இன்று மனிதனை பாழ் படுத்திக்கொண்டிருக்கும் முக்கிய காரணி அறிவுதான் என்று சொன்னால் மிகையாகாது! அறிவு இறைவனால் கொடுக்கப்பட்டதுதான் ஆனால் அது ஏன் கொடுக்கப்பட்டது என்பதை நாம் சற்று ஆழமாக ஆராயவேண்டும்!
பிறரை நூதன முறையில் ஏமாற்றவும், புது புது முறையில் திருடவும், கம்பியுட்டர் கண்டுபிடித்து எழுதவும், விண்ணில் ராக்கட் விடவும், கம்பனி கம்பனியாக தாவி பணம் சம்பாதிக்கவும்தான் மனிதனுக்கு அறிவு கொடுக்கப்பட்டது என்று ஒருவர் கருதினால் என்னால் அதை ஏற்க்க முடியாது! அது காரணமும் அல்ல!
நீங்கள் அதிகம் சம்பாதித்துவிட்டாலோ, உயர்ந்த பதவியை எட்டிவிட்டாலோ அல்லது அமெரிக்க அதிபர் பதவியை பிடித்துவிட்டாலோ கூட ஒன்றும் ஆகிவிடப்போவதில்லை. நீங்கள் ஒருநாளில் மரணம் அடைவதும், நாளை உங்கள் மகனும் அவரின் மகனும்கூட இந்த உலகில் உயிர்வாழ போராடப்போவது நிச்சயம்! இவைகளால் நிரந்தர தீர்வு எதுவும் கிடைக்கபோவது இல்லை! இவை எல்லாம் காரியத்துக்கு உதவாத மருந்துகள். கேன்சர் கட்டிக்கு வலி மருந்து தடவுவது போன்றதுதான் இந்த செயல்கள் எல்லாம்!
ஆதியிலேயே இருந்து உலகை சீரழித்து வரும் அசுத்த சக்திகளை ஆராய்ந்து பார்த்து விலக்கவே, விலகி இருக்கவே மனிதனுக்கு அதீத அறிவு இறைவனால் கொடுக்கப்பட்டது. ஆனால் அதை கோட்டை விட்டு விட்டு இன்று பயனற்ற எதெதையோ மனிதர்கள் ஆராய்ந்துகொண்டு செய்துகொண்டு இருக்கின்றனர்.
மனிதன் மிக நேர்த்தியாக மிக உயர்ந்த தொழில் நுபத்தோடு கணினியை உருவாக்கியுள்ளான். அதன் பயன்பாடுகள் ஏராளம் ஏராளம் ஆனால் வெப்பத்தை வெளியேற்ற வைத்திருக்கும் துளைகள் வழியாக காற்றில் பறக்கும் சாதரண தூசி புகுந்து அதன் செயல்பாட்டை பல நேரங்களில் கெடுத்துவிடுகிறது என்பது அனைவரும் அறிந்ததே!
இப்பொழுது
தூசி கெடுத்துவிடும் என்று எண்ணி கணினியை யாரும் உருவாக்காமல் இருப்பார்களா?
தூசு என்றுமே கெடுக்காத கணினியை உருவாக்க முடியுமா? இரண்டுமே சாத்தியம் இல்லை!
அதே நேரத்தில்
தூசு கெடுக்கும் அளவுக்கு ஒரு கணினியை உருவாக்குவது மனிதனின் குற்றமும் அல்ல. ஒரு வேளை தூசு கெடுத்தால் சுத்தம் பண்ணி சரிசெய்து கொள்ளலாம் என்று நோக்கில்தான் அதன் பயன்பாட்டை கருதி கணினியை உருவாக்குகிறார்கள்
இது அப்படியே மனிதனுக்கு பொருந்தும்!
