இறைவன்

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: கிருத்தவர்களின் வாழ்வில் துன்பம் ஏன்?


நமது நண்பர்

Status: Offline
Posts: 186
Date:
கிருத்தவர்களின் வாழ்வில் துன்பம் ஏன்?
Permalink  
 


கிருத்தவர்களின் வாழ்வில் துன்பம் ஏன்?

இயேசுவை இரட்சகராக ஏற்றுக் கொண்டு பரிசுத்தமாக வாழும் அல்லது தன்னால் முயன்ற வரை வாழ முயற்ச்சிக்கும் பக்தியுள்ள ஒரு சில மனிதர்கள் வாழ்வில் அதிகமான துன்பம் வருவதும், அதை கேள்விப்படும், பார்க்கும் மற்ற விசுவாசிகள் கலங்கி போவதும்நாம் அடிக்கடி எதிர் கொள்ளும் விஷயமாகும்.

இதற்க்கு காரணம் என்ன என்று கேட்கும் போது அந்த மனிதர் இயேசுவின் மீது பக்தியுள்ளவராக இருந்ததால் அவரை சாத்தான் தாக்கி விட்டான் என அனேகர் சொல்கின்றனர். இதை கேட்கும் சில விசுவாசிகளுக்கு நம்மை விட நல்லவரான அவருக்கே சாத்தான் தாக்குதலை கொடுத்தால் நமக்கு என்ன மாதிரி தாக்குதல் இருக்குமோ என ஒரு திகில் வருவதையும், இயேசுவை ஏற்றுக் கொண்டதால் பலன் என்ன என்ற கேள்வி வருவதும், இருந்தாலும் கடவுள் நம்மை அந்த அளவுக்கு கை விட மாட்டார், பிரச்சனை எல்லாம் அடுத்தவருக்கே வரும் என்று ஒருவாறு மனதை தேற்றிக் கொள்ளுவதும் நாம் எதிர்கொள்ளும் நிகழ்ச்சியே. ஒரு சிலர் சாத்தானை பற்றி ஒருவித பயத்துடனே காலம் கழிக்கின்றனர்.

இப்போது இந்த கேள்வியை பற்றி ஆராய்வோம்.

அனேக கிருத்தவர்கள் தங்களுக்கு சொல்லப்பட்ட போதனைகளால் அசைக்க முடியாத சில முடிவுக்கு வந்துள்ளனர். அவை என்னவென்றால்

1. கடவுள் - நன்மை - இன்பம்இவை மூன்றும் ஒன்றுகொன்று தொடர்புடையது

2. சாத்தான் - தீமை - துன்பம்இவை மூன்றும் ஒன்றுகொன்று தொடர்புடையது என்பதே அது.

கடவுள் என்பவர் நமக்கு இவ்வுலகத்தின் இன்பங்களான

உடலை வருத்தி உழைக்காமல், சொகுசாக ஏ.ஸி உள்ள ஆபிசில் நாலு பேரை அதிகாரம் செய்யும் வேலையை தருபவர் என்றும்

நாம் சில சமயம் படிக்காமல் விட்ட கேள்வியை பரீட்சையில் எழுத முடியாத போது, திருத்துபவரின் கண்ணை மறைத்து அதிகம் மார்க் போட வைப்பவர் என்றும்

பக்கத்து வீட்டு பரதேசியை விட அரதப் பரதேசியான நம்மை அவரை விட உயர வைப்பார் என்றும் (சில நேரங்களீல் பக்கத்து வீட்டு பரதேசி எதிர்பார்க்காத விதமாக ஏழ்மை அடைவதால் அவர் அரத பரதேசியாகி நாம் பரதேசியாகி நம்முடைய எதிர்பார்ப்பு நிறைவேறுவதும் உண்டு)

கடவுள் அருளின, மனிதனால் கண்டுபிடிக்கப்பட்ட, இரு சக்கர வாகனத்தில் குடும்பத்தோடு சந்தோஷமாய் சென்று காற்றை மாசுபடுத்தி விட்டு, எல்லா மனிதர்களுக்கும் வரும் ஜலதோசஷம், தும்மல் முதலியவை தனக்கோ தன் குடும்பத்தினருக்கோ வராமல் காப்பவர் எனவும்

அடுத்தவர் துன்பத்தில், பிரச்சனையில் இருக்கும் போது அதை கண்டு கொள்ளாமல் விட்டாலும், ஆறுதல் சொல்லா விட்டாலும் நமக்கு துன்பம் வரும் போது குய்யோ, முறையோ என்று கத்திக் கொண்டு போதகரிடம் ஜெபிக்க சொன்னால் அல்லது தானாகவே ஜெபித்தால் கடவுள் நேரில் பிரத்தியட்சமாகி நம் துன்பத்தை நீக்கி விடுவார் எனவும்

நாம் மிகவும் உடலை வருத்தி கஷ்டப்பட்டு சம்பாதித்த பணத்தில் ஒரு பகுதியை (தசம பாகமாகவோ, அல்லது சதம பாகமாகவோ) கடவுளின் ஊழியத்திற்க்கு கொடுத்து போதகருக்கும், கடவுளுக்கும் இந்த உலகில் யாருமே செய்ய முடியாத மிகப் பெரிய உதவி செய்வதால், நாம் சம்பாதித்த பணம் முழுவதையும் பல பகுதியாக பெருக்கி (தசம அளவோ அல்லது சதம அளவோ) நமக்கு கொடுக்கும் சிறிய உதவியை கடவுள் பதிலுக்கு செய்வார் எனவும்

நாம் நம்மால் முடிந்தோ அல்லது முடியாமலோ சில சில பாவங்களை செய்யும் போது நம் மீது கொண்ட அன்பால் நம்மை கண்டு கொள்ளாமல் விடுவார் எனவும்

சில நேரங்களில் அவரை கூட மறந்து விடும் அளவுக்கு உலக ஆசிர்வாதங்களால் நம்மை நிரப்பி நம்மை இன்பத்தில் நிரப்புபவர் எனவும்

நாம் மகிழ்ச்சியாக இருக்க முடியாத போது அவரை வேண்டினால் நமக்கு கிச்சு, கிச்சு மூட்டி இன்பமளிப்பவர் என்றும்

இப்படி பலவாறாக கடவுளை பற்றி மனிதர்கள் எண்ணுகின்றனர்.

