அதில் இரண்டில் ஜெயித்த அவர் மூன்றாவதாகவந்த சோதனையை மேற்கொள்ள முடியாமல் வீழ்ந்துபோனார். அதுபோல் தேவனின் வார்த்தைகளை அப்படியே கைகொள்ள நினைப்பவகளுக்கு மூன்று விதமான சோதனைகள் வருவது நிச்சயம். அவ்வித சோதனைகளின்போது நாம் ஆவியானவரின் பெலத்துடன் உறுதியாக நின்று ஜெயித்தால் மட்டுமே நமது கீழ்படிதல் முழுமைஅடையும்.
நம் ஆண்டவராகிய இயேசுவும் மூன்றுவித சோதனைகளை சாத்தான் மூலம் சந்தித்தார். அவர் சந்தித்த மூன்றுவித சோதனைகள் என்பது 'இந்த உலகத்தை ஜெயிப்பதற்காக" நடந்த ஓன்று! அவர் அதில் ஜெயம்கொண்டு "நான் உலகத்தை ஜெயித்தேன்" என்று முழங்கினார். அதற்கும் இதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. அதைப்பற்றி வேண்டுமானால் நாம் தனியாக ஒரு திரியில் ஆராயலாம்.
இங்கு, ஒருவர் வேதவார்த்தைகளை தனது வாழ்வில் கைகொண்டு நடக்க ஆரம்பிக்கும்போது" அவர் சந்திக்கும் சோதனைகளை பற்றி மட்டும் ஆராயலாம். இதை கீழ்படிதலின் சோதனைகள் என்று எடுத்துகொள்ளலாம்.
சோதனை - 1 ராஜாமூலம் அல்லது மேலதிகாரிகள் மூலம் வரும் சோதனை!
ஒருவர் தேவ வார்த்தைகளை கைகொள்ள ஆரம்பிக்கும்போது அவருக்கு முதலில் வரும் சோதனை தனக்கு மேலான அதிகாரங்களில் இருந்துதான். உதாரணமாக கம்பனி முதலாளி, அரசாங்கம் அல்லது தனக்கு மேலான அதிகாரி, ராஜா போன்றவர்கள் மூலம் வரும் சோதனை இதில் அடங்கும்.
இங்கு அந்த தேவ மனிதனை பார்த்து மேலான அதிகாரம் உள்ள ராஜா: I ராஜா 13 7. அப்பொழுது ராஜா தேவனுடைய மனுஷனை நோக்கி: நீ என்னோடேகூட வீட்டுக்கு வந்து இளைப்பாறு; உனக்கு வெகுமானம் தருவேன் என்றான்
இங்கு மூன்று காரியங்களின் அடிப்படையில் அந்த தேவமனிதன் சோதிக்கப்படுகிறான்.
1. ராஜாவின் மேலான அதிகாரம்
2. சரீர இளைப்பாறுதல்
3. வெகுமதிகள்
இந்த மூன்றுகாரியங்களுமே இக்காலகட்டங்களில் அநேகரை விழத்தள்ளக்கூடிய முக்கியமான சோதனைகளே! எனவே ஒவ்வொன்றையும் தனித்தனியாக சிறிய விளக்கத்துடன் ஆராயலாம்.
1. மேலான அதிகாரம்.
"அதிகாரம்" என்பது ஒரு மனிதனை கீழ்படிய வைக்கும் ஒரு மிகப்பெரிய ஆயுதம் என்றே கூறவேண்டும். யாரோ சிலர் இயற்றும் சட்டங்கள் அவர்களின் பெற்றுள்ள அதிகாரத்தின் அடிப்படையில் நம்மை கீழ்படிய வைக்கின்றன. அதேபோல் நாம் வேலை பார்க்கும் ஸ்தலங்களில் நமக்கு மேலான பதவியில் இருக்கும் ஒருவர் தவறான முடிவுகளை எடுத்தாலும்கூட அவரது அதிகாரம் நம்ம அதற்க்கு கீழ்படியவைக்கிறது. காரணம் அதை மீறி நடந்தால் நாம் தண்டனை அடையலாம் அல்லது நமது வேலையே கூட பறிபோகலாம்.