இறைவன் தனது வல்லமையால், இன்பத்தால் நிறைத்த இந்த உலகத்தை படைத்து பேரின்பத்தில் திளைத்திருக்கும்படி அவன் கண்களுக்கு வாய்க்கு செவிக்கு மற்றும் உடலுக்கு இன்பமானது எல்லாவற்றையும் படைத்து அவனுக்கு ஏற்றாப்போல் துணையையும் படைத்து மனிதன் எல்லையற்ற இன்பத்தை என்றும் அனுபவிக்க வேண்டும் என்று விரும்பினார் (நாம் இப்பொழுது அனுபவிக்கும் இன்பங்கள் எல்லாம் அவர் படைக்கும்போது இருந்த இன்பத்துக்கும் கொஞ்சமும் நிகர் இல்லை)
அந்த இன்பத்தை கெடுக்க ஆதியில் இருந்தே போராடி வரும் அசுத்த சக்திகள் என்னும் தூசி நிச்சயம் வரும் என்பது இறைவனுக்கு தெரியும். ஆகினும் அந்த அசுத்த சக்திக்கு பயந்து ஒன்றையும் படைக்காமல் இருப்பதை விட, அசுத்தத்தை அறிந்து விலகி இருக்கும்படி அதீத ஞானத்தை ஆண்டவர் மனிதனுக்கு கொடுத்தார்! ஆனால் மனிதன் அந்த ஞானத்தை பயன்படுத்தி தீமையை விலக்காமல் தீமைக்குள் மாட்டிக்கொண்டான். அதனால் வந்த பிரச்சனைகளே இன்று உலகில் நடக்கும் அத்தனை கொடூரங்கள்.
இங்கு குற்றம் யாருடையது?
இன்பமாக மனிதன் வாழ வேண்டும் என்ற நோக்கத்தில் மனிதனை படைத்தது இறைவன் குற்றமா? அல்லது தீமையை பகுத்தறியும் அறிவை சரிவர பயன்படுத்தாமல் தீமைக்குள் விழுந்தது மனிதன் குற்றமா?
தான் எல்லாவற்றையும் கோட்டை விட்டுவிட்டு கருணை கடலாம் அன்பின் சொரூபமாம் இறைவன்தான் அத்தனையும் செய்து விளையாடுகிறார் என்று பலர் தவறாக கருதுகின்றனர் அதற்க்கு மேலும் பலர் சிந்தித்து கண்ணை படைத்த இறைவனுக்கே கண் இருக்கிறதா என்றும் இறைவனே இல்லை என்றும் கருதுகின்றனர்.
சரி! இப்படி ஒரு மனிதனை படைத்தது இறைவனின் தவறு என்றே வைத்துக்கொண்டாலும், தீமைக்குள் விழுந்த மனிதனை இறைவன் அப்படியே விட்டுவிடவில்லை. அவனை மீட்க வந்தார் ஆனால் மனிதன் அவர் அழைப்புக்கு செவி கொடாமல் இன்னும் அதிக அதிகமாக விலகி அவர் கண்காணாமல் தங்க எதாவது இடம் கிடைக்குமா என்றுதான் ஆராய்கிரானே தவிர அவர் பாதுகாப்பின் கரத்துக்குள் வர விருப்பம் இல்லையே! பாதுகாப்புக்காக கொடுகப்பட்ட அறிவே இன்று பாதை மாற காரணமாக உள்ளது!
கணினி ஒரு ஜடப்பொருளாக இருப்பதால் அதை எப்படி தூக்கி போட்டு சுத்தம் செய்தாலும் அது மறுப்பு தெரிவிப்பது இல்லை ஆனால் இங்கு அறிவுள்ள மனிதன் தானும் தன்னை சுத்தம் செய்ய மாட்டான் பிறர் சுத்தம் செய்ய வந்தாலும் விட மாட்டான். தன்னில் உள்ள அழுக்கு தெரியாமல், நான் சுத்தமாகத்தான் என்னை யாரும் சுத்தம் செய்ய தேவை இல்லை என்று சுருக்கமாக கூறிவிடுகிறான் எதற்கோ கொடுக்கப்பட்ட அறிவை வைத்து என்னென்னவோ பயனற்றதை செய்துகொண்டு இருக்கிறான்
அசுத்த சக்திகளிடமிருந்து தன்னை பாதுகாப்புக்காக கொடுகப்பட்ட அறிவே இன்று பாதை மாற காரணமாக உள்ளது என்றே நான் கருதுகிறேன்!
-- Edited by இறைநேசன் on Thursday 21st of January 2010 03:00:30 PM