சாத்தானை பற்றி மனிதர் எண்ணுவது என்னவெனில்

மிக பயங்கரமான சக்தி படைத்த அவன் யாரை, எப்போது எங்கே வேண்டுமானாலும் தாக்க கூடும் என்றும், ஆனால் அவனால் நமக்கு பாதிப்பு ஏற்படாமல் கர்த்தர் தடுத்து விடுவார் எனவும் எண்ணுகின்றனர். இவனால் எந்த மனிதனுக்கும் இன்பங்களை கொடுக்க முடியாது எனவும் தேவ பக்தியுள்ளவருக்கு எந்த துன்பமாக இருந்தாலும் இவனிடமிருந்து வருவதே எனவும், இவன் எப்போது என்ன செய்வான் என்பது கடவுளுக்கே தெரியாது எனவும் நினைக்கின்றனர்.

ஆனால் வேதம் என்ன சொல்லுகிறதென்றால்,

1. கிருத்தவர்களின் துன்பத்திற்க்கு ஒரு காரணம் அவர்கள் தேவன் மேல் வைத்த அன்பு :

தேவ பக்தி உள்ள அனேகர் பட்ட துன்பங்களை பல இடங்களில் சொல்லுகிறது. இவர்கள் எந்த பாவமும் செய்யாவிட்டாலும் பாடுகள் அனுபவிப்பதை காண்கிறோம். ஒரு ராஜாவுக்கு மகளாக பிறந்தவள் தான் கொண்ட காதலினால் தன் சொத்து, சுகம் எல்லாவற்றையும் துறந்து வசதியில்லாத தன் காதலனோடு சென்று துன்பம் அனுபவிப்பது போல பல தேவ மனிதர்கள் தேவனுக்காக சொத்து, சுகம் முதலியவற்றை உதறி தள்ளிவிட்டு தேவனோடு வாழ்வதால் ஏற்படும் துன்பத்தை அனுபவிக்கின்றனர் / அனுபவித்துள்ளனர்.

மத்தேயு 10.22 என் நாமத்தினிமித்தம் நீங்கள் எல்லாராலும் பகைக்கப்படுவீர்கள்;

34. பூமியின்மேல் சமாதானத்தை அனுப்பவந்தேன் என்று எண்ணாதிருங்கள்; சமாதானத்தையல்ல, பட்டயத்தையே அனுப்பவந்தேன்.

என இயேசுவும் இந்த துன்பத்திற்க்கு காரணம் நானே என்று சொல்லுகிறார். முடிந்தால் அடுத்த பதிவில் இந்த காரணத்தை பற்றி விளக்கமாக பார்ப்போம்.

2. அடுத்த காரணம் பிதா அவரவர்க்கு நிர்ணயித்துள்ள தேவ விதி :

துன்மார்க்கர் அனேகர் பாவம் செய்தாலும் எந்த கவலையும் இல்லாமல் சுகமாய் வாழ்வதைப் பற்றியும் தேவ மனிதர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். பாவம் செய்தால் நிச்சயம் தண்டனை வரும் என்று சிலர் சொல்கின்றனர், ஆனால் ஒரு சிலர் வாழ்வில் பாவம் செய்தவர் என்று தெளிவாக தெரிந்தாலும் அவர்களுக்கு தண்டனை கிடைப்பதில்லை. அல்லது அந்த தண்டனை அவர்கள் பாவத்திற்க்கு சமமானதாக இல்லை. என்ன பாவம் செய்தால் என்ன தண்டனை வரும் என்று யாரும் சரியாக சொல்வதில்லை. இவர்கள் ஏன் தண்டனை அடைவதில்லை

என்றும் சொல்வதில்லை.

தேவ பக்தியுள்ளவர்கள் பாவம் செய்யும் போது அவர்களுக்கு கடவுள் பெரிய தண்டனை தருவது உண்மைதான். அதற்காக ஒரு சிலர் தான் வேலை செய்யும் இடத்தில் செய்த சிறிய தவறுக்காக கடவுள் தன் பிள்ளைக்கு நோய் வரவழைத்து தண்டிப்பார் என்றும் சொல்கின்றனர். எந்த அளவு பாவத்துக்கு எந்த அளவு தண்டனை அது எப்படி முடிவு செய்யப்படுகிறது என்பதும் தெரியவில்லை.

பெரிதாக பாவம் எதுவும் செய்யாத, தேவ பக்தியுள்ளவர்களின் வாழ்விலும் மிகப் பெரிய துன்பங்கள் வருகின்றன. இவர்கள் எதனால் இந்த துன்பம், இதை எப்படி மேற்கொள்வது என திகைத்துப் போகின்றனர். சாத்தான் தங்களை மேற் கொண்டதாகவும் சிலர் நினைக்கிறார்கள்.

அனேகர் எந்த காரியத்தையும், இன்பத்தையும் துன்பத்தையும் இரண்டாகவே பார்க்கின்றனர். ஒன்று அது கடவுளுடையது அல்லது சாத்தானுடையது என்று. ஆனால் வேதம் எந்த காரியத்தையும் மூன்றாக காட்டுகிறது. அவை யாவை எனில்

1.கடவுள் 2. சாத்தான் 3.தேவ விதி

இதில் மூன்றாவது சொல்லப்பட்ட வார்த்தை வேதத்தில் அப்படியே இல்லை. ஆனால் பல்வேறு பெயர்களில் வேத புத்தகம் முழுவதும் வந்துள்ளது. இது பற்றி போதிக்கப்படாமல் சில காரணங்களுக்காக மறைக்கப்படுகிறது. இதனால் தேவ பக்தியில் முன்னேறாத, கோழையான மனிதர்களையே உருவாக்கியுள்ளார்கள்.

இந்த வார்த்தையின் சிறப்பம்சம் என்னவெனில் எல்லா மதங்களும் இங்கே ஒன்று சேர்வதே.