எனவே தன்னிடம் உள்ள அதிகாரத்தின் மூலம் ஒருவரை பயம்காட்டி வேத வார்த்தைகளைவிட்டு விலகவைப்பது அல்லது வேதவார்த்தைகளை மீறவைப்பது சாத்தானின் ஆதிகால தந்திரம்.
உதாரணம்: பொய் சொல்ல சொல்வது, கள்ள கணக்கு எழுத சொல்வது, ஏமாற்றி பொருட்களை விற்க செய்வது. அடுத்தவனை கெடுப்பதற்கு ஐடியா கேட்பது. தவறானவனுக்கு துணைபோகசொல்வது போன்றவை இதில்அடங்கும். இன்றைய நாட்களில் எல்லா வியாபார ஸ்தலங்களிலும் இப்படிப்பட்ட காரியம் பெருத்து விட்டது. வியாபாரம் என்றால் பொய் சொல்லலாம் ஏமாற்றலாம் அது தவறில்லை என்றொரு நிலையில் மனிதர்கள் வாழ்கின்றனர். ஆண்டவர் வியாபாரிக்கு ஒருநீதி வேலையாளுக்கு ஒரு நீதி என்று கொடுக்கவில்லை எல்லோருக்கும் ஒரே நீதிதான்.
எனவே, இதுபோன்ற வசனத்துக்கு விரோதமாக நடக்கவைக்கும் காரியங்கள் எந்த அதிகாரத்தின்மூலம் நமக்கு நிர்பந்தம் பண்ணப்பட்டாலும், அதை நாம் செய்யாது மறுத்து துணிந்து அதை மேற்கொள்ள வேண்டும். "வேலை போய்விடுமோ" அல்லது "வருமான இழப்பு" வருமோ என்ற பயம் உள்ளவர்கள் ஆவியானவரின் துணையை நாடுங்கள் இக்கட்டான நிலைகளில் அவர் நிச்சயம் உதவி செய்வார். இதற்க்கு உதாரணமான சில சம்பவங்கள் இந்த தொடுப்பில் உள்ளது படித்து பயன்பெறவும்.
தங்களுடைய கருத்துகள் போதனையை போல் அல்லாமல் அனுதினமும் நடக்கிற சம்பவத்தோடு ஒப்பிட்டு அருமையாக சொன்னிர்கள் .
தொடர்ந்து எழுதுங்கள் நன்றி.
தங்கள் கருத்துக்கும் பின்னூடத்துக்கும் கர்த்தருக்கும் நன்றியை தெரிவித்து கொள்கிறேன் சகோதரரே.
"ஒவ்வொரு தனிப்பட்ட மனிதனும்தேவனுக்கு மிகவும் முக்கியமானவன்" என்பதை அனேக வேதாக சம்பவங்கள் மூலம் அறிய முடியும். அப்படி ஒவ்வொரு தனிப்பட்ட மனுஷனை சுற்றியும் ஒரு உலகம்போன்ற அமைப்பு செயல்படுகிறது என்பது ஆவிக்குரிய நிலையில் அநேகர் அறியாத ஓன்று. நமது வாழ்வில் நாம் அன்றாடம் சந்திக்கும் மனுஷர்கள் மற்றும் காரியங்களை சரியாக தேவனுக்கு ஏற்றபடி கையாள தெரிந்தாலே அங்கு நம்மீதான தேவனுடைய சித்தம் நிறைவேறிவிடும்.
அநேகர் தங்கள் கண்ணுக்கு எட்டும் தூரகுதில் இருக்கும் காரியங்களை ஆராயாமல் அமெரிக்காவிலும் ஐரோப்பாவிலும் நடக்கும் நிகழ்வுகள் குறித்து ஆராய்ந்துகொண்டு முக்கியமான காரியங்களில் கோட்ட்டைவிட்டு விடுகின்றனர். அன்று இஸ்ரவேல் ஜனங்களும் அவ்வாறே, தங்கள் கண்முன்னால் நடமாடிய இயேசுவை அறிந்துகொள்ள முடியாமல் இன்னொரு மேசியா வருவார் வருவார் என்று எதிர்நோக்கிக்கொண்டு இருந்தனர். இறுதியில் ரட்சிப்பை காணாமல் போனார்கள்.
