இன்றைக்கு உலகத்தில் நிலவுகின்ற பெரும்பாலான பிரச்சினைகளைத் தீர்க்க ஒரு மூன்றெழுத்து மந்திரம் உண்டு.
அந்த மந்திரம்- 'தாழ்மை'.
தாழ்மை என்பதைப் பற்றி பலரும் பலவிதமாக நினைக்கிறார்கள். தாழ்மை என்பது கோழைத்தனம் அல்ல. தாழ்மை என்பது சுய பச்சாதாபம் அல்ல. தாழ்மை என்பது சுய கல்லறையும் அல்ல.
அப்படின்னா தாழ்மைதான் என்ன?
தாழ்மை என்பது 'பிறர் நம்மை விட முக்கியமானவர்கள்' என்ற சிந்தனையை மனதில் கொண்டிருப்பது.
நம்முடைய திறமைகளைக் குறைத்து மதிப்பிடுவதே தாழ்மை என சிலர் தவறாகக் கருதிக் கொள்கிறார்கள்.
தாழ்மை என்பது நமது திறமைகளை அடக்குவதல்ல. 'நான்' என்கின்ற சிந்தனையை அடக்குவதே.
'நாம் வாழ்க்கையில் சிறந்தவர்களாக வேண்டுமெனில், தாழ்மையில் சிறந்தவர்களாக இருக்க வேண்டும்' என்கிறார் ரவீந்திரநாத் தாகூர்.
தாழ்மையைப் பற்றிப் போதிக்காத தலைவர்களோ, மதங்களோ இல்லை. ஆனால் தாழ்மை என்றதும் நமக்கு நிறைய பெயர்கள் நினைவில் வரவில்லையே ஏன்?
உண்மையான தாழ்மை விளம்பரங்களை விரும்பாது. உண்மையாய் தாழ்மை உடையவன், தான் தாழ்மையாய் இருக்கிறோம் எனும் உணர்வே இல்லாமல் இருப்பான். அதை தனது இயல்பாக ஆக்கிக் கொள்வான். அதனால் தான் தாழ்மையில் சிறந்தவர்கள் எனும் பட்டியல் பெரிதாக இல்லை.
இரண்டு வகையான தாழ்மை மனிதர்கள் உண்டு. விட்டு விடுதலையாகிய தாழ்மை நிலை ஒன்று. மலைகளில் துறவிகளாகவோ, கோவில் வாசலில் பரதேசிகளாகவோ இருப்பவர்கள் ஒரு வகை. இவர்கள் பற்றற்ற நிலையில் தாழ்மையை உடுத்தி தன்னையே வெறுத்து நடப்பவர்கள்.
இன்னொரு வகை, தினசரி வாழ்க்கையின் பரபரப்புக்கு இடையில், தினசரிக் கடமைகளை ஆற்றிக் கொண்டு தாழ்மை மனதுடன் நடப்பவர்கள். இதுவே மிகவும் கடினமானது. இதில்தான் உண்மையான வெற்றி அடங்கியிருக்கிறது.
நமக்கு மதங்களோடு இருக்கும் பரிச்சயத்தைப் போல உலகத்தில் வேறு யாருக்காவது இருக்குமா என்பது சந்தேகமே. அந்த மதங்கள் எல்லாமே தாழ்மையை ஆழமாய்ப் போதிக்கின்றன என்பதுதான் கவனிக்க வேண்டிய விஷயம்.
'தங்களது பிரார்த்தனையில் தாழ்மையாய் இருக்கும் மக்களையே வெற்றிகள் வந்து சேரும்' என்கிறது இஸ்லாம்.
'கடவுளுக்கு முன்பாக தனது ஒன்றுமில்லாமையைக் குறித்து அழுது புலம்பி வேண்டினால் கடவுளைக் காணலாம்' என்கிறது அமெரிக்காவின் பூர்வீகக் குடிகளின் மதம்.
'தாழ்மையாய் இருங்கள், யாருக்கும் தீங்கு செய்யாதிருங்கள், நேர்மையாய் இருங்கள், குருவுக்கு முழுமையாய்க் கீழ்ப்படியுங்கள், தன்னலத்தை விட்டொழியுங்கள்' என உயரிய கோட்பாடுகளைக் காட்டுகிறது பகவத் கீதை.