எல்லா மதமும் இதைப் பற்றி சொல்லியுள்ளன. இதற்கு கர்மா என்றும் பெயருண்டு. கர்மா எனில் முன்பே தீர்மானிக்கப்பட்ட விஷயம் என்று பொருள்.

வேதத்தில் அனேகர் மேற்கண்ட மூன்று அம்சங்களையும் சரியான விதத்தில் எதிர் கொண்டுள்ளனர். அவர்களில் ஒருவரை பற்றி முதலில் ஆராய போகிறோம். அவர் வேறு யாருமில்லை இயேசுவே.

எல்லோருக்கும் விதி எழுதின / எழுதும் தேவன் தன் விதியை தானே எழுதிக்கொண்டு இந்த பூமியில் வந்தார். இயேசு 100% நம்மை போல மனிதன் என்று சொல்லுபவர்கள் இயேசுவை போல நம்முடைய விதியும் ஏற்கனவே எழுதப்பட்டது என்பதை சொல்ல மாட்டார்கள் உலக மக்களின் விதியை செயல்படுத்த வேண்டியது அவரே ஆகையால் தன் விதியை தான் எழுதினது போலவே செயல்படுத்தி கொண்டு, அதற்க்கு கீழ்படிந்து மற்ற மனிதர்களுக்கு எடுத்து காட்டாய் விளங்கினார்.

மத்தேயு 3.14. யோவான் அவருக்குத் தடை செய்து: நான் உம்மாலே ஞானஸ்நானம் பெறவேண்டியதாயிருக்க, நீர் என்னிடத்தில் வரலாமா என்றான்.
15. இயேசு அவனுக்குப் பிரதியுத்தரமாக: இப்பொழுது இடங்கொடு, இப்படி எல்லா நீதியையும் நிறைவேற்றுவது நமக்கு ஏற்றதாயிருக்கிறது என்றார். அப்பொழுது அவருக்கு இடங்கொடுத்தான்

லூக்கா 22.36. அதற்கு அவர்: இப்பொழுதோ பணப்பையும் சாமான்பையும் உடையவன் அவைகளை எடுத்துக்கொள்ளக்கடவன்; பட்டயம் இல்லாதவன் தன் வஸ்திரத்தை விற்று ஒன்றைக் கொள்ளக்கடவன்.
37. அக்கிரமக்காரரில் ஒருவனாக எண்ணப்பட்டார் என்று எழுதியிருக்கிற வாக்கியம் என்னிடத்தில் நிறைவேறவேண்டியதென்று உங்களுக்குச் சொல்லுகிறேன். என்னைப்பற்றிய காரியங்கள் முடிவுபெறுங்காலம் வந்திருக்கிறது என்றார்.

சாத்தானால் தான் காட்டிக் கொடுக்கப்பட்டு, சிலுவையில் அறையப்பட்டு துன்பமடைய வேண்டும் என்பது அவர் எழுதி கொண்ட அவரது விதி. ஆனால் கடவுளான அவரை சாத்தான்ஒன்றும் செய்ய முடியாது ஆகையால், தன் கடைசி பந்தியில் துணிக்கையை தோய்த்து யூதாசுக்கு கொடுத்து அவரே சாத்தானுக்கு அனுமதி அளிக்கிறார்.

யோவான் 13.21. இயேசு இவைகளைச் சொன்னபின்பு, ஆவியிலே கலங்கி: உங்களில் ஒருவன் என்னைக் காட்டிக்கொடுப்பான் என்று, மெய்யாகவே மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்று சாட்சியாகச் சொன்னார்.

26. இயேசு பிரதியுத்தரமாக: நான் இந்தத் துணிக்கையைத் தோய்த்து எவனுக்குக் கொடுப்பேனோ அவன்தான் என்று சொல்லி, துணிக்கையைத் தோய்த்து, சீமோன் குமாரனாகிய யூதாஸ்காரியோத்துக்குக் கொடுத்தார்.
27. அந்தத் துணிக்கையை அவன் வாங்கினபின்பு, சாத்தான் அவனுக்குள் புகுந்தான். அப்பொழுது இயேசு அவனை நோக்கி: நீ செய்கிறதைச் சீக்கிரமாய்ச் செய் என்றார்.
28. அவர் இப்படி அவனுடனே சொன்னதின் கருத்தைப் பந்தியிருந்தவர்களில் ஒருவனும் அறியவில்லை.

தேவனுக்கும், தேவ விதிக்கும் என்ன தொடர்பு எனில், பிரதம மந்திரிக்கும், இவ்வளவு அளவுக்கு மேல் பணம் சம்பாதித்தால் இவ்வளவு வருமான வரி கட்ட வேண்டும் என்ற விதிக்கும் உள்ள தொடர்பே. எனக்கு பிரதம மந்திரியை தெரியும் ஆதலால் நான் வருமான வரி கட்ட வேண்டியதில்லை என்று சொல்ல முடியாது. அதை பிரதம மந்திரியும் விரும்ப மாட்டார். அதிக பட்சம் அவர் தன்னிடம் உள்ள பணத்தை கொடுத்து நம்முடைய வருமான வரியை கட்டலாம்.

ஆகவே இதிலிருந்து என்ன தெரிகிறது என்றால் ஒரு மனிதன் அனுபவிக்க வேண்டிய துன்ப அல்லது இன்ப அளவு முன்பே தீர்மானிக்கபட்டு இருக்கிறது. அவன் செய்ய வேண்டிய செயல்களும் முன்பே தீர்மானிக்கபட்டு இருக்கிறது. அனேக நேரங்களில் இந்த துன்பத்தை மனிதர்களுக்கு தேவ விதியின்படி கொடுக்ககூடிய ஊழியக்காரனாக சாத்தான் இருப்பதை பார்க்க முடியும். அதாவது வருமான வரியை சென்று வாங்க கூடிய அதிகாரி போல.

இந்த தேவ விதிக்கு மேல் மனிதனுக்கு துன்பம் வரும்படி செய்ய சாத்தானாலோ, மனிதனாலோ முடியாது ஆகையால், இவர்கள் இந்த விதிக்கு மேலாக மயிரை கூட பிடுங்க முடியாது என இயேசு சொல்கிறார்.