நாமும் அதுபோல் எங்கோ உள்ளதை தேடிக்கொண்டு இருக்காமல், நமது எல்லைக்கு எட்டிய தூரங்களில் நமது கண்களுக்கு நேர் நடக்கும் காரியங்களில் உத்தமத்தை கைகொண்டு, தேவனுக்கு ஏற்றவிதமாக வாழவேண்டும் என்பதே என்னுடைய கட்டுரைகளின் நோக்கம்.
I யோவான் 4:20தேவனிடத்தில் அன்புகூருகிறேனென்று ஒருவன் சொல்லியும், தன் சகோதரனைப் பகைத்தால், அவன் பொய்யன்; தான் கண்ட சகோதரனிடத்தில் அன்புகூராமலிருக்கிறவன், தான் காணாத தேவனிடத்தில் எப்படி அன்புகூருவான்?
என்று வேதம் சொல்கிறது! எனவே நமது ஆவிக்குரிய பயணத்தை எப்பொழுதும் நமது அன்றாட நிகழ்வுகளில் இருந்து தொடர்வதே சிறந்தது.
__________________
நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)அவர்(கர்த்தராகியதேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்; (ஏசா 25:8)
கீழ்படிதலில் வரும் சோதனைகள் குறித்து தியானித்துக்கொண்டு இருக்கிறோம். அதில் முதலில் மேலான அதிகாரங்களால் வரும் சோதனைகள் பற்றி அறிந்து கொண்டோம். இவ்வித சோதனைக்கு உதாரணம் வேண்டுவோர். ராஜாவாகிய நேபுகாத்நேச்சார் பொன் சிலையை செய்து வைத்து தன் அதிகாரத்தால் எல்லோலோரையும் வணங்க சொன்ன அந்த நிகழ்வை இதற்க்கு சான்றாக எடுத்து கொள்ளலாம். அது அனேக தேவபிள்ளைகள் அறிந்த சம்பவம் என்றாலும் புதியவர்களும் அறியும்படிக்கு ஒரு சுக்கமான விளக்கம் கொடுக்கிறேன்: .
1. ராஜாவாகிய நேபுகாத்நேச்சார் அறுபதுமுழ உயரமும் ஆறு முழ அகலமுமான ஒரு பொற்சிலையைப் பண்ணுவித்து பாபிலோன் மாகாணத்திலிருக்கிற தூரா என்னும் சமபூமியிலே நிறுத்தினான்
பின்னர் எல்லோருக்கும் இவ்வாறு ஒரு கட்டளையை பிறப்பித்தான்:
5. எக்காளம், நாகசுரம், கின்னரம், வீணை, சுரமண்டலம், தம்புரு முதலான சகலவித கீதவாத்தியங்களின் சத்தத்தை நீங்கள் கேட்கும்போது, நீங்கள் தாழவிழுந்து, ராஜாவாகிய நேபுகாத்நேச்சார் நிறுத்தின பொற்சிலையைப் பணிந்துகொள்ளக்கடவீர்கள்.
6. எவனாகிலும் தாழ விழுந்து, அதைப் பணிந்துகொள்ளாமற்போனால், அவன் அந்நேரமே எரிகிற அக்கினிச்சூளையின் நடுவிலே போடப்படுவான் என்றான்.
ஆனால் சாத்ராக், மேஷாக், ஆபேத்நேகோவோ ராஜாவின் அந்த அதிகார கட்டளைக்கு பயந்து "தேவனாகிய கர்த்தர் ஒருவரை தவிர வேறு விக்கிரத்தை வணங்ககூடாது" என்ற தேவனின் வார்த்தையை மீறாமல் வேத வார்த்தைக்கு முழுமையாக கீழ்படிந்து, அந்த சிலையை வணங்க மறுத்தனர். எனவே கோபம் கொண்ட ராஜா தன் கட்டளையின்படி அவர்களை எரிகிற அக்கினியினுள் தூக்கி போட கட்டளையிட்டான் ஆனால் அங்கு தேவன்தாமே தன் தூதனை அனுப்பி தானே இடைபட்டு அங்கு அவர்களை ஒரு சேதமும் இல்லாமல் காப்பாற்றினார்.
30. பின்பு ராஜா சாத்ராக், மேஷாக், ஆபேத்நேகோ என்பவர்களைப் பாபிலோன் தேசத்திலே உயர்த்தினான்.
