வந்ததன் நோக்கம் எம்மிலும் எம்மூலமும் நிறைவேறுகின்றதா?
நத்தார் என்றாலே அழகு, மகிழ்ச்சி, குளிரான தருணம், புதிய ஆடை, விடுமுறைகள் என்று குதூகலிக்கும் நாம் ஒரு தடவையாவது யோசித்திருப்போமா? இரட்சகர் வந்ததன் நோக்கத்தை குறித்தும் அது நம்மில் நிறைவேறுகின்றதா என்றும்?
பாவங்களினாலும் சாபங்களினாலும் மரித்திருந்த எம்மை அவர் பிறப்பின் மூலம் விடுதலையாக்கினார் என்பது மாற்றவும் மறுக்கவும் முடியாத உண்மையாகும்...
கொலோசெயர் 2:13 - உங்கள் பாவங்களினாலேயும், உங்கள் மாம்ச விருத்தசேதனமில்லாமையினாலேயும் மரித்தவர்களாயிருந்த உங்களையும் அவரோடேகூட உயிர்ப்பித்து, அக்கிரமங்களெல்லாவற்றையும் உங்களுக்கு மன்னித்து..
வல்லமையும் பராக்கிரமும் மகத்துவமும் நிறைந்த ஆண்டவர் மனுஷனாகிய எம்மீது வைத்த எதிர்பார்ப்பில்லாத அன்பின் நிமித்தம் தனது மகிமையிலிருந்து இறங்கி வந்தார்... அவர் தாழ்மையின் ரூபமாக இறங்கி வந்தார்.
யோவான் 1:1 ஆதியிலே வார்த்தை இருந்தது, அந்த வார்த்தை தேவனிடத்திலிருந்தது, அந்த வார்த்தை தேவனாயிருந்தது.
யோவான் 1:14 அந்த வார்த்தை மாம்சமாகி, கிருபையினாலும் சத்தியத்தினாலும் நிறைந்தவராய், நமக்குள்ளே வாசம்பண்ணினார்; அவருடைய மகிமையைக் கண்டோம்; அது பிதாவுக்கு ஒரே பேறானவருடைய மகிமைக்கு ஏற்ற மகிமையாகவே இருந்தது
அவர் இறங்கி வந்ததன் நோக்கம் எமது பாவங்களுக்கு ஜீவாதார பலியாக தன்னை ஒப்புக்கொடுத்து எம்மை மீட்பதே!
அந்த அன்பு தெய்வத்திற்கு கைமாறாக நாம் என்ன செய்து கொண்டிருக்கிறோம்? அவர் வந்ததன் நோக்கம் எம்மில் நிறைவேற நம்மை நாம் அவருக்கு ஒப்பு கொடுப்போமா?
இன்று ஆண்டவராகிய இயேசுவை அறியாத ஜனங்களுக்கு அவரை அறிவித்து பாவம் என்னும் கொடிய வியாதியிலிருந்து அவர்களை விடுவிப்போம்... நம்மில் அவர் வந்த நோக்கம் நிறைவேற இடம் கொடுப்பதோடு நம் மூலம் அவர் வந்த நோக்கத்தை நிறைவேற்றுவோம்.....
நம்மை நாமே ஆராய்ந்து பார்ப்போம், எம்மில் பரிசுத்த வாழ்க்கை இருக்கிறதா? ஆண்டவரோடு உள்ள உறவில் எப்படி இருக்கிறோம்? இந்த நத்தாரில் எம்மை முழுமையாக ஆண்டவரிடம் ஒப்பு கொடுப்போமா?
சிந்தித்து தீர்மானம் எடுப்போம்.. எமது வாழ்க்கையை அலங்கரிப்பதன் மூலம் நத்தாரை கொண்டாடுவோம்..
கர்த்தர் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக....