நாம் அடிக்கடி வாசிக்கிற மற்றும் கேட்கிற வேதவசனங்களில் இருந்தும் கூட தேவன் நமக்கு புதிய புரிதலைத் தரத் தவறுவதில்லை என்பதை சமீபத்தில் ஒரு வீட்டுக் கூட்டம் நடத்துகையில் உணர்ந்தேன். தேவனுடைய வார்த்தை ஜீவனுள்ளது அல்லவா!
ஏசாயா 49: 15,16ஸ்திரீயானவள் தன் கர்ப்பத்தின் பிள்ளைக்கு இரங்காமல், தன் பாலகனை மறப்பாளோ? அவர்கள் மறந்தாலும், நான் உன்னை மறப்பதில்லை.இதோ, என் உள்ளங்கைகளில் உன்னை வரைந்திருக்கிறேன்; உன் மதில்கள் எப்போதும் என்முன் இருக்கிறது.
இந்த வசனத்தை வாசிக்கையில், மூன்று முக்கியமான விசயங்களை கர்த்தர் உணர்த்தினார். முதலாவதாக, ஒரு தாய் தன் பிள்ளையை மறப்பாளா? பொதுவாக அன்பிற்கு உதாரணம் காட்ட மனிதர்களாகிய நாம், அம்மாவையே குறிப்பிடுகிறோம். “தாயிற் சிறந்த கோவிலில்லை”. எனக் கொண்டாடுகிறோம். அன்பின் மறு உருவமாக நாம் நம்மைப் பெற்று, வளர்த்தூட்டிய அம்மாவைக் காண்கிறோம். ஒரு தாய் தன் பிள்ளையை மறப்பாளோ? அதெப்படி அவள் மறப்பாள் என்று நீங்கள் சொல்லக் கூடும்.ஆனாலும் விதிவிலக்காக, சிலர் இருக்கத்தான் செய்கிறார்கள். அதை நாளிதழ்களிலும், சமூக நடப்புகளிலும் வாசித்து அறிகிறோம். ஆனால் நம் தேவன் சொல்கிறார், அவள் ஒருவேளை மறக்கக் கூடும். நான் உன்னை மறக்க மாட்டேன்.
தேவன் நம்முடன் பேசுகையில் நமக்குப் புரியாத மொழியில் பேசுவதில்லை. நன்றாகக் கவனித்துப் பாருங்கள். அனேக சிறு குழந்தைகள் பேசுவது சுற்றிலும் இருப்பவர்களுக்குப் புரியாது. ஆனால் உடனிருக்கும் தாய் அதை சரியாக விளங்கிக் கொண்டு, குழந்தைக்கு புரியும் மொழியில் பேசவும் செய்வார். நம் தேவனும் நமக்குப் புரியும் மொழியில் நம்முடன் பேசுவதைக் கவனியுங்கள். நாம் பேசுவதும், நம் இதயத்தின் பெருமூச்சு கூட அவருக்குப் புரியும் என்பதும் எவ்வளவு நம்பிக்கையான ஒன்று பாருங்கள். நான் உன்னை மறப்பதில்லை - என்று சொன்னவர் அதன் தொடர்ச்சியாக மேலுமிரு காரியங்களைச் சொல்கிறார்.
இரண்டாவதாக, உள்ளங்கைகளில் வரைந்திருக்கிறேன் என்று சொல்கிறார். இங்கே இரு காரியங்களை நாம் கவனிக்க வேண்டும். நாம் நம் முகத்தைக் கூடக் கண்ணாடியில் சில நாள் பார்க்கத் தவறலாம். ஆனால் நாம் அனுதினமும் உபயோகிக்கிற நம் கரங்களின் உள்ளங்கைகளை அவ்வப்போது சும்மாவேணும் நாம் பார்ப்பதுண்டு. யோசித்து, சோதித்துப் பாருங்கள். நம் எல்லா அவயவங்களையும் நாம் எளிதில் காண இயலாது. ஆனால் உள்ளங்கைகள்!!! அந்த உள்ளங்கைகளில் நம்மை தேவன் வரைந்திருக்கிறார் என வாசிக்கிறோம். இது, ஏதோ ஓவியம் வரைவது போன்ற ஒன்று அல்ல, மூல மொழி தரும் பொருளில் சொல்வதானால், write or carve as a formal or permanent record. செதுக்குதல் எனும் பதத்தை நாம் எப்போது பயன்படுத்துவோம். ஒரு சிற்பி ஒரு கல்லை செதுக்கி அதை ஒரு அழியா படைப்பாக மாற்றுகிறார். கல்வெட்டுகளில் நாம் காணும் எழுத்துக்கள் அழிக்கக் கடினமானவை. அந்தக் கல்லுக்கு ஏதேனும் நேர்ந்தாலொழிய அந்த எழுத்துக்களுக்கு எதுவதும் நடக்காது, நடக்கவும் முடியாது. நம்மையும், நம்மைப் பற்றிய, நம் வாழ்வைப் பற்றிய சித்திரத்தையும் தேவன் தம் உள்ளங்கைகளில் வரைந்து வைத்திருக்கிறார். நாம் எதற்குக் கவலைப் படவேண்டும்! அதை அவரைத் தவிர எவரும் அழிக்கவோ, மாற்றவோ முடியாது. அவர் நம் வாழ்வின் தற்போதைய சூழ்நிலையை மட்டும் அல்ல, நம் வாழ்வைப் பற்றிய மொத்த வரைபடமும் அறிவார். நம் திட்டங்களுக்கு கொடுக்கும் முன்னுரிமையை அவரிடம் விட்டுவிட்டு அவருக்கு முன்னுரிமை கொடுத்தால், அனைத்தும் அவரால் சாத்தியப்படும்.
மூன்றாவதாக, உன் மதில்கள் எப்போதும் என்முன் இருக்கிறது என்று சொல்கிறார். என்னைச் சுற்றிலும் இருந்தவர்களிடம் கேட்ட அதே கேள்வியை உங்களிடம் நான் கேட்கிறேன். மதில், அல்லது சுவர் என்றதும் உங்கள் மனதில் என்ன தோன்றுகிறது. என் அருகில் இருந்தவர்கள், அது நம் வாழ்வில் வரும் பிரச்சனைகள் என்றும், சிலர் அதுதான் நம் வாழ்க்கை என்றும் சொன்னார்கள். நீங்கள் இருக்கிற இடத்தைச் சுற்றிப் பாருங்கள். சுவர் இல்லாத வீடு எப்படி இருக்கும். பாதுகாப்பற்றதாக இருக்கும் அல்லவா!
நாம் நம்மைச் சுற்றிலும் ஒரு சுவரை கட்டி வைத்திருக்கிறோம். காணக்கூடிய சுவர்கள் நாம் வாழ்கிற வீட்டிலும், கண்ணுக்குப் புலனாக சுவர்களை உறவுகளிலும் உண்டு. அருகருகில் இருந்தாலும், ப்கைமை, வெறுப்பு மற்றும் கசப்பினால் ஒரு வார்த்தை கூட பேசமுடியாதளவுக்கு நாம் ஒருவரோடுருவர் ஒரு தடுப்புச் சுவர் இருப்பதைக் காண்கிறோமல்லவா! நம் நெருக்கமான உறவுகளிடையே ஒரு அன்பின் சுவரை ஏற்படுத்தி ஒருவருக்கொருவர் அரணாக இருக்கிறோம் என்பது உண்மைதானே! இவை காணமுடியாவிடினும், உணர முடியும். நம்மைப் பாதுகாக்கும் அரணாக இருக்கும் சுவர்களுக்கு ஏதேனும் நேர்ந்தால்.... நாம் பாதிக்கப்படுவது உறுதி அல்லவா! அதுதானே பிசாசின் விருப்பமாகவும் இருக்கிறது. ஆகவேதான் அவன் நம் உறவுகளை, நம் மதில் சுவர்களை வீழ்த்த எப்போதும் விழைகிறான்.
ஆனால் ஆண்டவர் என்ன சொல்கிறார். நீ மட்டுமல்ல, உன் வாழ்க்கை மட்டுமல்ல, உன் மதில் சுவர்கள் என் முன் இருக்கிறது. உலகப் பிரகாரமான பாதுகாப்பு ஏற்பாடுகள் எல்லாம் எவ்வளவு பலமுள்ளவை என்பதை இன்று வல்லரசு நாடுகளின் பயங்கள், பதைபதைப்புகளில் இருந்து நாம் கற்றுக் கொள்ளும் பாடம் என்ன? ஆனால் நாம் ஆண்டவரின் பாதுகாப்பில் இருக்கும் போது, பயப்படக் காரணமெதுவும் உண்டா என்ன! “உங்களைத் தொடுகிறவன் அவருடைய கண்மணியைத் தொடுகிறான்” என தீர்க்கன் சொல்லி வைத்திருக்கிறார். உங்கள் பாதுகாப்பைப் பற்றிய பயம் இருக்குமெனில், உங்கள் கையை உங்கள் கண்ணுக்கு நேராகக் கொண்டு சென்று, அதைத் தொட முடிகிறதா என்று பரிசோதித்துப் பாருங்கள். முடியவே முடியாது. ஏனெனில் கண்ணுக்கு அருகில் கொண்டு செல்லும்போதே இமைகள் தானாக உங்களை தடை செய்யும். கர்த்தரின் பாதுகாப்பில் நாம் இருக்கையில் நாம் எதற்கும் பயப்படவேண்டாம். சத்துரு முனைப்பாக நம் மதில் சுவரைத் தாக்கி நம்மை நெருக்க முயற்சி செய்யும்போது, தேவன் நமக்குதவ நம்மைப் பார்த்துக் கொண்டிருக்கிறார்.
“அவருடைய பார்வையில் நாம்” என்பதை நினைத்தாலே தித்திப்பாக இருக்கிறதல்லவா. இன்று தலைவர்கள் மற்றும் பிரபலமானவர்கள் பார்வை படாதா என்று ஏங்கிக் கொண்டிருப்பவர்கள், எதையாவது செய்து கொண்டிருப்பவர்கள் மத்தியில், நமக்காக, நம்மை எப்போதும் பார்த்துக் கொண்டிருக்கிற நம் தேவனை நாம் நோக்கிப் பார்ப்போம்.
எப்போதாவதல்ல, எப்போதும்! அதுவே நமக்குப் போதும்.
அன்புடன்
அற்புதராஜ்
9538328573
__________________
நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)அவர்(கர்த்தராகியதேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்; (ஏசா 25:8)