'கர்வத்தைத் தாழ்மையால் வெல்லுங்கள்' என்கிறது சமண மதம்.
இயேசுவின் வாழ்க்கையில் ஒரு நிகழ்ச்சி வரும். தனது மரணத்துக்கு முந்தைய நாள் இரவில் தனது பன்னிரண்டு சீடர்களுடன் இயேசு உணவு அருந்த வருகிறார். பந்தியில் வந்ததும் ஒரு பாத்திரத்தில் தண்ணீரை எடுத்து, இடுப்பிலே ஒரு துண்டைக் கட்டிக் கொண்டு சீடர்களுடைய பாதங்களைத் தண்ணீரால் கழுவி, துண்டால் துடைத்தார்.
சீடர்கள் பதற்றப்பட்டார்கள். அந்தக் காலத்தில் பாதங்களைக் கழுவுவதோ, பாதங்களைக் கழுவத் தண்ணீர் ஊற்றுவதோ அடிமைகளின் பணி. அந்த பணியைப் பணிவுடன் செய்தார் இயேசு. அந்த பன்னிரண்டு பேரில் யூதாஸும் ஒருவன். தன்னைக் காட்டிக் கொடுப்பான் என்பதை அறிந்திருந்தும் இயேசு அவனுடைய பாதங்களையும் கழுவினார்.
தாழ்மை என்பது அடுத்தவர்களை உயர்வாய் கருதுவதில் வருகிறது. தனது வாழ்நாள் முழுதும் பணிவைப் போதித்த இயேசு, பணிவு என்பது செயல்களில் வெளிப்பட வேண்டும் என செயல்களிலும் அதைச் செய்து காட்டினார்.
இப்படி எல்லா மதங்களும் போட்டி போட்டுக் கொண்டு கற்பிக்கும் தாழ்மை மட்டும் நமது மனதில் இருந்தால் வாழ்க்கையில் வருகின்ற ஏறக் குறைய எல்லா பிரச்சினைகளையும் சுலபமாய் வென்று விடலாம் என்பதே உண்மை.
சந்தேகமாய் இருந்தால் கொஞ்சம் ஆற அமர கடந்த வாரம் நடந்த பிரச்சினைகள், சண்டைகள், மன வருத்தங்கள் போன்றவற்றை அசை போடுங்கள். அந்த சூழலில் நீங்கள் இன்னும் கொஞ்சம் தாழ்மையாய் இருந்திருந்தால் விளைவு எப்படி இருந்திருக்கும் என நினைத்துப் பாருங்கள்.
நாம் நம்மை மையப்படுத்தியே அனைத்தையும் செய்வோம். அல்லது நமது பார்வையிலிருந்தே அனைத்தையும் எடை போடுவோம். அதைக் கொஞ்சம் மாற்றி பிறருடைய பார்வையிலிருந்து அனைத்தையும் எடைபோடுவதில் தாழ்மை தழைக்கிறது.
குறிப்பாக குடும்ப உறவுகளிடையே தாழ்மையுடன் இருப்பது வலுவான குடும்ப வாழ்க்கைக்கு உத்தரவாதம் தரும். குடும்ப உறவினர்களின் சின்னச் சின்ன வெற்றிகளிலும், நிகழ்வுகளிலும் மகிழ்ச்சி அடைவதும், அவர்களுக்கு எதிர்பார்ப்பற்ற அன்பை வழங்குவதும் தாழ்மையின் பக்கங்கள்.
தாழ்மையினால் பலவற்றை இழந்து விடுவோமோ எனும் அச்சம் பலருக்கும் உண்டு. உண்மையில் தாழ்மையினால் எதையும் நாம் இழப்பதில்லை. ஒரு பாறையைச் செதுக்கி சிற்பமாக்கும் போது பாறைத் துணுக்குகள் உடைந்து சிதறும். அந்தச் சிதைவுகள் பாறைக்கு இழப்பல்ல. சிற்பமாய் உருமாறுவதற்கான முதல் படி அது. நம்மைப் பற்றி நாமே உருவாக்கி வைத்திருக்கும் மாயையை உடைப்பதில் இருக்கிறது தாழ்மையின் வருகை.
