எனவே சிறிய செயல்களிலும் தேவபிள்ளைகள் விழிப்பாக இருக்கவேண்டும் இல்லையேல் அதுவே ஆத்துமாவை அழிவுக்கு நேராக அழைத்துச்செல்லும் என்பதை எடுத்தியம்ப மிக சிறிய மீறுதலின் காரணமாக மிகப்பெரிய தண்டனை பெற்ற மூன்று முக்கியமானவர்களை பற்றி இங்கு எழுத விழைந்துள்ளேன்!
எத்தனையோ முறை இஸ்ரவேல் ஜனங்கள் அவனுக்கு கடும் கோபம் மூட்டிய போதெல்லாம் சகித்துக்கொண்டு, ஆண்டவரிடம் அவர்களை அழிக்க வேண்டாமென்று முகங்குப்புற விழுந்து பரிந்து பேசி திறப்பின் வாசலில் நின்று ஜெபித்தவன்!
கர்த்தரின் வார்த்தைப்படி பார்வோனை பலவித வாதைகளால் வருத்தியவன்! செங்கடலை செய்கையால் பிளந்தவன், மன்னாவை மண்ணுக்கு வரவைத்து கொடுத்தவன் இன்னும் அவனை பற்றி சொல்லவேண்டுமென்றால் ஒரே வார்த்தைதான்!
அவன் இஸ்ரவேலர் எல்லாருக்கும் பிரத்தியடசமாய்ச் செய்த சகல வல்லமயான கிரியைகளையும், மகா பயங்கரமான செய்கைகளையும் பார்த்தால், கர்த்தரை முகமுகமாய் அறிந்த மோசேயைப்போல, ஒரு தீர்க்கதரிசியும் இஸ்ரவேலில் அப்புறம் எழும்பினதில்லை என்று விளங்கும்.
ஆம் கர்த்தரை முக முகமாக அறிந்தவன்! இவ்வளவு மேன்மையுள்ள மோசே, கர்த்தர் கன்மலையை பார்த்து கையில் உள்ள கோலை நீட்டு என்று கட்டளையிட்டபோது, கவனமில்லாமல் எரிச்சலால் கன்மலையை கோலால் அடித்த ஒரே ஒரு சிறு தவறுதலால் கானான் தேசத்தில் பிரவேசிக்கும் மிக மேன்மையான வாய்ப்பை இழந்துபோனான்!
நான் இஸ்ரவேல் புத்திரருக்குக் கொடுக்கப்போகிற எதிரேயிருக்கிற தேசத்தை நீ பார்ப்பாய்; ஆனாலும் அதற்குள் நீ பிரவேசிப்பதில்லை என்றார். (உபா32:52)
மோசே செய்த தவறை பார்த்தால் இன்று நமது பார்வைக்கும் தவறாகவே தெரிவது இல்லை! அவ்வளவு அற்பமான தவறுக்கெல்லாம் தண்டனையா என்று கூட கேட்கலாம். ஆனால் ஆடவரின் பார்வையில் அது மன்னிப்பில்லா மாதவறாக போய்விட்டதே!
தேவனுடைய மனிஷன் என்று மிக மேன்மையான பெயருடன், பெயர் குறிப்பிடப்படாமல் வேதம் வெளிப்படுத்தும் இந்த தீர்க்கதரிசி I ராஜாக்கள் புத்தகம் 13ம அதிகாரத்தில் வருகிறார். பெத்தேலில் இருந்த பெரியதொரு பலீபெட்டத்தில் எரோபெயாம் தூபம் காட்டும்போது:
"பலிபீடத்தை நோக்கி: பலிபீடமே பலிபீடமே, இதோ, தாவீதின் வம்சத்தில் யோசியா என்னும் பேருள்ள ஒரு குமாரன் பிறப்பான்; அவன் உன்மேல் தூபங்காட்டுகிற மேடைகளின் ஆசாரியர்களை உன்மேல் பலியிடுவான்; மனுஷரின் எலும்புகளும் உன்மேல் சுட்டெரிக்கப்படும் என்பதைக் கர்த்தர் உரைக்கிறார் என்று கர்த்தருடைய வார்த்தையைக் கூறினான்;"
அதனால் கோபமடைந்த ராஜா அவனை பிடியுங்கள் என்று அவனுக்கு நேராக நீட்டிய கையை மடக்க முடியாமல் தவிக்க, மீண்டும் அதே தேவமனிதன் ஜெபத்தாலே குணமானான். இப்படி மஹா பெரிய காரியங்களை செய்து மலைப்புக்குள்ளாக்கிய மாபெரும் தீர்க்கதரிசியாகிய அவர், உரைத்ததெல்லாம் உண்மையாகவே யோசியா ராஜாவின் நாட்களில் நிறைவேறி உண்மை தேவ மனிதனென்று உலகுக்கு உணர்த்தியவர்! இவ்வளவு மகத்தான மனிதன் சிறிய தவறினால் சிங்கத்துக்கு பலியாகிப்போன செய்தியை 24ம் வசனத்தில் பார்க்கிறோம்! ஏன் அப்படி?