மத்தேயு 10.29. ஒரு காசுக்கு இரண்டு அடைக்கலான் குருவிகளை விற்கிறார்கள் அல்லவா? ஆயினும் உங்கள் பிதாவின் சித்தமில்லாமல், அவைகளில் ஒன்றாகிலும் தரையிலே விழாது.
30. உங்கள் தலையிலுள்ள மயிரெல்லாம் எண்ணப்பட்டிருக்கிறது.
31. ஆதலால், பயப்படாதிருங்கள்; அநேகம் அடைக்கலான் குருவிகளைப் பார்க்கிலும் நீங்கள் விசேஷித்தவர்களாயிருக்கிறீர்கள்.

அப்படியானால் சாத்தானை பற்றி எச்சரித்து அனேக வசனங்கள் கொடுக்கப்ப்ட்டுள்ளதே என சிலர் கேட்கலாம். சாத்தான் யார் எனில்

நம் வாழ்க்கை தேவ விதியின்படி துன்பத்தில் சென்று கொண்டிருக்கும் போது, "கடவுளை நம்பினாயே இப்போது பார்த்தாயா உன் நிலைமை? இந்த கடவுளை நம்பாதே என மனதுக்குள் கேட்கும் குரலே.

யோபு 2.9. அப்பொழுது அவன் மனைவி அவனைப் பார்த்து: நீர் இன்னும் உம்முடைய உத்தமத்தில் உறுதியாய் நிற்கிறீரோ? தேவனைத் தூஷித்து ஜீவனைவிடும் என்றாள்.

நம் வாழ்க்கை தேவ விதியின்படி இன்பத்தில் செல்லும் போது "கடவுள் எதற்க்கு அவரை மறந்து விடு என்னும் கேட்கும் குரலே.

மற்ற மனிதர்கள் தேவ காரியங்களில் முன்னேறாமல், தேவ ஊழியத்தை செய்ய விடாமல், குறுக்கே நிற்பவனே சாத்தான்.

துன்பத்தில் உள்ளவர்களை விட, இன்பத்தில் உள்ளவர்களை தேவனை விட்டு பிரிப்பது சுலபம் என்பதால் அனேகருக்கு இன்பத்தை கொடுக்க அவன் விருப்பமாக உள்ளான்.

மத்தேயு 4.8. மறுபடியும் பிசாசு அவரை மிகவும் உயர்ந்த மலையின்மேல் கொண்டுபோய், உலகத்தின் சகல ராஜ்யங்களையும் அவைகளின் மகிமையையும் அவருக்குக் காண்பித்து:
9. நீர் சாஷ்டாங்கமாய் விழுந்து, என்னைப் பணிந்துகொண்டால், இவைகளையெல்லாம் உமக்குத் தருவேன் என்று சொன்னான்.

ஆகவே தேவ விதியின்படி நடக்கும் காரியத்தை வைத்து நம்மை கடவுளிடம் இருந்து பிரிக்கும் அல்லது பிரிக்க முயற்ச்சிக்கும் சக்தியே சாத்தான்.

தேவ விதியின்படி நடக்கும் காரியத்தை வைத்து நம்மை அவரிடம் சேர்க்கும் அல்லது இணக்க முயற்சிப்பவரே பரிசுத்த ஆவியானவர் அல்லது இயேசு அல்லது தேவன்.



__________________


நமது நண்பர்

Status: Offline
Posts: 186
Date:
Permalink  
 

அப்படியானால் என் வாழ்க்கை துன்பமாக உள்ளதே நான் என்ன செய்ய வேண்டும் என கேட்டால் அதற்க்கும் இயேசுவே பதிலாகிறார்.

அனைவரின் பாவங்களையும் தன் மேல் சுமக்கும் சுமை தாங்காமல் கெத்சமனே தோட்டத்தில் மிகவும் பாடுபட்டு அந்த விதி நீங்கும்படி ஜெபிக்கிறார். ஆனால் பிதாவோ அந்த விதி நீங்காது எனவும் அதை தாங்கும்படி பெலனளிப்பேன் எனவும் அவரை தேற்றுகிறார்.

மாற்கு 14.33. பேதுருவையும் யாக்கோபையும் யோவானையும் தம்மோடே கூட்டிக்கொண்டுபோய், திகிலடையவும், மிகவும் வியாகுலப்படவும் தொடங்கினார்.
34. அப்பொழுது, அவர்: என் ஆத்துமா மரணத்துக்கேதுவான துக்கங்கொண்டிருக்கிறது. நீங்கள் இங்கே தங்கி, விழித்திருங்கள் என்று சொல்லி

மத்தேயு 26.39. சற்று அப்புறம்போய், முகங்குப்புற விழுந்து: என் பிதாவே, இந்தப்பாத்திரம் என்னைவிட்டு நீங்கக்கூடுமானால் நீங்கும்படிசெய்யும்; ஆகிலும் என் சித்தத்தின்படியல்ல, உம்முடைய சித்தத்தின்படியே ஆகக்கடவது என்று ஜெபம்பண்ணினார்.

லூக்கா 22.43. அப்பொழுது வானத்திலிருந்து ஒரு தூதன் தோன்றி, அவரைப் பலப்படுத்தினான்

மத்தேயு 26.42. அவர் மறுபடியும் இரண்டாந்தரம் போய்: என் பிதாவே, இந்தப் பாத்திரத்தில் நான் பானம்பண்ணினாலொழிய இது என்னை விட்டு நீங்கக்கூடாதாகில், உம்முடைய சித்தத்தின்படி ஆகக்கடவது என்று ஜெபம்பண்ணினார்.
44. அவர் மறுபடியும் அவர்களைவிட்டுப் போய், மூன்றாந்தரமும் அந்த வார்த்தைகளையே சொல்லி ஜெபம்பண்ணினார்.
45. பின்பு அவர் தம்முடைய சீஷர்களிடத்தில் வந்து: இனி நித்திரைபண்ணி இளைப்பாறுங்கள்; இதோ, மனுஷகுமாரன் பாவிகளுடைய கைகளில் ஒப்புக்கொடுக்கப்படுகிற வேளைவந்தது.

