தோமா, மூலம் 2000 வருட கிறிஸ்தவ சுவீகாரம் இந்தியருக்கு உண்டு! - சகரியா பூணன்
இயேசு மரித்து உயிர்தெழுந்த பின்பு அவருடைய சீஷர்களுக்கு காட்சியளித்தார் என வேதத்தில் வாசிக்கிறோம்.
அவ்வேளையில், பன்னிருவரில் ஒருவரான தோமா அவர்களுடனே கூட இருக்கவில்லை. இயேசுவைக் கண்ட சீஷர்களைப் பார்த்து தோமா கூறும்போது “அவருடைய கைகளில் ஆணியினால் உண்டான காயத்தை நான் கண்டு, அந்த காயத்திலே என் விரலை இட்டு, என் கையை அவருடைய விலாவிலே போட்டாலொழிய விசுவாசிக்க மாட்டேன்” எனக் கூறினான் (யோவான் 20:24-25).
மீதியிருந்த பதினொரு சீஷர்களில் தோமாவே அவிசுவாசம் நிறைந்தவனாய் இருந்தான்! விசுவாசிக்காத தோமாவை இயேசு புறக்கணிக்காமல், எட்டு நாளைக்குப் பின்பு அவனுக்கு முன் தோன்றினார்.
“தோமா, நீ உன் விரலை இங்கு நீட்டி என் கைகளைப் பார், உன் கையை நீட்டி என் விலாவிலே போடு, அவிசுவாசியாயிராமல் விசுவாசியாயிரு!” என்றார்.
தோமா உள்ளம் உடைந்து பிரதியுத்திரமாக “என் ஆண்டவனே! என் தேவனே!” என கர்த்தரை சார்ந்து கொண்டான்.
இவ்வாறு ‘அவரது பாடுகளின் சத்தியத்தால்’ பிடிக்கப்பட்ட இந்த தோமாவே, நமது தமிழ்நாட்டின் சென்னை பட்டணத்திற்கு வந்தார்.
சத்தியத்தை பிரசங்கித்ததினிமித்தம், கிறிஸ்துவை ஏற்றுக்கொள்ள மறுத்த புறஜாதியினரால் கொடிய அம்பு எய்து கொல்லப்பட்டார்.
இன்றும், அவர் கொல்லப்பட்ட இடம் “பரிசுத்த தோமாவின் மலை” (St.Thomas Mount) என அழைக்கப்படுகிறது.
சென்னையில் இந்த தோமா பிரசங்கிக்கும்பொழுது “இயேசு உங்களுக்கு பணம் கொடுப்பார், செல்வம் கொடுப்பார்!” என பிரசங்கித்திருந்தால் ஜனங்கள் அவரை ராஜாவாக மாற்றியிருப்பார்கள்.
ஆனால் அவரோ “உங்கள் பாவத்தை விட்டு திரும்புங்கள், விக்கிர ஆராதனையை ஒழித்து விடுங்கள், ஒருவரையொருவர் பகைக்காமல் அன்புகூருங்கள்.....” என்ற கலப்படமில்லாத சத்தியத்தையே பிரசங்கித்தார்.
இன்று பிரசங்கிக்கப்படுவது போல், “இயேசு உங்களை சுகமாக்குவார்..... செல்வ செழிப்பாக்குவார்” என்று மாத்திரமே பிரசங்கித்திருந்தால், அந்த சென்னை வாசிகள் தோமாவை கொலை செய்திருக்க மாட்டார்கள்.
மேலும் அவர் வலியுறுத்தி கூறும் பொழுது, “உங்களை இரட்சித்திட இயேசுவைத் தவிர வேறு ஒருவரும் வானத்திலிருந்து இறங்கி வரவில்லை! நான் அவரைக் கண்டவன், அவரோடு இருந்தவன், உயிர்தெழுந்த அவரின் காயங்களைத் தொட்டவன்...... ஆகவேதான் இஸ்ரேல் தேசத்திலிருந்து நீண்ட பயணமாய் இந்த தமிழ்நாட்டிற்கு வந்துள்ளேன்! நான் இயேசுவால் அனுப்பப்பட்டு வந்துள்ளேன்! நான் சொல்லும் அனைத்தும் உண்மை!” என வலியுறுத்தி பிரசங்கித்தார்.
இவரது செய்தியை கேட்டு அநேகர் மனந்திரும்பியபடியால், ஆத்திரமடைந்த புறஜாதியார்கள் தோமாவை கொன்றனர்! நம் இந்திய தேசத்தில், தோமாவே முதல் இரத்த சாட்சி!
தன் காயங்களைத் தொட்டுப்பார்த்த தோமா, கேரள மாநிலத்திற்கும், தமிழ்நாட்டிற்கும் செல்வாரென்றும், அங்கே அநேகர் இயேசுவின் சீஷர்களாய் மாறுவார்கள் என்றும் இயேசு முன் கூட்டியே அறிந்திருந்தார்! பின்பு அவர் கொல்லப்படுவார் என்பதையும் இயேசு அறிந்திருந்தார்.
இந்திய கிறிஸ்தவர்களாகிய நமக்கு 2000 வருடங்களான கிறிஸ்தவ சுவீகாரம் உண்டு என்பதையும், தோமா வழங்கிய அந்த கலப்படமற்ற சுவிசேஷத்தை இயேசுவின் சீடர்களாய் வாழும் நாம் யாவரும், அந்த உத்தம தரத்தை காத்துக் கொள்ள வேண்டும் என்பதையும் அறிந்து கொள்வோமாக!!