அன்பர்களே தேவன் உங்களுக்கு தெரிவித்து எதுவோ அதை விடாமல் பற்றிக்கொள்ளுங்கள்! உனக்கு கிடைத்த உன்னத வார்த்தைகளை உயிரினும் மேலாக பாதுகாத்துக்கொள். அடுத்தவர் சொல்வதை கேட்டு ஆழ்மனதை அலைக்கழிக்க விடாதீர்கள்! உங்கள் அன்பின் அஸ்திபாரத்தை ஆராய்ந்துபார்க்கும் ஆண்டவரின் செயலாக கூட அது இருக்கக்கூடும்!
உசியா என்ற இந்த உயர்ந்த ராஜவைப்பற்றி 2நாளாகமம் புத்தகம் இருபத்தாறாம் அதிகாரத்தில் பார்க்க முடியும். இறை ஜனங்களாகிய இஸ்ரவேலரை ஐம்பத்திரண்டு ஆண்டுகள் அமரிக்கையாக ஆட்சி செய்தவன்!
அவன் தன் தகப்பனாகிய அமத்சியா செய்தபடியெல்லாம் கர்த்தரின் பார்வைக்குச் செம்மையானதைச் செய்து, தேவனுடைய தரிசனங்களில் புத்திமானாயிருந்த சகரியாவின் நாட்களிலே தேவனைத் தேட மனதிணங்கியிருந்தான்; அவன் கர்த்தரைத் தேடின நாட்களில் தேவன் அவன் காரியங்களை வாய்க்கச் செய்தார்.
ஆண்டவர் அதிகம் உயர்த்தியதால் அறிவிழந்துபோன இவன், ஆசாரியருக்கு மட்டுமே அனுமதிக்கப்பட்ட அறியபணியாகிய ஆண்டவருக்கு தூபம்காட்டும் வேலையே அனுமதியின்றி செய்யபோய் ஆண்டவரின் கோபத்துக்கு ஆளாகி குஸ்டரோகியானான்!
தன் தேவனாகிய கர்த்தருக்கு விரோதமாக மீறுதல் செய்து தூபபீடத்தின்மேல் தூபங்காட்ட கர்த்தருடைய ஆலயத்திற்குள் பிரவேசித்தான். கர்த்தருடைய ஆலயத்திலே தூபபீடத்தின் முன்நிற்கிற அவனுடைய நெற்றியிலே குஷ்டரோகம் தோன்றிற்று!
அன்பானவர்கள்! அவன் ஆண்டவருக்கு தானே தூபம் காட்டபோனான அதிலென்ன தவறென்று அனைவரும் கேட்க முடியும்! ஆண்டவர் யார் யாருக்கு என்ன வேலையே கட்டளை இட்டுள்ளாரோ அதை அதை அவரவர் செய்வதே அருமையானது! ஆண்டவருக்கே செய்யும் உழியமானாலும் அழைப்பின்படி செய்யவேண்டும்! அவருக்கு சித்தமில்லாமல் அடுத்தவர் அலுவலில் தலையை விடுவது ஆண்டவருக்கு பிடிப்பதில்லை என்பதை இந்த சம்பவம் அனைவருக்கும் அருமையாக உணர்த்துகிறது!