சிலருடைய வாழ்க்கையில் பிரச்சனைகள் வரும் போது, அது அனுபவிக்கபட வேண்டிய விதியாக இருக்கும் போது தேவன் அந்த பிரச்சனை பற்றி ஒன்றுமே பேசுவதில்லை. அந்த ஜெபத்திற்க்கு பதில் கொடுத்து அற்புதம் செய்வதில்லை அல்லது இந்த பிரச்சனை தீராது என்று சொல்லவும் அவர் விருப்பப்படுவதில்லை. ஏனெனில் அவ்வாறு சொல்வது அவர்களை சபிப்பதற்க்கு சம்மானதாகும். ஆனால் கர்த்தர் எந்த முடிவு கொடுத்தாலும் அதை ஏற்றுக் கொள்வேன் என கர்த்தரின் சித்தத்திற்க்கு ஒப்புக் கொடுத்து ஜெபிக்கும் போது (இயேசுவைப் போல) தேவன் சில சமயம் அந்த பிரச்சனையை குறித்த தன் சித்தத்தை வெளிப்படுத்தி அந்த மனிதனை பலப்படுத்துகிறார்.இங்கே இயேசு முதல் தடவை ஜெபித்த பிறகு தன் விதி நீங்காது என்ற கர்த்தரின் சித்தத்தை அறிந்து கொள்ளுகிறார். பிறகு அந்த முடிவை தாங்க தனக்கு பலன் தர வேண்டி மேலும் இரு முறை வேண்டிக் கொள்ளுகிறார்.

அதன் பிறகு அந்த விதியை கடவுளின் மேல் கொண்ட அன்பால் ஏற்றுக் கொண்டு அந்த காரியம் நிறைவேற முழு மனதோடு ஒப்புக் கொடுக்கிறார். என் பிதா எனக்கு கொடுத்த பாத்திரத்தில் நான் பானம் பண்ணாதிருப்பேனோ? என அந்த பாத்திரத்தில் பானம் பண்ண மிகுந்த விருப்பமுடையவராய் கேட்கிறார்.

யோவான் 18.11. அப்பொழுது இயேசு பேதுருவை நோக்கி: உன் பட்டயத்தை உறையிலேபோடு; பிதா எனக்குக் கொடுத்த பாத்திரத்தில் நான் பானம்பண்ணாதிருப்பேனோ என்றார்.

பிதாவாகிய தேவன் இயேசுவுக்கு கொடுத்தது விஷம் என்னும் பானமாகும். (உண்மையில் இவரே விஷத்தை உண்ட நீலகண்டன். அதன் பலனாக என்றும் வாழ வைக்கும் அமிர்தத்தை பெற்றிருக்கிறோம்) தேவன் தந்த இந்த பிரசாதத்தை தேவனை போலவே பாவித்து மன்ம் முழுதும் மகிழ்ச்சியினால் நிறைந்து அன்போடு பானம் பண்ணுகிறார். நம்முடைய இந்த வாழ்க்கை என்பது தேவன் நமக்கு தந்த பிரசாதமாகும். இயேசுவை போலவே அது விஷமாக இருந்தாலும், அமிர்தமாக இருந்தாலும் தேவ விதியை தேவனை போலவே பாவித்து ஏற்றுக் கொள்ள வேண்டும்.

தேவ விதி கட்டாயம் அனுபவித்தே ஆக வேண்டும் ஆதலால் அதற்காக எதற்க்கு துன்பப்பட்டு மேலும் துன்பத்தை அடைய வேண்டும் அதற்க்கு ஒப்புக் கொடுத்து விடுவோம் என நினைக்கின்றனர். இது மிக சிறந்த ஞானமாகும்,

ஆனால் இந்த ஞானத்தினால் அல்ல தன் தந்தையின் மேல் கொண்ட அன்பால், அவர் சொன்னதால் இயேசு தம்மை முழுவதும் ஒப்புக் கொடுக்கிறார்.

எல்லா மனிதர்களின் வாழ்க்கையும் காலம் என்னும் நதியில் சென்று இறப்பு என்னும் கடலில் கலப்பதற்க்கு சமமாய் இருக்கிறது. ஒரு சிலர் எல்லா வசதியும் நிறைந்த கப்பலில் செல்கின்றனர். சிலர் சிறு படகில் செல்கின்றனர். சிலர் கட்டுமரத்தில், சிலர் பாய்மரக் கப்பலில், சிலர் பரிசலில் செல்லுகின்றனர். சிலர் நீந்திக் கொண்டு செல்கின்றனர். சிலர் தத்தளித்து சென்று கொண்டிருக்கின்றனர்.

சிலர் வேகமாக சென்று கொண்டிருக்கின்றனர். சிலர் மெதுவாக செல்லுகின்றனர்.

மேற் சொன்னவர்களில் சிலர் குறிப்பிட்ட காலகட்டங்களில் இடம் மாறுவதும் உண்டு.

கப்பலில் செல்பவன் கடலில் விழுந்து தத்தளிப்பதும், தத்தளிப்பவன் கப்பலில் ஏறுவதும் உண்டு.

கடலில் விழுந்து தத்தளிப்பது வாழ்க்கை என்று ஆன பிறகு எப்படியும் கடலில் சென்று சேர்வது உறுதி எதற்காக உடலை / உயிரை வருத்தி கொள்ள வேண்டும் என்று நீரோட்டத்திற்க்கு ஒப்புக் கொடுத்து அமைதியாக செல்லுவது சிறந்த ஞானமாகும்.

அதை விட சிறந்தது இது என் தேவன் எனக்கு கொடுத்தது என்று மனம் முழுவதும் அந்த சூழ்னிலையை ஏற்றுக் கொண்டு தேவ அன்போடு, தேவனுக்கு நன்றி சொல்லும் இதயத்துடன் பயணம் செய்வதே.