அதுபோல் நாமும் தேவனின் வார்த்தைகளுக்கு முழுமையாக கீழ்படிந்து நமக்கு மேலான அதிகாரங்கள் மூலம் வரும் சோதனைகளில் உறுதியாக நின்று ஜெயித்தால் தேவன் அங்கு வல்லமையாக செயல்பட்டதை கண்கூடாக காணமுடியும்!
இதற்க்கு ஒத்த உண்மை சம்பவம் ஓன்று என் வாழ்வில் நடந்துள்ளது.
ஞாயிற்று கிழமைகளில் சபைக்கு போவதை தவிர்த்து எக்காரணத்தை கொண்டும் வேலைக்கு போககூடாது என்று முடிவெடுத்தேன்.
ஒருநாள் மிக இக்கட்டான சூழ்நிலையில் எனது கம்பனி டைரக்டர் ஞாயிற்று கிழமை கட்டாயம் வேலைக்கு வரவேண்டும் என்று கட்டளையிட்டார். நான் ஆண்டவரை பற்றி அவருக்கு சொல்லி எனது நிலைமையை விளக்கி, எவ்வளவோ எடுத்து சொல்லியும் இந்து மதத்தை சேர்ந்த அவர் கேட்கவில்லை. நான் சென்னைக்கு வந்த புதிதில் எனக்கு அந்த வேலை கிடைத்ததே அபூர்வம்! இந்த வேலை போனால் வேறுவேலை கிடைப்பது கடினம். வீட்டு வாடகைகூட கொடுக்க முடியாத ஒருநிலை.
ஆகினும் நான் அவர்களிடம் உறுதியாக "நாளை வரமாட்டேன்" என்று சொல்லிவிட்டு வேலை போனால்போகிறது, இந்த வேலையை தந்த தேவனால் வேறொரு வேலையை எனக்கு தரமுடியும் என்ற விசுவாசத்தில் போகாமல் இருந்துவிட்டேன்.
திங்கள் கிழமை காலை நிச்சயம் வேலை போயிருக்கும் என்ற குழப்பமான நிலையில் அலுவலகம் சென்றேன். ஆனால அங்கு நடந்ததோ மிகுந்த ஆச்சர்யம். இரண்டு டைரக்டர்கள் சேர்ந்து என்னை அதிகமாக புகழ்ந்தது மல்லாமல். என்னை இன்னொருவருக்கு அறிமுகப்படுத்தும் போதெல்லாம் "இவர் ஒரு உண்மையான கிருஸ்த்தவன்,பொய் சொல்லமாட்டார், மிக நேர்மையானவர் கடவுளுக்கு மிகவும் பயந்தவர் இவரைப்போல ஒருஆளை நீங்கள் பார்க்கவேமுடியாது" என்றுசொல்லி அறிமுகப்படுத்தும் நிலை உண்டானது.
இதை நான் ஏன் சொல்கிறேன் என்றால் 'ஆண்டவரின் வார்த்தைக்கு அப்படியே கீழ்படிந்து நடந்தால் துன்பம் வந்துவிடுமோ' என்று கலங்க வேண்டாம். சாத்ராக் மேஷாக்கை காப்பாற்றிய தேவன் இன்றும் ஜீவனுள்ளவராக இருக்கிறார். எனவே விசுவாசத்தின் அடிப்படையில் வேத வசனத்துக்கு வோரோதமாக வரும் எந்த மேலான அதிகாரத்தின் கட்டளையையும் துணிந்து நாம் எதிர்க்கலாம். அங்கு தேவன் நிச்சயம் நமக்கு துணை நிற்பார்!
அடுத்து தேவனின் வார்த்தைக்கு கீழ்படிதலில் வரும் இரண்டாம் சோதனையாகிய வெகுமதிகள் அடிப்படையில் சோதிக்கப்படுவதை பற்றி பார்க்கலாம்!
2. வெகுமதிகள், பரிசுகள் மற்றும் இனாம்!
பொதுவாக வெகுமதி அல்லது பரிசு என்பது ஒரு போட்டியில் ஒருவர் வெற்றி பெற்றாலோ அல்லது செயற்கரிய வேலை ஒன்றை செய்து முடித்தலோ அல்லது ஒருவர் தனக்கு மனதுக்கு மிகவும் பிடித்த ஒருவருக்கு எந்தஒரு முகாந்திரமும் இல்லாமல் வழங்கும் பணம்/ பொருள்/பட்டம் இவற்றில் எதைவேண்டுமானாலும் குறிக்கலாம்.
