தேவன் எந்த ஒரு தகுதியையும் எதிர்பாக்காமல் பட்சபாதம் எதுவும் பார்க்காமல் கொடுப்பதை எல்லாம் எல்லோருக்குமாக பொதுவாகவே கொடுக்கிறார்.
நல்லோர் மேலும் தீயோர் மேலும் சூரியனை உதிக்க செய்கிறார். இரட்சிப்பை எல்லோருக்கும் இலவசமாக கொடுக்கிறார்.
ஆகினும் சில நேரங்களில் அவர் சில காரியங்களை செய்வதற்கு சிலரை மட்டும் தேர்ந்தெடுக்க காரணம் என்ன?
உதாரணமாக இஸ்ரவேல் ஜனங்களை எகிப்த்தில் இருந்து மீட்பதற்கு மோசேயை தேவன் அழைத்தார். ஆனால் மோசேயோ அவர் அழைப்பை ஏற்காமல் வேறு யாரையாவது அனுப்பும்படி கர்த்தருக்கு ஆலோசனை சொல்கிறான்.
யாத்திராகமம் 4:13 அதற்கு அவன்: ஆண்டவரே, நீர் அனுப்பச் சித்தமாயிருக்கிற யாரையாகிலும் அனுப்பும் என்றான்.
ஆனால் கர்த்தரோ விடாப்பியாக அவனை மாத்திரமே அழைத்தார் இதற்க்கு காரணம் என்ன?
அடுத்து ஆபிரஹாமின் முன்னோர்கள் நதிக்கு அப்பால் வேறு தேவர்களை வணங்கியவர்கள்.
யோசுவா 24:2தேவனாகிய கர்த்தர் சொல்லுகிறது என்னவென்றால்: பூர்வத்திலே உங்கள் பிதாக்களாகிய ஆபிரகாமுக்கும் நாகோருக்கும் தகப்பனான தேராகு என்பவன் நதிக்கு அப்புறத்திலே குடியிருந்தபோது அவர்கள் வேறே தேவர்களைச் சேவித்தார்கள்.
யோசுவா 24:3 நான் நதிக்கு அப்புறத்தில் இருந்த உங்கள் தகப்பனாகிய ஆபிரகாமை அழைத்துக்கொண்டு வந்து, அவனைக் கானான்தேசமெங்கும் சஞ்சரிக்கச்செய்து, அவன் சந்ததியைத் திரட்சியாக்கி, அவனுக்கு ஈசாக்கைக் கொடுத்தேன்.
வெறே தேவர்களை வணங்கிய பரம்பரையில் எவ்வளவோ பேர் இருக்க, இந்த ஆபிரஹாமை மாத்திரம் தேவன் தேர்ந்தெடுக்க காரணம் என்ன?
அதேபோல்
ஈசாயிக்கு 7 ஆண் பிள்ளைகள் இருக்க மூத்தவன் எவனையும் தெரிந்துகொள்ளாமல் கடைசிபிள்ளையாகிய தாவீதை தேவன் தேர்ந்தெடுக்க காரணம் என்ன?
கர்த்தரின் இந்த தேர்ந்தெடுப்பில் எல்லாம் எதோ ஒரு அடிப்படை காரணம் இருக்க வேண்டும் அல்லவா?
அந்த அடிப்படை காரணம் என்னவென்று வேதமே நமக்கு சொல்கிறது!
மோசே:
எண்ணாகமம் 12:3மோசேயானவன் பூமியிலுள்ள சகல மனிதரிலும் மிகுந்த சாந்தகுணமுள்ளவனாயிருந்தான்.
ஆப்ரஹாம்:
ஆதியாகமம் 15:6அவன் கர்த்தரைவிசுவாசித்தான், அதை அவர் அவனுக்கு நீதியாக எண்ணினார்.
தாவீது:
அப்போஸ்தலர் 13:22ஈசாயின் குமாரனாகிய தாவீதை என் இருதயத்துக்குஏற்றவனாகக் கண்டேன்; எனக்குச் சித்தமானவைகளையெல்லாம் அவன் செய்வான் என்று அவனைக்குறித்துச் சாட்சியுங் கொடுத்தார்.
இப்படி தேவன் ஒருவரை தேர்ந்தெடுக்க எதோ ஒரு விசேஷ காரணம் உண்டு.
அதை நாம், தேவன் மனுஷனிடம் எதிர்பார்க்கும் தகுதி என்று எடுத்து கொள்ளலாமா?
நமக்கு நான்கு பிள்ளைகள் இருந்தாலும் யாரிடம் எந்த வேலையை கொடுத்தால் அவர்கள் சரிவர செய்து முடிப்பார்கள் என்பதை நாம்
அறிந்து அவர்களிடமே அந்த வேலையை கொடுப்போம். அதற்காக மற்ற பிள்ளைகளிடம் பாசம் இல்லை என்று சொல்லிவிட முடியாது
அதுபோல் நாம் எல்லோரும் தேவனின் பிள்ளைகள்தான் ஆகினும் நமது குண நலன்கள் மற்றும் செயல்பாடுகளிடையே அதிக வேறுபாடு உண்டு.
நம்முடைய இருதய எண்ணங்களை எல்லாம் ஆராய்ந்து அறியும் தேவன், அவனவன் தகுதிக்கு ஏற்ப தேவ ராஜ்ஜியம் கட்டும்பணிகளையும் தன் ஊழிய வேலைகளையும் பகிர்ந்தளிக்கிறார். அதற்க்கு ஏற்ற வெளிப்பாடுகளை கொடுக்கிறார்.
இதில் ஒருவர் பணியை இன்னொருவர் குறைசொல்வதும், தனக்கு தெரியாத ஒரு வெளிப்பாட்டை "இல்லவே இல்லை" என்று வாதிடுவதும் என்றுமே ஒரு சரியான நிலை இல்லை!
அதே நேரத்தில் ஒன்றுக்கும் தகுதி இல்லாதவர்களைகூட சில நேரங்களில் தேவனே தகுதி படுத்துகிறார் என்பதையும் நாம் மறுக்க இயலாது!
II கொரிந்தியர் 3:6புது உடன்படிக்கையின் ஊழியக்காரராயிருக்கும்படி, அவரே எங்களைத் தகுதியுள்ளவர்களாக்கினார்;
__________________
நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)அவர்(கர்த்தராகியதேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்; (ஏசா 25:8)