இன்று அறிவியலும் தேவ விதி என்ற வார்த்தையை உறுதி செய்கிறது. மனிதர்களின் வாழ்க்கை பற்றின இரகசியங்கள் (அவர்களின் நோய்கள், உணர்வுகள் முதலியன) அவர்கள் ஜீன்களில் பதிவு செய்யப்பட்டுள்ளன என்று கண்டுள்ளனர்.

பவுலின் முள் :

2.கொரிந்தியர் 7. அன்றியும், எனக்கு வெளிப்படுத்தப்பட்டவைகளுக்குரிய மேன்மையினிமித்தம் நான் என்னை உயர்த்தாதபடிக்கு, என் மாம்சத்திலே ஒரு முள் கொடுக்கப்பட்டிருக்கிறது; என்னை நான் உயர்த்தாதபடிக்கு, அது என்னைக் குட்டும் சாத்தானுடைய தூதனாயிருக்கிறது
8. அது என்னைவிட்டு நீங்கும்படிக்கு நான் மூன்றுதரம் கர்த்தரிடத்தில் வேண்டிக்கொண்டேன்.
9. அதற்கு அவர்: என் கிருபை உனக்குப்போதும்; பலவீனத்திலே என் பலம் பூரணமாய் விளங்கும் என்றார். ஆகையால், கிறிஸ்துவின் வல்லமை என்மேல் தங்கும்படி, என் பலவீனங்களைக்குறித்து நான் மிகவும் சந்தோஷமாய் மேன்மைபாராட்டுவேன்
10. அந்தப்படி நான் பலவீனனாயிருக்கும்போதே பலமுள்ளவனாயிருக்கிறேன்; ஆகையால் கிறிஸ்துவினிமித்தம் எனக்குவரும் பலவீனங்களிலும், நிந்தைகளிலும், நெருக்கங்களிலும், துன்பங்களிலும், இடுக்கண்களிலும் நான் பிரியப்படுகிறேன்.

இங்கே பவுலும் தன் மேல் தேவன் சுமத்தின துன்பத்தை முழு மனதோடு, மகிழ்ச்சியோடுஏற்றுக் கொண்டு தன் வாழ்வில் தொடர்ந்து செல்கிறான்.

பவுலின் மூலமாய் அனேகரின் விதியை மாற்றின தேவன், அனேகருக்கு அற்புத சுகம் தந்த தேவன் பவுலினுடைய பலவீனத்தை சரி செய்ய சித்தமில்லாமல் அதை அவன் அனுபவிக்க வேண்டும் என்று அவன் வாழ்க்கையில் தன் சித்தத்தை, விதியை வெளிப்படுத்துகிறார்.அனேகருக்கு சுகம் தரும் தேவ மனிதர்கள் எதனால் தங்கள் வாழ்க்கையில் துன்பப்படுகின்றனர் என்று சிலர் கேட்கின்றனர். இதற்கு மேற்கண்ட விளக்கமே பதிலாகும்.

இந்த தேவ விதி எந்த அடிப்படையில் செயல்படுகிறது? ஏன் தேவன் ஜெபித்தாலும் சில வேளகளில் பதிலளிப்பதில்லை? அவரை தடுக்கும காரணிதான் என்ன? என்பதை பற்றி ஆராய்வோம்

இந்த உலகத்தில் ஒவ்வொன்றும் மற்றொன்றோடு தொடர்புடையதாக இருக்கிறது. வானம் இல்லாவிட்டால் சூரியன் இல்லை. சூரியன் இல்லாவிட்டால் மரங்கள் இல்லை. மரங்கள் இல்லாவிட்டால் மனிதன் இல்லை. வானம் இல்லாவிடில் பூமி இல்லை. நம் முன்னோர் இல்லாவிடில் நாம் இல்லை. நாம் இல்லாவிட்டால் பின் வரும் சந்ததி இல்லை. உதாரணமாக என்னை எடுத்து கொண்டால் நான் மிக நீளமான தொடர்ந்து வரும் சங்கிலியின் ஒரு பகுதியே. எனக்கு பிறகும் இந்த சங்கிலி தொடரலாம். இந்த உலகில் உள்ள காற்றின் அளவு, நீரின் அளவு மாறுவதில்லை என கண்டுபிடித்துள்ளனர். நான் இப்போது சுவாசிக்கும் காற்று பல ஆயிரகணக்கான ஆண்டுகளுக்கு முன் இயேசுவோ, புத்தரோ, முகம்மதுவோ, அல்லது அலெக்ஸாண்டரோ சுவாசித்த காற்றாக இருக்கலாம். நீரும் இப்படியே மற்றவர்கள் பயன்படுத்திய நீராக இருக்கலாம். ஒரு இடத்தில் பட்டாம்பூச்சி பறப்பதற்க்கும் இன்னோரு இடத்தில் புயல் உருவாவதற்க்கும் தொடர்பு இருப்பதாக சொல்லுகின்றனர். இன்று நான் குடிக்கும் இளனீர் இருபது வருடங்களுக்கு முன் முகம் தெரியாத ஒருவர் வைத்த மரத்தின் ப்லனே. நாம் போகும் ரோடு பல்வேறு உழைப்பவர்களின் வியர்வையால் வந்ததாகும்.

அமெரிக்காவில் ஒரு பிரச்சனை என்றால் உலகம் முழுவதும் பிரச்சனைகுள்ளாகி விடுகிறது.

வானமும், பூமியும், இயற்கையும், மனிதர்களும், முற்காலமும், பிற்காலமும் கண்ணுக்கு தெரியாத ஒரு வலைபின்னாலால் இணைக்கப்பட்டுள்ளன. ஒரு இடம் பிரச்சனையானால் இன்னொரு இடம் அதனால் பாதிக்கப்படுகிறது. ஒரு இடத்தில் அழுத்தம் (காற்றோ, நீரோ)அதிகமாகும் போது, எந்த இடம் பலவீனமாக இருக்கிறதோ அந்த இடம் உடைபடுவதை நம் அனுபவத்தில் உணரலாம்.