இந்த வெகுமதிக்கு மயங்காத மனிதன் உலகில் மிக சொற்பமே எனலாம். எனவே தான் தற்காலங்களில் எந்தபொருளை வாங்க போனாலும் அத்தோடு இலவசமாக ஒன்றை வழங்கி மனுஷர்களை தங்களை நோக்கி இழுக்கும் தந்திரம் பெருகியிருக்கிறது. அத்தோடு இப்பொழுது ஓட்டுபோடுவத்ர்க்குகூட வெகுமதிகள் வழங்கப்படுகிறது. அனேக இலவசதிட்டங்கள் அரசாங்கத்தால் கொண்டு வரப்படுகன்றன. அதேபோல் ஏதாவது பணத்தையோ பொருளையோ அல்லது மனதை மயக்கும் புகழ்ச்சியான பேச்சையோ வெகுமதியாக கொடுத்து ஒரு மனிதனை தேவனின் வார்த்தைகளுக்கு முழுமையாக கீழ்படியவிடாமல் விலக வைப்பது என்பது பிசாசின் தந்திரங்களில் ஓன்று. இந்த தந்திரத்தைதான் எரெபெயாம் ராஜாவின் மூலம் சாத்தான் கையாளுகிறான்.
இவ்வகை செயல்களை நாம் பல திரைப்படங்களில்கூட காணமுடியும் "எனது அதிகாரத்துக்கு நீ பயப்படவில்லையா? என்னோடு சமாதானமாக போய், நான் கொடுக்கும் வெகுமதியை ஏற்றுக்கொண்டு என்னோடு சேர்ந்துவிடு" என்பதுதான் இந்த தந்திரம். இந்த தந்திரத்தின் மூலம் சாத்தான் அநேகரை சுலபமாக கவிழ்த்து விடுகிறான். எந்த முகாந்திரமும் இல்லாமல் ஓசியில் கிடைக்கும் எந்த ஒரு பொருளையோ அல்லது பணத்தையோ அல்லது அதற்க்கு சமமான ஒன்றையோ யாரிடமிருந்தும் வாங்குவது தேவனுக்கு உகந்ததல்ல.
பொதுவாக தேவனுடைய வார்த்தைக்கு கீழ்படிந்து ஒருதவறான தகவலை எங்கும் சொல்லகூடாது என்று நாம் தீர்மானித்திருக்கும் போது, அவ்வாறு தவறான தகவலை கொடுத்தால் மட்டுமே சில நன்மைகள் அல்லது பண உதவிகள் வெகுமதிகள் கிடைக்கும் என்பது போன்ற ஒருநிலையை சாத்தான் உண்டாக்குவான். இங்கு அந்த வெகுமதிக்கு ஆசைப்பட்டு உண்மைகளை மறைத்து தவறான தகவல்களை கொடுப்பாவர் சாத்தானால் பிடிக்கப்பட்டு போவார்கள்.
இதுபோன்ற வெகுமதிகளின் அடிப்படையில் ஒருவர் சோதிக்கப்படுவதற்கு: வேதத்தில் இன்னொரு உதாரணம்:
இஸ்ரவேலை சபிப்பதற்கு பிலேயாமை கூலி பொருத்தினான் பாலாக் என்னும் மோவாப் ராஜா! ஆனால் பிலேயாமோ தேவனுடய வார்த்தைக்கு கீழ்படிந்து சபிக்கபோக மறுத்துவிட்டான். பாலாக்கோ மீனும் சில ஆட்களை அனுப்புகிறான்
எண்ணாகமம் 22:16அவர்கள் பிலேயாமிடத்தில் போய், அவனை நோக்கி: சிப்போரின் குமாரனாகிய பாலாக் எங்களை அனுப்பி: நீர் என்னிடத்தில் வருகிறதற்குத் தடைபடவேண்டாம்; 17. உம்மை மிகவும் கனம்பண்ணுவேன்; நீர் சொல்வதையெல்லாம் செய்வேன்; நீர் வந்து எனக்காக அந்த ஜனங்களைச் சபிக்கவேண்டும் என்று சொல்லச்சொன்னார் என்றார்கள்
ஆகினும் பிலேயாம் மிக உறுதியாக கர்த்தரின் கட்டளையை மீறி இதை செய்ய மாட்டேன் என்று கூறுகிறான்.