உதாரணமாக ஓர் ஏழை நண்பருடைய கல்யாண விருந்துக்குச் செல்கிறீர்கள் என்று வைத்துக் கொள்ளுங்கள். எங்கே உங்களுடைய நேரத்தைச் செலவிடுவீர்கள்? மணமகனுடனா? நண்பர்களுடனா? அல்லது பணியாளர்களிடமா? அங்கே ஏதாவது வேலை இருக்கிறது என வைத்துக் கொள்ளுங்கள், எந்த வேலையை சட்டென எடுத்துக் கொள்வீர்கள்? சாப்பிட்ட இலையை எடுத்து, டேபிளைத் துடைக்கும் வேலையையா? அல்லது மணமக்கள் அருகே நிற்கும் சுத்தமான வேலையையா? உங்கள் மனதில் எழும் எண்ண ஓட்டங்கள் உண்மையில் உங்கள் தாழ்மையை உங்களுக்கே சொல்லித் தரும்.
தாழ்மையான மனம் என்பது பலவீனர்களின் இயல்பு என சிலர் தவறாக நினைப்பதுண்டு. ஆனால் வரலாற்றையே புரட்டிப் போட்ட புத்தர், காந்தி, அன்னை தெரசா, சாக்ரடீஸ் என பலரும் தாழ்மையில் சிறந்து விளங்கியவர்களே.
பிறருக்கு உதவுதல் தாழ்மையின் முக்கியமான அம்சம். மேலதிகாரியுடன் மட்டுமல்லாமல், வேலைக்காரர்களிடமும் பணிவுடன் இருப்பது தாழ்மையின் இலக்கணம். தங்களிடம் இருக்கும் திறமைகளெல்லாம் கடவுளின் பரிசு என தாழ்மைவாதிகள் நினைத்து பணிவு கொள்வார்கள். எல்லாம் தங்கள் திறமை என நினைத்து கர்வம் கொள்வதில்லை.
தாழ்மை, நமது பலவீனங்களை மறைத்தலில் அல்ல, அவற்றை அறிதலில் ஆரம்பமாகும். நமது பலவீனத்தைப் புரிந்து கொண்டு அதை ஏற்றுக் கொள்ளும் பக்குவம் தாழ்மையின் இயல்பு. 'நாம மட்டும்தான் கில்லாடி, நம்மால் தனியாக எதையும் சாதிக்க முடியும்' போன்ற மாயைகளை சுய அறிதல் உடைக்கும்.
'அலுவலகத்தில் தாழ்மையாய் இருப்பவர்கள் சிறந்த தலைவர்களாக உருவாகிறார்கள்' என சமீபத்தில் இங்கிலாந்தில் நடத்தப்பட்ட ஆராய்ச்சி ஒன்று முடிவு வெளியிட்டது.
தலைவர்களிடம் தாழ்மை இருப்பது ரொம்பவே அரிது. இந்த சூழலை நினைத்துப் பாருங்கள். உங்கள் தலைவர் ஒரு புது ஐடியாவோடு வருகிறார், அதைக் குறித்து சிலாகித்துப் பேசுகிறார். அப்போது குழுவிலுள்ள ஒருவர் அந்த ஐடியாவிலுள்ள ஓட்டைகளைச் சுட்டிக் காட்டினால் தலைவருடைய செயல்பாடு எப்படி இருக்கும்? இன்னும் ஒரு படி மேலே போய், அதைவிடச் சிறந்த ஐடியாவை அந்த நபர் பரிந்துரை செய்தால் தலைவரின் பதில் என்னவாய் இருக்கும்? புது ஐடியாவை சொல்லும் நபர் தலைவரை விட வயதில் ரொம்ப ரொம்பச் சின்னவனாய் இருந்தால் தலைவரின் ரியாக்ஷன் எப்படி இருக்கும்?