கடவுள் எனக்கு அற்புதம் செய்தார் என்ற நல்ல விஷயத்தை அழுது கொண்டு சொல்லும் சாட்சியை நாம் கேட்டிருக்கலாம். நம் வாழ்வில் முடியாது என்று வ்ந்த காரியத்தை தேவன் அற்புதமாக இடைபட்டு மாற்றியதை வியப்புடன் சொல்வதை கேட்கலாம். ஆனால் அவர்களுக்கு தெரியாதது இந்த அற்புதம் என்பது அவர்கள் நினைப்பதை விடவும் பெரிய காரியம் என்று. அது எப்படியெனில்

ஒருவர் தன் 80 வது வயதில் இறக்க வேண்டும் என்ற விதி உள்ளவர். ஆனால் தேவன் அந்த விதியை அவர் 85 வது வயதில் இறக்க வேண்டும் என்று மாற்றுகிறார் என வைத்து கொள்வோம். எல்லா நிகழ்வும் ஒன்றொடொன்று தொடர்பு உடையது ஆகையால் தேவன் அந்த புதிய விதியின்படி உலகத்தில் உள்ள அனவரின் விதியையும் மாற்ற வேண்டும். ஏனெனில் இந்த 5 வருடத்தில் அவர் ஒரு மரம் நடலாம் அல்லது மரம் வெட்டலாம் அதனால் மழை அளவோ அல்லது காற்றின் அளவோ மாறலாம். அது இந்த உலக மொத்தத்தையும் பாதிக்க கூடும். இதற்கேற்றார் போல் உலகில் உள்ள அனைவரின் விதியையும் மாற்ற வேண்டும். இது பஸ்ஸின் கடைசி சீட் நிரம்பியிருக்க நடுவில் சென்று அமர்வதை போன்றது. ஒருவருக்காக அனவரும் நகர வேண்டும்.

இது நம்புவதற்க்கு கடினமாக இருக்கலாம் ஆனால் இந்த கடினமான காரியத்தையும் இயேசுவுக்குள் வந்தவ்ர்களுக்காக ஓரளவுக்கு அவர் செய்கிறார். இதிலிருந்து அற்புதம் என்றால் எவ்வளவு பெரிய காரியம் என்பதையும், ஏன் அவர் அற்புதத்தை எப்போதும் செய்வதில்லை என்றும் அறிய முடியும்.

லூக்கா 13.1. பிலாத்து சில கலிலேயருடைய இரத்தத்தை அவர்களுடைய பலிகளோடே கலந்திருந்தான்; அந்த வேளையிலே அங்கே இருந்தவர்களில் சிலர் அந்தச்செய்தியை அவருக்கு அறிவித்தார்கள்.
2. இயேசு அவர்களுக்குப் பிரதியுத்தரமாக: அந்தக் கலிலேயருக்கு அப்படிப்பட்டவைகள் சம்பவித்ததினாலே, மற்ற எல்லாக் கலிலேயரைப் பார்க்கிலும் அவர்கள் பாவிகளாயிருந்தார்களென்று நினைக்கிறீர்களோ?
3. அப்படியல்லவென்று உங்களுக்குச் சொல்லுகிறேன்; நீங்கள் மனந்திரும்பாமற்போனால் எல்லாரும் அப்படியே கெட்டுப்போவீர்கள்.
4. சீலோவாமிலே கோபுரம் விழுந்து பதினெட்டுப்பேரைக் கொன்றதே; எருசலேமில் குடியிருக்கிற மனுஷரெல்லாரிலும் அவர்கள் குற்றவாளிகளாயிருந்தார்களென்று நினைக்கிறீர்களோ?
5. அப்படியல்லவென்று உங்களுக்குச் சொல்லுகிறேன், நீங்கள் மனந்திரும்பாமற்போனால் எல்லாரும் அப்படியே கெட்டுப்போவீர்கள் என்றார்.

மேற்கண்ட வசனங்களிலிருந்து தேவ விதி மனிதர்களின் பாவ, புண்ணியத்திற்க்கு ஏற்றார் போல் செயல்படாமல், அல்லது தன் வாழ்வில் தாங்கள் செய்த செயல்களின் பலனாக இருக்காமல் வேறு ஒரு அடிப்படையில் தீர்மானிக்கப்படுகிறது என்று இயேசு சுட்டிக் காட்டுவதை பார்க்கலாம். இன்றைக்கும் உலகில் மனிதர்கள் பல்வேறு இயற்கை அழிவுகளால் கும்பல் கும்பலாக இறப்பதை பார்க்கிறோம். நிகழும் செய்ல்கள் அனைத்தும் தேவ விதியினாலேயே நிகழ்கின்றன. இந்த தேவ விதி மனிதனால் சுலபமாக புரிந்து கொள்ள முடியாதது. அது மிகவும் சிக்கலானது.

யோவான் 9.1. அவர் அப்புறம் போகையில் பிறவிக்குருடனாகிய ஒரு மனுஷனைக் கண்டார்.
2. அப்பொழுது அவருடைய சீஷர்கள் அவரை நோக்கி: ரபீ, இவன் குருடனாய்ப் பிறந்தது யார் செய்த பாவம், இவன்செய்த பாவமோ, இவனைப் பெற்றவர்கள் செய்த பாவமோ என்று கேட்டார்கள்.
3. இயேசு பிரதியுத்தரமாக: அது இவன் செய்த பாவமுமல்ல, இவனைப் பெற்றவர்கள் செய்த பாவமுமல்ல, தேவனுடைய கிரியைகள் இவனிடத்தில் வெளிப்படும்பொருட்டு இப்படிப் பிறந்தான்.
4. பகற்காலமிருக்குமட்டும் நான் என்னை அனுப்பினவருடைய கிரியைகளைச் செய்யவேண்டும்; ஒருவனும் கிரியை செய்யக்கூடாத இராக்காலம் வருகிறது
.