18. பிலேயாம் பாலாகின் ஊழியக்காரருக்கு பிரதியுத்தரமாக: பாலாக் எனக்குத் தன் வீடு நிறைய வெள்ளியும் பொன்னும் தந்தாலும், சிறிய காரியமானாலும் பெரியகாரியமானாலும் செய்யும்பொருட்டு, என் தேவனாகிய கர்த்தரின் கட்டளையை நான் மீறக் கூடாது
இவன் தேவனின் வார்த்தையில் உறுதியிருந்தாலும் இவனது உள்ளமோ பாலாக் கொடுக்கபோகும் கனம் மற்றும் கேட்டதெல்லாம்கிடைக்கும் என்ற வாக்கின்மேல் ஆவலாக இருந்ததால் தேவன் அவனை போகஅனுமதித்தார். இறுதியில பிலேயாமின் முடிவு மரணமே!
இதற்க்கு ஒப்பாக ஒருவர் வாழ்வில் நடந்த உண்மை சோதனை:
ஒருவரின் மகன் 10ம் வகுப்பு பொது தேர்வில் 450௦ மதிப்பெண்களுக்கு மேல் பெற்றதால், ஒரு பொது சேவை மையத்தார் ஒரு குறிப்பிட்ட வெகுமதி மற்றும் எதிர்காலத்திலும் படிப்புக்கான ஒரு தொகை தருவதாக முன்வந்தனர். ஆனால் அவர்கள் வசிக்கும் வீட்டின் வாடகை தொகையை குறைத்து சொன்னால் தான் அந்த வெகுமதி கிடைக்கும் என்றநிலை உருவாகியது அவர்கள் பக்கத்து வீட்டில் உள்ளவர்கள் அவ்வாறு குறைத்து சொல்லி அந்த உதவியை பெற்றுக் கொண்டனர். ஆனால் அதைவிட அதிகம் மதிப்பெண் எடுத்த இவரது மகனுக்கு உண்மையை சொன்னதால் உதவி தொகை கிடைக்கவில்லை. இந்த செய்கையானது. இந்த உலக நிலயில் பார்த்தால் ஏதோ தோல்விபோல தெரியலாம் ஆனால் இச்செயல் தேவனுக்குள், சாத்தான்மேல் ஒரு மிகப்பெரிய வெற்றி என்பதை ஆவிக்குரிய நிலையில் பார்த்தால் மட்டுமே தெரியும் .
அதேபோல் வெகுமதி/ இனாம்/ பரிசு போன்றவற்றுக்காகவோ அல்லது வேறு எந்த ஒரு உலக காரியத்துகாகவோ பிரியப்பட்டு தேவனினுக்கு கீழ்படியாமல் போவோமாகில் நாம் நிச்சயம் சாத்தானால் பிடிக்கப்படுவோம்.
இதுபோன்ற காரியங்கள் ஒன்றுமில்லாததுபோல் பலருக்கு தெரியலாம். ஆனால் அதிக பிரயாசப்பட்டு ஆவிக்குரி நிலையில் பத்துபடி முன்னேறிய ஒருவரை, சாத்தான் தனது தந்திரத்தால் மீண்டும் தொடங்கிய நிலைக்கே கீழே கொண்டு வந்துவிட்டு முன்னேறாமல் தடைசெய்வதோடு தேவனிடமும் நமது பெயரை கெடுத்துவிடுவான் என்பதை கருத்தில் கொள்க.
__________________
நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)அவர்(கர்த்தராகியதேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்; (ஏசா 25:8)
எரேபெயாம் ராஜாவிடம் கர்த்தரின் வார்த்தையை சொல்லவந்த அந்த தேவ மனிதனுக்கு அடுத்து வந்தது "சரீர இளைப்பாருதலின் அடிப்படையில் சோதனை".
I ராஜா 13:7. அப்பொழுது ராஜா தேவனுடைய மனுஷனை நோக்கி: நீ என்னோடேகூட வீட்டுக்கு வந்து இளைப்பாறு;
சரீர இளைப்பாறுதல் அடிப்படையில் சோதனை:
தேவனுடைய வார்த்தைக்கு கீழ்படிந்து அதை செய்துமுடிக்கும்படி துணிந்து நிற்ப்பவருக்கு சரீர இளைப்பாறுதலை காட்டி தேவவார்த்தைக்கு கீழ்படியவிடாமல் தடுப்பது என்பது சாத்தானின் அடுத்த திட்டம்.
