தேவக்கட்டளையை மீறினால் மரணம் தான் தண்டனை என்று தேவன் ஆதாமுக்கு கூறினார். ஆதி 2:16-17; ரோமர். 6 :23. ஆதாமை நரகத்தில் தள்ளுவதாக தேவன் சொல்லவில்லை.
மேலும் மனிதனே ஓர் ஜீவ ஆத்துமாவென்றும் “பாவம் செய்கிற ஆத்துமாவே சாகுமென்றும்” சத்தியவேதம் கூறுகிறது. ஆதி 2:17. எசே 18:4.
மரித்தோர் உயிர்த்தெழுதலின் நாள் வரைக்கும் நித்திரையிலிருக்கிறார்கள் என்று அறிகிறோம். உயிர்த்தெழுந்த பிறகு நியாயத்தீர்ப்பும் உண்டாகும். நியாயத்தீர்ப்புக்குப் பிறகு நீதிமான்கள் ஆசீர்வாதங்களையும் அநீதிமான்கள் தண்டனையையும் அடைவார்கள். இந்தத்தண்டனையை “இரண்டாம் மரணம்”, நித்திய மரணம், நித்திய அழிவென்றும் சொல்லப்பட்டிருக்கிறது. இப்படிப்பட்டவர்களுக்கு ஜீவனே கிடையாது. மத் 25:46; 2தெச.1:9; 10:2-8; யோவான் 3:36; 1யோவான் 5:12 சங். 37:9-10,20,22,35,36,38; 145:20.
“ சீயோல்” (SHEOL) என்னும் எபிரேய பதத்திற்கு, பிரேதக்குழி, கல்லறை என்று அர்த்தம். இப்பதத்தை ஆங்கிலத்தில் (Graves. Pit, Hell, கல்லறை, குழி, நரகம்) என்று மொழிப்பெயர்த்து விட்டார்கள். Hell (ஹெல்) என்னும் பதம் தமிழில் பாதாளம்என்று சரியாகவே மொழிப்பெயர்க்கப்பட்டிருக்கிறது. பாதாளம், மண்குழி (அதாவது) கல்லறைகளைக் குறிக்கும் அதில் அக்கினியும் கந்தகமும் கிடையாது.
எருசலேம் பட்டணத்தின் தென்பாகத்தில் “இன்னோம்” என்று அழைக்கப்படும் ஓர் பள்ளதாக்கு உண்டு. யோசு 15:8. அந்நிய ஜாதியாரும் சீர்கெட்ட இஸ்ரயேலரும், இப்பள்ளத்தாக்கில் தமது பிள்ளைகளை, மோளேகு, பாகால் தேவனுக்கு அக்கினி தகனம் செய்தார்கள். 2 இராஜா 23:10; 2நாளா 28:3; 33.6; எரே. 7:31-32; 19:2-6; 32:35 இதற்கு சங்கார பள்ளத்தாக்கு என்னும் பெயர் உண்டு.
யூதாவின் ராஜாவாகிய யோசியா இவற்றை தகர்த்துப் போட்டான். 2 இராஜா 23:10-11 பிறகு இந்தப்பள்ளத்தாக்கில், எருசலேம் பட்டணத்தின் சகல குப்பை, அசுத்தமானவைகளைக் கொட்டி அவைகளை அக்கினியால் எரிப்பார்கள். அசுத்தங்களை தீவிரமாகச் சுட்டெரிக்க கந்தகமும் கொட்டப்படும். சில சமயங்களில், கள்ளர், கொலைபாதகர்களுடைய பிரேதங்களையும் இப்பள்ளத்தாக்கில் எறிந்து விடுவார்கள். அக்கினியால் உடனே அழிக்கப்படாத பிரேதங்களில் புழுக்கல் உண்டாகி அவைகளைக் தின்றுக்கொண்டிருக்கும். இந்த “இன்னோம்” பள்ளத்தாக்குக்கு, கிரேக்க பாஷையில் “கெகன்னா” என்று அழைக்கப்படும். ஆதலால் “கெகன்னாவில்” அக்கினி அவியாமலும், புழு சாகாமலுமிருக்கும் என்ற வழக்கச் சொல் உண்டாயிற்று ஏசா 66:24.
இயேசுகிறிஸ்து இவ்வுலகில் இருந்த காலத்திலும் இந்த “கெகன்னா” பள்ளத்தாக்கில் அக்கினி எறிந்து கொண்டு அசுத்தமானவைகளை அழித்துக் கொண்டிருந்தது. தேவனுடைய சத்தியங்களை ஆயிரவருட ஆட்சியின் காலத்தில் சகல ஜாதி ஜனங்களும் சரியானப்படி அறிந்துக் கொள்ளத்தக்க சமயம் கொடுக்கப்படும். இப்படிப்பட்டவர்கள் மனபூர்வமாய் சத்தியத்தை எதிர்த்து, கீழ்படியாமற் போனால், இரண்டாம் தடவை மரித்துப்போவார்கள். இதைத்தான் வேதாகமத்தில் “இரண்டாம் மரணம்” என்று அழைக்கப்பட்டிருக்கிறது.
