அவனுடைய தலைமுடியை சிரைப்பித்து அவனை சிறுமைப்படுத்த ஆரம்பிக்கிறாள் (16:19)
அவனுடைய பலம் அவனைவிட்டு நீங்கிற்று.
அப்பொழுது அவள் சிம்சோனே பெலிஸ்தர் உன்மேல் வந்துவிட்டார்கள் என்றாள்.
அவன் எப்போதும்போல் உதறிவிட்டு வெளியே போவேன் என்றான்.
தெலீலாளுடன் விளையாட துணிந்த அவன், அவன் தான் எல்லையை மீறிவிட்டதையும், கர்த்தருடைய பலம் தன்னைவிட்டு நீங்கினதையும் சற்றுகூட உணரவில்லை.
தான் இன்னும் பலசாலி என்று எண்ணி, தனியாக இந்த பெலிஸ்தரை சமாளித்துவிடலாம் என்று எண்ணினான்.
ஆனால் என்ன பரிதாபம்! பெலிஸ்தரை எதிர்க்க பலமில்லாமல் போன சிம்சோன், கயிறுகளால் அல்ல வெண்கல சங்கிலிகளால் கட்டப்பட்டான்.
யாராலும் சிறைப்பிடிக்க முடியாமல் இருந்த பலசாலியான அவனை சிறைச்சாலையில் மாவரைக்க வைத்தார்கள்.
ஆனால் இங்குதான் நம்முடைய பரமபிதாவின் கிருபையைப் பார்க்கிறோம்!
அவர் தம்முடைய கிருபையை ஒரு நல்லவன் மேல், ஒழுக்கமுள்ளவன்மேல் காட்டாமல், தன் வாழ்நாள் முழுவதும் வேசிகள் பின்னால் அலைந்த ஒருவனிடம், பெண்களிடம் பொய் சொல்லி ஏமாற்றிய ஒருவனிடம் காட்டுவதைப் பார்த்து எனக்கு புல்லரித்துப் போனது.
எத்தனை மகா கிருபை!
இவன் நமக்கு லாயக்கு இல்லை என்று அவனை வெறுத்துத் தள்ளாமல், அவன்மேல் தன் கிருபையை பொழியப்பண்ணுகிறார் நம்முடைய பரம பிதா!
சிம்சோனை மொட்டையாக விட்டுவிடாமல் அவன் முடியை வளரப்பண்ணினார்.
ஒவ்வொருநாளும் சிம்சோன் மாவரைக்கும் இயந்திரத்தில் மாவைத் தள்ளினபோதும் அவன் முடி சிறிது சிறிதாக வளர ஆரம்பித்தது.
அவனுடைய தலைமுடி மட்டுமா வளர்ந்தது? அதோடு அவன் இதுவரைக் கீழ்ப்படியாமல் ஒதுக்கித் தள்ளின தேவனாகிய கர்த்தர் மேல் நம்பிக்கையும் விசுவாசமும் வளர்ந்தது!
கர்த்தர் தம்முடைய சுத்தக் கிருபையால் அவனுடைய இருதயத்தையும், சிந்தையையும் புதுப்பிக்க ஆரம்பித்தார்!
இரட்சிக்கக்கூடாத படிக்குக் கர்த்தருடைய கரம் குறுகிப்போகவுமில்லை என்ற வசனத்திற்கு சிம்சோனே சாட்சி!
இன்று கர்த்தர் என்னை இரட்சிக்கவே முடியாத நிலையில் நான் இருக்கிறேன் என்று யாராவது கலங்குகின்றீர்களா?
உங்களுக்கு ஓர் நற்செய்தி!
கர்த்தர் உங்களுடைய வாழ்வு எந்தநிலையில் இருந்தாலும் அதில் கிரியை செய்ய வல்லவர்!
நீ உன்னையே இரட்சித்துக்கொள்ள முடியாது என்று உணரும் தருணத்தில் கர்த்தரின் கிரியை உன்னில் ஆரம்பிக்கும்.