இந்த உலகத்தில் இளைப்பாறுதலை விரும்பாதவர் எவரும் இருக்கமுடியாது என்றே நான் கருதுகிறேன். வெயிலில் அலைபவருக்கு நிழல் ஒரு இளைப்பாறுதல், பசியோடு அலைபவருக்கு புசித்தலும்குடித்தாலும் ஒரு இளைப்பாறுதல், கடினவேலை செய்பவருக்கு ஒய்வு எடுத்தல் ஒரு இளைப்பாறுதல், வெகுதூரம் நடப்பவருக்கு ஓரிடத்தில் அமர்ந்திருத்தல் ஒரு இளைப்பாறுதல், தூக்கமில்லாமல் அலைபவருக்கு தூங்குவது ஒரு இளைப்பாறுதல். அதுபோல் தற்காலங்களில் டூர் போகுதல், ரெப்ரெஷ்மென்ட், சினிமா கேளிக்கைகள் போன்றவைகளும் ஒரு சரீர இளைப்பாரு தலுக்காகவே பயன்படுத்தபடுகின்றன.
இவ்வாறு இளைப்பாறுதலை தேடும் ஒருவருக்கு "மது மாது சூது" போன்றவற்றின் மூலம் இளைப்பாறுதலை காண்பித்து, அவனை தேவனின் வார்த்தையைவிட்டு விலகவைக்கும் காரியம் என்பது அனேக இடங்களில் நடைபெறும் ஓன்று. தேவனுக்காக தேவனின் வார்த்தைக்காக செயல்படும் தேவபிள்ளைகள் சாத்தான் காண்பிக்கும் இதுபோன்ற அற்ப இளைப்பாருதலில் வீழ்ந்து தேவனின் வார்த்தைக்கு கீழ்படிவதில் தவறிவிடக்கூடாது என்பதுவே இங்கு நாம் பயிலும் பாடம்.
புசித்து குடித்து இளைப்பாருபவனை முறியடிப்பதும் வீழ்த்துவதும் ஒரு சுலபமான காரியம். அவ்வாறு இன்று உலகத்தில் ஒருவனை இளைப்பரவைத்து காரியங்களை சாதித்து கொள்கின்றனர் இது சாத்தானுக்கு தெரியும். இவ்வாறு இளைப்பாருகிறவர்களை சுலபமாக முறியடித்த பல சம்பவங்கள் வேதத்தில் உண்டு.
பிதாவின் சித்தம் செய்வதையே தனது நோக்கமாக கொண்டு செயல்பட்ட ஆண்டவராகிய இயேசு "தனக்கு தலைசாய்க்க இடமில்லை" என்று கூறினார். அவரை இளைப்பார்வைத்து திசைதிருப்பலாம் என்று என்ற எண்ணத்தில் சாத்தான் முயற்சித்த காரியங்கள் எல்லாம் தோல்வியில் முடிந்தது. உதாரணம் அவரை ராஜாவாக்க நினைத்தது.
உண்மையான ஆத்தும இளைப்பாறுதல் தருபவர் இயேசு ஒருவரே"
மத்தேயு 11:28வருத்தப்பட்டுப் பாரஞ்சுமக்கிறவர்களே! நீங்கள் எல்லாரும் என்னிடத்தில் வாருங்கள்; நான் உங்களுக்கு இளைப்பாறுதல்தருவேன்.
மற்றபடி எந்த மனுஷனும் "நான் இளைப்பாறுதல் தருகிறேன்" என்று சொல்லி அழைப்ப்பானகில் அது தேவபிள்ளைகளுக்கு ஒரு கண்ணியாகவே அமையும் என்பதில் எந்த ஐயமுமில்லை. எனவே "சரீர இளைப்பாறுதல் தருவதாக கூறும் எவரையும் உடனே நம்ப வேண்டாம்" என்பது எனது அன்பு வேண்டுகோள்.
