எனக்கு சுமார் 30 வயது இருக்கும்போது கண் பார்வை சற்று மங்கலாக தெரிந்தது. கண்ணை செக் செய்து ஒரு கண்ணாடி போட்டுக் கொண்டேன். காட்சிகள் எல்லாமே மிக மிக தெளிவாக தெரிந்தது அனால் சில நாட்களில் ஆண்டவர் என்னோடு இடைபடவே கண்ணாடி போடுவதை நிறுத்திவிட்டேன்.
அந்நேரம் பல நண்பர்கள் என்னிடம் "ஒரு நாளில் சுமார் 8 மணி நேரம் கணினி முன் அமர்ந்திருக்கும் எனக்கு கண்ணாடி போட வேண்டிய நேரத்தில் போடவில்லை என்றால் கொஞ்சம் கொஞ்சமாக கண் பார்வையே போய்விடும்" என்று அதிகமாக பயம்காட்டினார்கள்
ஆனால் நானோ "ஆண்டவர் என்னை எதை எவ்வளவு தூரத்தில் எப்படி பார்க்கவேண்டும் என்று வைத்திருக்கிறாரோ அப்படியே நான் பார்க்க விரும்புகிறேன். கண்ணாடி என்று ஒன்றை போட்டுகொண்டு என் கண்ணை நானே கூர்மையாக்கி, தேவன் தெளிவாக பார்க்கவேண்டாம் என்று எண்ணுவதை நான் தெளிவாக பார்க்கவிரும்பவில்லை என்று சொல்லி விட்டுவிட்டேன்.
ஆனால் இன்று சுமார் 19 வருடங்கள் ஆகிறது நானும் அதேபோல் தினமும் 8-10 மணிநேரம் கணினியை பார்த்து வேலை செய்கிறேன் என் கண்களில் எந்த பாதிப்பும் ஏற்ப்படவில்லை.
ஆனால் கடந்த ஒருமாதத்திற்கு முன்னர் மீண்டும் எல்லா எழுத்துக்களும் பார்க்க முடியாதபடி மங்கலாக தெரிய ஆரம்பித்தது அதனால் வேலையில் ஒரு சின்ன மிஸ்டேக் கூட ஆகிவிட்டது. எனவே வயதாகிவிட்டது இனி கண்ணாடி போட்டுவிடலாமா என்று சற்றே தடுமாறிய நான் மீண்டும் விசுவாசத்தை பிடித்துகொண்டு "எனக்கு /என் வேலைக்கு எப்படியான பார்வை தேவை என்பதை தேவன் அறிவார் அதை நிச்சயம் அவரால் தர முடியும் முடிந்தவரை நான் கண்ணாடி போடவே மாட்டேன்" என்று உறுதியாக விசுவாசித்து கண்ணாடி போடும் எண்ணத்தை உதறினேன்.
சில நாட்களிலேயே கண் பார்வை நல்ல நிலையை அடைந்தது.
மாற்கு 9:23இயேசு அவனை நோக்கி: நீ விசுவாசிக்கக்கூடுமானால் ஆகும், விசுவாசிக்கிறவனுக்கு எல்லாம்கூடும் என்றார்.
உறுதியான விசுவாசத்துக்கு முன்னால் உலகமும் அதன் நடப்பும் எல்லாமே ஒரு மாயை! தேவனால் எல்லாவற்றையும் சரியாக மாற்றிவிட முடியும் என்ற உண்மையை அறிந்தால் எந்த சூழ்நிலையிலும் நாம் தடுமாறவே மாட்டோம்!