வாவ், சூப்பர் ஐடியா! பாராட்டுகள்! என மனம் திறந்து சபையிலேயே பாராட்டி, ஊக்கமும் கொடுத்தால் அவர் தாழ்மையுடைய தலைவர். 'இதெல்லாம் ஒத்து வராது' என தடாலடி தற்காப்பில் இறங்கினால் ஈகோ பார்ட்டி என்று அர்த்தம்.
நீங்கள் தலைவராகவோ, மேலதிகாரியாகவோ இருந்தால் ஒன்றை நினைவில் கொள்ளுங்கள். தாழ்மை உங்களை மேலும் மேலும் உயர்வான இடத்துக்கு அழைத்துச் செல்லும். உங்களை விடச் சிறந்த சிந்தனை உங்கள் ஊழியரிடம் இருக்கலாம் எனும் நினைப்பை எப்போதும் மனதில் கொண்டிருங்கள்.
இதே சிந்தனையை அப்படியே அலேக்காகத் தூக்கிக் கொண்டு வந்து வீட்டிலும் நடைமுறைப்படுத்திப் பாருங்கள். உங்களை விட சிறப்பான ஒரு விஷயத்தை உங்கள் வாழ்க்கைத் துணையோ, மாமனாரோ, மாமியாரோ, சகோதரரோ, பிள்ளைகளோ சொல்லலாம் எனும் தாழ்மையை மனதில் ஏற்றுப் பாருங்கள். பல்வேறு சண்டைகள் முளைக்காமலேயே கருகிவிடும்.
பொதுவான மனித சிந்தனைக்கு ஒரு பாதை உண்டு. அது தன்னிடம் என்ன நல்ல விஷயம் இருக்கிறது என்பதைப் பார்க்கும். அப்புறம் அடுத்தவர்களிடம் என்ன குறை இருக்கிறது என்பதைப் பார்க்கும். நம்முடைய நல்ல விஷயங்கள், அடுத்தவர்களின் பலவீனங்கள் இவற்றின் கலவையே பெரும்பாலான நமது உரையாடல்கள்.
தாழ்மையான மனது கொஞ்சம் வித்தியாசப்படும். அது தனது பலத்தையும் பலவீனத்தையும் பேசும். அடுத்தவர்களுடைய பலத்தையே பிரதானப்படுத்திப் பேசும். ஓர் உரையாடல் நன்மையை நோக்கி நடக்க வேண்டும் என்பதையே தாழ்மையான மனம் விரும்பும். இதை மனதில் குறித்துக் கொள்ளுங்கள்.
வெற்றிகளையும் தோல்விகளையும் இயல்பாய் எடுத்துக் கொள்ளும் பக்குவத்தை தாழ்மை தரும். காரணம், தவறுதலும் வாழ்வின் பாகமே என்பதை அது அறியும்.
மன்னிக்கும் குணமும் தாழ்மையின் பிள்ளையே. பிறருக்கு எதிரான வன்மத்தையும், பழி வாங்கும் எண்ணத்தையும் தாழ்மையான மனம் கொண்டிருக்காது.
தாழ்மை மன வலிமையின் அடையாளம். அந்த வலிமையை நீங்கள் உடுத்திக் கொண்டால் வாழ்க்கை மிக அழகானதாக மாறும். குழந்தைகளுக்கும் இந்தத் தாழ்மையைக் கற்பியுங்கள். உங்களுடைய செயல்களில் தாழ்மை வெளிப்படும்போது குழந்தைகளும் அவற்றைக் கற்றுக் கொள்வார்கள். பிறருக்கு உதவுவது, மரியாதை செலுத்துவது, நன்றி சொல்வது, மன்னிப்பு கேட்பது என தாழ்மையின் சின்னச் சின்ன கிளைகளை அவர்களுக்கு பரிச்சயப்படுத்துங்கள். நாளைய சமூகம் தாழ்மையில் தளைத்து வளரும்.
தாழ்மையை மனதில் கொள்வோம் பெரும் மேன்மையை வாழ்வில் கொள்வோம்!
__________________
காரியத்தின் கடைத்தொகையை கேட்போமாக, தேவனுக்குப் பயந்து, அவர் கற்பனைகளைக் கைக்கொள்; எல்லா மனுஷர்மேலும் விழுந்த கடமை இதுவே. (பிரசங்கி :12:13)