__________________
நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)அவர்(கர்த்தராகியதேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்; (ஏசா 25:8)
தேவன் தான் உண்டாக்கிய மனுஷனிடம் எதிர்பார்க்கும் முக்கிய குணம் கீழ்படிதல் ஆகும். ஆதாம் என்னும் ஆதி மனிதனின் கீழ்படியாமையே இன்று உலகத்தின் அத்தனை துன்பம் துயருக்கும் காரணம் என்பதை நாம் அறிவோம்.
கீழ்படிதலின் முக்கியத்தை அறிந்தே சாமுவேல் இவ்வாறு கூறுகிறார்:
I சாமுவேல் 15:22அதற்குச் சாமுவேல்: கர்த்தருடைய சத்தத்திற்குக் கீழ்ப்படிகிறதைப்பார்க்கிலும், சர்வாங்க தகனங்களும் பலிகளும் கர்த்தருக்குப் பிரியமாயிருக்குமோ? பலியைப்பார்க்கிலும் கீழ்ப்படிதலும், ஆட்டுக்கடாக்களின் நிணத்தைப்பார்க்கிலும் செவிகொடுத்தலும் உத்தமம்.
ரோமர் 13:5ஆகையால், நீங்கள் கோபாக்கினையினிமித்தம் மாத்திரமல்ல, மனச்சாட்சியினிமித்தமும்
கீழ்ப்படியவேண்டும்.
கீழ்படிதலை காட்டிலும் தேவனுக்கு பிரியமான பலி எதுவும் இல்லை என்பதை நாம் இதன் மூலம் அறியலாம்
கர்த்தராகிய இயேசு கட்டளையிட்ட போது காற்றும் அலையும் கடலும் கீழ்படிந்து அமைதலானது.
மத்தேயு 8:27 அந்த மனுஷர்கள் ஆச்சரியப்பட்டு: இவர் எப்படிப்பட்டவரோ, காற்றும் கடலும் இவருக்குக்கீழ்ப்படிகிறதே என்றார்கள்.
ஆனால் ஆறறிவுள்ள மனுஷர்களாகிய நாம் மாத்திரம் என்றுமே அவருக்கு கீழ்படிய விரும்பாமல் ஆதாமை போல ஏதாவது சாக்கு சொல்லிகொண்டே இருக்கிறோம்.
எரேமியா 35:15 ...... தீர்க்கதரிசிகளாகிய என் ஊழியக்காரரையெல்லாம் நான் உங்களிடத்துக்கு ஏற்கனவே அனுப்பிக் கொண்டிருந்தும், நீங்கள் உங்கள் செவியைச் சாயாமலும் எனக்குக் கீழ்ப்படியாமலும்போனீர்கள்.
இன்றைய உலகில் அநேகர் முதலாளி பொய் சொல்ல சொன்னாலும் சரி வரி எய்ப்பு செய்ய சொன்னாலும் சரி ஏமாற்ற சொன்னாலும் சரி அதற்க்கு எந்த எதிர்ப்பும் தெரிவிக்காமல் அப்படியே கீழ்படிகிறார்கள் ஆனால் தன்னை உண்டாக்கிய தேவனின் வார்த்தைகளுக்கு கீழ்படிய அவர்களுக்கு மனதில்லை.
அப்போஸ்தலர் 5:29அதற்குப் பேதுருவும் மற்ற அப்போஸ்தலரும்: மனுஷருக்குக்கீழ்ப்படிகிறதைப்பார்க்கிலும் தேவனுக்குக் கீழ்ப்படிகிறதே அவசியமாயிருக்கிறது.
மனுஷனுக்கு கீழ்படிவதைவிட தேவனுக்கு கீழ்படிதல் அவாசியம் என்று சொல்லும் வசனம்\ கீழ்ப்படியாதவர்கள் மேல் தேவ கோபம் வரும் என்றும் எச்சரிக்கிறது:
கொலோசெயர் 3:6இவைகளின்பொருட்டே கீழ்ப்படியாமையின் பிள்ளைகள்மேல் தேவகோபாக்கினை வரும்.
எனவே கீழ்படிதலின் அவசியம் கருதி இந்த திரி மீண்டும் பார்வைக்கு வைக்கபடுகிறது. தேவனின் வார்த்தைகளுக்கு கீழ்படிவோம் அதுவும் அறைகுறையாக இல்லாமல் முழுமையாக கீழ்படிவோம்.
__________________
நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)அவர்(கர்த்தராகியதேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்; (ஏசா 25:8)