அக்கினியில் போடப்பட்ட வஸ்துக்கள் நித்தியமாய், அதாவது அவை இனி இராதப்படிக்கு அழிந்துப்போகும்; இரண்டாம் மரணம், அல்லது நித்திய மரணத்துக்குப் போகிறவர்கள், இனி ஒரு போதும், ஜீவனே இல்லாதவர்களாய், நித்தியமாய் அழிக்கப்படுவார்கள். இந்த நித்திய அழிவைதான், “கெகன்னா” வென்றும் கந்தகமும், அக்கினியும் எரியும் கடலில் தள்ளப்படுவதற்கும் ஒப்பிடப்பட்டிருக்கிறது. மாற் 9:43-48. வெளி 20:11-15 21:8.
பிசாசும், மிருகமும், கள்ளத்தீர்க்கதரிசிகளும் இருக்கிற அக்கினிக்கடலிலே தள்ளப்பட்டு அவர்கள் இரவும்,பகலும் சதாகாலங்களிலும் வாதிக்கப்படுவார்கள் என்று சொல்லப்பட்டிருப்பதால், அதன் மெய்ப்பொருளை அறிந்து கொள்ளாமல், “நித்திய நரகவேதனைகள்” உண்டென்று சிலர் சாதிக்கிறார்கள். வெளி 20:10. சொல்லர்த்தமானால் எந்த மிருகம் நரகத்தில் தள்ளப்படும்?
நம்முடைய பரம பிதா அன்புள்ளவர். அவருடைய கோபம் ஒரு நிமிஷம், அவருடைய தயவோ நீடிய வாழ்வு. சங். 30.5; கர்த்தர், உருக்கமும், இரக்கமும், நீடிய சாந்தமும், மிகுந்த கிருபையுமுள்ளவர். அவர் எப்பொழுதும் கடிந்துக்கொள்ளார்; என்றைக்கும் கோபங்கொண்டிரார் என்று வாசிக்கிறோம். சங்.103:8-9.அநேக வேதவாக்கியங்களில், துன்மார்க்கர்கள் நித்தியமாய் அழிக்கப்படுவார்கள், இன்னும் கொஞ்ச நேரந்தான் (அதாவது நியாயத்தீர்ப்புக்குப்பிறகு) துன்மார்க்கன் இரான் ; அவன் ஸ்நானத்தை உற்று விசாரித்தாயானால் அவன் இல்லை. அவர்கள் புகையாய்ப் புகைந்து போவார்கள், என்று சொல்லப்பட்டிருக்கிறது. சங்.37:10,20,22,28,36; அவன் ஒழிந்து போனான். அவன் இல்லை; அவனைத்தேடினேன். அவன் காணப்படவில்லை. (நித்திய நரகத்தில் இல்லை) சங் 37:36;145 :20.
மேலும் சாத்தானின் தலை நசுக்கப்படுமென்றும் ஆதி 3:15. ரோமர். 16:20; சாத்தானை தேவன் அக்கினியால் பட்சித்து எல்லாருடைய கண்களுக்கு முன்பாக அவனை பூமியின் மேல் சாம்பலாக்குவேன் என்றார். எசே 28:18. ஆயிரவருட ஆட்சிக்குப்பிறகு “தேவனால் வானத்திலிருந்து அக்கினி இறங்கி சாத்தானையும் அவனுடைய கூட்டத்தார் அனைவரையும் பட்சித்துப் போட்டது” என்றம் வெளி 20:9. “இனி ஒரு போதும் இருக்க மாட்டாய்” என்றும் சாத்தானைக் குறித்துச் சொல்லப்பட்டிருக்கிறது எசே 28:18-19. இவ்விதமாய் நித்தியமாய் அழிக்கப்படுவதை, நித்திய எரிநரகத்துக்கு ஒப்பிடப்பட்டிருக்கிறது. இவ்விதமாய் சரீரமும், ஜீவனும் (எதிர்கால ஜீவனும்) நரகத்தில், அழிக்கப்படுமென்று இயேசுகிறிஸ்து கூறினார். மத் 10:28.
பாவஞ்செய்யும் ஆத்துமா சாகும். (இரண்டாம் மரணத்தில் அழிக்கப்படும்). குற்றவாளிகளை மனிதர் வதைப்பதென்றால் மனித குணலட்சணத்திற்கே விரோதமாகக் காணப்படும். அப்படியே ஓர் அன்புள்ள தேவன், சிலவருடங்கள் மாத்திரமே பாவஞ்செய்த தமது விரோதிகளை நித்தியமாய் வதைப்பார் என்னும் உபதேசம், அவருடைய குணலட்சணத்திற்கு நேர்விரோதமானது.