மேற்கண்ட விஷயத்தில் அந்த குருடனுடைய பிரச்சனைக்கு தேவனுடைய விதியே (தேவ கிரியைகள்) காரணம் என்று சொல்லுகிறார். ஒரு சிலர் சொல்வது போல இயேசு சுகமாக்க வேண்டி அவன் குருடனாக படைக்கப்படவில்லை. தன் சுய விதியால் குருடனாக பிறந்த அவனை இயேசு சுகமாக்குகிறார். இதன் மூலம் தேவனாகிய இயேசு அவன் விதியை மாற்றுகிறார். சுற்றிலும் தன் ஆட்களை வைத்துக் கொண்டு மாஜிக் வித்தை காட்டுபவர்கள் போல அல்ல இயேசு. பிறர் தன்னை பார்த்து வியக்க வேண்டும் என்று ஒருவனை குருடனாக படைத்து விட்டு பிறகு அவனை குணப்படுத்தினார் இயேசு என்று தேவனை அனேகர் மட்டப்படுத்துகின்றனர்.

அடுத்ததாக யோபுவின் வாழ்க்கையை பற்றி பார்ப்போம்.

இயேசுவை போல, பவுலை போல யோபுவும் தேவன் தனக்கு தந்த விதியை தேவனை குறை சொல்லாமல் ஏற்றுக் கொள்ளுகிறான். ஆனாலும் அவன் அந்த விதிக்கு தன்னை முழுவதுவும் ஒப்புக் கொடுக்காமல் ப்லவாறு துன்பப்படுகிறான் இதற்கு வேறு காரணம் ஒன்றுண்டு. அதை வேறு ஒரு தலைப்பில் ஆராய்வோம்.

யோபு 2.10. அதற்கு அவன்: நீ பயித்தியக்காரி பேசுகிறதுபோலப் பேசுகிறாய், தேவன் கையிலே நன்மையைப் பெற்ற நாம் தீமையையும் பெறவேண்டாமோ என்றான்; இவைகள் எல்லாவற்றிலும் யோபு தன் உதடுகளினால் பாவஞ்செய்யவில்லை.

யோபுவின் புத்தக ஆரம்பத்திலேயே அதை படிப்பவர்களுக்கு சஸ்பென்ஸ் தெரிந்து விடுகிறது.

ஆனால் யோபுவிற்கோ அல்லது அவன் நண்பர்களுக்கோ அதை பற்றி தெரியவில்லை. இந்த நண்பர்கள் மிகவும் நல்லவர்கள், தேவ பக்தியுள்ளவர்கள் இவர்கள் தங்களால் முடிந்த அளவுக்கு யோபின் துன்பத்திற்க்கு காரணம் என்ன என ஆராய்கிறார்கள். இவர்களுக்கு தேவ விதியை பற்றியும் அது எப்படி செயல்படுகிறது என்பதை பற்றியும் தெரியாததால் தங்களுக்கு தெரிந்த துன்பத்திற்க்கு காரணம் பாவமே என்ற நம்பிகையின்படி யோபுவின் பாவத்தைஆராய்கிறார்கள். பூதக் கண்ணாடி வைத்து கொண்டு துப்பறியும் சாம்பு மாமா போல யோபுவின் பாவத்தை பார்க்கிறார்கள். யோபுவை டார்ச்சர் செய்கிறார்கள்.

யோபு 12.1. யோபு பிரதியுத்தரமாக:
2. ஆம், நீங்களே ஞானமுள்ள ஜனங்கள்; உங்களுடனே ஞானம் சாகும்.
3. உங்களைப்போல எனக்கும் புத்தியுண்டு; உங்களிலும் நான் தாழ்ந்தவனல்ல; இப்படிப்பட்டவைகளை அறியாதவன் யார்?
4. என் சிநேகிதரால் நான் நிந்திக்கப்பட்டு, தேவனை நோக்கிப் பிரார்த்திப்பேன்; அவர் எனக்கு மறு உத்தரவு அருளுவார்; உத்தமனாகிய நீதிமான் பரியாசம்பண்ணப்படுகிறான்.
5. ஆபத்துக்குள்ளானவன் சுகமாயிருக்கிறவனுடைய நினைவில் இகழ்ச்சியடைகிறான்; காலிடறினவர்களுக்கு இது நேரிடும்

இன்னொரு பக்கம் நீதிமானுக்கு நன்மை மட்டுமே வரும் என்ற நம்பிக்கை கொண்ட யோபு தன் நீதியின் மேன்மையை தேவனிடத்தில் சொல்லுகிறான். ஆனால் கடைசியில் தேவ ஆவியால் ஏவப்பட்ட எலிகூ சொன்னது என்ன எனில்

யோபு 34.32. நான் காணாத காரியத்தை நீர் எனக்குப் போதியும், நான் அநியாயம் பண்ணினேனானால், நான் இனி அப்படிச் செய்வதில்லை என்று தேவனை நோக்கிச் சொல்லத்தகுமே.

தங்கள் வாழ்வில் மனிதர்கள் தேவனின் இந்த காணாத காரியத்தை, தேவனுடைய விதியை பற்றி அறிவதில்லை.

இந்த விதியை வகுத்து வழங்கும் வல்லோனாக பிதாவாகிய தேவன் இருக்கிறார். தன் இந்த அம்சத்தை மனிதர்களால் தாங்க முடியாது, தன் மேல் அன்பு கூர முடியாது என்றே அவர் மனிதர்களுக்கு உதவி செய்ய, நன்மை செய்ய தன் ஒரே பேறான குமாரனை பூமிக்கு அனுப்பினார்.

இயேசுவே கடவுள் என்று சொல்லுபவர்களால் அவரை நல்லவராகவே காட்ட முடிந்தது. விதியை வகுத்து நிறைவேற்றும் தேவனாக அவரை காண்பிக்க அவர்களால் முடிவதில்லை. அதனால் துன்பத்துக்கு காரணம் சாத்தான் என்றும் அவன் எப்போது என்ன செய்வான் என்று கடவுளுக்கே தெரியாது என்றும் ஒரு போதகம் மக்களிடையே சென்று சேர காரணமாக உள்ளனர். இவர்கள் திரித்துவம் பற்றி பேசினாலும் பிதாவின் அம்சம் பற்றி போதிப்பதில்லை. இவர்கள் கடவுளின் பெருமையை உயர்த்துவதாக நினைத்து கொண்டு அவரை மிகவும் தாழ்த்துகின்றனர்.

(தொடரும்)



__________________
Page 1 of 1  sorted by
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard